திங்கள், 8 ஜூன், 2020

காலாவிற்கு கண்ணதாசன் எழுதிய ஹிந்தி பாடல். (கண்ணதாசன் 1)

இன்னும் சில நாட்களில் கண்ணதாசனின் பிறந்தநாள் வருகின்றது அல்லவா. அதையொட்டி கண்ணதாசாசானி பற்றிய நிறைய பதிவுகள் வரும். அதெல்லாம் வருவதற்கு முன்பே நமக்கு தெரிந்த கண்ணதாசனை பற்றி அடுத்த சில நாட்களில் தருவோம்.

மும்பை நாட்கள், இன்னொரு நாள்!

அதிகாலை எழுந்து அடித்து பிடித்து கிளம்பி.. மெயின் லைனில் அமைந்துள்ள மாட்டுங்கா ரயில் நிலையம் சென்று அங்கு வரும் மின்சார ரயிலை பிடித்து அடுத்த நிலையமான "டாடரில்" இறங்கி அங்கு வெஸ்டர்ன் லைனில்  வரும்  துரித மின்சார ரயிலில் ஏறி, இன்னும் ஒரு முக்கால் மணிநேரம் பயணித்து "சர்ச்கேட்" நிலையத்தில் இறங்கி வேலைக்கு செல்லவேண்டும்.

இந்த இரண்டு ரயில்களுக்குமே சொன்ன நிமிடத்திற்கு மட்டுமல்ல, சொன்ன நொடிக்கு கூட தவறாமல் வந்துவிடும்.

தமிழகத்தில் இருக்கையில் "பெங்களூரு செல்லும் நம்பர் 40 பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் நாற்பது நிமிடம் தாமதமாக வரும்" என்று கேட்டு பழகி போன எனக்கு பாம்பாய் சென்றவுடன், அங்கே ரயில்களின் அட்டகாசமான நேரம் கடைபிடிப்பு மிக்க ஆச்சர்யம் தான்.

இங்கே நான் சொன்ன இரண்டாவது ரயில், "டாடர் டு சர்ச்கேட்" வண்டி, வெகு தொலைவில் உள்ள "வீரார்" என்ற ஊரில் இருந்து தன் பயணத்தை துவங்கும். விராரில் இருந்து சர்ச்கேட் ஒன்னரை மணிநேரத்துக்கும் மேல் என்று நினைக்கின்றேன்.



பாம்பை மெயின் சிட்டியில் வேலை செய்வதற்காக ஆயிரக்கணக்கானோர் இந்த ரயிலில் தினந்தோறும் பயணிப்பார்கள். பொதுவாகவே ஒவ்வொரு பெட்டியிலும் அதே மக்கள், அதே பயணிகள் என்று தான் இருப்பர்கள். காலை பயணத்தில் ஷேவ் செய்து கொண்டு மற்றும் பூஜை செய்து கொண்டு மற்றும் (அமர்ந்திருப்போர்) அலுவலக வேலை செய்து கொண்டு போவார்கள். மாலை நேரத்தில், காய்கறி  நறுக்கி கொண்டும் சீட்டு கட்டுகள் ஆடி கொண்டும் இருப்பார்கள்.

தலைப்பிற்கு என்ன சம்மந்தமா? பொறுமை ப்ளீஸ்..

இந்த மாலை நேரத்தில் வேலை மற்றும் பயணகளைப்பை மறக்க சில பெட்டிகளில் அனைவரும் பாடி கொண்டே வருவார்கள். இந்த பாடல்கள் பொதுவாக ஹிந்தி படத்து பாடல்களாய் தான் இருக்கும். இவர்கள் பாடி கொண்டு இருக்க, நான் வண்டியில் ஏற..

ஒரு பயணி..!

"ஹரே , காலா ஆகையா.. ஏக் மாதரசி கானோ சுரு கரோ "

என்று சொல்ல ...அனைவரும்  என்னைப்பார்த்து அன்போடு சிரிக்க, நான் மூக்கில் வைத்து ஆச்சர்ய படும் வகையில், அவர்கள் அனைவரும் ..

"முத்து குளிக்க வாரீகளா .. முத்து குளிக்க வாரீகளா"

என்று அந்த  காலத்து தமிழ் பாடலை பாட.. நானோ.. அட பாவிகளா... இந்த பாட்டு இவ்வளவு பெமஸா என்று நினைக்கையிலே பாடலின் அடுத்த வரி ஹிந்திக்கு தாண்டிவிடும்.

இது நாள் தோறும் நடக்கும் நிகழ்ச்சி, பாம்பே நகரை விட்டு வெளியேறினாலும் எப்போது எங்கே இந்த பாடலை கேட்டாலும் இந்த பாம்பே ரயில் பயணம் மனதிற்குள் வந்து செல்லும்.

