அருமையான வாழ்த்து வாக்கியம். இதன் உண்மையான அர்த்தத்தை கொரோனாதான் எனக்கு புரிய வைத்தது. இந்த வாழ்த்தை பொதுவாக நாம் திருமணமாகும் தம்பதியருக்கு சொல்லுவோம், மற்றும் சொல்ல கேட்டு இருப்போம்.
சிறிய வயதில்.. இது என்ன பதினாறு பெற்றுன்னு சொல்றாங்க.. அம்புட்டு பிள்ளைகளை பெற்றால் நாட்டு நிலைமை என்னாவாகுவது என்று நினைத்தது உண்டு.
பிறகு இந்த பதினாறு என்பதை என்னவென்று அறிந்தேன். அது..
கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி
அருமையான பதினாறு. சரியான வாழ்த்துக்கள் தான்.
திருமணம் என்ற ஒரு சம்பிரதாயம் நாட்டுக்கு நாடு கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் வித்தியாசப்படும். இந்திய திருமணத்திற்கும் அமெரிக்க திருமணத்திற்கும் ஒரு பெரிய வித்யாசமுண்டு. இந்தியாவில் சாவு வீடிற்கு அழைக்காட்டியும் போகணும், கல்யாண வீட்டுக்கு போகாதவங்களையும் அழைக்கணும்ன்னு சொல்லுவாங்க.
இங்கே அமெரிக்காவில் ஒரு திருமணம் என்றால் மாப்பிள்ளை மற்றும் மணமகளுக்கு மிகவும் வேண்டியவர்களை மட்டுமே அழைப்பார்கள். ஐம்பது பேர் ஒரு திருமணத்திற்கு வந்தாலே நல்ல கூட்டம் என்று தான் இருக்கும். திருமணமானது இப்படி, நிச்சயதார்தம் இதை விட மோசம்.
இப்போதெல்லாம் பொதுவாகவே ஒருவர் ஒருத்தியை நிச்சயதார்த்தம் பண்ணிவிட்டார் என்பதை சமூக வலைத்தளத்தில் தான் அறிவிக்கிறார்கள். எதோ ஒரு நாள் ஒரு பூங்காவிலோ அல்ல ஹோட்டலிலோ பெண்ணின் எதிரில் முழங்காலிட்டு ஒரு மோதிரத்தை நீட்டி.. "Will you marry me" என்று கேட்க அந்த பெண் சிரித்து கொண்டே.. Yes Yes என்று அலற நிச்சயதார்த்தம் முடிந்தது.
இந்தியாவில் திருமணத்திற்கு வருவோம். இப்படி அறிந்தோர் அறியாதோர் தெரிந்தோர் தெரியாதோர் என்று அனைவரையும் அன்பாக அழைத்து உபசரிக்கும் நாள் போய், பின்னர் அதுவே பெருமைக்குரிய விடயமாகிவிட்டது.
அவங்க வீட்டு கல்யாணத்துக்கு ஆயிரம் பேர்.. நமக்கு ஆயிரத்து ஒண்ணாவது வரணும் என்ற வறட்டு கௌரவம்.
சரி, வசதி இருக்கின்றவர்கள் தான் இப்படி செய்கின்றார்கள் என்றால், புலியை பார்த்து பூனை சுட்டு போட்டு கொண்டது போல் இல்லாதவர்களும் இப்படி செய்ய ஒரு திருமணத்தின் ஆரம்பமே கடனில் துவங்குகிறது .
அதுமட்டுமில்லாமல் சில திருமணங்களில் வசதி குறைந்த பெண் வீட்டாரிடம் கல்யாண செலவு மொத்தம் உங்க செலவு என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்ல, அவர்கள் படும் பாடை சொல்லி மாளாது.
கொரோனா நாட்களில் பழைய வீடியோக்களை பார்த்து கொண்டு இருந்த இளையவள்...
"அது சரி.. உங்க கல்யாணம் பத்தே நாளில் பாத்து நடந்ததுன்னு சொன்னீங்களே?"
"ஆமா..உங்க அம்மாவா பாத்தேன்..உடனே ரெண்டும் பேருக்கும் புடிச்சி போச்சி. எனக்கு லீவும் இல்ல.. தாலிய காட்டுன்னு சொன்னாங்க. கட்டிட்டேன்.. "
"பத்தாவது நாளில்!!!!?"
"உங்கப்பரானை!"
"அப்புறம் எப்படி இவ்வளவு கூட்டம், ஆயிரத்துக்கும் மேல இருக்கும் போல இருக்கு!!!"
"நல்ல வேளை பத்தாவது நாள். இல்லாட்டி ரெண்டாயிரத்தையும் தாண்டி இருக்கும்."
"ஓ மை காட்.., இவங்க எல்லாம் யாரு?"
"பேமிலி, பிரெண்ட்ஸ். சொந்த பந்தம்ஸ்.."
"எதுக்கு இத்தனை பேரை கூப்பிட்டிங்க?"
"ஹலோ... பாதி தான் எங்க ஆளுங்க.. மீதி எல்லாம் உங்க அம்மா பேமிலி, பிரெண்ட்ஸ்...அவங்களையே கேளு"
இருவரையும் அமர சொல்லி .. ரிசப்ஷன் வீடியோவை போட்டு, முதலில் வந்த சில சொந்த பந்தங்களை யார் யார் என்று சொல்லுங்கள் என்று கேட்டாள் .
