சனி, 30 மே, 2020

______ன் நிறம் கருப்பு!

_________ன் என்ற கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பி கொள்ளுங்கள்.

சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில்  என் அலுவலகத்தை சார்ந்த சிலரோடு சவுத் கேரலினா மாநிலத்தில் அமைந்துள்ள சார்லஸ்டன் என்ற  ஊருக்கு செல்ல நேரிட்டது.

பார்க்க மிகவும் அழகாக பவ்யமாக இருக்கும் இந்த  நகரம் ஒரு காலத்தில் கறுப்பினதோருக்கான நரகமாக இருந்தது என்பதை சில நிமிடங்களில் அறிந்து கொண்டேன்.

இந்த நகரில் வாழும் தெரிந்த ஒருவர், இந்த இந்த இடத்தை பாருங்கள் என்று சொல்லி தர, நாங்கள் சென்ற முதல் இடம் ஒரு ம்யூஸியம். ம்யூஸியம் என்று சொல்வதை விட இதை "மனித நேயம் சித்திரவதை பட்ட இடம் " என்ற சொல்லலாம். உள்ளே செல்ல டிக்கட் வாங்கி கொண்டு நுழைய முயல்கையில், அந்த நுழைவாயில் இருந்த ஆப்ரிக்க அமெரிக்க பெண் என்னை பார்த்து, எதற்கும் கையில் டிஸ்ஸு எடுத்து கொள்ளுங்கள் என்று ஒரு பாக்கெட்டை தர, ஒன்றும் புரியாமல் வாங்கி கொண்டு நுழைந்தேன்.



1859 ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த இடம் தான் அமெரிக்காவின் "Biggest  Slave  Mart " என்று எழுத பட்டு இருந்தது. ஆப்ரிக்காவில் இருந்து குடும்பம் குடும்பமாக கைகளை முதுகிற்கு பின் கட்டி பல்லாயிரம் மைல்கள் கப்பலில்  கடத்தி கொண்டு வந்து அவர்களை இங்கே தான் ஏலம் போடுவார்களாம்.

பிள்ளைகளுக்கு எதிரில் தந்தைகள், கணவனுக்கு எதிரில் மனைவிகள், அன்னைகளுக்கு எதிரில் பெண் பிள்ளைகள் இப்படி அனைவரையும் நிற்க வைத்து அதிக பணம் தரும் வெள்ளையர்களுக்கு கொத்தடிமைகளாக விற்பார்களாம்.

அங்கே கேட்ட கதைகள், நடந்த கொடூரங்கள் , மனதை சிதைத்து சின்னா பின்னமினமாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எப்படி இவ்வளவு கொடுமைகள் செய்ய முடியும் என்று நினைக்க முடியாத அளவிற்கான கொடுமைகள். இந்த அடிமைகள் வியாபாரம் 1609 ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவில் இருந்து வருகின்றதாம் என்பதை கேள்விப்பட்டவுடன், எதனை தலைமுறைகள் சின்னாபின்னமாகின என்று நினைத்து அழ நேர்ந்தது.

இந்த கொடுமைகளுக்கு காரணம், இவர்களின் ஏழ்மையா ? நிறமா? என்று நினைத்தே தூக்கத்தை  சில நாட்கள்  இழந்தேன் என்று தான்
சொல்லவேண்டும்.

இந்த இடத்தை விட்டு வெளியே வரும் போதுஎன்னையே அறியாமல் கண்ணீர் வர அந்த பெண் கொடுத்த டிஸ்ஸு ஏன் என்று அப்போது தான் புரிந்தது.

இப்படி இருந்த ஒரு கேவலமான அடிமை முறையை 1865 ம் வருடம் அமெரிக்க சட்டம் அறவே நீக்கி, யாராவது இந்த அடிமை முறையை பின்பற்றினால் கடும் தண்டனைக்கு உட்படுத்த படுவார் என்று சட்டம் இயக்கி வந்தாலும்..

அந்நாள் முதல் இந்நாள் வரை, கருப்பு இனத்தாருக்கு எதிராக அநியாயங்கள் நடக்கின்றது என்று தான் சொல்லவேண்டும்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்க காவல் துறையினர்  ஆப்ரிக்க அமெரிக்கர்களை  விசாரிக்கையில் தேவையற்ற வன்முறை செலுத்துகிறார்கள் என்று மீண்டும் மீண்டும் நினைக்க தோன்றுகின்றது.

