செவ்வாய், 4 ஜூன், 2019

நாலு பேருக்கு நல்லதுன்னா .. ராமதானின் நாயகன்!

90களின் ஆரம்பம்.  அந்த காலத்தில் எல்லாம் வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்க கண்டத்தில் இந்தியர்களின் எண்ணிக்கை மிக குறைவு. ஊருக்கு ஒரு இந்திய மளிகை கடை இருந்தாலே பெரிய காரியம். இப்படி இருக்கையில் ஒரு வாடகை அபார்ட்மெண்டில்  அடியேன் மற்றும் அப்சர் பாய், தீபக் மூவரும் குப்பை கொட்டி கொண்டு இருந்தோம்.


அப்சரோ  ஹோட்டல் சமையல் அறையில்  செஃப். தீபக் ஒரு பொறியாளர். அடியேனோ கணக்கு பிள்ளை. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக காலம் கடந்து கொண்டு  இருந்தது. வாரம் தோறும் அட்டவணை போட்டு சமையல் செய்து காலத்தை தள்ளி கொண்டு இருந்த நாட்கள்.  காய்கறி சமைக்க தானே இந்திய மாசாலா தேவை படும், மீனிற்கு மிளகாய் மஞ்சள் உப்பு போதுமே. அதனால் வாரத்திற்கு ஐந்து நாட்கள் வடிச்ச சாதம் மீன் பொரியல், ரசம்.  அந்த வாரம் அப்சரின் சமையல் வாரம்.

காலையில் எழுந்தவன் பிரட் டோஸ்ட் செய்து கூடவே வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு ஆம்லெட்டும் தயார் செய்து  ஒரு காபியையும் மேசையில் வைத்து தன் அறையில் இருந்தான்.

அலுவலகம் செல்ல தயாராகி வெளியே வந்த நானும் தீபக்கும் மேசையில் அமர..



"பாய்.. வா சாப்பிடலாம்.."

"நீங்க ஆரம்பிங்க வரேன்..."

உறவுன்னு சொல்லிக்க ஒருத்தரும் இல்ல, இது என்ன புதுசா இருக்கே என்று தீபக்கும் நானும் ஒருவரையொருவர் பார்க்க..

மீண்டும்.. தீபக் ..

"பாய் ... வா சாப்பிடலாம்.. "

தொழுகையை முடித்த பாய் வெளியே வர..தீபக்கோ..

"விசு .. பிரே  பார் தி புட் ...."

"தினமும் என்னையே செய்ய சொல்லுங்க.. ஒரு நாள் உங்க ரெண்டு பேருல ஒருத்தன் சொல்லுங்களேன்."

தீபக் " நான் ஹிந்து, அப்சர் பத்தி எனக்கு தெரியாது, இந்த மாதிரி சாப்பாட்டுக்கெல்லாம் எங்க வீட்டில் சத்தமா வேண்டிக்க மாட்டோம். முதல் வாய் போடுறதுக்கு முன்னால மனசுல ஆண்டவனுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு இல்லாதவங்களுக்கும் கொடுன்னு சொல்லிட்டு சாப்பிடுவோம். நீ தான் எப்ப  பாரு சத்தம் போட்டு நன்றி சொல்லுவ, நீயே சொல்லு"

ஜெபத்தை முடித்தேன்.

"பாய் நீ சாப்பிடல?"

"இல்ல விசு, இன்னையில்  இருந்து நோன்பு.. சாயங்காலம் தான் நோன்பு முடிச்சிட்டு சாப்பிடுவேன்.."

"அட பாவி. சாப்பிடாத நீ எதுக்கு பாய் எழுந்து எங்களுக்கு சமைச்ச, நேத்தே சொல்ல கூடாதா? "

"சாப்பிடதான் கூடாது, மத்த படி அவங்க அவங்க வேலைய கவனிக்கணும் அது தான் சரியான நோன்பு."

"இல்ல பாய்.. நோன்பு முடியுற வரை நீ சமைக்க வேணாம். நாங்க பாத்துக்குறோம்."

"எப்படியும் சாயங்காலம் நான் நோன்பை முறிக்கணும், அதுக்கு சமைக்கணும்   தானே. ?"

"எங்க ரெண்டு  பேரில் ஒருத்தன் சமைக்கிறோம். நீ வேணாம்.."

உணவு முடிந்து விடை பெற, அலுவலகம் போகும் வழியில்,

"தீபக், எனக்கு ஆடிட்  நேரம், ப்ளீஸ்  வேளையில் இருந்து சீக்கிரம் போய் கொஞ்சம் சமைச்சி வை. அவன் பசியில் இருப்பான்."

"ஓகே."

அலுவலகத்தில் இருக்கையில் தொலை  பேசி..

