வியாழன், 21 ஜூலை, 2016

கபாலி ! முதல் நாள்.. முதல் காட்சி...

விசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு கல்லூரிக்கு வந்து விடு, கும்பலா போய் தாக்கிடலாம்.

டேய்.. சத்தமா பேசாதா, வீட்டில் அம்மா இருக்காங்க, நீ சொன்னது மட்டும் காதில் விழுந்தது.. மவனே.. உங்க அம்மா எங்க அம்மா, மற்றும் ஊரில் இருக்கிற எல்லா அம்மாக்களும் நாளைக்கு கல்லூரிக்கு வந்து அவங்க அவங்க பிள்ளைகள் ஒழுங்கா படிக்குதா இல்ல சினிமாவிற்கு போகுதான்னு பார்க்க வந்துடுவாங்க...





சரி... வெடி வேட்டுக்கள் எல்லாம் வாங்கியாச்சா?

எல்லாம் தாயார் .. விசு.. நீ நேரத்துக்கு வந்துடு..

டேய்.. என்னமோ ஆயிர கணக்கில் செலவு பண்ணி நூலகம் எதோ ஆரம்பிச்சி, அத ரிப்பன் கட் பண்ணி நான் தான் திறந்து வைக்க வேண்டும் என்ற லெவெலுக்கு போற.. இது சும்மா ஒரு சினிமாடா ...

விசு.. என்ன வார்த்தை சொல்லிட்ட? சும்மா ஒரு சினிமாவா? தலைவர் படம் விசு..

சரி.. டிக்கட் எல்லாம் பத்திரமா இருக்கா? யாரிடம் இருக்கு?

நம்ம பாலாஜியிடம் தான்..

டேய் அவன் எல்லா விஷயத்திற்கும் தாமதமா வருவானே.. அவனிடம்.?

அவன் வெளிய போனா தான தாமதமாக வருவான். இன்னைக்கு ராத்திரி முழுவதும் அவனுக்கு தியேட்டரில் "கட் அவுட்" வைக்கும் வேலை. என்னை வேற காலையில் 5 மணிக்கு எல்லாம் பெரிய மாலை வாங்கிவர சொல்லி இருக்கான். மாலை வாங்க நீயும் வரியா விசு?

மாப்பு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் படம் ஆரம்பிக்கும் முன் வரேன்.

சரி, நான் கிளம்புறேன் விசு., காலையில் சந்திப்போம்.

இரவு தூக்கம் சரியில்லை, தலைவரின் படம் எப்படி அமைந்து இருக்குமோ? திரை கதை வசம் எல்லாம் நன்றாக அமைந்து இருக்க வேண்டுமே.  போஸ்டரில் பார்த்தால் "டபுள் ரோல்" போல தெரியுது. பொதுவா , பாட்டுகள் சில நாட்களுக்கு முன்பாகவே வந்து ஹிட் ஆகிவிடும், ஆனால் இந்த படத்திற்கு அப்படி இல்லையே என்று எண்ணி கொண்டே .. எப்போது தூங்க போனேன் என்று தெரியவில்லை.

இந்த மாதம் கடைசியில் பெரிய பரீட்சை வருகின்றது. டியூஷன் படிக்க வீட்டில் நிறையவே செலவு பண்ணி இருகின்றார்கள். அந்த பணத்தை வீணடிக்க கூடாதே.. என்று நினைத்து... காலை 5 மணிக்கு எழுந்து டியூஷன் வாத்தியார் வீட்டிற்கு சென்றேன்.

என்ன விசு... இன்றைக்கு டியூஷன் கான்ஸல் .. ஆச்சே உனக்கு தெரியாதா?

இல்ல சார்.. ஏன்.. எப்ப..?

நம்ப பாலாஜி உடைய பாட்டி இறந்து விட்டார்கள் என்று நேத்து சாயங்காலம் தான் முருகன் வந்து சொன்னான்.

ஆமா சார்.. நானும் மறந்து பழக்கத்தில் வந்து விட்டேன். ரொம்ப சாரி பண்ணி கொள்ளுங்கள்.

என்று சொல்லி 6 மணி போல் பாலாஜியை மனதில் திட்டி கொண்டே வந்தேன்.

இந்த மடையன் ஏன் என்னிடம் இந்த பொய்யை சொல்லவில்லை.. அவனை பார்த்தவுடன் நாலு கேள்வி நல்லா கேட்கவேண்டும் என்று நினைத்த போது, மனசாட்சி பேச ஆரம்பித்தது..

