சனி, 27 ஜூன், 2020

சிறிய தவறால் பெரிய சோகம்!

இந்த பதிவை கோவத்தில் எழுதுகின்றேனா அல்ல சோகத்தில் எழுதுகின்றேனா என்று எனக்குள் ஒரு குழப்பம்.

சனி அதுவுமாய் காலை எழுந்து கணினியை தட்டினால் 

"ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தங்கள் வீட்டின் பின்புறம் இருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி சாவு."

இந்த தலைப்பு செய்தியை படித்தவுடன் என்னை அறியாமல் மனதில் வந்தது.

அட பாவி.. இது கண்டிப்பா இந்திய குடும்பமாய் தான் இருக்கும். கொஞ்ச நாளைக்கு முன்னால தான் இந்த வீடை வாங்கி இருப்பாங்க!







என்று நினைத்து கொண்டே செய்தியை தொடர்ந்தால், நான் நினைத்தது சரியே..

புதிதாக வீடு வாங்கி அங்கே குடியேறிய ஒரு குஜராத்தி குடும்பத்தை சார்ந்த   எட்டு வயது பெண் அவளின் 32 வயது தாயார் மற்றும் 62 வயதான தாத்தா என்று மூவர் மூழ்கி இறந்துள்ளனர். மூவருக்கும் நீச்சல் தெரியாது.

முதலில் அந்த சிறுமி தவறி விழ தொடர்ந்து காப்பாற்ற சென்ற அம்மா மற்றும் தாத்தாவும் மூழ்கி இறந்துள்ளனர்.

இது சோகம் தானே ! இதற்கு ஏன் கோவம்?

பல வருடங்களுக்கு முன் இங்கே கலிபோர்னியாவில் என் அருமை நண்பன் ஒரு கிரகப்ரவேசத்திற்கு அழைக்க நானும் சென்றேன்.




"சூப்பர், நண்பா, இனிமேல் நீச்சலடிக்க அங்கே இங்கே போக வேணாம். தூங்கி எழுந்து நேரா வந்து டைவ் அடிக்கலாம்"

"நீ, ஒன்னு.. ! எங்க வீட்டுல யாருக்கும் நீச்சல் தெரியாது"

"அட பாவி.. ! அப்புறம் எதுக்கு இப்படி பட்ட வீடை வாங்கினே"

" வீடு பிடிச்சி இருந்தது, நீச்சல் குளத்துக்குன்னு எதுவும் ஜாஸ்தி கேக்கல.. இருக்கட்டுமேன்னு வாங்கிட்டேன்"

அவன் வீட்டில் நான்கு வயது பையன் மற்றும் ஒரு கைக்குழந்தை.

"டே.. இந்த கிரக பிரவேசம் முடிஞ்ச கையோட உடனே அந்த குளத்தை சுத்தி வேலியை  போடு"

அந்த குடும்பம் வேலியை போட்டு நீச்சல் கற்று கொள்ளும் வரை தினந்தோறும் நச்சரித்தேன். 

நீச்சல் குளம் விளையாட்டு அல்ல. ஒரு குழந்தையை மூழ்கடிக்க ஒரு வாலி தண்ணீர் போதும் என்று சொல்வார்கள். நீச்சல் குளத்தில் மூழ்கினால் என்னாவது?

இதை படிக்கும் யாருக்காவது நீச்சல் தெரியாவிடில் தயவு செய்து கற்று கொள்ளுங்கள். எந்த வயதானாலும் பரவாயில்லை. ஒரே வாரத்தில் கற்று கொள்ளலாம். ப்ளீஸ்.

அது மட்டும் அல்லாமல் வீட்டில் நீச்சல் குளம் இருந்தால், உங்களுக்கு நீச்சல் தெரிகிறதோ இல்லையோ, குழந்தைகள் இருக்கின்றார்களோ இல்லையா, ஏழு அடி  உயரத்திற்கு வெளி அமையுங்கள்.

இம்மாதிரியான விபத்து எவருக்கும் நேரலாம். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். மற்றும், நீச்சல் குளத்தோடு வீடு வாங்குவதை தவிருங்கள். இம்மாதிரியான வீடுகள் ஆரம்பத்தில் நமக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தாலும் ஓரிரெண்டு மாதத்தில் அலுப்பு தான். தேவையில்லா செலவு. சில நேரங்களில் வீட்டின் விலையை கூட குறைத்து விடும்.

இம்மாதிரியான நீச்சல் குளம் வைத்துள்ள என் நண்பர்களிடம் 

"கடைசியா எப்ப ஸ்விம் பண்ணீங்க? "

"பல வருசத்துக்கு முன்னால. வீடு வாங்கி ரெண்டு மாசம் இருக்கும் 
, அதுக்கு அப்புறம் போகவே இல்லை?"

இது தான் அவர்கள் சொல்லும் பதில். 

இறந்த அந்த மூவரை நினைத்தால் நெஞ்சு பதறுகிறது. அவர்கள் மூவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

கவனமாக இருந்து விபத்தை  தவிர்ப்போம்.

To read the actual news, click below:



6 கருத்துகள்:

  1. விசு, உங்கள் பதிவு பலருக்கு ஒரு கண்திறப்பு பதிவு,. உறவுகளை இழந்து வருந்தும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் உங்கள் பதிவின் வாயிலாக.

    பதிலளிநீக்கு
  2. நான் வேலை செய்யும் இடத்திற்கு அருகாமையில் நடந்த நிகழ்வு இது.. தேவைக்கு வீடு வாங்காமல் பெருமைக்கு வாங்கியதால் வந்ததன் விளைவுதான் இது எனலாம்

    பதிலளிநீக்கு
  3. சே... மனதை வருத்தும் நிகழ்வு...

    நீச்சல் குளத்தோடு வீடு இருப்பதே இங்கு அபூர்வம் தான்...

    பதிலளிநீக்கு
  4. மனம் மிகவும் வருந்திவிட்டது விசு.
    கரெக்ட்டா சொன்னீங்க விசு. தேவைன்னா நீச்சல் பயிற்சி தரும் இடங்களுக்குச் சென்று நீந்தத் தெரிந்தால் நீச்சல் குளத்திற்கு வாடகை கட்டி கவனத்துடன், பாதுகாப்புடன் நீச்சல் அடிச்சுட்டு வரலாம். வீட்டில் வைத்திருப்பது தேவை இல்லை என்பதே எனது கருத்தும்.

    அந்த மூவருக்கும் அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இது தேவையில்லாத ஆபத்தான ஆடம்பரமோ? உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.

    வேதனையான விஷயம். பிரார்த்தனைகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. எனக்கு கடப்பாறை நீச்சல் மட்டுமே தெரியும்! இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இதுபோன்ற வீட்டுக்குள் நீச்சல்குளம் எல்லாம் ரொம்ப ரேர்!

    இறந்தவர்கள் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...