"விசு, ரொம்ப சாரி.. இன்னைக்கு எனக்கும் இங்கே ஒரு எமெர்ஜென்சி, ரொம்ப லேட் ஆகிடும் போல இருக்கு.  பசியில் இருப்பானே..?"

"சரி, . நான் சீக்கிரம் கிளம்ப பாக்குறேன்."

அடித்து பிடித்து சில மீன்களை வாங்கி கொண்டு இல்லத்தை அடைய, வீட்டின் பார்க்கிங்கில் ஒரு பென்ஸ்.  யாராக இருக்கும் என்று நினைத்து கொண்டே உள்ள நுழைய.. வீடு முழுக்க கம கம  என்று  மேசை முழுக்க வித விதமான உணவு.  கூடவே இனிப்பு வகையாறாக்கள் மற்றும் முக்கனிகளும்.

"விசு,  அஸ்லாம் அவங்க அப்பா ரெண்டு பேரும் வந்து இருக்காங்க. பிளசன்ட்  சர்ப்ரைஸ் !"

அஸ்லாம் ஒரு நல்ல மனிதன் . ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் வசதியான குடும்பம்.

"ஹை அஸ்லாம்.. எப்படி இருக்கீங்க.. ? அப்பா எப்ப வந்தாரு.?"

"நல்லா இருக்கோம்..  விசு.. போன வாரம் தான் வந்தாரு.. தீபக் எங்க? "

"கொஞ்சம் ஆபிசில் வேலைன்னு சொன்னான். ஒரு நிமிஷம் இருங்க.. டீ போடறேன். டீ குடிப்பீங்க தானே.. இன்னைக்கு நோன்பு முடிஞ்சதா?"

"விசு.. நோன்பு முடிஞ்சாச்சு..நீ டீ போடாத.. அங்கே பாரு, அஸ்லாம் வீட்டில் இருந்து பெரிய பிளாஸ்கில் டீ வேற வந்து இருக்கு. நாளைக்கு காலை வர தேரும்."

அப்சரின் அப்பாவோ..

"நாங்க போன வாரம் தான் வந்தோம். ரம்ஜான் வரை இருப்போம். நோன்பு முடியுற வரை சமைக்காதிங்க. நானும் என் மனைவியும் சும்மா தான் இருப்போம்.  ரெண்டு மூணு நோன்பு குடும்பத்துக்கு சமைக்கிறோம் அப்படியே உங்க மூணு பேருக்கும் சாயங்காலம் சாப்பாடு ஆனுப்பிடறோம்."

"ரொம்ப தேங்க்ஸ் அங்கிள். உங்களுக்கு எதுக்கு சிரமம். "

"இல்ல தம்பி, அப்சர் நோன்புல இருக்கும் போது நாம சமைக்கிறது நல்லா  இருக்காது. நாங்க எடுத்துன்னு  வரோம். "

"அவனுக்கு மட்டும் அனுப்புங்க அங்கிள். நானும் தீபக்கும் சமாளிச்சிக்கிறோம்."

"சமைக்காம எப்படி சமாளிப்பீங்க..?"

"அப்பா.. அவன் சும்மா பிலிம் காட்றான். வந்ததுல இருந்து அவன் மூஞ்சே டைனிங் டேபிள் மேல தான் இருக்கு. விசு, அப்பா அம்மா அனுப்புவாங்க.. மூணு பேரும் சாப்பிடுங்க.  நாங்க கிளம்புறோம்."

"ரொம்ப நன்றி.."

என்று சொல்லி அவர்களை வழியனுப்ப. தீபக்கோ கையில் இரண்டு பாக்கெட்  கென்டக்கி பிரைட் கோழியோடு வர...

"அந்த கென்டக்கிய தூக்கி ஒரு ஓரத்தில் வைச்சிட்டு வா தீபக்.."

"என்ன வாசனை?"

"அஸ்லாம் வீட்டில் இருந்து.. "

மேசையில் நிற்பன நடப்பன பரப்பன என்று அனைத்தும் இருந்தது.  உண்டது போக மீதம் இருப்பதை...

"விசு, தீபக், மீதியை நாளைக்கு காலையில் சாப்பிட்டு மிச்சத்தை லஞ்சுக்கு எடுத்துனு போயுடுங்க. "

மூவருக்கும் மூன்று வேளைக்கும் போதுமான சாப்பாடு.

"அந்த குடும்பம் மட்டும் பெரிய  குடும்பம் இல்ல தீபக், அவங்க மனசும் பெரிய மனசு".

"நான் அவங்கள பத்தி கேள்வி பட்டு இருக்கேன் விசு, பட் இவ்வவளோ நல்லவங்கன்னு தெரியாது."

நான்கைந்து நாட்கள் கடந்து  இருக்கும். ஒரு சனி காலை அப்சர் "குய்யோ முய்யோ"  என்று அலற...

