ஏப்ரல் 1 என்றவுடனே எனக்கு நினைவில் வரும் நிகழ்ச்சி. பெங்களூரில் வேலை பார்த்துகொண்டு இருந்த நாட்கள். ஒரு நாள் மாலை வேலை. நான் உண்டு என் வேலை உண்டு என்று இன் அறையில் அமர்ந்து இருந்தேன். அப்போது என் தாயாரும் என் மூத்த சகோதரியும் நாங்கள் வெளியே கடைக்கு செல்கிறோம் "வயசு பையன் தனியா இருக்க, கதவை பூட்டி கொள்"என்றார்கள்.
அவர்களை அனுப்பிவிட்டு கதவை பூட்டி கொண்டு இளையராஜாவிடம் தஞ்சம் புகுந்தேன். இரண்டு நிமிடத்தில் வீட்டு அழைப்பு மணி அலறியது. கதவை திறந்து வெளியே பார்த்தால் ஒரு 13-14 வயது பெண், தலையில் மல்லிகை பூ கூடையோடு. நான் எதுவும் சொல்ல ஆரம்பிக்கும் முன் அவளே ஆரம்பித்தாள். இப்ப போனாங்களே அந்த அம்மாவும் அவங்க பொண்ணும், உன்னை 4 முழம் வாங்கி வீட்டிலே கைக்குட்டை ஈரமாக்கி அதிலே சுத்தி வைக்க சொன்னாங்க. முழம் 2 ருபீஸ் என்று சொல்லி என்னிடம் 8 ருபீஸ் வாங்கி கொண்டாள். மீண்டும் ஒருமுறை மறக்காமல் ஈர துணில சுத்தி வை என்று சொல்லிவிட்டு போனாள்.
நானும் அவள் சொன்ன மாதிரியே, உள்ளே சென்று ஒரு துணியை எடுத்து ஈரமாக்கி அந்த பூவை சுத்தி வைத்து மீண்டும் இளையராவிடம் செல்லும் போது ஒலித்தது "கொடியிலே மல்லியப்பூ". அருமையான அந்த பாடலை ரசித்து விட்டு, மாலை நேரத்தில் நண்பர்களை சந்திக்கலாம் என்று கிளம்பும் போது வந்தார்கள் என் அருமை அம்மாவும், அக்காவும். நான் தயாராக வெளியே கிளம்ப இருப்பதை பார்த்ததும் எங்கே கிளம்பி விட்டாய் என்றார்கள், நானும் நண்பர்களிடம் என்று சொன்னேன்.
அப்போது தான் என் அம்மா கேட்டார்கள். அது சரி, மல்லிப்பூ யாருக்கு வாங்கி கொண்டு போகிறாய் என்று. நான் சிரித்து விட்டு நான் யாருக்கும் வாங்கி போகவில்லை, உங்களுக்கும் அக்காவிற்கும் வேண்டும் என்று தான் வாங்கி வைத்தேன் என்றேன். இருவரும் சத்தமாக சிரித்து விட்டு, இது எத்தனை நாளாக என்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் அவர்களிடம் நடந்த விஷயத்தை விவரித்து சொன்னேன். இருவரும் ஒன்றாக சேர்ந்து, இந்த கதையை எங்களிடம் சொல்வதற்கு பதிலாக இந்த பூவில் பாதியாக பிரித்து எங்கள் காதில் சுத்திவிடு என்றார்கள். நான்எவ்வளவோ சொல்லியும் அவர்கள் என் கதையை நம்ப வில்லை.அவர்களுக்கு தேவையானது எல்லாம், யார் அந்த பெண்? இவன் மல்லிப்பூ வாங்கி கொடுக்கும் வரை அவ்வளவு முக்கியமானவள்? கடைசியில் எப்படியோ அவர்களை நம்பவைத்தவுடன் அவர்கள் என்னை, உனக்கு எல்லாம் யாரு, டிகிரி, மாஸ்டர்ஸ் கொடுத்தார்கள் என்று.
சிறிது நேரம் கழித்து தான் எனக்கு புரிந்தது, அந்த பூக்கார பெண், எனக்கு ஆட்டையை போட்டுவிட்டாள் என்று. வணிகவியல், மார்கெடிங், அட்வர்டைசிங் ஆகிய அனைத்தையும் அத்துவேராக படித்து மட்டும் அல்லாமல் அடுத்தவர்களுக்கும் படித்து கொடுத்து கொண்டு இருக்கும் எனக்கே முழம் போட்டு விட்டாளே ஒரு சிறு பெண் என்று அவளை மனதிற்குள் பாராட்டிக்கொண்டு வெளியே கிளம்பினேன்.
வெளியே வந்தவுடன் என் பக்கத்து வீட்டில் பஞ்சாயத்து சத்தம் கேட்டது. என் நண்பன் சேகரின் அம்மா அவனை சத்தம் போட்டு திட்டி கொண்டுஇருந்தார்கள். நமக்கு எனத்தான் நடந்தாலும் அடுத்தவன் திட்டு வாங்கினால் அதுவும் ஒரு சுகமே என்று அங்கே சிறிது நேரம் நின்றேன். ஒரு ஐந்து நிமிடம் கழித்து சேகர் வெளியே வந்தான். அவன் முகமோ பேய் அறைந்ததை போல் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்) மாறி இருந்தது. மெதுவாக அவனை அருகே அழைத்து என்ன நடந்தது என்றேன்.