"டேய் .. விசு... அவன் பாலாஜியிடம் போய் நீ இதை கேட்டால், அவர்கள் எல்லாரிடமும் பொய் சொல்லிவிட்டு நீ மட்டும் டியூஷன் போன விஷயம் தெரிந்து விடும். இந்த விஷயத்தை அவனிடம் கேட்காதே.. இங்கேயே விட்டு விடு "என்று சொன்னது.

நேராக வீட்டிற்கு சென்று வெந்ததை தின்று விட்டு அவசரம் அவசரமாக கிளம்பி தியேட்டர் நோக்கி செல்லும் வண்டியை பிடித்தேன். 9;30 க்கு படம். நான் அங்கே சென்று சேரும் போது மணி 8:45 போல் இருக்கும்.

அங்கே தியேட்டரின் எதிரில்,, அருமையான கட் அவுட்.. பாலாஜி தலைமையில் சிறப்பாக வைத்து இருந்தார்கள். அடுத்த வாரம் வாங்க வேண்டிய முக்கிய புத்தகங்களுக்கான பணம் அங்கே ஒரு ரோஜா மாலையாக தலைவர் கழுத்தில் தொங்கி கொண்டு இருந்தது.

விசு ... இந்தா டிக்கட்டை பத்திரமாக வைத்துகொள்.. நான் போய் "நாஸ்ட்டா" பண்ணி விட்டு வருகின்றேன்.

சரி பாலாஜி .. எதுக்கு 20 டிக்கட்? நம்ம பசங்க மொத்தமே 15 கிட்ட தானே..

இல்ல விசு, சில நேரத்தில் கடைசி நிமிடத்தில் நம்ப ஆளுங்க வந்து கழுத்தை அறுப்பார்கள், அதனால் தான் ஒரு அஞ்சி டிக்கட் கூடவே வாங்கிட்டேன்.


சரி.. சீக்கிரம் போய் சாப்பிட்டு வா..

என்று சொல்லும் போது முருகேசன் மற்ற சில நண்பர்களோடு வந்தான்..

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கூட ஆரம்பித்தது... சரி.. நாம் எல்லோரும் தாரை தம்பட்டுடன் உள்ளே சந்திக்கலாம் என்று பேசி.. அவர் அவர் டிக்கட்டை அவர் அவரிடம் கொடுத்து கொண்டு இருக்கையில்..

ஓர் டிக்கட் எவ்வளவு சார்?

தெரியில்ல.. இது ரசிகர் மன்ற டிக்கட்..

ஒரு ரெண்டு கிடைக்குமா? எவ்வளவு வேண்டுமானாலும் தரேன்..

இவன் என்ன சொல்றான்னு புரியாத நேரத்தில் நம்ம நண்பன் சம்பத்... என்னை தனியா கூப்பிட்டு...

விசு..அவன் நம்மை ப்ளாக்கில் டிக்கட் விக்கிரோம்ன்னு நினைத்து கொண்டான்..

அட பாவி.. டேய்.. கல்லூரியில் படிக்கிரோம்னு அவனிடம் சொல்லுங்கடா ..

அதுவா முக்கியம் விசு.. அவன் தான் எவ்வளவு வேண்டும் என்றாலும் தரேன்னு சொல்றானே . நம்மிடம் தான் 5 டிக்கட் கூடவே இருக்கே.. மெதுவா ரெண்டை தள்ளிடலாம் வா..இடைவேளையில் கை செலவிற்கு உதவும்.

டேய் .. சம்பத், நீ இப்ப சொன்ன காரியத்தை மட்டும் உங்க அப்பா கேட்டு இருந்தா .. மவனே .. நாளைக்கு உனக்கு பால் தான்.

அவர் தான் நம்ம ஊரிலேயே இல்லையே.. அவர் பெயரை இப்ப ஏன் எடுக்குற.. சரி வா..

எத்தனை டிக்கட் கேட்டீங்க?

ரெண்டு இருந்தா கொடுங்க..

ஒன்னு 40 ருபாய்..நீங்க ரெண்டா வாங்குவதால் மொத்தம் 75. படிப்பது வணிகவியல் இறுதி  ஆண்டு ஆயிற்றே.. படித்த பாடத்தை அங்கே நிருபித்து விட்டான் சம்பத்..

டிக்கட்டை வாங்கி கொண்டு அவர்கள் இருவரும் போக, மற்ற நண்பர்களிடம் அவர்களின் டிக்கட்டை கொடுக்க, கையில் இன்னும் மூன்று டிக்கட் மீதி இருந்தது.

ருசி கண்ட பூனை ஆகிவிட்டோமே. ஓர்  "40" நாப்பது என்று வாய்க்குள்ளே நான் மனப்பாடம் சொல்லி கொண்டு இருக்கும் போதே..சம்பத்..

