வியாழன், 9 ஏப்ரல், 2020

கொரோனா - கணக்கின் கணக்கு!

ஜனவரி மற்றும் பிப் மாதத்திலேயே "கொரோனா" என்ற வார்த்தை  பேச்சுவாக்கில் இருந்தாலும் அது இவ்வளவு தீவிரமான நோயாக மாறி வாழ்க்கை முறையையே மாற்றி விடும் என்று அனைவரை போல அடியேனும் நினைக்கவில்லை.

மார்ச் முதல் வாரத்தில், நிறுவனத்தின் மேலதிகாரிகள் கூட்டத்திற்கான 911  (அவசர) அழைப்பு வர, இது என்னவாய் இருக்கும் என்று நகத்தை கடித்து கொண்டு அலுவலகத்திற்குள் நுழைய, மேலும் கீழும் நடந்து கொண்டு  இருந்த எங்கள் ப்ரெசிடெண்ட்..

"I am not asking you, I am telling you"!!

என்று கூறிவிட்டு, நாளை முதல் யாரும் அலுவலத்திற்கு வரக்கூடாது. அவரவர்களுக்கு தேவையான பொருட்களை ( கணினி, பிரிண்டர்) போன்றவற்றை இன்று வேலை முடிந்து போகும் போது வீட்டிற்கு எடுத்துகொண்டு போக வேண்டும் என்று உத்தரவிட்டார்.



இது என்ன அரண்டவன் கண்ணுக்கு என்ற பழமொழி நினைவிற்கு வர, நமக்கு தான் வாயை வைச்சின்னு சும்மா இருக்க முடியாதே..

"பாஸ், கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்றீங்கன்னு.."

"விஷ், மீட்டிங் முடிந்தவுடன் என் ஆபிசுக்கு வா .."

என்று சொல்ல, அடுத்த சில நிமிடங்களில்..

"திஸ் இஸ் சீரியஸ் மேன், திஸ் இஸ் வெரி சீரியஸ்"

என்று அவர் சொல்லும் போது தான்  கொரோனாவின் வீரியம் சற்று புரிந்தது.

அடுத்த சில நாட்கள் அமெரிக்கா முழுவதும் அலுவலகத்திற்கு சென்று கொண்டு இருந்தாலும் நாங்கள் அனைவரும் இல்லத்தில் இருந்து தான் வேலை புரிந்து கொண்டு வந்தோம்.

ஒரு வாரம் கடக்க நியூயார்க் மாநகரம்  மாநரகமாக மாற ஒட்டு மொத்த நாடும் ஊரடங்கில் அடங்க...

Xoomல் அடுத்த மீட்டிங்.

நிறுவனத்தின் ஒவ்வொரு துறையின் சவால்களை பற்றி அதனதன் தலைமை விளக்க  நிதிதுறை யின் முறை வரை, அடியேன்...

"ஓகே, நிதிதுறையின் அணைத்து பணியாட்களும் அவரவர் தம் தம் வேலையை வீட்டிலேயே நிவர்த்தியாக செய்து வருகின்றார்கள். ஆனால் எங்களில் ஒருவர் மட்டும் தினமும் ஒரு ஒருமுறை ஒரு மணிநேரத்திற்கு  அலுவலம் சென்று அங்கே தபாலில் வரும் காசோலைகளை வங்கியில்  ரிமோட் டெபாசிட் செய்து விட்டு வருகிறோம்."

"ஒருவர் என்றால்.. உங்களில் யார் ?"

"நான் தான்".

"மீட்டிங் முடிந்தவுடன் என் ஆபிசுக்கு வா...கன்டினியூ ."

"பிப் மாதம் வரை நம் நிறுவனத்தின் நிதி நிலைமை பிரமாதம், எதற்குமே கவலை பட தேவையில்லை, மார்ச் மற்றும் அடுத்த சில மாதங்களை  பற்றி தற்போது கணிக்க முடியாது."