சரி, தமிழில் அம்புட்டு பாடல்கள் இருக்கையில், இவர்கள் "முத்து குளிக்க வா" வை மட்டும் எப்படி தேர்ந்தெடுத்தனர் என்று வியந்த நாட்கள் உண்டு, அதற்கு சில வருடங்களுக்கு முன் தான் பதில் கிடைத்தது.

இந்த பாடல் இடம் பெற்றுள்ள தமிழ் படத்து இயக்குனர் கே பாலச்சந்தர் ஒரு   பேட்டியில் இந்த ஹிந்தி பாடலில் இவ்வார்த்தைகள் எப்படி வந்தது என்று விளக்கினார்.

நாகேஷ் இரட்டை வேடத்தில், மற்றும் முத்துராமன் நடித்த "அனுபவி ராஜா  அனுபவி "என்ற இந்த படம் தமிழில் சக்க போடு போட , ஹிந்தி காமடி நடிகர் மெஹபூப், இந்த படத்தை ஹிந்தியில் தயாரிக்க திட்டமிட்டு படத்திற்கு பூஜை போட்டாகிவிட்டது.

தமிழ்  படத்தில், ஒரு நாகேஷ் பாத்திரம் தூத்துக்குடியில் வாழும்  பாத்திரம். நாம் அனைவரும் அறிந்தவாறே தூத்துக்குடியில் தமிழ் ஒரு விதமான முத்தெடுத்த தமிழ். வாறீகளா.. போறீகளா.. என்று ஒரு ராகத்தோடு வரும்.

இந்த பாடலை கண்ணதாசன் எழுத ஆரம்பிக்கையில், பாலசந்தர் அவர்கள் கண்ணதாசனிடம்..

"படத்தில் இந்த பாடலை மனோரமாவிற்காக நாகேஷ் பாடுவார். இருவருமே திரை உலகத்தில் நகைசுவை நடிகர்களாய் அறியப்பட்டவர்கள். இந்த பாடல் வரிகள் தூத்துக்குடி தமிழிற்கு பெருமை சேர்க்கவேண்டுமே தவிர ஒரு காமெடியாக மாறிவிடகூடாது  என்று அன்போடு கட்டளையிட ...

கண்ணதாசனும் தூத்துக்குடியின் கொஞ்சு தமிழில் இதனை எழுத அதற்கு விஸ்வநாதன் அருமையான இசையமைக்க படத்தின் பெரிய வெற்றிக்கு இந்த பாடல் ஒரு காரணமாக அமைந்ததாம்

ஹிந்தியில் இந்த படத்தை தயாரிக்கையில் , படத்தின் மற்ற பாடல்கள் எல்லாம் நன்றாக அமைய, இந்த " முத்து குளிக்க வாரீகளா " பாடல் மட்டும் சற்று பிரச்சனையாக இருந்ததாம்.

பொதுவாகவே ஒரு படம் வேறு மொழியில் எடுக்கையில், அந்த படத்தின் பாடல்களை அதே வேற்று மொழியில் அப்படியே முழுபெயர்ப்பு செய்துவிடுவது தான் வழக்கமாம். அப்படி இந்த பாடலை மொழி பெயர்ப்பு செய்து பாடி பார்க்க, அந்த மொழிபெயர்த்த பாடலில் எதோ ஒரு வெறுமை மீண்டும் மீண்டும் வர..

ஹிந்தியில் இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர்..இந்த பாடலை தமிழில் வந்த பாடலை போல் வெற்றி பெற செய்ய ஒரே வழி  தான் இருக்கின்றது என்று சொல்லி ..

அனைவரும் என்னவென்று வியக்க..

ஹிந்தியிலும் " முத்து குளிக்க வாரீகளா" என்றே இந்த பாடலை ஆரம்பிக்கலாம்  என்று கூற.. பலரும் சற்று தயங்கிய சரி என்று கூற பாடலும் ரெகார்ட் செய்யப்பட்டு, படம் வெளி வர.. ஹிந்தியிலும் இந்த பாடல் மெகா ஹிட்.

இந்த பாடலை தான் .. நான் ஒவ்வொரு நாள் ரயிலில் ஏறிய போதும்..

"காலா, ஆகையா, ஏக் மதராஸி கானா சுரு கரோ " என்று சகபயணிகள் கூறுவார்கள்.

பாம்பே நாட்கள் இப்படி போய் கொண்டு இருக்கையில், பாம்பையை சுற்றி பார்க்க வந்த என் ஒன்று விட்ட மூத்தவர் (ஒரு தமிழ் ஆசிரியர்) என்னோடு இந்த ரயிலில் பயணிக்க..பயணிகளும் மீண்டும் ..