சென்ற வாரத்தில் மினியப்பொலிஸ் நகரில் Geroge Floyd என்ற பெயர் கொண்ட ஆப்ரிக்க அமெரிக்கரை சில காவலர்கள் (அனைவரும் வெள்ளை நிறத்தோர் ) கீழே தள்ளி அவர் கழுத்தில் முட்டியை வைத்து தொடர்ந்து அமுக்க .. அவரோ.. என்னால் மூச்சு விட முடியவில்லை. மிகவும் வலிக்கின்றது என்று துடிதுடிக்க கொலை செய்யப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இறந்த ஜார்ஜ் அவர்களிடம் எந்த ஒரு ஆயுதமும் இல்லை. மற்றும் அவர் விசாரணைக்கு முரண் பிடித்தமாதிரியும் தெரியவில்லை. நாள்தோறும் நடக்கும் இம்மாதிரியான விசாரணைக்கு ஏன் இவ்வளவு வெறியான தாக்குதல் என்று சராசரி மனிதனால் கேட்காமல் இருக்க முடியாது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இங்கு நாடே கொந்தளித்து இருக்கின்றது என்று  தான் சொல்ல வேண்டும். ஏன் இந்த வெறி? இன்னும் எத்தனை பேர் சாக வேண்டும்.

கொரோனா , பொருளாதாரம் என்ற பல கொடூர தாக்குதல்கள் நடந்து கொண்டு இருக்கும் இந்நாட்களில் இம்மாதிரியான மனித நேயமற்ற தாக்குதல்கள் மனதை மிகவும் நோகடிக்கின்றன.

இம்மாதிரியான தவறுகளை செய்யும் நபர் யாராய் இருந்தாலும் அவர்களுக்கு கடுமையாக தண்டனை தர சட்டங்கள் இயற்றி அதை செயல் படுத்த வேண்டும்.

இவை இனிமேலும் நடக்க கூடாது. நாம் அனுமதிக்க கூடாது. அதற்கு ஒரே வழி, நம் அடுத்த தலைமுறைக்கு நாம் மனித நேயத்தை கற்று தரவேண்டும்.


RIP George Floyd!  

6 கருத்துகள்:

  1. மனித உரிமை மீறல் குறித்து இவர்கள் குரலெழுப்புவதுதான் நகைமுரண்..

    பதிலளிநீக்கு
  2. கடைசி வரிகளை டிட்டோ செய்கிறேன் விசு மனதை வருத்திய ஆனால் அதே சமயம் நல்ல பதிவு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  3. //அந்நாள் முதல் இந்நாள் வரை, கருப்பு இனத்தாருக்கு எதிராக அநியாயங்கள் நடக்கின்றது என்று தான் சொல்லவேண்டும்.//

    ஆமாம். இப்போதும் நடக்கின்றனது அதனால் தான் அவர்களும் தங்களை இழிவுபடுத்துவதால் தான் அந்தக் கோபத்தை ஏதேனும் ஒரு வழியில் வெளிப்படுத்துகிறார்கள். அவர்களைக் குற்றமே சொல்லக் கூடாது. இன, மொழி, ஜாதி, மத பேதம் என்று ஒழிகிறதோ அப்போதுதான் மனிதம் தழைக்கும். நீங்கள் சொல்லியிருக்கிற கடைசி வரிகளை அப்படியே வழி மொழிகிறேன்.

    நாங்கள் அங்கு இருந்த 9 மாதங்களில் இங்கு கற்றுக் கொண்ட கராட்டே யை அங்கும் மகன் தொடர நினைத்த போது அவனுக்குக் கற்றுக் கொடுத்தவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் தான் திரு கார்னல் வாட்ஸன். அருமையான மனிதர் என்றால் அத்தனை அருமையான மனிதர். சொல்லிட வார்த்தைகள் கிடையாது. மனிதம் என்றால் மனிதம்...அவரைப் பிரிய எங்களுக்கும் மனதில்லை அவருக்கும் மகனைப் பிரிய மனதில்லை. Shihan Cornell Watson. Sanjose, Uninon avenue வில் தா டோஜோ. ஆனால் அவர் தற்போது இல்லை. அவரது மாணாக்கர் ஜப்பானியர் சபாட்டர் தான் அந்த டோஜோவை நடத்துவதாக அறிந்தேன். நீங்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்றதும் ஏதேதோ நினைவுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. மனிதனே மனிதனை துன்புறுத்தும் கொடூரம்.

    பதிலளிநீக்கு
  5. 'Humanity is not a best quality, it is the basic quality!' பலர் ிதை மறந்ததுதான் மிகமிகக் கொடுமை.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...