1986 ஃபுட்பால் சீசன், நடப்பது என்னமோ மெக்சிகோவாக இருந்தாலும், இந்தியாவிற்கும் மெக்சிகோவிற்கும் மட்டுமல்ல இந்தியாவிற்கும் ஃபுட்பாலுக்குமே ரொம்ப தூரம் என்றாலும் உலகக் கோப்பையை அணுஅணுவாக ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உடல் முழுக்க வெறியேறிக் கிடந்தது.
காலேஜ் ஆரம்பிச்சு ரெண்டே நாள் தான் ஆச்சு, ரெண்டு வாரத்துக்கு முன்னால தான் அம்புட்டு பேருக்கும் எம்புட்டு அரியர்ஸ் என்ற செய்தியுடன். இது ஃபைனல் இயர் இதுக்கு முன்ன அரியர்ஸ் இருந்ததை வீட்டில் மறைச்சிடலாம். ஆனா இப்போ ஃபெயில் ஆனா வீட்டுக்கு தெரிஞ்சிடும்ன்னு கொஞ்ச பயத்துல முதல் நாளில் இருந்தே படிக்கலாம்னு ஒரு முடிவோட இருந்ததுல யார் கண் பட்டுச்சோ, அடுத்த ரெண்டே நாள்ல உலகக் கோப்பை ஆரம்பிச்சுட்டானுங்க.
சரி ஆனது ஆச்சு ஒரு மாசம் தானே, உலகக்கோப்பையை முழுசா பார்த்துட்டு அப்புறம் படிச்சிக்கலாம்னு ஒரு முடிவெடுத்துட்டு நண்பர்களோடு சேர்ந்து ஒரு எந்த அணியோட எந்த அணி என்னைக்கு ஆடுறாங்கன்னு ஒரு பெரிய சார்ட் போட்டு கையில் கிடைச்ச அஞ்சையும் பத்தையும் வைச்சி பந்தயம் கட்டிட்டு இருந்தோம்.
ஒரு ராத்திரிக்கு மூணு ஆட்டம், முதல் ஆட்டம் 10 மணி போல் ஆரம்பிக்கும், ரெண்டாவது ஆட்டம் 1 மணிக்கு, கடைசி ஆட்டம் 3 மணி போல் ஆரம்பிச்சி முடியும் போது விடிஞ்சிடும். ரா முழுக்க கண்ணுல விளக்கணையை ஊத்தி பாத்துட்டு காலம்பற பக்கத்துல இருக்க ராதா கடைக்கு போய் ஒரு டீ ரெண்டு பன் வாங்கி சாப்பிட்டு வந்து வீட்டுல ஃபேன எட்டுல தட்டி விட்டு தூங்கப் போனா சாயங்காலம் அஞ்சு மணிக்கு எழுந்தா விம்பிள்டன் பாக்கறதுக்கு சரியா இருக்கும்.
தொடர்ந்து நாலஞ்சு நாள் போகாம இருந்ததுல புரொபஸர் நம்ம மேல ரொம்ப அன்பா இருக்கிறதா கேள்விப்பட்டு CMCயில் வேலை செஞ்சிட்டு இருந்த பங்காளியின் காலைப் பிடிச்சு கையில் மாவு கட்டு ஒன்னைப் போட்டுட்டு புரொபஸரை பார்க்கப் போனேன்.
"எங்க ஆளை காணோம்?"
"அது வந்து சார்"
"கையில என்ன?"
"மாவு கட்டு"
"அது கை உடைஞ்சவங்களுக்கு தானே போடுவாங்க, நீ ஏன் போட்டுட்டு இருக்க?"
"அது வந்து சார்"
"உண்மையை மட்டும் சொல்லு"
"அது வந்து சார்"
"எதுக்கு ஜன கன மன பாடுற மாதிரி அசையாம நிக்குற? உண்மையா சொல்லு.."
"ஜன கன மன.."
"ஜன!!!!?"
"நம்ம ஜனா இருக்கான் இல்ல சார்"
"ஆமா, அவனையும் உன்னோட சேர்ந்து காணோம், உன்னை மாதிரியே மாவு கட்டு போட்டுட்டு வரப் போறானா?"
"உங்களுக்கு தெரியாதா சார்?"
"எனக்கு என்ன தெரியும் தெரியாதுன்னு உனக்குத் தெரியாது"
"ஜனாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாதா சார்!"
"கிளைக்கதையா? சொல்லு கேப்போம்"
"ஜனாவை..."
"சொல்லு ஜனாவை..."
"ஜனாவை..." யோசித்தேன்...
"ம்ம்... இன்னுமா யோசிக்கிற? சொல்லு"
"சார், ஜனாவை..."
"ஜனாவுக்கு என்ன ஆச்சுன்னு சொல்றதுக்குள்ள உன் நாக்கு ஏன் இப்படி ஓடி வந்த நாய் மாதிரி தொங்குது?"
