திங்கள், 8 ஜூன், 2020

காலுக்கு சீத்தா, அரைக்கு சுக்கு, இறுதிக்கு மா!

எங்கள் பள்ளிக்கூட நாட்களில் காலாண்டு தேர்வு முறைகள் இருந்தது. பள்ளி பொதுவாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கும் ஜூன் - செப் வரை கற்றுக்கொண்ட பாடங்களுக்கான தேர்வுகளை தான் காலாண்டு தேர்வுகள் என்று நடத்துவார்கள்.

வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, அதாவது முதல் மூன்று ரேங்க் வரும் மாணவர் மாணவியர்களுக்கு இந்த காலாண்டு தேர்வுகள் அமிர்தமாய்  இருக்கும்.

கடந்த வருட இறுதி ஆண்டு பரீட்சை ஏப்ரல் மாதம் போல் முடிந்து நாளாகிவிட்டது. நான் உன்னோடு பெஸ்ட் என்று சகா மாணவ மாணவியர்களுக்கு மீண்டும் நிரூபிக்க துடிதுடித்து கொண்டு இருப்பார்கள்.

நன்றாக படிக்காத மாணவர்களுக்கோ.. அட என்னடா இது? இப்ப தான் ஏப்ரல் மாசத்துல இறுதி தேர்வுன்னு வைச்சாங்க.. அதுக்குள்ள காலாண்டா?  என்று புலம்பும் நாட்கள்.

என்னை போன்றவர்களுக்கோ.. காலாண்டு தேர்வு வந்தால் கொண்டாட்டம் தான். பரீட்சைக்காகவோ அல்ல நான் தான் பெஸ்ட் என்று நிரூபிக்கவோ அல்ல.



காலாண்டு பரீட்ச்சை நேரத்தில் தான் சீத்தாப்பழம் சீசன். காலாண்டு தேர்வு அட்டவணை வந்தவுடனே காசை எடுத்துகொன்டு பழக்கடைக்கு போய் சீத்தாப்பழம் வாங்கிவரலாம்.

மா பலா வாழை என்று ருசியான  முக்கனிகள் இருந்தாலும், சீதாவின்
அம்சமே தனி.

திரண்டு உருண்டு வெண்   பச்சை நிறத்தில் வெளியே ஒவ்வொரு கண்ணிலும்  வெண்மஞ்சள் சுற்று உள்ளதாக தேடி பார்த்து வாங்கி. அது நன்றாக பழுத்து இருக்கின்றதா என்று சற்று அழுத்தி பார்த்து, அப்படி இருக்க அதை வாங்கி இல்லத்திற்கு வந்து..

எதிரில் ஒரு பழைய செய்தித்தாளை பிரித்து வைத்து அந்த பழத்தை  சரிபாதியாக பிரித்து ஒவ்வொரு கண்ணாக பிய்த்து எடுத்து அந்த வெண்பகுதியை சுவைத்து அந்த கருமையான விதையை  செய்தித்தாளில் போட்டு அடுத்த கண்ணிற்கு.

சரிபாதியாக பிரித்து சாப்பிடும் பழக்கம் பொதுவாக இருந்தாலும் சிலர் ஒவ்வொரு கண்ணாக பிடுங்கி ரசித்து உண்பார்கள்.


நடுவில் சில கண்ணில் உள்ள விதை இருக்காது. முழுவதும் சதையாக அப்படியே ருசித்து விழுங்கும் போது.. என்னமோ காலாண்டு தேர்வில் நாமே முதல் ரேங்க் வந்தது போல் ஒரு பீலிங்ஸ்.

இந்த காலாண்டு முடிந்து தேர்வின் முடிவுகள் வரும்போது சீதாப்பழத்தின் சீஸனும் பொதுவாக முடிந்து இருக்கும். நன்றாக படிக்கும் மாணவர் மாணவியர்கள் மீண்டும் தம் தம் பழத்தை நிரூபிக்க அரையாண்டு தேர்வுகளுக்கு தயாராவார்கள்.

நாமும் தான் அரையாண்டிற்கு தயாராகுவோம், தேர்வுக்கல்ல! அரையாண்டு தேர்வு அட்டவணை வந்தவுடனே, காசை எடுத்துக்கொண்டு பழக்கடைக்கு சென்றால் "சப்போட்டா" என்ற "சுக்கு"  பழத்தின் சீசன் ஆரம்பித்த இருக்கும். இதுவும் முக்கனியில் பங்கேற்காமல் இருந்தாலும், சுவைக்கு சளைத்தது அல்ல.

வெளிநாடு வந்ததில் இருந்து நாம் இந்தியாவுக்கு எப்போது எந்த சீசனுக்கு வருகின்றோம் என்பது நம் கையில் இல்லையே. நாம் அங்கே இருக்கும் போதுஎன்ன பழம்சீசனில் உள்ளதோஅதை உண்ணும் கட்டாயம்.
இனிப்பாக

சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் இந்தியா சென்றதால், அரையாண்டுக்கான சப்போட்டா அதிகம் கிடைத்தது. உறவினர் ஒருவரிடம் காலாண்டு தேர்வை நான் ரொம்ப மிஸ் பண்றேன் என்று சொல்லி சீதாவை  விளக்க.. அவரோ கவலையை விடு என்று கூறி..

ஐஸ் க்ரீமாக
சீதாவை இல்லத்திற்கு அழைத்து வந்தார். பழமாக அல்ல, இனிப்பாக மற்றும் ஐஸ் க்ரீமாக . வாசம் சற்று அப்படி இருந்தாலும் பழம் பழம் தான்.


சரி, காலாண்டு அரையாண்டு சரி... இறுதி தேர்வுக்கு எப்படி தயாராகுவீர்கள் என்று அநேகர் கேட்பது செவியில் விழுகின்றது.

இறுதி தேர்வு க்ளைமாக்ஸ் தானே, அட்டவணை வந்தவுடனே காசை எடுத்துக்கொண்டு.. அல்போன்சா.. ருமேனியா.. பங்காரப்பள்ளி, மல்கோவா என்று வகைவகையாக பிரித்து மேயும் நேரம் தான் அது.


மனிதரில் சிறந்த மனிதர்களை மாமனிதர்கள் என்போம் தானே.. அதனால் தான் பழத்தில் சிறந்ததை "மாம்பழம்" என்கிறோமா?

2 கருத்துகள்:

  1. ஆத்தாடி எவ்வளவு பெரிய சீத்தாப்பழம்...!

    பதிலளிநீக்கு
  2. சீத்தாப் பழம் செம டேஸ்ட் ரொம்பப் பிடிக்கும். ஆகஸ்ட் சீசன் ஆம் இங்கு சப்போட்டா இப்பவும் கிடைக்கிறது. மாம்பழம் சீசன் இப்ப.

    பழங்கள் என்றால் இந்தியா தானோ? மா பலா வாழை முக்கனி இங்குள்ள வெரைட்டி மகன் சொன்னான் மா அண்ட் பலா நம்மூர்தாம்மா ன்னு.
    அங்கு சீத்தாப்பழம் உங்கள் வீட்டில் காய்த்துப் பழுத்ததா விசு. நல்லா குண்டா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...