ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

இனி எனக்காக அழ வேண்டாம் !!!

கொரோனாவின் பாதிப்பால் எங்கள் குடும்பத்தை சார்ந்த நால்வரும் இல்லத்தில் அடங்கி இருக்க, ஆட்டம் பாட்டம் வேலை படிப்பு உணவு சற்று நடை சற்று உடற் பயிற்சி  மற்றும் வெட்டி பேச்சு என்று போய்  கொண்டு இருந்த வேளையில்..

சென்ற வாரத்தில் அம்மணி பணிக்கு சென்று இருந்த வேளையில் என்னுடைய அறையில் இஞ்சி தின்ன குரங்கை போல் விட்டத்தை நான் ஆராய்ந்து கொண்டு இருக்கையில் நான் பெற்ற மகாராசிகள் இருவரும் வந்து....

"டாடா..உங்களிடம் ஒன்னு கேக்கணும்..."

"கோ அ ஹெட் , ஐ அம் லிசனிங்!!!"

"நீங்க அழுதே நாங்க பார்த்தது இல்ல, கடைசியா எப்ப அழுதீங்க"

மனதிலோ, அட பாவத்த.. அவனவன் எப்படா கடைசியா வாய் விட்டு சிரிச்சேன்னு கேப்பாங்க, இவளுங்க என்னடானா ?

"எப்ப அழுதீங்க!!!?"

"லெட் அஸ் டாக் பாசிட்டிவ் திங்ஸ். ஏற்கனவே ஊரடங்குன்னு நொந்து போய் இருக்கேன், இதுல எப்ப அழுதேன், ஏன் அழுதேன்னு யோசிக்க வைச்சா இப்பவே அழுதுடுவேன்"



"ஓ, ஓகே.. சாரி..."

என்று சொல்லிவிட்டு இருவரும் தம் தம் அறைக்கு செல்ல..

சரியாய் கணித்து விட்டீர்கள், அழுகையை பற்றி அசை போட ஆரம்பித்தேன். தற்போது வயது 54 ! இந்த 54  வருடங்களில் பல முறை அழுது இருக்கின்றேன். அதில் சில நேரம்  தேம்பி தேம்பி அழுததும் உண்டு.

முதல் முறையாக எப்போது தேம்பி தேம்பி  அழுதேன் என்று நினைக்கையில் வந்த மலரும் நினைவுகள்.

ஒன்பதாவது வகுப்பு வரை வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்த நான் படிப்பில் மிகவும் சமத்து என்ற பெயரோடு தான் வாழ்ந்து வந்தேன். மற்ற மாணவ மாணவியர்களை போல் நான் கடினப்பட்டு படிக்க அவசியம் இல்லை என்பதை ஆரம்ப பள்ளியிலேயே அறிந்து கொண்டேன். வகுப்பில் ஆசிரியர் சொல்லி கொடுக்கும் போது கவனமாக கேட்டு கொண்டால் அதுவே போதும். வீட்டில் வந்து படித்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என் பள்ளி கூட காலத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் ரேங்க் உண்டு. என் நினைவுக்கு தெரிந்த வரை அடியேனின் ரேங்க் பொதுவாக முதல் மூன்றில் இருக்கும்.

ஒன்பதாவது வகுப்பை ஒரு தனியார் கிறிஸ்துவ பள்ளியில் விடுதியில் தங்கி படித்து கொண்டு இருந்த நான் கோடை விடுமுறைக்கு இல்லத்திற்கு வர, விடுமுறையின் நான்காவது வாரம் பள்ளி இறுதியில் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்  தபாலில் வந்து சேர்ந்தது. ஆவலுடன் பிரித்த நான் 500 க்கு 487  என்று பார்த்தவுடன் அடைந்த மகிழ்ச்சி அடுத்த வரியில் இருந்த ரேங்க் 4  என்பதை பார்த்து அதிர்ந்தேன்.
 நான்காவதா?