"சார் ஜனாவை நாய் கடிச்சிருச்சு"
"அவன் ஏன் நாயக் கடிச்சான்?"
"சார், கடி வாங்கிட்டான்"
"நாய்க்கு ஒன்னும் இல்லையே"
"சார்..."
"ஜோக் சொன்னா சிரிக்கணும்"
"சார்..."
"ஜனா எப்படி இருக்கான்?"
"பரவால்ல போல இருக்கான் சார்"
"உனக்கு ஏன் மாவு கட்டு?"
"நான் ஜனாவை காப்பாத்த போகும் போது..."
"காப்பாத்தி விட்டா மாவு கட்டு போடுவாங்களா?"
"சிரிக்கணுமா சார்?"
"வேண்டாம், மேல சொல்லு"
"காப்பாத்த போன என்னையும் நாய் துரத்த, நான் சுவரை தாண்டி குதிச்சேன்"
"அது நீங்க வழக்கமா செய்றது தானே"
"ஆமா... இல்ல சார்"
"ஜனா ஏன் சுவர் ஏறி குதிக்கல?"
"அவனை தான் நாய் கடிச்சிருச்சே"
"கடிக்கிறதுக்கு முன்னால ஏன் குதிக்கல!?"
"அவன் தான் பார்க்கலையே!"
"பார்க்காம நாய் கடிக்கிற வரைக்கும் கண்ணை மூடிட்டு இருந்தானா?"
"அவன் சுவரை பார்க்கல சார்"
"சரி, உனக்கு ஏன் மாவு கட்டு?"
"கீழே விழுந்துட்டேன்"
"இது எத்தனை நாளைக்கு?"
"ஃபைனல்ஸ் வரைக்கும், இன்னும் ஒரு மாசம் இருக்கு"
"வாட்?"
"ஃபைனல் செக் அப் இன்னும் ஒரு மாசம் இருக்கு, அது வரைக்கும் சார்"
"சரி, அப்ப நீ புக்ஸ் எல்லாம் கொண்டு வர வேணாம், சும்மா வந்து க்ளாஸ்ல உட்காரு"
"இல்ல சார், வந்து... கைக்கு மட்டும் தான் மாவு கட்டு, உட்கார எடத்துல கூட சரியான அடி, தையல் கூட போட்டு இருக்காங்க"
"அது எத்தனை நாள்?"
"அதுவும் ஃபைனல்ஸ் வரைக்கும்"
"ஓகே, எலியும் பாலாஜியும் எங்க? அவங்களையும் காணோமே?!"
"சார்... நம்ம ஜனாவை..."
"நாய் கடிச்சிருச்சு"
"ஆமா சார்"
"எலி எங்க?"
"மருந்து வாங்க..."
"எலிக்கு தான் மருந்து வாங்குவோம், இங்க எலியே மருந்து வாங்க போயிருக்கா?"
"இதுக்கும் சிரிக்கணுமா சார்?"
"இனிமே எதுக்குமே நீ சிரிக்க வேணாம், பாலாஜி எங்க?"
"எலிக்கு துணையா போயிருக்கான் சார்"
"காமர்ஸ் பாலாஜி எதுக்கு எலியோட போனான்?"
"சார்..."
"இது ஜோக் இல்ல, எலியும் பாலாஜியும் எங்கே?"
"சார் நம்ம ஜனாவை..."
"அடேய்... ஜனாவை நாய் கடிச்சுருச்சு, எலி மருந்து வாங்க பாலாஜியோட போனான்? என்ன மருந்து? எங்கே போனான்?
"நாய்க்கடிக்கு ஊசி வாங்கப் போனானுங்க"
"ரெண்டு நாளாவா?"
"பதினாறு ஊசியாம் சார், இங்கே இருக்க எல்லா கடையிலும் கேட்டு பார்த்தாச்சு சார், ஸ்டாக் இல்லையாம்"
"ஏன் ஸ்டாக் இல்லையாம்?"
"இது நாய்க்கடி சீசனாம்"
"பாவம், தொப்புளை சுத்தி வேற போடணுமே"
"தொப்புளுக்கு கூடவா சார் திருஷ்டி சுத்தி போடுவாங்க?"
"டேய் நான் ஊசியைச் சொன்னேன்"
"சார்..."
"இப்ப என்ன பண்ணப் போறீங்க? அவங்க வீட்டுக்கு தகவல் சொல்லி அனுப்பிடீங்களா?
"சார்... ஜனா இன்னும் உயிரோட தான் சார் இருக்கான்"
"பாலாஜி எங்கே?"
"அவன் மெட்ராஸ் போய் இருக்கான்"
"எதுக்கு? எப்போ வருவான்?"
"ஊசி வாங்க சார், பதினாறும் கிடைச்சதும் பெரு வாழ்வோடு வருவான்"
"நீ போய் சொல்லல தானே"
"சார், நம்பலைன்னா அந்த நாயக் கூட கேட்டுப் பாருங்க சார்"
"இந்த காலத்துல எந்த நாயையும் நம்பறதுக்கு இல்ல"
"வேணும்னா டாக்டர் சர்டிபிகேட்..." நாக்கைக் கடித்துக் கொண்டேன்.
