செவ்வாய், 30 ஜூன், 2020

சின்ன சின்ன ஆசை! சில்லறை ஆசை!

ஐந்தாவது படித்து கொண்டு இருந்த நாட்கள். பத்து வயது போல் என்று நினைக்கின்றேன். அடியேனின் தாயார் ஒரு தனியார் பள்ளியின் நிர்வாகியாக  பணிபுரிந்து கொண்டு இருந்தார்கள். எங்கோ ஒரு பள்ளி விடுதியில் படித்து கொண்டு இருந்த நான் கோடை விடுமுறைக்கு அம்மாவிடம் வர...(இந்த ஊரின் பெயர்  பருகூர். தருமபுரி மாவட்டத்தில் ஒரு சிறிய ஊர். )

வீட்டின் எதிரில் கார் ஹார்ன் சத்தம் கேட்க, வெளியே ஓடி வந்து எட்டி பார்த்தேன். ஓர் வெள்ளை நிற அம்பாஸடர் கார். மார்க் IV என்று படித்ததாக நினைவு.

வாகன ஓட்டுநர் என்னை பார்த்து..

"வண்டி ரெடின்னு அம்மாட்ட சொல்லு"

என்று சொல்ல.. நான் ஓடும் முன்பே உள்ளே இருந்து வெளிய வந்த அம்மாவின் உதவியாளர் ஓட்டுனரிடம்...

"அம்மா உங்களை உள்ள வந்து டிப்பன் சாப்பிட சொன்னாங்க.. அவங்க ரெடி, நீங்க சாப்பிட்டவுடன் கிளம்பலாம்"

என்று சொல்ல அவரும் உள்ளே செல்ல..அந்த உதவியாளர் என்னிடம் ..

"நீயும் போய் ப்ரெக்பாஸ்ட முடிச்சிடு"

"என்ன டிபன்?" 

என்று நான் கேட்க...

"புட்டு" 

என்றார்கள்.

புட்டு என்றவுடன்.. அரிசி புட்டா, கோதுமையா, கேல்விறகா என்று நினைக்காதீர்கள். இந்த ஊரில் புட்டு என்றால் குழிப்பணியாரம். சில காரத்தையும் இனிப்பையும் உள்ளே அடிச்சி பிடிச்சி தள்ளுகையில்..ஓட்டுநர்..

"பகல் முழுக்க என்ன பண்ண போற?"

"தெரியல... நீச்சல் குளம் தான் ."

"அஞ்சி நிமிசத்துல சீக்கிரம் கிளம்பி வா.. நீயும் அம்மா கூட போகலாம்"

"எங்கே போறீங்க"?

"வாணியம்பாடி, துரை வீட்டுக்கு !"

வாணியம்பாடி துரை  அமெரிக்க நாட்டில் இருந்த வந்த வெள்ளைக்கார  மருத்துவர். அவர் இல்லத்தை பற்றி, அங்கே உள்ள தோட்டம், நீச்சல் குளம், வளர்ப்பு மீன்கள்.. திராட்சை தோட்டம் மற்றும் அவரிடம் உள்ள ரெக்கார்ட் பிளேயரில் அருமையான ஆங்கில இசை...அதுமட்டுமல்லாமல் அவருடைய துணைவியாரின் அருமையான பராமரிப்பு என்று சொல்ல கேள்வி பட்டுள்ளேன்.

"அம்மாட்ட கேக்கணும்"

"நீ கிளம்பு.. நான் கேக்குறேன்..

ஓடி சென்று கிளம்பி வந்த நான் டைனிங் டேபிளில் யாரும் இல்லாததை கண்டு, ஹ்ம்ம்.. அம்மா வேண்டாம்னு சொல்லிட்டாங்க போல் இருக்கு, யாருமே இல்லையே.. கிளம்பிட்டாங்களா என்று யோசிக்கையில்..

உதவியாளர்..