 பொதுவாக முதல் மூன்று இடத்திற்கு பரம எதிரி ரவிச்சந்திரன், சார்ல்ஸ் வாத்தியாரின் தங்கை மாலதி மற்றும் அடியேன் தான், இதில் நான் எப்படி 4வது? Who  is  the  black  sheep ? என்று நினைக்கையில் ரிப்போர்ட் கூடவே இருந்த இன்னொரு தாள் மனதை குழப்பியது.

Transfer  Certificate !

அட பாவத்த! மீண்டும் இன்னொரு பள்ளிக்கு மாற்றமா? இதுவும் கடந்து போகும், ஆனா எந்த ஊருக்கு எந்த பள்ளிக்கு போகிறோம் என்று கூட தெரியாது. அம்மா வேற வெளிநாட்டில் இருக்காங்க, என்று யோசித்து கொண்டு இருக்கையில் அம்மாவிடம் பணி புரியும் அதிகாரி ஒருவர், இந்த வருடம் இங்கேயே தங்கி தான் படிக்க போற. அம்மா என்னை உன்னுடைய ஸ்கூலில் அட்மிட் பண்ண சொன்னாங்கன்னு  சொல்ல..

இந்த ஊரிலா? இங்கே ஹை ஸ்கூல் இருக்கா? என்று கேட்கும் போதே, இன்னொரு பெரியவர் இல்லத்தில் நுழைய..

அந்த அதிகாரி..

விசு, இவரு தான் பர்குர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்! உன்னுடைய ட்ரான்ஸ்பர் சர்டிபிகேட் வாங்க வந்து இருக்கார். ஜூன் 4  ம் தேதி ஸ்கூல் ஆரம்பிக்கும்.

வருடாவருடம் பள்ளி மாற்றும் படலம் நீடித்ததால் ஏன் எதற்கு என்று கேட்காமல் அவரிடம் அந்த சான்றிதழை தர..

ஒன்றுமே படிக்காமல் புத்தகம் கூட  வாங்காமல் வாத்தியார்கள் இல்லாமல் பத்தாம் வகுப்பிற்கான சிலபஸ் கூட தெரியாமல், மக்காகி விட்டேன் என்ற அறிவு கூட இல்லாமல் அந்த வருடம் கழிய..

"விசு, ரிசல்ட் பேப்பரில்  வந்து இருக்கு. நீ  ஜோன்ஸ் மற்றும் வெங்கட்ரமணி மூணு  பேர் மட்டும் பாஸ்"

"மார்க் எவ்வளவு...?"

"அடுத்த வாரம் தான் வரும்"

எப்படியும் 475  க்கு மேலே தான் இருக்கும் என்ற நினைப்பில் ஊரு முழுக்க ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன் என்று பெருமை பட்டு கொண்டு இருந்த வேளையில் ...

"விசு, மார்க் வந்துடிச்சி ..நீ ஸ்கூல் செகண்ட்..." 

என்று  ஜோன்ஸ் அலற..

"ஸ்கூல் செகண்டா ..? என்னடா சொல்ற? வெங்கட் ரமணியோட கம்மியா!"

"அது தெரியாது, ஆனா என்னோட நாலு மார்க் ஜாஸ்தி..!!!"

"ஓ, அப்ப வெங்கட் ரமணி தான் ஸ்கூல் பர்ஸ்ட். நான் உன்னை விட நாலு மார்க் ஜாஸ்தி.. நைஸ். உன் மார்க் எவ்வளவு ?"

என்று நான் கேட்க ஜோன்ஸ் சொன்ன பதில் என் கல்வி உலகத்தையே  குலுக்கி போட்டது.

"உன்னை விட நாலு மார்க் ஜாஸ்தி!!!?  உன் மார்க் எவ்வளவு" ?

"223 "!!?

என்று சந்தோஷத்தில் அலற ..

