வெள்ளி, 22 மே, 2020

பிள்ளையை பெத்தா சேமிப்பு !

அமெரிக்க மக்களுக்கு சேமிப்பு  என்றாலே என்னவென்று தெரியாது என்ற பொதுவான ஒரு கருத்து நிலவி வருகின்றது. இன்னும் சொல்லப்போனால் இந்தியர்கள் நிறைய சேமிப்பவர்கள் அவர்களிடம் இருந்து அமெரிக்கர்கள் கற்று கொள்ள வேண்டும் என்றும் நிறைய இடத்தில படித்து இருக்கின்றேன்.

2008 உலக அளவில் வந்த பொருளாதார வீழ்ச்சி அநேக உலக நாடுகளை பாதித்தாலும் இந்தியா பாதிக்காமல் இருந்ததற்கு காரணமே இந்தியர்களின் சேமிப்பு பழக்கம் தான் என்றும் ஒரு பேச்சு.

இது அனைத்துமே உண்மை தான்.

சேமிப்பு :
ஒருவன் எதற்காக சேமிக்க வேண்டும்? ஆங்கிலத்தில் "for a rainy day " என்பார்கள். நாளை என்ன நடக்கும் என்று யார்க்கும் தெரியாது அல்லவா. அந்த தெரியாத சவாலை சமாளிக்க சேமிப்பு.

இந்த சமாளிப்பு மற்றும் தேவை அனைவர்க்கும் தானே, பின்னர் ஏன் இந்தியர்கள் சேமிப்பில் கெட்டி மற்றும் அமெரிக்கர்கள் மருந்துக்கும் சேமிப்பது இல்லை?

தொட்டில் பழக்கம் தான்.



ஒரு சராசரி மனிதன் தன பழக்க வழக்கங்களை தன் பெற்றோர்களிடம் இருந்து கற்றுகொள்கிரேன்.

"காசு விஷயத்துல இவன் அவனை அப்பனோட கறார் "!

"மத்தவங்களுக்கு அள்ளிகொடுக்குறதுல தாய் எட்டடி பாஞ்ச இவ பதினாறு அடி பாய்வா, நூலை போல சேலை."

இப்படி தான் சேமிக்கும் பழக்கமும் வீட்டுக்கு வீடு வசப்படியாக தலை முறை தலைமுறையாக வந்து கொண்டு இருக்கின்றது. இதற்கு விதிவிலக்கும் உண்டு.

சரி, எப்படி இந்தியர்கள் தம் பெற்றோர்களிடம் இருந்து சேமிக்க கற்று கொண்டார்கள் அமெரிக்கர்கள் தவறி விட்டார்கள்?

சற்று அலசுவோம்.

இந்தியாவின் வாழ்வு முறையில் நாம் சேமித்தாக வேண்டியது நிர்பந்தம்.நான் அறிந்தவரை அரசு ஊழியர்களை தவிர மற்ற யாருக்கும் ஓய்வூதியம் என்று ஒன்று கிடையாது.

நான் அங்கு வாழ்ந்தவரை (1980 இறுதிவரை ) இந்தியாவில் லைப் இன்சூரன்ஸ் , மருத்துவ இன்சூரன்ஸ், வாகன இன்சூரன்ஸ் என்பது பெரிய பொருட்டாக எடுத்து கொள்ள படவில்லை.

திடீரென்று குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டாலோ, நோய்வாய் பட்டாலோ, விபத்தில் சிக்கினாலோ, அரசாங்கத்தில் இருந்தோ மற்றும் வேறு எங்கிருந்தோ உதவி வராது. நம்மிடத்தில் உள்ளவற்றை வைத்தே சமாளிக்க வேண்டும்.

இதை நன்கு அறிந்த இந்தியர்கள் தான் சாமர்த்தியமாக சேமிப்பில் கவனம் செலுத்தினார்கள்.

இன்னொரு விஷயம்.

இந்தியர்களுக்கு பொதுவாகவே நாம் பெற்ற பண கஷ்டம் பொருள் கஷ்டம்  நம் பிள்ளைகளுக்கு வர கூடாது என்று ஒரு எண்ணம் இருக்கும்.  அதனால் தான்  உழைப்பில் வரும் சம்பளத்தில் பெரும்பான்மையை  வங்கியிலும் தங்கத்திலும் வீடு மனைகளிலும் முதலீடு செய்வார்கள்.

"எனக்கு ரெண்டு பசங்க.. மூத்தவனுக்கு வீடு வாங்கிட்டீட்டேன், இளையவனுக்கு தான் இப்ப ஓடி ஆடி சம்பாதிக்கிறேன். இளையவனுக்கும் ஒன்னு வாங்கி போட்டுட்டா நிம்மதியா கண்ணை மூடுவேன்"

என்று அநேகர் சொல்ல நான் கேள்வி பட்டுளேன்.