அடித்து பிடித்து அவனை மருத்துவமனை அழைத்து செல்ல.. அவர்களோ பரிசோதித்து விட்டு.. உனக்கு இது கம்மி அது கம்மி என்று ஏதோதோ சொல்லிவிட்டு., நீ நோன்பு இருக்க கூடாது, அது உனக்கு ஆபத்தில் முடியும் என்று சொல்ல, அப்சர் வேறு வழி  இல்லாமல்  நோன்பை முறித்து கொண்டான்.

இல்லத்திற்கு வந்தவுடன் அப்சர்..

"விசு, அஸ்லாமுக்கு போன் போட்டு நோன்பு முறிச்சாச்சு, சாப்பாடு வேண்டாம்னு சொல்லிடு .."

என்று ஒரு குண்டை தூக்கி போட ..

தீபக்கோ  "ஐயோ இன்னும் நாலு வாரத்துக்கு நல்ல சாப்பாடுனு நினைச்சேன் , இப்படி ஆயிடிச்சே.."

அடியேனோ.. "அப்சர். அதை ஏன் அவங்களுக்கு சொல்லணும்.. எப்படியும்  மூணு  குடும்பத்துக்கு சமைக்குறாங்க.. நம்ம மூணு பேரு தானே.. ஒரு கரண்டி கூட போட்டா சரியாகிடிச்சி..நீ எதுவும் சொல்லாத , ப்ளீஸ்."

"அட பாவி விசு, அது ஹராம் ...ரொம்ப தப்பு.. வேண்டாம். நான் வேணும்னா நோன்புக்கு ட்ரை பண்றேன்."

"வேணா அப்சர், அது ஆபத்துன்னு டாக்டர் சொல்லியாச்சு.. நீயே அஸ்லாமுக்கு போன் போட்டு சொல்லிடு.."

என்று சொல்லி விட்டு..

"கிளம்பு தீபக்.. போய் மீன் ஏதாவது வாங்கி வரலாம்"

 என்று கிளம்புகையில் அப்சர்  தொலை பேசியில் இருந்தான்.


மீனை வாங்கி கொண்டு வீட்டை அடைந்தால் மீண்டும் மேசையில் அதே வாசனை , அதே நிற்பன நடப்பன பறப்பன..

"என்ன அப்சர்.. சொல்லலையா?"

"கொன்னா பாவம் தின்னா போகட்டும்னு சொல்லல.."

"வேணாம் அப்சர் .. தப்பு பண்றோம்."

"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பு இல்ல.. (நாயகன் வந்த நேரம் தான்)."

"யோசிச்சி செய்.. வா தீபக் சாப்பிடலாம்.."

என்று ஆரம்பிக்க..

"தீபக்கோ.. விசு பிரே பண்ணாம சாப்பிட ஆரம்பிச்சிட்ட.."

"தெரியும்.. ஆனா பொய் சொல்லி சாப்பிடுறோமே.. அது தான்.."

அப்சரோ.. "பரவாயில்லை பிரே.."

அடுத்த நாலு வாரம் இப்படி தான் போனது.

நடுவில் இரண்டு மூண்டு முறை அஸ்லாம் மற்றும் அவனின் பெற்றோர்களை சந்திக்க நேர்கையில், குற்ற உணர்வு எங்களை கொன்றே போட்டது என்று தான் சொல்லவேண்டும்.

நோன்பு காலம் முடிந்து பண்டிகை திருநாளும் வர..

அஸ்லாம் தொலை பேசியில்..

"நாளைக்கு மூணு பேரும் வீட்டுக்கு வந்துடுங்க .. இங்க தான் ரம்ஜான் பார்ட்டி..  நிறைய பிரெண்ட்ஸ்  வருவாங்க."


"சரி வரேன்"

 என்று அப்சர் சொல்ல..

தீபக்கோ..

" நீ போ பாய்.. எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சி.. "

"நானும் வரல பாய்.. நீ போ.. "

"உங்க ரெண்டு பேருக்கும் என்னடா ஆச்சி.. ரம்ஜான் பிரியாணி வேண்டாம்னு..!?"

"இல்ல பாய்.. சாப்பாட்டுக்காக இவ்வளவு பொய் சொல்லிட்டோமேன்னு மனசு குறுகுறுன்னு இருக்கு. அதை கூட விடு.. உன்னையும் எங்களோட சேர்ந்து பொய் சொல்ல வைச்சிட்டோமே.."

"ஓ.. உங்களுக்கு விஷயம் தெரியாதா..?"

"என்ன விஷயம்?"

அன்னைக்கு அஸ்லாமுக்கு போன் போட சொல்லிட்டு நீங்க ரெண்டு பேரும் மீன் வாங்க போனீங்களே.. அன்னைக்கு நடந்த விஷயம்.