"தமாஷ் பண்ணாத உண்மையை சொல்லு "

"என்னால நம்ப முடியல விசு, உண்மையாவே நான் எதிர் பார்த்ததை விட 25  மார்க் கூட.. நீ கூட 237 "

"237!!!? , அப்படினா உன்னை விட 4  மார்க் இல்ல 14  மார்க் ஜாஸ்தி"

என்று திருத்திவிட்டு.. இந்த மார்க்கை வைச்சி எப்படி ஊரில் தலையை காட்டுவேன் என்று இருக்கையில்...

அம்மா அங்கே வர..ஜோன்ஸ்..

"ஆன்டி, விசு தான் ஸ்கூல் செகண்ட்! நான் தேர்ட்"

என்று சொல்லி பதறி அடித்து கிளம்ப...அம்மாவின் கண்கள் குளமாகி இருந்தது.

"பிரின்சிபல் போன் பண்ணி இருந்தாரு. பாஸ் பண்ணிட்டியாம், மார்க் ரொம்ப கம்மியாம்"

அம்மாவின் குரலிலேயே கண்ணீரை பார்த்து இருக்கலாம்.

"சாரிமா!"

நான் சரியான மக்கு என்பதை அறியாமலே ஒரு வருடம் கழித்து  இருக்கின்றேன் என்று எப்படி சொல்வேன்.

"தப்பு என்னுடையது தான். பள்ளி இறுதி ஆண்டு உன் ஸ்கூலை மாத்தி இருக்க கூடாது. வேற ஊர். வேற மீடியம், வேற டீச்சர்ஸ், ஒரு வேளை ஸ்கூலை மாத்தி இல்லாட்டி நல்ல மார்க் வந்து இருக்கும்"

என்று பழியை தன் மேல் இழுத்து போட்டு கொண்டு கண்ணை துடைத்து கொண்டு செல்ல,

என் அம்மாவா இது? எவ்வளவு தைரியம் புடிச்சவங்க, படிச்சவங்க. அவங்கள போய் கண் கலங்க வைச்சிட்டேனே.. என்று நினைக்கையில் எனக்கும் கண் கலங்கியது.

அது எல்லாம் சரி.. இது வரைக்கும் கண் லைட்டா கலங்கி தானே போச்சி.. தேம்பி தேம்பி அழுத கதையை சொல்லுங்கன்னு உங்களில் சிலர் கேட்பது புரிகின்றது.

அடுத்த வாரம்..அம்மா,

"விசு, சீக்கிரம் கிளம்பு மதராசுக்கு போக போறோம்"

"மதராஸ்!!! எதுக்குமா?"

"நீ அங்க St . Gabriels  ஸ்கூலில் +2  படிக்கச் போற!!"

அட பாவத்த.. மீண்டும் இன்னொரு ஸ்கூலா? என்று நினைக்கையில்..எதிரில்  வெங்கட் ரமணி மற்றும் ஜோன்ஸ்..

"விசு.. வெங்கட்ரமணி திருப்பத்தூர் ராமகிருஷ்ணா ஸ்கூலில் ஸ்ர போறான். நான் அங்கேயே டான் பாஸ்க்கோவில் சேர போறேன். ரெண்டு பேரும் சயன்ஸ்  க்ரூப் தான் படிக்க போறோம். நீ எங்க சேர போற?"

"நான்.. நான்.. மதராசுக்கு போறேன்"

"நீயும் சயன்ஸ் தானே.. "

"ஆமா, தெரியல, இருக்கலாம்... பாக்கலாம்"

மாட்றாஸில், அம்மா..

"விசு, சீக்கிரம் கிளம்பு, முதலில் உன் மார்க் ஷீட்டை உங்க அத்தை  கசட்டட்
ஆபிஸரா இருக்கங்கா தானே, அவங்கள்ட்ட சைன் வாங்கிட்டு ஸ்கூல் ஆபிசுக்கு போகணும்"

கிளம்பினேன்.

அத்தையின் இல்லத்தில்..

"வாங்க அக்கா.. என்ன திடீர்னு.."