ஒன்றும் இல்லை, ஒரு சிறு தவறு நடந்து விட்டது, அதுக்கு என் அம்மா நீ எல்லாம் கல்லூரி படிப்பு முடித்தவனா இல்லை "கல்லூலி மங்கனா" என்று சத்தம் போடுகிறார்கள் என்றான். சரி, விஷயத்தை சொல் என்றேன். சிறிது நேரம் முன் என் அம்மா வெளியே சென்று இருந்தார்கள் என்று அவன் சொன்னவுடன், அடடே, இதுவும் நம் கதை போல் தான் ஆரம்பிக்கிறதே என்று மனதிற்குள் நினைத்து, மேலே சொல் என்றேன்.
அம்மா வெளியே சென்ற இரண்டே நிமிடத்தில் எங்கள் வீடு அழைப்பு மணி அலறியது. நான் திறந்து பார்த்தால் ஒரு பூக்கார பெண் தலையில் மல்லிகை பூ கூடையோடு நின்றுகொண்டு இருந்தாள். அவள் என்னிடம் இப்ப போறாங்களே அந்த அம்மா 4 முழம் பூ வாங்கினாங்கோ, உன்னிடம் 8 ருபீஸ் வாங்கி கொள் என்றார்கள். சேகர் இதை சொன்னதும் நான் சிறிது உணர்ச்சிவசப்பட்டு, இல்லையே, நாலு முழம் வாங்கி வை என்றுதானே சொல்லி இருப்பாள் என்றவுடன், அவன் நானே குழம்பி போய் இருக்கின்றேன், இதில் நீ வேறு என்று என்னை சத்தம் போட்டான்.
நான் நாக்கை கடித்து கொண்டு, கொங்கு தமிழ் பாணியில் "பொறவு" (நன்றி சண்முக வடிவு, அவர்களே) என்றேன். என் அம்மா திரும்பி வந்தவுடன், நான் அவர்களிடம் பூ வேண்டும் என்றால் நீங்களே காசு கொடுத்து வாங்குவது தானே என்னை ஏன் காசு கொடுக்க சொன்னீர்கள், என்னிடம் பணம் இல்லாமால் இருந்து இருந்தால் என் மானம் போய் இருக்குமே என்றேன். அதற்கு அம்மா, நான் யாரிடமும் பூ வாங்கவில்லை, உன்னை காசும் கொடுக்க சொல்லவில்லை என்றதுமட்டும் அல்லாமல் எனக்கு யார் டிகிரி, மாஸ்டர்ஸ் கொடுத்தார்கள் என்று கிண்டல் பண்ணுகின்றார்கள் என்றான்.
எனக்கோ மனதிற்குள் ஒரு சிரிப்பு, நானாவது பரவாயில்லை, 8 ருபீஸ் கொடுத்து 4 முழம் பூவாவது வாங்கினேன், இவன் என்னைவிட மோசம் என்று எனக்கே ஒரு ஆறுதல் சொல்லி அவனிடம், இனிமேல் இப்படி முட்டாளாக இருக்காதே, கொஞ்சம் ஸ்மார்டாக இரு என்று அறிவுரை கூறிவிட்டு கிளம்பினேன்.
இரவு 8:30 மணி போல் வீடு திரும்பி சாப்படை முடித்து விட்டு மீண்டும் இளையராஜாவை அணுகினால், மாலை பாதியில் நின்ற "கொடியிலே மல்லியப்பூ" பாட்டு விட்ட இடத்தில இருந்து தொடர்ந்தது. அதை கேட்டவுடன் என் அக்கா, அது சரி நீ வாங்கி வைத்தாயே அந்த 4 முழம் பூ, அது எங்கே காணவில்லை என்று கத்தினாள், எனக்கு தெரியாது என்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு அடுத்த பாட்டான ' அடி ராசாத்தி ஒரு மனசொன்னு ரக்கை கட்டினு" பாடி கொண்டே தூங்க போனேன்.
இப்படியெல்லாமா ஏமாறுவாங்க. செல்போன் அப்ப இருந்திருந்தா இப்படி காதில் பூ சுத்திக்கிட்டு இருந்திருக்க வேண்டாமில்ல!!
பதிலளிநீக்கு//இப்படியெல்லாமா ஏமாறுவாங்க// சேகரைதானே சொல்லுறீங்கோ?
நீக்குபாடல்களும் நல்லாத்தான் இருக்கு...!
பதிலளிநீக்குஅதுதான் சொன்னனே, தனபால். பொற்காலத்து பாடல்கள் ஆச்சே..
நீக்குஇரண்டு ரூபாவுக்கு மல்லிபூவா? யாரு காதுல பூ சுத்தறீங்க?
பதிலளிநீக்குஇப்ப முழம் எவ்வளவு தளிர் சுரேஷ்? இந்த விலை முட்டத்து சின்னப்பா தாஸ் நாட்களில்...
நீக்குஆகா ஒரு சிறிய பெண்
பதிலளிநீக்குஎன்ன ஒரு விற்பனைத் தந்திரம்
எனக்கு கூட பரவாயில்லை ஐயா... சேகருக்கு தான் வெறுங்கையில் முழத்தை போட்டாச்சி..
நீக்குமல்லிகைப் பூவிற்காக
பதிலளிநீக்குகதை நன்றாக நகருகிறது