ஞாயிறு, 31 ஜூலை, 2016

மயக்கமா... வருத்தமா ?

வெள்ளி மாலையும் அதுவுமா அம்மணி ...

சீக்கிரம் வெளிக்கிடுங்க .... 

வெளிக்கிடுவதையெல்லாமா .. .வெளிப்படையா சொல்லுவாங்க..இது கொஞ்சம் டூ மச்...

உங்க காதுல ...மச்சாள் வீட்டுக்கு விருந்துக்கு போகணும் .... நல்ல முஸ்பாதியா இருக்கும்... விசர் கதை கதைக்காம வெளிக்கிடுங்க...
அடே.. அடே .. நம் அம்மணியின் இல்லத்து - ஈழத்து   உறவினர்களோடு விருந்து  என்றால்.. .ஆட்டமும் பாட்டும் தானே... 

அங்கே வந்து பகுடியா கதைக்கிறேன்னு எதையும் சொதப்பி வைக்காதிங்க... 

அங்கே வந்து நான் என்னத்த கதைக்கிறது ? நீங்க கதைக்கிறத புரிஞ்சிக்கிறதே பெரிய கதையாச்சே...

என்று மனத்தில் சொல்லிக்கொண்டே வண்டியை விட்டேன்..

இல்லத்தை அடைந்தோம்.... அழைத்தவர்கள் "நிற்பன நடப்பன பார்ப்பன நீந்துவன" என்று வகையறாக்களை அடுக்கி வைத்து இருந்தார்கள்.

சத்த நேரம் காத்திருப்போமா... இன்னொரு குடும்பம் "பிட்டு
" எடுத்துனு வராங்கோ...

அவங்க என்ன பரீட்சைக்கா வராங்க..?

ஏன், அப்படி விசுரா கேக்குறீங்க ?

இல்ல ... "பிட்டு" எடுத்துன்னு வராங்கன்னு சொன்னீங்களே..

பரீட்சையா ..? என்ன கதைக்கிறிங்க ... ? அவங்க சாப்பிட " பிட்டு" எடுத்துன்னு வராங்க..

ஓ.. புட்டு...

சரி ... என்று காத்து கொண்டு இருக்கையில்... அந்த குடும்பமும் வந்தது...

வாங்கோ.. வாங்கோ..

மன்னிக்கணும்...ஒரு சின்ன பிரச்சனை... அதுதான் தாமதம்...

என்று... "பிட்டை" பரிமாற...

வந்தவர்கள் அடியேனின் குடும்பத்தை பற்றி பேச ஆரம்பித்தார்கள்.

உங்களுக்கு ரெண்டும் பெட்டையா...?

ஆமா ... உங்களுக்கும் பெட்டைகள் தானா ,,, இல்ல சேவலும் இருக்கா?

ஏங்க... ஏன் விசுரா கதைக்கிறிங்க...?

பெண்களுக்கு பெட்டைன்னா ஆண்கள் சேவல் தானே...

பெண்கள் தான் பெட்டை .. ஆண்களுக்கு பொடியன்கள்..

ஓ...அது ஏன் பொடியன்கள்..?  நீங்க எதுவும் பொடி வைச்சி பேசலையே...

உங்கள் மூத்தவள் ... அவங்க என்ன படிக்கிறாங்க?

அவளுக்கு 16 வயசு.. .12 வது படிக்கிறா?

என்னே.. 16 வயசு பெட்டைய அவ இவன்னு கதைக்கிறிங்க.. ? அவங்கன்னு வடிவா சொல்லுங்க...

மன்னிக்கணும்..

என் மூத்தவர்கள் 12 வது படிக்கின்றார்கள் .இளையவர்கள்  9 வது படிக்கின்றார்கள்.

என்று பதில் சொல்லும் போது... மனதில்..

இருந்தாலும் யாழ்பாணத்து தமிழர்களின் தமிழில் தான் என்ன ஒரு மரியாதை,,, 16 வயது பிள்ளையயே "அவர்கள்" என்று மரியாதை கொடுக்கின்றார்களே.. அப்போது மூத்தவர்களுக்கு எவ்வளவு மரியாதை தருவார்கள் என்று எண்ணி கொண்டு இருக்கையில். அங்கே இருந்த அம்மணி....

சரி... உங்க அம்மா எப்படி இருக்கிறா? எங்கே நிக்குறா?

என்று கேட்டு ஒரு இடியை போட்டார்கள்...

என்னடா... 16 வயது பிள்ளை "அவங்க" 89 வயது மூத்தவர்கள் "அவ" ... இவங்க தமிழ் எங்கேயோ இடிக்குதே.. என்று நினைக்கையில்...

அவ ஏன் விருந்துக்கு வரல? ஏதாவது வருத்தமா?

அவங்களுக்கு என்ன வருத்தம்.. சந்தோசமா தான் இருக்காங்க...

ஐயோ...வருத்தம்ன்னா .. உடம்பு.. சரியில்லையான்னு அர்த்தம்..

மன்னிக்கணும் ..உங்க தமிழ நான் சரியா புரிஞ்சிக்காமல் தவறான பதில் சொல்லிட்டேன்.. அதுக்கு ரொம்ப வருத்த படுறேன்.