"இல்ல, விசுவை இங்கே ஸ்கூலில் சேர்க்கணும்.. அதுக்கு மார்க் ஷீட்டில் சைன் வேணும்"

"ஓ .. இந்த வருஷம் +2  வா... !  என் டாட்டர் கூட சேர போறா. போன வாரம் தான் ரிசல்ட் வந்தது. 474  ஐநூறுக்கு, சயன்ஸ் குரூப் சேர்ந்து டாக்டர் ஆகணும்! அது தான் அவ ஆசை"

என்று தன் ஆசையை  சிரித்து கொண்டே சொல்ல.. அம்மா என்னை பரிதாபமாக பார்க்க..மனதிலோ..

அட பாவத்த! சரியா என்னை விட ரெண்டு மடங்கு வாங்கி இருக்காளே.. என்று நினைக்கையில்.. என்ன விசு கணக்கு எல்லாம் இம்புட்டு சீக்கிரம் அழகா போடுற! ஆனா மொத்தமே 237  தான் வாங்கி இருக்க என்ற விசும்ப..

"விசு, அந்த மார்க் ஷீட்டை அண்டிட்ட கொடு.."

கொடுத்தேன்..

அ(த்)தை பார்த்தவுடன் "குப்" என்று சிரித்தவர்கள்.. சத்தம் போட்டு அவர்களின் டாட்டரை அழைத்து அவளுக்கு அதை காட்ட...

அவளும் அத்தையும் என்னையும் பார்த்து சிரிக்க..

"என்னோட கிட்ட தட்ட 250  மார்க் கம்மி.."

"250  இல்ல. 237  தான் "

"ஆர் யு ஸூர்!!!?"

"ஆமா..சரி பாதி.. "

சரி பார்க்க  அவள் கால்குலேட்டரை தேடி செல்ல.. அத்தையோ..

"சாரி அக்கா.. !!!இவன் நல்லா படிப்பானு கேள்வி பட்டேனே , இது எப்படி நடந்தது?"

என்று எதோ இழவு விழுந்ததை போல் விசாரிக்க.. அம்மாவோ..

"நான் தான் தப்பு பண்ணிட்டேன். என் தப்பு தான்! பத்தாவது ஸ்கூல் மாத்தி இருக்க கூடாது. மார்க் கம்மியா இருந்தாலும் இவன் ஸ்மார்ட் தான்."

என்று கண்களை துடைத்து கொண்டே சொல்ல..

என் கண்களும் குழம்பியது..

விசு.. சும்மா.. வழ வழன்னு  சுத்திவளைச்சி.. தேம்பி தேம்பி அழுதத்துக்கு வா...என்று நீங்கள் கதறுவது புரிகின்றது. இதோ வருகிறேன்.

அத்தை வீட்டை விட்டு வெளியேற..

"அவங்க சிரிச்சதை மனசுல வைச்சிக்காத. நீயும் ஸ்மார்ட் தான். ஸ்கூல் ப்ரின்சிபாலிடம் பேசி உனக்கும் சயன்ஸ் வாங்கி தரேன்.

பள்ளி பிரின்சிபால் ஆபிசில்.

பிரின்சிபால்.. எதிரில் ஒரு சேரில் அம்மா.. அருகே நான் நின்று கொண்டு இருக்க பத்து அடி தள்ளி வாசலில் பல பெற்றோர்கள்.. நாங்கள் என்ன பேசுகிறோம்  என்பதை உன்னிப்பாக கவனித்து கொண்டு..

மார்க் சீட் மற்றும் விண்ணப்பத்தை பார்த்த Father ஜகத்ராயன்..

"Mrs. Cornelius, Mr. Earnest  நீங்க பையனுக்கு அட்மிஷனுக்கு வருவீங்கன்னு சொன்னார். சயன்ஸ் க்ரூப் தான் சொன்னார்..ஆனா.."

என்று தயங்க.