"நல்ல ஐடியா... உன் கூடவே சுத்திட்டு இருப்பானே சந்தானம், அவனை ஏன் காலேஜ் பக்கமே காணோம்?"
"சார்... ஜ..."
"டேய்... சந்தானம் எங்கன்னு மட்டும் சொல்லு"
"அதான் சார், முதல்ல இருந்து சொன்னா தான் எனக்கு சரியா சொல்ல வரும்"
"சொல்லித் தொலை"
"ஜனாவை நாய் கடிச்சிடிச்சி இல்ல"
"அதைத்தான் வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்கியே, அதுக்கும் சந்தானத்துக்கும் என்ன சம்பந்தம்?"
"சம்பந்தம் இருக்கு சார்"
"சொல்லுடா"
"டாக்டர்... டாக்டர் இன்னும் கொஞ்ச நாளுக்கு அந்த நாயோட பிஹேவியரை கவனமா பார்க்கணும்னு சொல்லி இருக்காரு"
"சோ..."
"சந்தானம் நாயை கவனிச்சிட்டு இருக்கான்"
"அந்த நாயை கவனிக்கவே நாலு நாய் வேணும், இதுல அது ஒரு நாயை கவனிக்குதா?"
"கரெக்ட் சார்"
"எவ்வளவு நாள்?"
"ஃபைனல்ஸ் வரைக்கும்"
"ஜனாவை கடிச்ச நாயை இவன் ஏன் பாத்துக்கணும்?"
"கடிச்சது சந்தானத்தோட நாய் சார்"
"சந்தானத்து நாய் ஜனாவை ஏன் கடிக்கணும்?"
"நாயை தான் கேட்கணும்"
"எந்த நாயை?"
"சார்..."
"எனக்கு ஒரு உதவி பண்ணு"
"மாவு கட்டு போட்டு இருக்கேன் சார்"
"கை தேவையில்லை"
"சொல்லுங்க சார்"
"ஜனாவை உடனே ஒரு டாக்டர் சர்டிபிகேட் வாங்கி அனுப்ப சொல்லு"
"சார்..."
"ஏன்டா கத்துற? பாலாஜியை மெட்ராஸ்க்கு போன பஸ் டிக்கட் எடுத்திட்டு வந்து காட்ட சொல்லு"
"சார்..."
"மறுபடியும் ஏன்டா கத்துற? எலி வாங்கிய நாய் ஊசி ஒன்னாவது எடுத்திட்டு வந்து என் கிட்ட காட்ட சொல்லு"
"சார்..."
"காது அடைக்குதுடா, சந்தானம் காலேஜுக்கு திரும்பவும் வரும் போது அவன் நாயை கூட்டிட்டு வர சொல்லு"
"சார்..."
"சோடா குடி.. போய் ரெஸ்ட் எடுத்துக்கோ, ஃபைனல்ஸ்க்கு அப்புறம் பாக்கலாம்"
அன்று இரவு அறையில் சந்தானம், எலி மற்றும் பாலாஜியுடன்...
"இன்னைக்கு செம மேட்ச் விசு"
"ஆமா"
"நம்ம டிப்பார்ட்மெண்ட் பெருச எப்படி சமாளிக்க போறோம்?"
"ஏற்பாடு பண்ணியாச்சு"
"பழைய ஏற்பாடா புதிய ஏற்பாடா?"
"புத்தம் புதிய ஏற்பாடு"
"எப்படி?"
"எலி, எப்படியாவது எந்த பார்மஸிக்காவது போய் நாய்க்கடி ஊசி ரெண்டு வாங்கிட்டு வா"
"டன்"
"பாலாஜி, காலையில் வேலூர் பஸ் ஸ்டான்ட் போய் மெட்ராஸில் இருந்து வரவங்க கை காலை பிடிச்சி அவங்க ட்ராவல் பண்ண டிக்கட் ரெண்டு மூணு வாங்கிட்டு வா"
"ஓகே"
"சந்தானம், உடனே உங்க வீட்டுல சொல்லி கொஞ்சம் சுமாரான சைஸ்ல ஒரு நாய் வாங்கு"
"வாங்கிடுவோம்"
"ஜனா, உன்னோட டாஸ்க் தான் கொஞ்சம் கஷ்டம், ஆனா ரொம்ப முக்கியமானது"
"வோர்ல்ட் கப்புக்காக என்ன வேணும்னாலும் செய்றேன் விசு"
"ஒரு தடவைக்கு ரெண்டு தரம் நல்லா யோசிச்சிக்கோ"
"வானத்தை வில்லா வளைக்கணுமா, மணலை கயிறா திரிக்கணுமா?"
"ஜனாவோட நாய்க்கிட்டே லைட்டா ஒரே ஒரு கடி மட்டும் வாங்கணும்..."