"வாட் ஆர் அவர் டாப் த்ரீ சேலஞ்சஸ் ரைட் நொவ் !?"

"Cash  Flow , இந்த மாதிரி நேரத்தில் யாருமே பணத்தை வெளிய எடுக்க மாட்டாங்க. ஏன் நானே கூட "Accounts  Payable " டிபார்ட்மென்ட்க்கு ஒரு மெமோ அனுப்பி இருக்கேன்."

"ரெண்டாவது, சம்பளம், கிட்டத்தட்ட 500 பேருக்கு சம்பளம், மாசத்துக்கு ரெண்டு முறை, வரியையும் சேர்த்து ஒரு மில்லியன். "

"மூணாவது ... சம்பளம் கிட்டத்தட்ட 500  பேருக்கு, 500 குடும்பம், பிள்ளைங்க, பில்ஸ் , மளிகை, மின்சாரம் , தண்ணி.."

"விஷ் , ஐ கெட் இட், சம்பளம்."

அடுத்த சில நாட்களுக்கு மொத்த கவனமும் எவ்வளவு ரொக்கம் உள்ள வருகின்றது என்பதிலேயே இருந்தது. அதில் எந்த மாற்றமும் இல்லை. சிறிய நிம்மதி.

மார்ச் 31  சம்பளம் கொடுத்தாயிற்று. அடுத்த மீட்டிங்.

நிதிதுறை முறை வரை..

"மார்ச்  நிதி நிலைமை எதிர்பார்த்ததை விட நன்றாகவே முடிந்தது. ஏப்ரல் மற்றும் அடுத்த சில மாதங்கள் போக போக தெரியும். அரசாங்கத்தில் அவசர  நிதி /கடனுக்கான திட்டங்கள் பல உள்ளன, அதற்கான  விளக்கங்கள் அடுத்த சில நாட்களில் தெரியும்."

பேசி கொண்டு இருக்கையில் இன்னொரு அதிகாரி..

"மற்ற பணியாட்களை விடுங்க.. இங்கே இந்த மீட்டிங்கில் இருக்க நம்ம என்ன தியாகம் பண்ண போறோம். நிதி துறை ப்ளீஸ்..."

"ஓகே. நிதி துறையில் யாருமே வேலை இழக்க கூடாது, அது தான் குறிக்கோள். அவங்க அவங்க சம்பளத்திற்க்கேற்ப குடும்ப தேவைக்கேற்ப நாங்க சம்பள குறைப்பை ஏத்துக்குறோம்"

"ஐ லைக் திஸ் .. எல்லா டிபார்ட்மென்டிலும்   இதையே செய்யலாம்."

ஓகே, அனைத்து பணியாட்களும் ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம்.

"தற்போதைய நிலைமை என்னவென்று யாரும் கணிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். நம்மில் ஒருவருக்கு கூட வேலை இல்லாமல் போக கூடாது அதனால் நிலைமை மோசமானால், நாம் அனைவரும் சிறிது சம்பள தொகையை இழக்க நேரிடும். அதுவும் தற்காலிகமானதே. அரசாங்கத்தில் இருந்து சில திட்டங்கள் வர உள்ளது. அது என்ன எப்படி என்று அடுத்த சில நாட்களில் தெரியும், அதுவரை தைரியமாகவும் தங்கள் பணியில் கவனமாகவும் இருங்கள்"


இப்படி திக் திக் என்று அடுத்த மூன்று நாட்கள் கடக்க.. அரசாங்கத்தில் இருந்து ஒரு அறிவிப்பு.

Small  Business  (500  வேலையாட்களும் குறைவாக உள்ள நிறுவனங்கள், எங்கள் நிருவனத்தில் 470 சொச்சம் இருக்கின்றோம் ))  உடனடியாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் நிறுவனத்தின் கடந்த வருடத்து சராசரி மாத சம்பளம் எவ்வளவு என்று கணக்கிட்டு அதை இரண்டரை  முறை பெருக்கி கொள்ள வேண்டும். அந்த தொகை இரண்டே வாரத்திற்குள்  உங்கள் வங்கியில் வரவு செய்ய படும் என்று கூறி கூடவே அந்த சம்பள கணக்கை அடைவதற்கான சில விதிமுறைகளை சேர்த்து இருந்தது.