"Father, ஐ அண்டர்ஸ்டாண்ட்! ப்ளீஸ்"

"இந்த மார்க்குக்கு சயன்ஸ் கொடுக்க முடியாதே..Mrs. Cornelius"

"ப்ளீஸ் Father , அவன் ஏற்கனவே ரொம்ப கஷ்ட பட்டுட்டான். ரொம்ப ஸ்மார்ட் தான், நான் தான் அவன் ஸ்கூலை மாத்தி "

என்னை பார்த்து கொண்டே அம்மா தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்க.. பத்து அடி தள்ளி இருந்த மற்ற பெற்றோர்கள் அம்மாவை பார்க்க, அவர்களின் தேம்பல் இன்னும் அதிகரிக்க..

"இல்ல.. Mrs. Cornelius  , இந்த மார்க்குக்கு சயன்ஸ் க்ரூப் கொடுத்தா நான் நிறைய பேருக்கு பதில் சொல்ல வேண்டி வரும், மோர் ஓவர், உங்க பையனும்  ரொம்ப ஸ்டரகுல் பண்ணுவான்"

"இல்ல Father , ஹி இஸ் மை சன், ஐ க்நொவ் ஹிம் வெல்! ஸ்டரகுல் பண்ண  மாட்டான். அவன் நிஜமாவே நல்லா படிக்குறவன், நான் தான் தப்பு பண்ணிட்டேன்"

என்று சொல்லி கொண்டே என்னை பார்த்து தொடர்ந்து
தேம்பி தேம்பி அழ, நானும்

தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தேன்!

என்ன ஒரு மகன் நான்! அம்மா எவ்வளவு ஒரு கம்பீரமான ஆள். இளவயதிலே   கணவனை இழந்தாலும் அதை ஒரு இழப்பா கருதாம சமூகத்தில் எதிர் நீச்சல் போட்டு வெளி நாட்டுக்கு எல்லாம் போய் வேலை செஞ்சி என்ன ஒரு மெஜஸ்டிக்கான வுமன், அவங்களை போய் இப்படி இத்தனை பேருக்கு முன்னால அழ வைச்சிட்டேனே..தொடர்ந்து

தேம்பி தேம்பி அழுதேன்..

"Mrs. Cornelius, நீங்க சொல்றத நான் நம்புறேன். பையன் நீங்க சொன்ன மாதிரியே ஸ்மார்ட்ன்னு நம்புறேன். ஸ்மார்ட் பசங்க சயன்ஸ் தான் படிக்கணும்னு அவசியம் இல்லையே. காமர்ஸ் அக்கவுண்ட்ஸ் படிக்கலாமே.."

அம்மா...

"காமர்ஸ் அக்கவுண்ட்ஸ்.. !!!? Father , அவன் பிரெண்ட்ஸ் எல்லாம், சொந்த கார பசங்க எல்லாம் சயன்ஸ் .."

"Mrs. Cornelius,  யு க்நொவ் பெட்டெர்!  லெட் ஹிம் ஸ்டடி அக்கௌன்ட்ஸ் அன்ட் பிக்கம் அன் ஆடிட்டர். "

அம்மாவோ, மீண்டும் ஒருமுறை என்னை பார்த்து விட்டு அழுது கொண்டே

"Father , ப்ளீஸ் கிவ் ஹிம்....."

என்று கேட்க, பத்து அடி தள்ளி நின்ற மற்ற பெற்றோர்கள் என்னமோ சிவாஜி படத்தில் கடைசி சீனில் அவர் சாகும் போது அடிக்கின்ற டயலாக்ஸை பார்க்கின்றது போல பார்க்க.

 நான் குறுக்கிட்டு..

"மா, ஐ டோன்ட் வாண்ட் சயன்ஸ். எனக்கு ஆடிட்டர் ஆகணும்.."

கேட்டது தான் சரி, Father  ரப்பார் ஸ்டாம்ப் ஒன்றை  எடுத்து என் விண்ணப்பத்தில் தடால் என்று குத்த ..

"விசு - கமெர்ஸ் குரூப்" என்று கையில் ஒரு அட்டையுடனும்.. மனதிலோ.. இனி அம்மா படிப்பு விஷயத்தில் எனக்காக அழ கூடாது என்ற வைராக்கியத்தோடும்  வெளியேறினோம்.