என்னது .. உங்களுக்கு வருத்தமா? வருத்தம்ம்னா வீட்டிலே இருக்கணும்..இப்படி வெளிக்கிட்டு வந்து எங்களையெல்லாம் வருத்த பட வைக்காதீங்க.

நான் வெளிக்கிட்டா.. உங்களுக்கு ஏன் வருத்தம்?

ஐயோ.. வருத்தம்னா.. சுகவீனம்...

சரி.. சந்தோசம்.. .சுகவீனம்ன்னா என்ன?

வருத்தம்..

எனக்கு சுகவீனம் என்னன்னு தெரியல என்பதற்காக நீங்க வருத்த படுறது எனக்கு புரியுது. இருந்தாலும் சுகவீனம்ன்னா என்னானு சொல்லுங்க..

உங்க..     ....!?  வரும்போது என்ன சொன்னேன்?

போற இடத்துல சாப்பாடு வித்தியாசமா இருக்கும்.. எதுக்கும் ஒரு வாய் சாப்பிட்டுட்டே போலாம்ன்னு சொன்னீயே.. அதுவா...

ஏங்க...

ஓ .. அது இல்லையா?

என்ன சொன்ன?

விசர் கதை கதைக்க கூடாதுன்னு சொன்னேனா இல்லையா?

ஆமா.. மறந்துட்டேன்...

சரி உங்க அம்மா இப்ப எங்கே நிக்குறா?

மணி 10 போல் ஆச்சே.. படுத்து இருப்பாங்க.. நிக்க மாட்டாங்க..

அய்யோ ... யாரு வீட்டுல இருக்கிறாங்கோன்னு கேக்குறாங்க..

எங்க வீட்டுல தான் நிக்குறாங்க...

என்று பேசி கொண்டு இருக்கையில்... அந்த அம்மணியின் சேவல்...

சட்டை வடிவா இருக்கே... எங்கே எடுத்தீங்க?

எடுக்குலங்க ... என் பிறந்து நாளுக்கு வாங்கி கொடுத்தாங்க..

சந்தோசம்... அவங்க எங்க எடுத்தாங்க..?

அவங்களும் எடுக்குல... பணம் கொடுத்து வாங்கினாங்கோ..

சரி, "பிட்டு" போட்டு சாப்பிடுங்கோ..

கொஞ்சம்.. பால்.. தேங்காய்.. வாழைப்பழம் .. சக்கரை இருக்குமா?

ஏன்.... பாயாசம் ஏதாவது செய்ய போறீங்களா?

இல்ல.. "பிட்டுல" போட்டு சாப்பிட...

ஐயோ.. கேக்கையிலே... சத்தி வருதே, "பிட்டுக்கு" சம்பல் தானே ...நீங்க என்னமோ... 

இப்படி அவர்கள் எதோ சொல்ல .. நான் எதோ புரிய... எல்லாரும் வருந்த... அந்த நாள் முடிந்தது..


பின் குறிப்பு :


வரும் வழியில்..:

ஏங்க...அவங்க "பிட்டு" எடுத்துன்னுவராங்கன்னு சொன்னவுடன்  " ஏன் பரீட்சைக்கு வராங்களானு கேட்டிங்களே"..

ஆமா,

 அதுக்கு என்ன அர்த்தம்..

அது வந்து...

சொல்லுங்க..

அந்த காலத்தில் பரீட்சைக்கு போகும் போது சரியாய் படிக்காம போனா... போற வழியில் ஏதாவது ஒரு கோயிலில் படி ஏறி,.,. ஆண்டவனிடம்.. எப்படியாவது என்னை மட்டும் காப்பாத்துன்னு ஒரு " பிட்டு" போட்டுட்டு போவோம்.. அதுதான்.

8 கருத்துகள்:

  1. Excellent, Visu... LOL on so many places, and the narration is so vivid.

    பதிலளிநீக்கு
  2. நித்தம் நடக்கறத எழுதினாலே, சிரிச்சு மாளாது. நிறைய எழுதுங்கள். அது சரி. ஏன் பெரியவர்களை 'நீ, அவ' என்றெல்லாம் பேசுகிறார்கள்? அதை விசாரித்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. எப்படி நீங்க இப்படி மிகவும் நகைச்சுவையாக கதைக்கிறீயேள்..

    பதிலளிநீக்கு
  4. எப்பா விசு எனக்கு தெரிஞ்ச தமிழும் உங்கள் பதிவை படித்ததினால் மறந்து போச்சு

    பதிலளிநீக்கு
  5. ஹஹஹஹஹ்ஹ் எனக்கு மீண்டும் இலங்கை நாட்கள் நினைவுக்கு வந்தன விசு...மிக மிக ரசித்தேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  6. யோவ் தம்பி விசு, உன் பிட்டுக்கதையை புட்டுப்புட்டு வச்சி, சட்டு சட்டுன்னு சிரிக்க வச்சுட்டே .
    எப்படியோ, இப்படியே உன் வாழ்க்கையையும் மனைவிட்ட பிட்டைப்போட்டே ஓட்டுறே. . உன் ஆற்காட்டுத்தமிழ்யாழ்ப்பாணத்தமிழோடு இணைந்து இன்னும் எங்களை சிரிக்க வைக்கட்டும் , மகிழ்ச்சி .

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...