இந்த பிள்ளைகளுக்காக சேமிப்பதற்காக பல பெற்றோர்கள் தங்கள் மகிழ்ச்சியை அறவே துறந்து வாழ்வதை பார்க்க கஷ்டமாய் இருந்தாலும் அவர்களின் தியாக எண்ணம் வியக்கவைக்கும்.

மற்றும், இந்தியாவில் பிள்ளைகளின் படிப்பு அனைத்தும் பெற்றோர்களின் செலவே. கல்லூரி முடித்து வேலைக்கு செல்லும் வரை புத்தகம் கல்லூரி, போக்குவரத்து என்று அனைத்தையும் பெற்றோர் தான் செய்ய வேண்டும். இது ஒரு பெரிய சுமை. இந்த செலவிற்காக ஒருவர் சேமித்து வைக்காவிடில்  அவரின் பாடு திண்டாட்டம்,

அடுத்து  திருமணம் ..

பொதுவாகவே இந்தியாவில் திருமண செலவு.. மாப்பிளை வீடு பொண்ணு வீடு என்று பெற்றோர்களின் தலையில் கட்டப்படும்.  பிள்ளைகளின் திருமணத்திற்காகவே சேமித்து வைக்கும் பெற்றோர்களை நான் பார்த்துள்ளேன்.

வயதானால் யாருக்கும் பாரமாய் இருக்க கூடாது.

எங்கள் குடும்பத்திலும் சரி நட்புகள் குடுமபத்திலும் சரி சமூகத்திலும் சரி, இந்தியர்கள் அனைவரும் சொல்ல  கேள்வி பட்டு இருக்கின்றேன். இந்தியர்கள் மட்டும் அல்ல, யாருக்குமே இந்த ஒரு நினைப்பு இருக்கும். யாருக்கும் பாரமா இருக்குறதுக்கு முன்னாள் போய் சேந்துடனும். இந்தியாவில் ஓய்வூதியம் வாங்குவோர் மிகவும் குறைவே. அதனால் வயதான காலத்திற்காக சேர்த்து வைக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் உண்டு.

இப்போது அமெரிக்கர்களுக்கு ஏன் சேமிப்பு பழக்கம் இல்லை என்று பார்ப்போம்.

"For  a  Rainy day" என்ற அவசியம் அமெரிக்கர்களுக்கு சில வருடங்களுக்கு முன் வரை இல்லை என்றே சொல்லலாம் (தற்போது நிலைமை மாறி வருகின்றது)

ஏற்கனவே சொன்னது போல் இங்கே இன்சூரன்ஸ் இந்தியாவை விட சற்று
சீராக வேலை செய்யும்.  ஒருவருக்கு வேலை போனால், விபத்து நேர்ந்தால் நோய்வாய் பட்டால் அதை இன்சூரன்ஸ் பார்த்து கொள்ளும் (இந்த நிலைமை கடந்த பத்து பதினைந்து வருடங்களாக மாறி வருகின்றது).

திடீரென்று வேலை பறிபோனால் அரசாங்கத்திடம் இருந்து குறைந்த பட்சம் ஆறுமாதத்திற்கு பண உதவி கிடைக்கும். வேலையில் விபத்து நடந்தால் அதற்கான இழப்பீடு பல வருடங்களுக்கு வரும்.

இப்படி தங்கள் எதிர்காலத்தில் ஏதாவது  நிகழ்ந்தால் கவலை இல்லை நாம் காட்டும் வரி நமக்கு வரும் என்று நம்பி வாழ்ந்ததின் விளைவு தான் இந்த சேமிப்பின்மை.

இம்மாதிரியான உதவிகள் வேகமாக குறைந்து  வருகின்றன. இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகமாக இருப்பதால் மக்கள் சிலர் இன்சூரன்ஸ் இல்லாமல் வாழ்கின்றனர். இவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் மிகவும் கஷ்டம் தான். சேமிப்பும் இல்லை, வருமானமும் இல்லை.

பிள்ளைகள் வளர்ப்பும் படிப்பும்

அமெரிக்கர்களை பொறுத்தவரை  பிள்ளைகளின் படிப்பு பெரும்பாலும் பிள்ளைகளின் தலையில் தான். வசதி உள்ளவர்கள் பிள்ளைகளுக்கு பணம் கட்டுவார்கள், ஆனால் பொதுவாகவே இவை பிள்ளைகளின் தலையில் தான்.

இங்கே ஒரு உதாரணம்.  என் உறவினர் குடும்பம் ஒன்று அமெரிக்காவில் பல வருடங்கள் ராப்பகல் பார்க்காமல் பணத்தை மில்லியன் கணக்கில் சேர்த்து வைத்தார்கள். அவர்களுக்கு ஒரே பிள்ளை. இங்கே வந்த பணத்தில் இந்தியாவில் சொத்துக்கு மேல் சொத்து நிலம் வீடு மனை என்று வாங்கி  போட்டு கொண்டு இருந்தனர். அவ்வளவு பணம் இருந்தாலும் இங்கே ஒரு சிறிய  அபார்ட்மெண்டில் தங்கி செலவை மிச்ச படுத்தி வாழ்ந்து வந்தவர்களுக்கு அவர்களின் மகன் பதினெட்டு வயதாகியவுடன்  பெரிய அதிர்ச்சி.