""காலா ஆகையா, ஏக் மதராஸி கானா சுரு கரோ " "

என்று சொல்ல,நானும்  புன்சிரிப்போடு தலையாட்ட.. அவர்கள் இந்த பாடலை  துவங்க.. நம் தமிழ் ஆசிரியர்..

"வடமொழியில், கரிகாலன் ஆகாயத்தில்  எமதர்மன் என்று எதையோ சொன்னார்களே, அதற்கு என்ன அர்த்தம்? "

என்று கேட்க, நானோ..

"கருப்பன் வந்துட்டான், மதராஸி மொழியில் ஒரு பாடலை எடுத்து விடு" என்று சொன்னார்கள் என்று மொழிபெயர்க்க.. சகோவோ, சற்று கோவத்தோடு..

"என்ன இளையவனே,  இவர்கள் நம்மை பகடி செய்ய நீயோ அதனை கொண்டாடி கொண்டு இருக்கின்றாயே"

என்று என்னிடம் தமிழில் கொக்கரித்து  அவர்களை "போங்கடா நீங்களும் உங்க... "ன்னு ஒரு கிண்டலாக பார்க்க அவர்களோ..

"இவன் என்ன புதுசா ஒரு மாதிரி லுக்" என்று என்னை வித்தியாசமாக பார்க்க .

"ஐயோ.. இவங்க ஒவ்வொருத்தரும் இங்கே இருந்து இன்னும் கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம் இந்த ரயிலில் போகணும். காலையில் அஞ்சு மணிக்கு வீட்டை விட்டு வந்து இருப்பாங்க.. இப்ப வீடை போய் சேரும் போது சாயங்காலம் இரவு ஒன்பது மணியாகிடும். மீண்டும் காலையில் அஞ்சு மணிக்கு கிளம்புனும். இப்படி பாடுற ஒன்னு தான் இவங்க சந்தோசமே.. விடுங்க"

"அதற்காக.. இன வெறி, மொழி வெறி மற்றும் உள்ளூர் வெறிகள் தனி என்பது போல் உன்னை கண்டு நகைத்து"

"அப்படி என்ன சொல்லிட்டாங்க..?"

"உன்னை கருவர் என்று "

"நான் கருப்புதானே"

"மதராஸி.."

"நான் மதராஸி தானே"

"எனக்கு இந்நாப்பழக்கம் சற்றும் பிடிக்கவில்லை இளையவனே, என்றாவது ஒரு நாள் இவர்களுக்கு விளக்கி சொல்"

என்று முடித்து கொண்டார்.

அவர்களுக்கு விளக்கி சொல்ல வாய்ப்பு கிட்டவில்லை! ஆனாலும் இன்றும் மனதில் அவர்கள் வெறியோடு என்னை அப்படி அழைக்கவில்லை, அறியாமையினாலும் மற்றும் நகைசுவை ஒன்றுக்காகவும் மட்டுமே அப்படி அழைத்தார்கள் என்று  தான் நினைத்து கொண்டு இருக்கின்றேன். அப்படியே அவர்கள் வெறியோடு என்னை கிண்டல் செய்து இருந்தாலும் அவர்கள் வாயிலும் தமிழ் வருகின்றதே என்று ஒரு பெருமை தான்.

வேற்று மொழி பாடலிலும் நம் செந்தமிழை வலுக்கட்டாயமாக நுழைக்க கண்ணதாசன் என்ற ஒருவரால் மட்டுமே இயலும்.

HAPPY BIRTHDAY, KANNADASAN ! YOU MADE MY DAY !

இதோ அந்த இந்தி "முத்து குளிக்க வாரீகளாவின்  காணொளி ...



3 கருத்துகள்:

  1. நல்ல பாடல் மிகவும் ரசித்திருக்கிறோம். உங்கள் விளக்கம் அருமை பெருந்தன்மை!

    துளசிதரன், கீதா

    எல்லா ஹிந்திக்காரர்களுமே தென்னிந்தியா என்றாலே அவர்களைப் பொருத்தவரை மதராசிதான். நான்கு மாநிலத்தவருமே, தெற்கு என்பதால் மதராசிதான் அவர்கள் குறிப்பிடுவது. நான் அறிந்த வரையில்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. மனதை நெகிழவைத்த பதிவு. நாம் பொருத்துக் கொல்லும் அல்லது விட்டுக்கொடுக்கும் சிலவிசயங்கள் பலறுக்கு பெரிய சந்தோசத்தை தருகிரது. an Optimistic approach super sir.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...