திங்கள், 29 ஜூன், 2020

பழமுதிர் சோலையில் ரமதான் கிறிஸ்துமஸ் தீபாவளி

ஞாயிறு காலை ஆன் லைனினில் ஆண்டவனை வேண்டிய பின்னர் அம்மணி..

"வாங்க அப்படியே ஒரு ட்ரைவ் போகலாம்"

என்று சொல்ல...

ஆளுக்கொரு முக கவசம் எடுத்து கொண்டு வாகனத்தை கிளப்பி...

""எங்க போறோம்"

"ஒன்னரை மணி நேரம் ட்ரைவ்... ஒரு பழமுதிர் சோலை இருக்கு. அங்கே போய் நாமே பழங்கள் பிடுங்கின்னு வரலாம்."

"இவளுங்க வர மாட்டாளுங்களா?"

"கேட்டேன், இல்லைன்னு சொல்லிட்டாங்க"

மனதில்..

எங்கேயாவது போகும் போது இவளுங்க வரலைன்னு சொன்ன.. "ஓகே பை"ன்னு சொல்லிட்டு கிளம்பும் அம்மணி.. நாம்ம வரலைன்னு சொல்றதுக்கு கூட ஒரு வாய்ப்பு தர மாற்றங்களே.. சொல்லும் போதே.. கிளம்புங்கன்னு தானே சொல்றாங்க

என்று நினைத்து கொண்டே.. 

வண்டியை விட்டேன்.

இங்கே பல சீசனில் நிறைய இடத்தில இம்மாதிரி இடங்களில் சில டாலர்கள் வாங்கி கொண்டு நம்மை உள்ளே அனுப்பிவைப்பார்கள். அங்கே நமக்கு தேவையான பழங்களை பறித்து கொண்டு அதற்கு எடை போட்டு பணத்தை கட்டி விட்டு வீட்டுக்கு எடுத்து கொண்டு வரலாம்.

இது ஒரு பெரிய விஷயமா? இதுக்கு பதிலா நேரா கடைக்கு போனா அம்புட்டையும் அஞ்சு நிமிசத்துல வங்கின்னு வரலாமே.. சரியான கேள்வி தான். இது ஒரு அனுபவம் தான். வார இறுதியில் வீட்டில் அடங்கி கிடப்பதை விட இப்படி போய் வருவது ஒரு நல்ல விஷயம் தானே.

கிட்ட தட்ட 200 கிலோ மீட்டர் தாண்டி அந்த இடத்தை அடைந்தோம்.  பார்க்கிங்  லாட்டில் நிறைய வாகனங்கள் இருந்தது. அனைவரும் முக கவசத்தோடு.

நுழைவாயில் இருந்த அம்மணி என்னை நோக்கி ..

"முக கவசத்தை சரியா போடுங்கன்னு"

 என்று சொல்லிவிட்டு அம்மணியிடம் ஆளுக்கு ஆறு டாலர் என்று சொல்ல 

நம்ம வீட்டில் அம்மணி தான் நிதி அமைச்சர்ன்னு இவங்களுக்கு எப்படி தெரியும்ன்னு யோசிக்கும் போதே, அடியேனை நோக்கி பழம் பொறுக்கி போட பெட்டி மற்றும் பைகள் எல்லாம் தானே இருக்குன்னு என்னிடம் கூற..

அட பாவத்த.. அம்மணி நிதி அமைச்சருன்னு மட்டும் இல்லாமல் நம்ம பை தூக்க தான் வந்து இருக்கோம்ன்னு  தெரிஞ்சு வைச்சின்னு இருக்காங்களே.. 

என்று நினைத்து கொண்டே உள்ளே நுழைகையில்..

அங்கே சில வளர்ப்பு பிராணிகள் இருந்தன.

முதல் கூண்டிலேயே.. 

ஒட்டகம், ஆடு, மாடு என்று மூன்றையும் சேர்த்து யாரோ ஒரு பள்ளிக்கூட பிள்ளை  வரைந்த படம் போல் ஒரு விலங்கு..

"இது என்ன வித்தியாசமா இருக்கே.. எங்கேயுமே பார்த்ததில்லையே.. "

என்று நினைக்கையில், அம்மணி..

'என்னங்க.. அந்த விலங்கை பார்த்தவுடன் முகத்தில் ஒரு சிரிப்பு வருதே, என்ன விஷயம்? "

என்று கேட்க..

"இல்ல, இது ஒன்னு கிடைச்சா பக்ரீத், ரமதான், கிறிஸ்துமஸ், ஈஸ்டர், தீபாவளி, ஆயுத பூஜைன்னு அம்புட்டுக்கும் வெட்டலாம் போல இருக்கே"ன்னு ஒரு நினைப்பு வந்தது என்று சொல்லும் முன்பே..

"என்னங்க, இங்கே பாருங்க.. என்று அம்மணி அலற..

"கொழுத்து என்னை பார் என் அழகை பார் என்று சில நாட்டு கோழிகள்"

"அடே டே.. சைசை பாரு.. இதுல சிக்கன் 65 மட்டும் இல்ல.. ஒன்னை அடிச்சா கொளம்பு வறுவல் சில்லி சிக்கன் 65 சுக்கான்னு அம்புட்டையும் செய்யலாம் போல இருக்கே "

"ஏங்க.. விக்குறாங்களானு கேளுங்க வாங்கின்னு போய் வீட்டுல வளர்க்கலாம்."