"டிக்கட் டிக்கட் டிக்கட்... "  ஒன்லி 40 "  என்று கூவ ஆரம்பித்து விட்டான்.

எத்தனை டிக்கட் இருக்கு?

மூணு..

ஒன்னு எவ்வளவு?

40..

மவனே .. எவ்வளவு நாட்களா இந்த வேலை .. நடங்கடா போலிஸ் ஸ்டேசன்னுக்கு என்று என்னையும் சம்பத்தையும் அவர் அழைத்து செல்ல எங்கள் பின்னால் ரெண்டு காக்கி சட்டைகள் வேறு.

டேய், சம்பத் ... இந்த போலீசிடம் உங்க அப்பா பேரை சொல்லுடா..

விசு.. உயிரே போனாலும் எங்க அப்பா பேரை மட்டும் சொல்லிவிடாதே.. மவனே எனக்கு மட்டும் இல்ல உனக்கும் சேர்த்து நாளைக்கு பால்...

இப்ப என்னடா பண்ணுவது?

சார்.. ப்ளிஸ்.. நாங்க சும்மா தமாசுக்கு சொன்னத நீங்க ரொம்ப சீரியஸா எடுத்து கொண்டீர்கள். தயவு பண்ணி எங்களை விட்டு விடுங்கள்.

டேய்.. படிக்கிற வயதில் இது அவசியமா ?

அவர்கள் மூவர், நாங்கள் இருவர் மொத்தம் ஐந்து பேர் நடந்து கொண்டு போகையில் ...எதிரில் வந்த மற்றொரு போலிஸ் அதிகாரி...சம்பத்தை பார்த்து..

தம்பி... எங்க இந்த பக்கம்?

சும்மா தான் சார்.

அப்பா எப்படி இருக்கார்?

நல்லா இருக்கார் சார்..

இப்ப இவங்களோடு எங்க போறீங்க..

ப்ளாக்கில் டிக்க ...

அப்பா உங்களை இப்படி செய்ய சொல்லி நாங்க எல்லாம் ஒழுங்கா வேலை செய்கின்றோம்மா என்று பார்க்க சொன்னாரா..

சார் அது வந்து..

தம்பி.. இவங்க இந்த ஊருக்கு புதுசு. எதுவும் தவறாக ஆகிவிடவில்லையே.. அப்பாவிடம் போட்டு கொடுத்து விடாதீர்கள்.

நீங்களும் அப்பாவிடம் ஒன்றும் சொல்லாதீர்கள்.

சரி.. தம்பி

சார்.. படத்துக்கு... சாரி.. பாடத்துக்கு நேரம் ஆகி விட்டது நாங்கள் கிளம்புறோம்.ரொம்ப நன்றி..

என்று கிளம்புகையில்...

மச்சி, இது நமக்கு ஆண்டவனா கத்து கொடுத்த பாடம்.. இனிமேல் ஜாக்கிரதையா இருக்கணும் என்று ஒருவர்கொருவர் ஆறுதல் சொல்லி கொண்டு அரை மணி நேரம் தாமதமாக தியேட்டரில் நுழையும் போது..

அங்கே அனல் பறக்கும் காட்சி..


கபாலி  வெற்றி பெற வாழ்த்துக்கள்

மீள் பதிவு தான்.... லிங்கா நேரத்தில் போட்டது..

3 கருத்துகள்:

  1. ஏற்கென்வே படித்திருந்தாலும்
    இந்தச் சூழலில் படிக்கச்
    சுவாரஸ்யமாகவே இருக்கிறது

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  2. வாசிக்கும் போதே தெரிந்துவிட்டது விசு மீள் பதிவு என்று...நாங்கள் ரசித்த பதிவு. மட்டுமல்ல ஐயோ போலீசிடம் மாட்டிக் கொண்டுவிட்டனரே....விசு எப்படித் தப்பிக்கப் போகிறார்... மிகப் பெரிய சேவை செய்து வருபவரின் பிள்ளை ஆயிற்றே அம்மாவுக்குத் தெரிந்தால்.......என்று ஏதோ அடுத்து என்ன என்று அறிய சீட்டு நுனியில் வந்து பார்க்கும் த்ரில்லர் சினிமா பார்ப்பது போல் ...நல்ல காலம் காப்பாற்றப்பட்டார் என்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட பதிவு...

    தலைப்பு.... ஆஹா விசு மீண்டும் தமிழ் சினிமா பார்க்கத் தொடங்கிவிட்டாரா என்று எண்ண வைத்தது...!!!!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...