வியாழன், 17 ஜூலை, 2014

எனக்கு வடிவு யாருன்னே தெரியாது (இந்திய-இலங்கை கூட்டு தயாரிப்பு)


ஏங்க...இந்த புடைவை "வடிவா" இருக்க?

எனக்கு "வடிவ" பத்தி தெரியாதுமா, ஆனால், இந்த புடவை உனக்கு நல்லா இருக்கும்.

அதத்தாங்க நானும் கேட்கிறேன், "வடிவா" தானே இருக்கு..

சத்தியமா சொல்றேன், அந்த "வடிவு" யாருனே எனக்கு தெரியாது, ஆனால் உனக்கு நல்லா இருக்கும்



ஐயோ, நான் என்னமோ கேட்டா, நீங்க என்னமோ "கதைகி"றீங்க.

உண்மையா சொல்லுறேன்மா, "வடிவு" என்று எவனோ கதை தான் கட்டி விட்டு இருக்கான்.

மீண்டும் மீண்டும் ஏன் "வடிவு வடிவுன்"னு கதைகீறீங்க, உங்களுக்கு எதனா, "வருத்தம்மா"?

எனக்கு ஒன்னும் "வருத்தம்" இல்லமா, கொஞ்சம் உடம்பு சரி இல்லை.

அதுதாங்க, "வருத்தமா"?

சத்தியமா "வடிவு" இங்க இல்லன்னு எனக்கு "வருத்தமே" இல்ல, கொஞ்சம் தலை வலி அதுதான்.

உங்களுக்கு "வருத்தம்" தான் அதை தான் உடம்பு சரியில்லேன்னு சொல்லுறீங்க.

சரி மா, எனக்கு "வருத்தம்" தான்.

சரி, கழிவறைக்கு பொய் "சவுகாறத்த" போட்டு நல்ல கழுவிட்டு வாங்க.

என்னாது? கழிவு அறையில் சவுகார் ஜானகியா? அவங்க இங்க என்ன பண்றாங்க?

ஐயோ, அந்த "வடிவா" இருப்பாங்களே சினிமா நடிகை சவுகார் ஜானகி, நான் அவங்கள சொல்லுல, "சவுகாறத்த" சொன்னேன்.

நான் உண்மையா சொல்லுறேன், அந்த "வடிவு" யாருனே எனக்கு தெரியாது.

சரி, ரொம்ப தலை வலிச்சா, நல்லா முயற்சி பண்ணி "சதி" எடுதுடுங்கோ, பித்தம் எல்லாம் அடங்கிவிடும்.

நான் சதி எதுவும் பண்ணல மா, உண்மையாவே எனக்கு வடிவு யாருன்னு தெரியாது.

நான் நிஜமாதான் கேக்குறேன், நீங்க இப்ப "பகடியா" தானே கதைகிரீங்கோ.

நான் யாரிடமும் "பகடையாக" இருக்கவில்லை, இருக்கவும் மாட்டேன்.

அப்பா ஏன் "விசரதனமா" கதைக்கீறேங்கோ

தயவு செய்து என்னை நம்பு, எனக்கு "வடிவு"ன்னு யாரையும் தெரியாது..."ஜானகி" என்ற பெயரே நான் இன்னைக்கு தான் கேள்வி பட்டேன்,  இதில்  எந்த "சதியும், விஷமும்" இல்ல, இதை நீ நம்பாவிட்டாலும் எனக்கு "வருத்தம்" ஒன்னும் இல்ல. கடிசியா ஒன்னு மட்டும் சொல்றேன். நான் யாரிடமும் ' பகடையா" மாட்டவில்லை.

நீங்க இப்படியே "கதைங்க", நான் "எங்க வீட்டுக்கு" போறேன்.

ஏம்மா இதுக்கு போய் உங்க வீட்டுக்கு போறேன்னு சொல்றியே, இது சின்ன மேட்டர்.

நீங்க சாவிய கொடுங்க நான் "எங்க வீட்டுக்கு" போறேன்.

உங்க வீடு சாவி என்கிட்டே இல்லமா, நம்ப வீட்டு சாவி தான் இருக்கு.