வயிற்றில் பாலை வார்த்த இந்த அறிவுப்பு வர, உடனடியாக மொத்த நிறுவனத்திற்கும் அடுத்த மின்னஞ்சல்.

" நம் நிறுவனம் அரசாங்கத்தின் இந்த திட்டத்திற்கு தகுதியானது அதற்கான விண்ணப்பத்தை உடனடியாக தயார் செய்கிறோம், யாருக்கும் எந்த வித சம்பள குறைப்பு கிடையாது, தொடர்ந்து கவனமாக  இருங்கள், பணியை தொடருங்கள்"

கடந்த வியாழன் இந்த விண்ணப்பம் வெளிவர , வெள்ளி காலையில் அதை   ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று அறிந்து விண்ணப்பத்தை நிரப்புகையிலேயே மனதில், எங்கேயோ இடிக்குதே, இந்த விண்ணப்பம் சில முக்கியமான தகவல்களை கேட்டகவில்லையே என்று நினைத்து கொண்டே  வெள்ளி காலை விண்ணப்பிக்க..

திங்கள் ஒரு மின்னஞ்சல், விண்ணப்பத்தை சற்று மாற்றி அமைத்துள்ளோம்,  தடங்கலுக்கு வருத்தம், இந்த புது விண்ணப்பத்தை  செவ்வாய் காலை சமர்ப்பிக்கலாம் என்று வர,

செவ்வாய் காலை விண்ணப்பித்தோம்.

உங்கள் விண்ணப்பம் தகுதி செய்ய பட்டது, அடுத்த 48  மணி நேரத்தில் ஒரு  மின்னஞ்சல் வரும் அதில் தங்கள் ஒப்பந்தத்தை கையெழுத்தினால் உறுதி செய்து அனுப்பவும்.

24  மணி நேரத்தில் அந்த மின்னஞ்சல் வந்தது.

தங்கள் விண்ணப்பம் நிறைவாக இருந்தது. இந்த தொகை தற்போதைக்கு கடனாக வழங்க படுகின்றது. கீழேயுள்ள விதிகளை நீங்கள் கடைபிடித்தால்  இந்த கடன் நிதி உதவியாக மாறும், நீங்கல் திரும்ப செலுத்த தேவையில்லை

விதிகள்.

இன்று முதல் யாரையும் பணியில் இருந்து நீக்கம் செய்ய கூடாது.

யாருக்கும் சம்பள குறைப்பு இருக்க கூடாது

ஏற்கனவே அறிவித்த போனஸ் கமிசன் அனைத்தையும் அனைவருக்கும் முழுக்க  அளிக்க வேண்டும்.

இந்த தொகை வந்த நாளில் இருந்து 90  வது நாள் உங்கள் வேலையாட்களில் 90 % உங்களோடு இருக்க வேண்டும்.

இந்த தொகையை சம்பளம் , வாடகை, EMI   மற்றும் மின்சாரம் நீர் போன்ற அத்தியாவாசிய செயல்களுக்கு மட்டும் பயன் படுத்தலாம்.

மொத்தம் கிடைத்த தொகையில் குறைந்த பட்சம் 75 % சதவீதம் பணியாட்களின் சம்பளத்திற்க்காக செலவு செய்து இருக்க வேண்டும்.

மற்றும் சில...

கரும்பு தின்ன கூலியா ?

அனைத்தையும் படித்து கையெழுத்திட்டு அனுப்ப, அடுத்த சில மணி நேரங்களில் மின்னஞ்சல்..

"தாம் சமர்ப்பித்த அனைத்தும் சரியே.. திங்கள் காலை உங்கள் வங்கி கணக்கில் பணம் இருக்கும்"

அலை பேசி அலற..