"காருக்கு ஓடு.. உனக்கு தான் வெயிட் பன்றாங்க"

என்று சொல்ல, மேசையில் இருந்த சில புட்டுகளை, "எதுக்கும் உதவும்"என்று பாக்கெட்டில் போட்டு கொண்டு வாகனத்தை நோக்கி ஓடினேன்.

அம்மா பின் இருக்கையில் இருக்க, ஓட்டுநர் முன்னிருக்கையில் அமர சொன்னார்..

"அங்கே வந்து ஒழுங்கா இருக்கணும். அங்கே இங்கே ஓட கூடாது" 

வாணியம்பாடியை அடைந்தோம். மிக பெரிய பங்களா. மெயின் ரோட்டோரமாய் ஒரு சிறிய குன்றின் மேல் அமைக்க பட்டு இருந்தது. சுற்றிலும் அடர்த்தியான காடுகள். மிகவும் நேர்த்தியாக அமைக்க பட்ட பூச்செடிகள் அங்கே அங்கே இருக்க, 

வண்டியை பார்த்ததும் தூரத்தில் இருந்தே அந்த மருத்துவர் எங்களை நோக்கி வந்தார்.

அம்மாவின் பக்கம் இருந்த கதவை சிரித்து கொண்டே திறந்த அவர்...

"எஸ்தர்.. வெல்கம் ஹோம்! இது யார் உன் மகனா? "

என்று சுத்தமான தமிழில் (இவர் தமிழ் எப்படி பேச கற்று கொண்டார் என்பதை  நாற்பது வருடங்களுக்கு பிறகு சில மாதங்களுக்கு முன்பு  தற்போது அமெரிக்காவில் சியாட்டில் நகரில் வாழும் இவரை சந்தித்து அறிந்து கொண்டேன்) 

இருவரும் நலம் விசாரிக்க, அம்மா., இன்னும் இரண்டு மூன்று கார்கள் வந்து நிற்க மற்றும் சில அதிகாரிகளும் அங்கே வர..

"இங்கே இவரோடவே இரு. எங்களுக்கு மீட்டிங் "

என்று சொல்லி கிளம்ப..ஓட்டுனரோ..

நாங்க போய் பெட்ரோல் அடிச்சிட்டு ஆம்பூர் காய்கறி மார்க்கெட் போயிட்டு வரோம் "

என்று சொல்லி கிளம்பினோம்.

"மதியம் சாப்பாடு?"

"நாங்க பாத்துக்குறோம்..."

அவர்கள் உள்ளே செல்ல, நாங்கள் வாணியம்பாடி பஸ் ஸ்டாண்டை நோக்கி வண்டியை விட்டோம் . பெட்ரோல் போட்டு விட்டு காய்கறி வாங்கி விட்டு மதியம் போல் அங்கே பாஸ்ட்டாண்டில் இருந்த "மதராஸ் ஹோட்டல்" உள்ளே நுழைய. 

அம்மாடி .. கம கம வாசனை! 

என்னை ஒன்றும் கேட்காமல் அந்த ஓட்டுனரே எதையோ ஆர்டர் பண்ண..

கோழிக்குஞ்சை முழுசாக செய்து எடுத்தமாதிரி ஒரு ஐட்டம் எதிரில் வர, 

"இது என்ன?"

"காடை.."

"ஓ!!!, சாப்பிட  ஆரம்பித்தோம்."

"விசு.. இதை நல்லா மென்னு சாப்பிடு.. அப்படி அப்படியே முழுங்காத, மருந்து இருக்கும்.."

என்று அவர் சொல்கையிலியே..வாயில் ஏதோ கருப்பாக தட்டு பட..

"இது என்ன"?

"துப்பாக்கி புல்லட் மருந்து!!!"

"எப்படி இதுல?"

"குருவி காரங்க சுட்டது தானே.. அதுல துப்பாக்கி மருந்து இருக்கும் , அதனால தான் மென்னு சாப்பிட சொன்னேன்."

உணவு முடித்து மீண்டும் பங்களா வர...