அத தான் கேக்குறேன், "எங்க வீட்டு" சாவியே கொடுங்க நான் "எங்க வீட்டுக்கு" போறேன்.

அது "எங்க வீடு" இல்லமா, நம்ப வீடு"

சரி நம்ப வீட்டுக்கு போறேன், சாவி கொடுங்க.

இந்தா.. நானும் வரேன்...

இல்ல நீங்க கடைக்கு போய் கொஞ்சம் "மரகறி" வாங்கி வாங்கோ.


என்ன காய்?

உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை வாங்கி வாங்கோ.

"கொத்தவரங்காய்" செய்ய தெரியுமா?

அது என்னானே தெரியாது, வேண்டும் என்றால் 'கொத்து அவறை காய்' வாங்கி வாங்கோ.

 'கொத்து அவறை காய்' அப்படினா?

அங்கே கடையில் போய் விசாரிங்கோ, அவங்க சொல்லுவாங்கோ.

ஏம்மா, இந்த கடையில் நான் வருஷகணக்கில் காய் கரி வாங்கி இருக்கேன், அவனுக்கும் சரி, எனக்கும்  சரி இந்த " 'கொத்து அவறை காய்' னா என்னானே
தெரியாது. வேணும்னா கொத்தவரங்காய் வாங்கி வரவா?

சரி அத தான் வாங்கியாங்கோ.


சிறிது நேரம் கழித்து ;

ஏங்க, கடைகாரனுக்கு தெரியாதுன்னு சொன்னீங்க, அவன் " 'கொத்து அவறை காய்' " கொடுத்து இருக்கானே..

அது கொத்தவரங்காய்ம்மா, நான் அப்படி தான் கேட்டு வாங்கி வந்தேன்..

நல்ல இளசா "வடிவா" இருக்குங்க...

மீண்டும் "வடிவா"?, சத்தியமா சொல்லுறேன், அவ யாருனே எனக்கு தெரியாது.


என்ன புரியிலையா... நானோ இந்தியாவில் பிறந்து வளர்ந்த மற தமிழன், எனக்கு வாய்க்கப்பட்டவளோ 'யாழ்பாணத்து தமிழச்சி", திருமணம் ஆனா புதிதில் எங்கள் இல்லத்தில் தினமும் நடைபெறும் காட்சிக்கு ஒரு சாம்பிள். இருந்தாலும் ஒரு காரியம் சொல்லியே ஆகவேண்டும். எங்களுக்கு "கண்ணின் மணி"யை போல ரெண்டு பெண் பிள்ளைகள். நாங்கள் அவர்களை செல்லமாக இது ஒரு "இந்திய-இலங்கை கூட்டு தயாரிப்பு" என்று தான் சொல்லுவோம்.

சரி நான் "எங்க வீட்டுக்கு" போனோம், பின்னேரம் கதைப்போம்!

9 கருத்துகள்:

  1. நீங்கள் பகடித்தானே செய்றிகள். தெனாலி படம் பார்த்துவிட்டு நாங்களே வடிவா இலங்க தமிழ்ல கதைக்கின்ற போது, காதலிக்கும் பெண்ணோட பேச்சு உப்க்களுக்கு புரியலியா!?

    எல்லாம் சரி, காதலி அல்லது மனைவிய்டன் பேச மொழி அவசியமா!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலியிடம் பேச மொழி அவசியம் இல்லை. மனைவியோடு பேச செவிடனா இருந்தா போதும்.

      நீக்கு
  2. இது... என்னைக் கலாய்க்கப் போட்ட மாதிரி இருக்கே விசு!
    நங் நங் நங் ;))

    ம்... கூட்டு என்றால் என்ன! கேட்டுப் பாருங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை கலாய்க்க இல்லை, ஆனால் உங்க //எங்கட பக்கம் சொல்லுவாங்கள், 'தானறியாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்,' என்று, :-) // என்ற உங்களோட பின்னூட்டத்தை பார்த்த பின்பு ... வந்த மலரும் நினைவுகள் தான்...

      நீக்கு
  3. ரெண்டு கூட்டுத் தயாரிப்புக்குப் பிறகும் பாஷை இடிபாடா! பாவம் பிள்ளைகள். ;))

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...