திங்கள், 18 மே, 2020

புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானமும்.

கொரோனாவின் பயங்கர தாக்குதலால் உலகமே திக்குமுக்காடி கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவின் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை மற்றவர்களை விட மிகவும் கொடுமையான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது.

திடீரென்று பிரதமர் ஊரடங்கை அறிவிக்க ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சென்னையில் தவித்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களிடம் விசாரிக்கையில் ...நேற்று இரவு காதுக்கு எட்டியது!


பிரதமர் ஊரடங்கு என்று சொல்லும் போது ஓரிரு நாட்கள் தான் இருக்கும் என்று நினைத்தோம். கையில் இருந்த பணத்தை வைத்து சமாளித்தோம். பின்னர் அதுவே வாரமாகி பின்னர் மாதங்களாகிய நிலையில் ஒருவேளை உணவுக்கே வழி  இல்லாமல் இருந்தோம்.



வாடகை பாக்கி இருப்பதால் வீட்டை விட்டு வெளியேறிய நாங்கள் தற்போது  நாடு ரோட்டில். பெண்கள் மற்றும் குழந்தைகளோடு ஒரு கழிவறை   கூட இல்லாமல் வாழ்வது மிகவும் கடினமாக இருந்தது.

இப்படி ஒவ்வொரு நாளாக நரகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கையில் தான் தமிழக கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரூபா குருநாத் அவர்கள் இந்த உன்னதமான மகத்தான காரியத்தை செய்தார்.

எங்களுக்காக இந்த மைதானத்தை அவர் திறந்து கொடுத்தவுடன் ஏறக்குறைய  15,000 குடும்பங்கள் இங்கே தற்காலிகமாக குடியேறினோம்.  இங்கே உள்ள புள் தரையில் தற்காலிக கூடாரகங்கள் அமைக்கப்பட்டு நாங்கள் இங்கேயும் சமூக விலகலை கடைபிடிக்கின்றோம்.

நடு தெருவில்வெயிலில் அமர்ந்து இருந்த எங்களுக்கு தற்போது நிழலில்  ஆயிரக்கணக்கில் நாற்காலிகள். பிள்ளைகளும் குழந்தைகளும்  நிம்மதியாக இருக்கின்றார்கள்.

உணவுக்கும் பிரச்சனை இல்லை. இங்கே நடக்கும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் 50,000 ரசிகர்கள் வருவார்களாம். அவர்களுக்காக வித விதமான உணவகங்கள் மற்றும் சமையலறைகள் உள்ளவனாம். அதில் இந்நாள் வரை கோடிகோடியாக பொது மக்களின் பணத்தில் லாபத்தை ஈட்டிய தமிழக கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு மூன்று வேளையும்  சமைத்து போடுகின்றது.

கழிவறையை பற்றி சொல்லவே வேண்டும். விடியும்  முன்பே அடித்து பிடித்து யார் கண்ணும் படாமல் தெருவோரம்  சென்ற எங்கள் மனைவி மற்றும் பெண் குழந்தைகளுக்கு இப்போது தனி தனியாக தண்ணீரோடு கழிவறை. இந்த உதவியை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம்.

யாருக்காவது கொரோனா என்று தெரிந்தால் அவர்களுக்கு இங்கேயே தனி தனி அரை. அங்கே சேர்த்து மருத்துவர்கள் செவிலியர்கள் என்று கவனிக்கிறார்கள்.

எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை கிரிக்கெட் ஆட்டத்திற்கும் தமிழக மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் சொல்லி கொள்கிறோம்.

ஒரு வேண்டுகோள். இம்மாதிரியான மைதாங்கங்கள் பல மற்ற நகரங்களிலும் உள்ளதாக செய்தி. அவைகளையும் சில நாட்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு திறந்துவிட்டால் நன்றாக இருக்கும்.


இதை கேள்விபட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து தொலைபேசியை எடுத்து..

"ஹெலோ.. தமிழக கிரிக்கெட் வாரியம்?"

"எஸ்.. விசில் போடு!"

"உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்ல தான் கூப்பிட்டேன்."

"தேங்க்ஸ்.. எல்லாம் உங்களை போல ரசிகரின் உற்சாகம் தான். சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருசமும் நன்றாக ஆடியது."

"அது இல்லீங்க.. இந்த கொரோனா நேரத்தில்..."