"நாசமா போச்சி போ"

"ஏன்?"

"நம்ம ஊரில் கோழி வளர்க்கணும்னா, சிட்டி ஆபிசில் இருந்து பர்மிசன் வாங்கவும். அதுக்கு பக்கத்து வீடு எதிர் வீடு அப்படின்னு எல்லார்ட்டையும் அனுமதி வாங்கணும். அதுக்கு அப்புறம்... லொட்டு லொசுக்குன்னு ஏக பட்ட ரூல்ஸ். இப்படி எதையும் சொல்லாம கொள்ளாம வாங்கின்னு வந்துடாத. வேணும்ன்னா ஒன்னு மட்டும் வாங்கின்னு போலாம். நாக்கு ஊறுது."

அந்த சேவலை பார்க்கையில் பள்ளிக்கூட நாட்களில் திடீரென்று காணாமல் போன பக்கத்து வீட்டு சேவல் நினைவு வந்தது.அவற்றையும் பார்த்து விட்டு ..

பழம் பறிக்க செல்கையில்...

எந்த பழம் எங்கே எப்போது என்ன விலை என்று கிடைக்கும் என்ற ஒரு பலகை தெரிய..

பறிக்க சென்றோம்.

அடுத்த ஒரு மணி நேரம் இருவரும் நான்கு வகையான பழங்களை பறித்து கொண்டு அவற்றை எடை போட்டு பணத்தை கட்டி விட்டு வாகனத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கையில்..

எதிர்ல ஒரு குடும்பத்தினர், உலகத்தில் இருக்கும் அனைத்து காய் கறிவகைகளையும் வாங்கி கொண்டு செல்வதை பார்த்த அம்மணி

"வாங்க அந்த கடைக்கு போகலாம்"

என்று அழைக்க..

அங்கேயும் முக கவசம் அவசியம் என்ற ஒரு பலகையை தாண்டி உள்ளே செல்ல முயல்கையில், முன்னே சென்ற அம்மணியை புன்முறுவலோடு அனுப்பிய ஒரு வெள்ளைக்கார அம்மணி என்னை பார்த்து..

"பாஸ்கெட் எல்லாம் அங்கே இருக்கு, ஒன்னை எடுத்துக்குங்க. "

என்று சொல்ல, என்னடா எல்லாருக்கும் நான் போர்ட்டர் மாதிரி தான் தெரியுறேன்னா என்று நினைத்து கொண்டே வெளியேறினோம்.

பின் குறிப்பு:

இல்லத்திற்கு வந்ததும் அலை பேசி அலறியது.

"என்ன வாத்தியாரே..வீக்கெண்டும் அதுவுமா..வூட்டுல இருக்க முடியாத ? என்னமோ அம்மணியை எங்கேயோ கூட்டினு  போய் பழம் காய் கறி வாங்கின்னு வந்தியாமே"

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, கூட போயிட்டு வந்தேன். கூட மாட உதவிக்கு"

இந்த மாதிரி இடத்திற்கு எல்லாம் போகாத வாத்தியாரே, நாளைக்கு எங்க வீட்டுலயும் இதை எதிர்பார்ப்பங்களே.. வர முடியாதுன்னு கண்டிசனா சொல்லிடு"

8 கருத்துகள்:

  1. 200 .கிலோமீட்டர் தாண்டியா?  அம்மாடி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலிபோர்னியா மாநிலத்தில் 200 கிலோமீட்டர் ஒரு தூரமே இல்லை. "பிரீ வே"யை தொட்டவுடன் க்ரூஸில் போட்டால் ஒரு மணி நேரம் + சில நிமிடங்களில் போய் விடலாம்.

      நீக்கு
    2. ஸ்ரீராம் நான் சொல்ல வந்ததை விசு சொல்லிவிட்டார். ரொம்ப ஈசி ஸ்ரீராம். அங்கு. நமக்கு இங்கு 2 கிலோமீட்டர் போறதே மூச்சு தள்ளுது ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  2. // திடீரென்று காணாமல் போன பக்கத்து வீட்டு சேவல் // ஓஹோ... சரி தான்... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ டிடி முந்திக்கிட்டீங்களே. எனக்கும் அதேதான் தோனிச்சு ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  3. உங்கல் மூலமும் அங்கு இப்படி எல்லாம் வாங்கலாம் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. நேரடியாகத் தோட்டத்திலிருந்து நல்ல விஷயம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  4. விசு அங்க ஒன்னு வளர்க்கணும்னா அதான் ரூல்ஸ் உண்டெ.

    இந்த ஃபார்ம் ஃப்ரெஷ் மிகவும் பிடித்த விஷயம். மகனும் கனடாவில் இருந்தப்ப சொல்லிருக்கான்.

    நிறைய இடங்கள் சிரித்துவிட்டேன். கடைசில தண்டப்பாணி ? ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஒட்டகம், ஆடு, மாடு என்று மூன்றையும் சேர்த்து யாரோ ஒரு பள்ளிக்கூட பிள்ளை வரைந்த படம் போல் ஒரு விலங்கு உவமை அருமை. என்னதான் முக கவசம் போட்டு மறைத்திருந்தாலும் பை தூக்குபவர் யார் பணம் செலுத்துபவர் யார் என்பதை தெரிந்துகொண்ட அந்த வெள்ளிக்கார பெண்மையை பார்த்ததும் முக கவசம் நழுவியது ஏன் ஜொள் ஜொள் சாரி சொல் சொல்,?

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...