அம்மா..

"சாரி, நான் எவ்வளவோ கேட்டு பார்த்துட்டேன்.. அவர் முடியாதுன்னு சொல்லிட்டார்"

"பரவாயில்லை, நான் ஆடிட்டர் ஆகுறேன்மா.. ஆனா ஒரு சந்தேகம்மா..!!"

"என்ன!!!?"

"ஆடிட்டர்னா என்னம்மா!!?"

பின் குறிப்பு:

இப்படி தேம்பி தேம்பி அழுத கதையை ராசாத்திக்களிடம் ஏன் சொல்லலையா?

பத்தாவதில்  இம்புட்டு கம்மியான மார்க் எடுத்து இருக்கேனு மட்டும் அவளுங்களுக்கு தெரிஞ்சது ... அவளுங்க படிப்பு விஷயத்தில் நான் பண்ற அளப்பறைக்கு என்னை அடிச்சே சாவடிச்சிருவாளுங்க..நான் படிப்பு விஷயத்தில் அம்புட்டு ஸ்ட்ரிக்ட்! 

11 கருத்துகள்:

  1. Lovely post. One of the best profession rt?
    I like that little funny ending...and by the way what happened to the rat race advice that you gave me couple of years back? I know you will be strict in academia but not the rat race

    பதிலளிநீக்கு
  2. Best Profession! I am not sure Vichu! But I guess I am doing better than Jones, Venkatramani, Malathi, Ravichandran and my athai ponnu. And can you please refresh my memory on Rat Race? I am lost!

    பதிலளிநீக்கு
  3. ஹலோ விசு வீடா ? விசுவோட ராசாத்தி கூட பேசணும் ?
    என்ன எந்த ராசாத்தியா ?
    மூத்தவ இளையவ யாரா இருந்தாலும் பரவாயில்லை , ஸ்பீக்கர்ல போட்டுக்கலாம்

    பதிலளிநீக்கு
  4. ராசாத்திகளை பெற்ற மகராசன் இனி கண்ணு கலங்கலாமா?
    அப்புறம் அண்ணா! ஒரு காலத்தில் மார்க்குகாக எவ்ளோ அசிங்கப்பட்டோம், கவலைப்பட்டோம்ல. இப்போ எல்லாம் Funny ஆ இருக்கு!

    பதிலளிநீக்கு
  5. விஷ்!! இந்த லாக்டவுன் உலகம் பூரா பிரச்சினை பண்ணாலும் எங்களை மாதிரி வாசகர்களுக்கு நல்லது தான் பண்ணிருக்கு. ஒரே நேரத்துல சிரிக்க வைக்கவும், நெகிழ வைக்கவும், அழ வைக்கவும், இவ்வளவு கம்மியான வார்த்தைகள்ல பண்ண முடியும்னா.. this is something more than talent. A blessing may be.

    பதிலளிநீக்கு
  6. விசு கணக்குப் பிள்ளை ஆன கதை நெகிழ்ச்சி

    கீதா

    பதிலளிநீக்கு
  7. Aww.. very touching story, azhara kadhaiyaiyum sirippa martha ungalaaladhaan mudiyum :-), raasayhingakitta sollalaam avanga lifela settle aanadhukspuram ;-)

    பதிலளிநீக்கு
  8. 474 எடுத்தவர் சரி பார்க்க கால்குலேட்டர் தேவை. நமக்கு கண்ணே கால்க்குலேட்டர். ஆனால் கடைசியா ஒருகேள்வி அல்டிமேட் அலப்பறை "ஆடிட்டர்னா என்னம்மா? " அழகையின் வரலாற்றை சிரிக்க சிரிக்க சொன்னவிதம் அருமை. நன்றி!வேணுகோபால்,மதுரை

    பதிலளிநீக்கு
  9. It is not the subject .All subjects are important but our accomplishment in the selected subject counts and matters. Very penned in a lovely style.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...