உங்களில் சிலர்.. தலைப்பு வா என்று போடும் சப்தம் கேட்க.

மதியம் மூன்று மணி போல்..நாங்கள்உள்ளே நுழைகையில் மீட்டிங் முடித்து அனைவரும் வெளியேறி கொண்டு இருக்க, மருத்துவரின் துணைவியார் கொஞ்சும் தமிழில்..

"வா . . டீ குடிக்க வா!! "

என்று கொஞ்ச.. 

வாசலில் அமைந்துள்ள அருமையான தோட்டத்திற்குள் நுழைந்தேன். ஒரு மேசையில் டீயும் மற்றும் சில பிஸ்கட்டுகளும் இருக்க, இரண்டு பிஸ்கட்டை யாருக்கும் தெரியாமல் பாக்கெட்டில் விட  அப்போது தான் காலையில் பாக்கெட்டில் போட்ட புட்டு நினைவிற்கு வர.. இந்த டீக்கு பிஸ்கட்டை விட புட்டு தான் பொருத்தம் என்று போட்டு தாக்கி கொண்டு இருக்கையில்.. இருபது அடி தூரத்தில் மருத்துவரும் அம்மாவும் பேசி கொண்டு இருக்க., மருத்துவரின் பின்னால் ஒரு அழகான அம்சமான திராட்சை கொடி பழங்களை சுமந்து கொண்டு.மேசையிலோ ஒரு ரெகார்ட் பிளேயர் எதோ ஆங்கில பாடலோடு....

அந்த காட்சி அப்படியே மனதில் நின்றது. 

அடேங்கப்பா.. இவருக்கு தான் என்ன ஒரு அருமையான டேஸ்ட் ! என்று மட்டும் சொல்லாமல், ஏனோ உள்மனதில்.. நமக்கும் இப்படி அமையனும்.. அமைச்சிக்கணும்னு ஒரு வைராக்கியம் வந்ததுன்னு தான் சொல்லணும்.

இந்த காட்சியை பார்த்து வருடம் நாற்பதுக்கும் மேலானாலும் இந்த கோடையில் கொரோனாவினால் இல்லத்தில் முடங்கிக்கிடக்க ..வாழ்க்கையில் செய்ய நினைத்து செய்ய மறந்த காரியங்களை யோசிக்கையில்  இதுவும் நினைவுக்கு வர.. நானும் ஒரு துரையானேன்.

இல்லத்தின் பின்புறத்தில் கிடைத்த சிறிய இடத்தில் ஒரு திராட்சை கொடி பழங்களோடு! ரெக்கார்ட் பிளேயர் இசையோடு!


 

3 கருத்துகள்:

  1. சில நினைவுகள் இனிமையானவை.  பழைய சூழலை இப்போதும் அமைத்துக் கொள்வது இறைவன் தந்த வரம்.

    பதிலளிநீக்கு
  2. என்னது துப்பாக்கி மருந்தா...?

    இனிய நினைவுகள் நிகழ்வாக - இதுவல்லவோ இனிமை...!

    பதிலளிநீக்கு
  3. உங்கள் ஆசை இத்தனை வருடங்கள் கழித்து நிறைவேறியது ம்கிழ்ச்சிதான் இல்லையா!

    துளசிதரன்

    இல்லத்தின் பின்புறத்தில் கிடைத்த சிறிய இடத்தில் ஒரு திராட்சை கொடி பழங்களோடு! ரெக்கார்ட் பிளேயர் இசையோடு!//

    ஆஹா உங்கள் சின்ன சின்ன ஆசை நிறைவேறிவிட்டதே விசு. அக்கொடி கலிஃபோர்னியா க்ரேப்ஸ் ? பழங்கள் பெரிசு பெரிசா இருக்குமே..

    நான் சின்ன வயதில் ஆசைப்பட்டது அல்லது மனதில் பதிந்தது பின்னாளில் நிறைவேற்றிக் கொள்ள முடிந்தால் அது வரமே.

    நல்ல நினைவுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...