"ஓ.. கவலையை விடுங்க, இன்னும் சில மாதங்களில் முடிஞ்சிடும். அப்புறம் மீண்டும் ஆட்டங்கள் ஆரம்பிச்சிடும்."

"நான் சொல்ல வந்தது, அந்த புலம் பெயர் தொழிலாளர்கள்"

"ஓ.. அவங்களா.. அவங்க இங்க தான் பக்கத்துல ரோட்டுல தங்கி இருக்காங்க.. காலையில் ஜாகிங் போகவே முடியல. கேவலமா இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் தான்,  பொறுமையா இருங்க.. "

"இல்ல அவங்களுக்கு உங்களால ஏதாவது ....!!?"

"மைதானத்தில் சில பகுதிகள் கொஞ்சம் ரிப்பேர் செய்ய வேண்டி இருக்கு, இந்த கொரோனா முடிஞ்சதும், அவங்கள வைச்சி பண்ணலாம்."

"இல்லீங்க... அவங்க எல்லாரும் இருக்க இடம் இல்லாம.. சாப்பாடு இல்லாம.."

"பழகிடுவாங்க.. நீங்க கவலை படாதீங்க.. ரசிகர்கள் தான் எங்களுக்கு முக்கியம்"

"ரெண்டு மாசமா கொஞ்சும் கூட பணம் இல்லாம.. "

"சரியா சொன்னீங்க.. அதனால தான் இந்திய கிரிக்கெட் வாரியத்துட்ட சொல்லி இந்தியாவுக்கு மட்டும் ரெண்டு டீம் தயார் பண்ண சொல்லி இருக்கோம். கொரோனா முடிஞ்சவுடன் ஒரு டீம் இந்தியாவிலும் இன்னொரு டீம் வெளிநாடுகளிலும் ஆடும். இந்த நஷ்டத்தை எல்லாம் சரி பண்ணிடலாம்.

"நான் சொல்ல வந்தது....இந்த 50000 பேருக்கான உணவகம்.."

"ஓ.. அதை இன்னும் தரமா செய்ய சொல்லி இருக்கோம். கொரோனா முடிந்தவுடன்  இன்னும் சில புதிய சமூக விலகல் விதி முறைகள் வரும் போல இருக்கு, அதுக்கு ஏத்த மாதிரி  இவைகளை மாற்றி அமைப்போம்."

"கழிவறைகள்!!!?"

"ஓ.. அது ஆயிர கணக்கில் இருக்கும். அது எல்லாம் எப்போதும் தயாரான நிலையில் இருக்கு. ரொம்ப நாளா யாரும் யூஸ் பண்ணாததாலே பிளாக் ஆகிட கூடாது தானே.. அதனால் தினமும் தண்ணியை மட்டும் கொஞ்சம் திறந்து விட்டு ஆப் பண்றோம்.

"இல்லைங்க.. இந்த கஷ்டமான நேரத்துல இந்த மைதானத்தை நீங்க புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக திறந்து வைச்சி இருக்கீங்கன்னு  கேள்வி பட்டு நன்றி சொல்லலாம்ன்னு கூப்பிட்டேன்".

"ஓ.. பகல் கனவா..? சீக்கிரம் எழுந்து அடுத்த வருடத்துக்கான சீசன் டிக்கட் வாங்குங்க.. அப்புறம் விலை டபுள் ஆகிடும்..... பை.. விசில் போடு.. விசில் போடு!"

5 கருத்துகள்:

  1. அதான பார்த்தேன் , நம்ம ஆட்களாவது திருந்தரதாவது , நமக்கெல்லாம் வெறும் பகல் கனவுதான் மிச்சம் தம்பி

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கனவு நனவாகி இருந்தால் நினைக்கவே எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது... முதலில் இப்படி ஒரு கனவை கண்டதற்காகவே உங்கள்குக்கு மிகப் பெரிய பாராட்டு..... இப்படி கனவகானும் தலைவர்கள்தான் நாட்டில் இல்லை அவர்கலின் கனவு எல்லாம் இருப்பதை எல்லாம் விற்பதுதானே ஹும்ம்ம்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா18 மே, 2020 அன்று PM 4:27

    Oh Kanavaa, I was wondering how racist india developed such a bleeding heart.
    (no tamil keyboard)

    பதிலளிநீக்கு
  4. கனவு நனவானால் நன்றாக இருந்து இருக்கும்.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...