சனியும் அதுவுமாய் அம்மணிகள் மூவரும் வெளிய செல்ல, மதியசமையலை நான் செய்கிறேன் என்று சொல்லி, என்ன சமைக்கலாம் என்று மனதிலே பல எண்ணங்களை ஒட்டி கடைசியில், "தேங்காய் மீன் குழம்பு" என்று முடிவு செய்து சமையலை ஆரம்பித்தேன்.
கருவேப்பிலை பிடுங்க தோட்டம் செல்ல கோடை வெயில் முகத்தில் சுளீர் என்று அடிக்க அடித்து பிடித்து வீட்டில் நுழைந்தேன்.
எதிரில் தேங்காய் மீன்.
"வெயில் - தேங்காய் - மீன்"
பல வருடங்களுக்கு முன் பயணித்தேன்.
வளரும் காலத்தில் பள்ளி ஆண்டு முடிந்து கோடை ஆரம்பிக்க, விடுமுறைக்காக கிராமம் செல்லும் வழக்கம். அந்நாட்களில் எங்கள் கோடை விடுமுறையை கழிக்க நாங்கள் வருடா வருடம் செய்யும் ஒரு காரியம் "அடுத்துள்ள தென்னை தோப்பில் இளநீர் திருட்டு"
இந்த இளநீர் திருட்டில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. பல வருடங்களுக்கு பின் அந்த தோப்பின் காவலரிடம் சென்று..
"அண்ணே, தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க , சின்ன வயசுல உங்க தோப்பில் நிறைய முறை தேங்காய் திருடி இருக்கேன். ஒரு தேங்காய்க்கு ஒரு 4 ஆனாலும் கிட்டத்தட்ட 50 காய் திருடிருப்பேன். இந்தாங்க இருநூறு ருபாய்"
என்று கொடுக்க., அவரோ..
"மொத்தம் 64காய் எடுத்து இருப்ப!!? நீ ஒவ்வொரு முறை மரம் ஏறும் போதும் நானும் என் வீட்டுக்காரியும் சன்னல் வழியா பார்த்து சிரிப்போம். நீ காயை பறிச்சி போட அதை மத்தவங்க மறைஞ்சி மறைஞ்சி எடுத்துன்னு ஓட எங்களுக்கு ரொம்ப தமாஷா இருக்கும்"

