சனி, 18 ஜூலை, 2020

தென்னையை வைச்சா கண்ணீரு!!!

சனியும் அதுவுமாய் அம்மணிகள் மூவரும் வெளிய செல்ல, மதியசமையலை நான் செய்கிறேன் என்று சொல்லி, என்ன சமைக்கலாம் என்று மனதிலே பல  எண்ணங்களை ஒட்டி கடைசியில்,  "தேங்காய் மீன் குழம்பு" என்று முடிவு செய்து சமையலை ஆரம்பித்தேன்.

கருவேப்பிலை பிடுங்க தோட்டம் செல்ல கோடை வெயில் முகத்தில் சுளீர் என்று அடிக்க அடித்து பிடித்து வீட்டில் நுழைந்தேன். 

எதிரில் தேங்காய் மீன்.

"வெயில் - தேங்காய் - மீன்"

பல வருடங்களுக்கு முன் பயணித்தேன்.


வளரும் காலத்தில் பள்ளி ஆண்டு முடிந்து கோடை ஆரம்பிக்க, விடுமுறைக்காக கிராமம் செல்லும் வழக்கம். அந்நாட்களில் எங்கள் கோடை விடுமுறையை கழிக்க நாங்கள் வருடா வருடம் செய்யும் ஒரு காரியம் "அடுத்துள்ள தென்னை தோப்பில் இளநீர் திருட்டு"

இந்த இளநீர் திருட்டில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. பல வருடங்களுக்கு பின் அந்த தோப்பின் காவலரிடம் சென்று..

"அண்ணே, தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க , சின்ன  வயசுல  உங்க தோப்பில் நிறைய முறை தேங்காய் திருடி இருக்கேன். ஒரு தேங்காய்க்கு ஒரு 4 ஆனாலும் கிட்டத்தட்ட 50 காய் திருடிருப்பேன். இந்தாங்க இருநூறு  ருபாய்"

 என்று கொடுக்க., அவரோ..

"மொத்தம் 64காய் எடுத்து இருப்ப!!? நீ ஒவ்வொரு முறை மரம் ஏறும் போதும் நானும் என் வீட்டுக்காரியும் சன்னல் வழியா பார்த்து சிரிப்போம். நீ காயை பறிச்சி போட அதை மத்தவங்க மறைஞ்சி மறைஞ்சி எடுத்துன்னு ஓட எங்களுக்கு ரொம்ப தமாஷா இருக்கும்"

"அட பாவத்த!!!  எல்லாத்தையும் பாத்துன்னு தான் இருந்தீங்களா?"

"நீ இந்த தோப்புக்குள்ள பண்ண அம்புட்டு சேஷ்ட்டைகளும் எங்களுக்கு தெரியும் "

"அப்புறம் ஏன் அம்மாக்கிட்ட மாட்டி கொடுக்கல...?"

"என்ன பேசுற!!? பத்து மாசம்  அம்மா , எங்க எல்லாரையும் மறந்துட்டு பட்டணத்துல இருக்க. இங்கே இருக்குறது இரண்டே மாசம். அதுல என்னமோ இந்த தேங்காயை திருடுறதுல உனக்கு சந்தோசம். உன் சந்தோசத்தை கெடுப்பானேன்"

"அண்ணே" !!!

கண்கள் கலங்கியது, அவரோ தொடர்ந்தார்.

"ஒவ்வொரு ஏப்ரல் மாசமும் தோப்புல இருக்குற குட்டை மரத்துல காயை பறிக்காத!  விசு வருவான்!  பாவம் அப்பா இல்லாத புள்ளை! உசரமான மரத்துல ஏறி கீழே கீழ  விழுந்தானா, என்ன ஆகும்ன்னு புலம்புவா!!!"

அழுகையை நிறுத்த முடியாமல் கண்ணை துடைக்கையில் அவரின் இல்லத்தரசி வர என்னையும் அறியாமல் ..

"எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை அக்கா"

"சே.. ஆம்பிள பிள்ளை அழ கூடாது. நீ போன பிறகு யார் கண் பட்டதோ, அந்த மரம் கூட காய்க்கவே இல்லை. இருந்தாலும் அதை வெட்ட மனசு வரல."

என்றவர் மீண்டும் ஒரு முறை அந்த மரத்தை பார்த்து

"அட பாவத்த! இது என்ன அத்தி பூத்தாப்பல குருஞ்சி போல இம்புட்டு வருஷம் கழிச்சு பூத்து இருக்கு" என்று மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொண்டே , அவர்கள் இல்லத்திற்கு அழைத்து  விரால் மீன் குழம்பை  சோற்றோடு பரிமாற...

"இன்னும் குளத்துல மீன் கிடைக்குதா?"

"குளத்துல தண்ணியே இல்ல, மீன் எப்படி வரும்? இது கிருஷ்ணகிரி மார்க்கெட்டில் வாங்குனது, நீ இன்னைக்கு வரேன்னு சொன்னாங்க அதான் காலம்பற போய் வாங்கின்னு வந்தேன்""

அந்த குடும்பத்தின் அளவற்ற அன்பை மனதில் நினைத்து கொண்டே சாப்பிட்டேன் !

"ஏன் விசு கண் கலங்குது ..!!?  காரமா!!? இந்தா இந்தா, நீ சின்ன வயசுல ஆசையா சாப்பிடுவியே.. வெல்லம் போட்ட தேங்காய் உருண்டை.,இதை எல்லாம் இன்னும் சாப்டுவியா ? இல்லாட்டி கேக்கும் க்ரீம் பன் மட்டும் தானா?  "

என்று வெல்லம் தேங்காய் போட்ட உருண்டை ஒன்றை தர 

காரமும் அழுகையும் காணாமல் போனது. 

"என்னங்க.. மீன் முள் ஏதாவது குத்திடிச்சா? "

மதிய உணவை சாப்பிடுகையில் அம்மணி கேட்க...

இளையவளோ..

"ஹலோ.. கண்ணில் தண்ணி வந்தா முள் குத்துனதா அர்த்தம் இல்லை. குழம்பில் காரம் ஜாஸ்தி"

என்று சொல்ல.. 

ஆமாம் காரம் தான் என்று சொல்லி கொண்டே அந்த வெல்லம் தேங்காய் போட்ட கமர்கட்டை தேடி ஓடினேன்.

பின் குறிப்பு:

எங்கள் இல்லத்தில் ஒரு பாட்டில் நிறைய தேங்காய் வெல்லம் போட்ட கமர்கட்  இருக்கு, இன்னமும் அது தான் எனக்கு ரொம்ப பிடிச்ச டெஸெர்ட்!

4 கருத்துகள்:

  1. இனிய நினைவுகள் ...

    கண்டும் காணாமல் விட்ட அன்பு ஆஹா அழகு

    கமர்கட்டு ...மிகவும் சுவை

    பதிலளிநீக்கு
  2. arumaiyana pathivu. Sila nerangalil namma yarukkum theriyama panra thappu kooda yaro orutharoda perunthanmaiyala punithamaagidudhu.

    Truly blessed.

    பதிலளிநீக்கு
  3. இப்படியும் அன்பான மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்...   இனிமையான நினைவுகள்.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...