"விஷ் .. "

"எஸ் பாஸ்"..

"பணம் திங்கள் வரும்னு எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்து இருக்கு. "

"எனக்கும் நகல் வந்தது பாஸ்."

"இன்னொன்னு கேள்வி பட்டியா!! ?"

"சொல்லுங்க.."

"அமெரிக்காவிலே நம்ம விண்ணப்பம் தான் முதல் விண்ணப்பமாம்.செவ்வாய் கிழமை காலையில் 9 மணிக்கு தான் வாங்க ஆரம்பிச்சாங்களாம் நம்ம விண்ணப்பம் 9:01  க்கு இருந்ததாம்!!!"

"யு ஆர் ஜோக்கிங்.."

"எஸ் ஐ அம், அது சரி, இந்த விண்ணப்பத்தை ஏன் இப்படி அடிச்சி பிடிச்சி அனுப்புன...?"

"அம்புட்டும் சின்ன வயசுல ஊருல கத்துக்குனது தான்.."

"என்ன!!!?"

காற்றுள்ள போதே தூற்றி கொள்ளணும், கொஞ்சம் தாமதிச்சு  நாம உப்பு விக்க போனா அப்ப தான் மழை பெய்யும் அதுமட்டுமில்லா அழுவுற குழந்தைக்கு தான் பால் மற்றும் தூங்காதே தம்பி தூங்காதே.. மற்றும் பந்திக்கு முந்து கூடவே கொஞ்சம் கடமை, லைட்டா கண்ணியம் நிறைய கட்டுப்பாடு "

இதை எப்படி அவருக்கு சொல்வேன்.. சுருக்கமா சொல்லுங்களேன்!

பின் குறிப்பு :

"ஒருவர் என்றால்.. உங்களில் யார் ?"

"நான் தான்".

"மீட்டிங் முடிந்தவுடன் என் ஆபிசுக்கு வா...கன்டினியூ ."

மீட்டிங் முடிந்தவுடன்..

"யாரு வேணும்னா வீட்டை விட்டு வெளிய வரலாம்.. பட் நாட் யு!"

"ஏன்?"

உன் wife  தான் ஹாஸ்பிடலில் வேலை செய்யுறாங்க. உங்க குடும்பம் ரொம்ப  கவனமா இருக்கணும், Tell her a big thanks and stay home and treat her well, we dont care about you, but we need her!"

8 கருத்துகள்:

  1. Superstara vida speeda react pannna nithi thurai thalaivarkku valthukkal.

    பதிலளிநீக்கு
  2. அறியாத பல விஷயங்களை அறிந்து கொண்டேன்..... உங்கள் .மனைவி செய்யும் தியாகங்களுக்கு சேவைகளுக்கு ஈடு இணையே இல்லை.....கடவுள் உங்களோடு இருந்து என்றும் ஆசிர்வதிப்பார்

    பதிலளிநீக்கு
  3. Great write up! Your team is so lucky to get a great leader. And, NY sincere thanks to your wife as well.

    பதிலளிநீக்கு
  4. ஏன் அவ்வாறு சொன்னார் என்கிற கேள்விக்கு முடிவில் பதில் கிடைத்தது...

    உங்கள் குடும்பம் தான் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்... இருங்கள்...

    பதிலளிநீக்கு
  5. எழுத்தில் மட்டுமல்ல செயல்பாட்டிலும் நீங்கள் சூப்பரோ சூப்பர் என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சி..(9.01 )

    பதிலளிநீக்கு
  6. My salutes to you,your wife and my blessings to your தேவதைகள்.அன்புடன் கார்த்திக் அம்மா

    பதிலளிநீக்கு
  7. சூப்பர் தம்பி,பொதுநலத்தில் ஒரு சுயநலமா இல்லை சுயநலத்தில் ஒரு பொதுநலமா , ஒரே குழப்பமா இருக்கே

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...