"என்ன நடந்தது?"

"ஹலோ அஸ்லாம்.".

"சொல்லு அப்சர். ஏன் குரலே நடுங்குது.. ஆர் யு ஆல்ரைட்?"

"இல்ல.. இப்ப தான் ஹாஸ்பிடலில் இருந்து வாரேன் எதோ லிவர் பிரச்னையாம். நோன்பு இருக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. "

"ஓ.. உடம்பை பார்த்துக்கோ.. சாயங்காலம் அப்பாட்ட சொல்லி அதுக்கு ஏத்த மாதிரி சாப்பாடு அனுப்புறோம்."

"ஐயோ.. அதுக்கு தான் கூப்பிட்டேன். நோன்பு தான் இல்லையே.. இனிமேல் எதுக்கு சாப்பாடு? "

"என்ன சொல்ற?"

'நாங்களே சமைச்சிக்குவோம். "

"அப்சர், நீங்க சமைக்குறது இருக்கட்டும். ஒவ்வொரு நாளும் அப்பா அம்மா சாப்பாட்டை எடுத்துனு உங்க வீட்டுக்கிட்ட வரும் போது விசு தீபக் ஜன்னல் ஓரம்  பிளேட்டோடு நிக்குறாங்கன்னு கேள்விப்பட்டேன். இப்ப திடு திப்புனு நிறுத்திட்டா பாவம் அவனுங்க ரெண்டு பேரும்."

"அதுக்கு..?"

"நீ ஒன்னும் அவங்கள்ட்ட சொல்லாத. நாலு வாரம் நல்லா சாப்பிடட்டும்.. பாவம்."

"ஏன் சொல்லலையான்னு கேட்டா?"

"சொல்லல .. ரம்ஜான் முடிஞ்சதும் சொல்றேன்னு சொல்லி வை.."

"பொய்....!"

"ரெண்டு பேருக்கு நல்லதுன்னா .."

"அது நாலு பேர் அஸ்லாம்.."

"போனை கட் பண்ணு..."

இதை கேட்டவுடன்.. தீபக் அழுதே விட்டான். அடியேன் கொஞ்சம் தைரியசாலி  மற்றும் திட மனது காரன் அல்லவா.. அதனால்  ..

எதுக்கு பொய்.. தீபக் சற்றுதான் அதிர்ந்தான். நான் தான் அழுதே விட்டேன்.

அடுத்த நாள்..

"அஸ்லாம் ..சாரி.. பொய் சொல்லிட்டோம்னு ரொம்ப குற்ற உணர்ச்சி.."

"உங்க ரெண்டு பேரு திருட்டு மூஞ்சிய  பாத்து பாத்து எங்களுக்கு தான் எவ்வளவு சிரிப்பு.."

"ரொம்ப நன்றி."

 பெரிய பெரிய தட்டில் உணவு பரிமாற. ஒரு தட்டில் மூன்று பேருக்கான பிரியாணி.. நான், தீபக் மற்றும் அப்சர் அமர..

"அப்சர்.. இன்னைக்கு ரம்ஜான் .. நீ தான் பிரே பண்ணேன்."

"பழக்கத்தை மாத்தாத .. நீயே பண்ணு.."

"தீபக்கோ.. எவனாவது பண்ணுங்கடா.. பிரியாணி ஆறுது "

என்று அலற..

அடியேனோ..

"For the Food wherein many stay in hunger, for the Friends wherein many stay lonely and for the Faith wherein many stay in Fear, we thank you Lord!

என்று சொல்லி முடித்து கண் திறக்கையில் தீபக்கின் வாயில் ஒரு லெக் பீஸ்.. கையில் ஒரு லெக் பீஸ்.


Happy Ramadhan Friends, Eid Mubarak!

5 கருத்துகள்:

  1. சிறப்புப் பதிவு வெகு அருமை.சொல்லிச் சென்றவிதம் ட்விஸ்டுகள் எல்லாம் பதிவுலக கிரேஸி மோகன் நீங்கள்தான் என நான் முன்பு சொன்னதை நினைவூட்டிப் போகுது..வாழ்
    த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. விசு அட்டகாசமான பதிவு. மனதை நெகிழ்த்திய பதிவும் கூட. அல்ஸாம் அவர் குடும்பம் வாழ்க! வாழ்க!

    ஈத் பெருநாள் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அனுபவங்களை ரசனையாக எழுதும் கலை உங்களது. அருமை விசு.

    பதிலளிநீக்கு
  4. படிக்கச் சுவையானது உங்கள் எழுத்து என்பது எனக்கு முன்பே தெரியுமே!

    -இராய செல்லப்பா (தற்போது நியூஜெர்சியில்)

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...