முதல் குடும்பம்..
"எனக்கு தெரியாது.. உங்க அம்மா.!!! "
அம்மணி குறுக்கிட்டு..
"எங்க வீட்டில்இருந்து ஆறாவது வீடு. இந்தியா வந்த புதிதில் அவர் வீட்டில் தான் வாடகைக்கு இருந்தோம்."
"எப்ப..!! ?"
"பத்து வருசத்துக்கு முன்னால"
மகள் குழம்பியே விட்டாள் .
அடுத்த குடும்பம்..
"எனக்கு தெரியாது, உங்க அம்மாட்ட.. "
"சும்மா எல்லாரும் எங்க ஆளுங்கன்னு சொல்லாதீங்க. கொஞ்சம் பார்வர்ட் பண்ணு ."
அவளும் பண்ண
"நிறுத்து..இது யாருமே எனக்கு தெரியல.. உங்க அப்பா ஆளுங்க..."
"யாரு டாடா இந்த குடும்பம்.?!!"
"இது.. ஓ..ஒரு நிமிஷம் இரு.. வந்து.. இவங்க வந்து.."
"யாருனே தெரியலை..அப்புறம் ஏன் கூப்பிட்டீங்க.?"
"ஓ.. இப்ப தெரியுது. நான் படிச்ச ஸ்கூல் ஆறாவது வாத்தியார்.கல்யாணதுக்கு துணி எடுக்க போன சமயத்துல அங்கே இருந்தாரு. அப்ப தான் குடும்பதோடு அங்கே வந்து இருந்தாரு, அப்ப இன்விடேஷன் கொடுத்தேன்."
"எங்கேயோ துணி எடுக்க போன இடத்துல இன்விடேசன் கொடுத்தீங்களா....?""
அடுத்த குடும்பம்..
"உங்க அம்மா டர்ன்"
"யார் அம்மா இது?"
"ஓ.. இது.பத்து வருசமா எங்க டைலர். வருசா வருஷம் பண்டிகைக்கு இவர் தான் தைப்பார். அந்த கல்யாண ப்ளௌஸ் கூட அவருதான்..."
"ஓ.. டைலர்.."
அடுத்த குடும்பம்..
"உங்க அப்பா டர்ன்"
"இது எங்க வீட்டுக்கு பக்கத்துல டீ கடை வச்சின்னு இருந்தார். எப்பவுமே காசு கேக்க மாட்டார். அக்கௌன்ட் வச்சி இருப்பார். அவங்க குடும்பம்"
இப்படி மாறி மாறி நாங்கள் காட்ட முடிவில்அவளோ..
உங்க மொத்த கல்யாணத்துக்கு 16 பேர் மட்டும் வந்து இருந்தா போதும். நீங்க சொன்ன படி பாத்தா உங்க கலயாணத்துக்கு கூப்பிட்டு மத்தவங்க நேரத்தை தான் வீணடிச்சி இருக்கீங்க.. "
என்று நொந்து கொண்டே கிளம்ப..
ஒரு குறுந்செய்தி.
நாளை காலை 10 மணிக்கு என் மகன் திருமணம். நீங்கள் நேரலையில் காணலாம். என்று..
அவங்களுக்கு காலை என்றால் நமக்கு மாலை தானே.. என்று நேரத்தை பார்க்க திருமணம் துவங்கும் என்று அறிந்து.. மகளை அழைத்து...
"எங்களை இப்படி கிண்டல் பண்ணியே.. வா!!!, வந்து இந்த கல்யாணத்தை பாருன்னு"
சொல்ல..
திருமணமும் ஆரம்பிக்க ..அங்கே மொத்தமே.. பதினாறு பேர் தான்.
இளையவளோ...
"நீங்க ரெண்டு பேர் தான் தேவை இல்லாமல் பண்ணி இருக்கீங்க.. இங்கே பாருங்க.. முக்கியமானவங்களை மற்றும் கூப்பிட்டு இருக்காங்க "
என்று சொல்ல..
திருமணத்தில் அமர்ந்து இருந்த உறவினருக்கு
"என்ன. .16 பேர் மட்டும் இருக்கீங்க.. மத்த ஆயிரம் எங்க?"
என்று வாட்சப் செய்தி அனுப்ப., அவரோ கேமராவை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து ..
"இது கொரோனா ஸ்பெஷல், குடுமபத்துக்கு ரொம்ப முக்கியமானவர்களை மட்டும் கூப்பிட்டாங்க" "
என்று பதில் செய்தி அனுப்பினார்.
மனதில்,
"ஓ கொரோனவினால் சில நல்ல விஷயமும் வந்து இருக்கு. நாம இனிமேல் இப்படி இருக்க பழகிக்கணும். ஆடம்பர அனாவசிய வேலைகளை தவிர்க்கணும்"
இந்த திருமண விசயத்தில் பலருக்கும் உதவுவதும் உண்மையே...
பதிலளிநீக்குநல்ல விஷயம்தான். ஆனாலும் சில பெருந்தலைகள் இந்நேரத்திலும் கூட்டம் கூட்டிக் 'காட்டி' இருக்கிறார்கள்!
பதிலளிநீக்கு