ஒரு வார இறுதியில் காலை ஒரு பையோடு வந்த மகன், தான் வேறொரு நகரத்திற்கு செல்ல போவதாகவும் அடுத்த இரண்டு வருடத்திற்கு ஏதாவது வேலை செய்து பணம் சேர்த்து பின்னர் கல்லூரிக்கு செல்ல இருப்பதாகவும் சொல்ல, இவர்களோ ..நம்மிடம் இல்லாத பணமா? எந்த கல்லூரி சொல்.. இன்னைக்கே கட்டிவிடலாம் என்று சொல்ல..

அவனோ..

"நம்ம பணமா? அது எல்லாம் உங்க பணம்? அதுக்கும் எனக்கும் சம்மதமே இல்லை."

"டே, இவ்வளவு நாளா இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிச்சது அத்தனையும் உனக்கு தானே, நீ ஏன் இப்ப வேலைக்கு போய்.. வேண்டாம்.. ப்ளீஸ்.."

"நானா உங்கள இப்படி கஷ்டப்பட சொன்னேன்?  எனக்கு உங்க பணம் எதுவும் வேண்டாம். நான் கிளம்புறேன்.. பதினெட்டு வருசமா என்னை நல்லா பாத்துக்குனீங்க.. அதுக்கு ரொம்ப தேங்க்ஸ். ஐ ரியலி லவ் யு. நான் ஒன்னும் உங்களை தவிக்க விட்டுட்டு போல. சொந்த காலில் நிக்கணும். அது தான்."

என்று சொல்ல..

"இப்ப நாங்க என்ன பண்றது, அந்த சொத்து எல்லாத்தையும் யாரு பாத்துக்குவாங்க?"

"எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா வித்து, உலகம் முழுக்க சுத்தி வாங்க. எவ்வளவு நல்ல காரியம் இருக்கு. வாழ்க்கையை வாழ கத்துக்குங்க.. உங்க வாழ்க்கையை இப்படி வாழ்வதற்கு என் மேல பழியை போடாதீங்க.."

என்று சொல்லி விட்டு கிளம்பிட்டான். பதினெட்டு வயதில் பையன் வீட்டை விட்டு கிளம்பிட்டானு இவர்கள் புலம்பும் அதே நேரத்தில்..

என் பையன் -  பொண்ணுக்கு 18 வயசாச்சி.  இன்னும் வீட்டுல தான் இருக்காங்கன்னு சோகமா சொல்லும் அமெரிக்கர்களும் இருக்காங்க. அமெரிக்க பிள்ளைகள் பதினெட்டுக்கு பிறகு பெற்றோர்களோடு இருந்தால்  சமூகத்தில் சற்று ஏளனமாகவே பார்க்கப்படுவார்கள்.


பிள்ளைகளின் படிப்பிற்காக சேமிக்கவேண்டும் என்ற பழக்கம் இல்லை. படிப்பிற்காக பல கடன் வசதிகள் உண்டு. பிள்ளைகள் அதை பெற்று கொண்டு தான் படித்து வருகின்றார்கள். இந்த கடன்சுமை மிகவும் பெரிய பாரம் என்று தான் சொல்லவேண்டும். கல்லூரி படித்து முடித்த உடனே பெரிய கடனோடு வாழ்க்கையை ஆரம்பிப்பது சிரமம் தான். இருந்தாலும் இதுவே வாழுமுறையாகிவிட்டதால் சேமிப்பு இல்லை.

திருமணம்.

அமெரிக்கர்களின் திருமணம் பொதுவாகவே மாப்பிள்ளை மற்றும் பெண் இருவர்களினாலே நிச்சயிக்கபடும்.

யாரை மணக்க போகிறோம் என்று முடிவு செய்தவுடன் அவர்கள் இருவருமே எப்போது திருமணம் என்று முடிவு செய்வார்கள். திருமணத்திற்கு 200 பேரை அழைத்தால் அது பிரமாண்டம் என்று கருதப்படும். ஏறக்குறைய செலவு அனைத்தையும் அவர்களே தான் ஏற்பார்கள். அப்பா அம்மா என்று நம்மை அழைத்தால் சந்தோசமாக போய் வரலாம். அதிக வசதி படைத்த பெற்றோர்கள், இவர்களுக்கு பண உதவி செய்வார்கள். ஆனால் இந்த பணஉதவியை வைத்து தான் இந்த திருமணம் நடக்கும் என்று சொல்ல முடியாது.

வயதானால் யாருக்கும் பாரமாய் இருக்க கூடாது.

அமெரிக்காவில் வயதானோர் அனைவருக்கும் சோசியல் செகுயூரிடியில் இருந்து மாதம் மாதம் ஒரு தொகை வரும். இதை வைத்து கொண்டு மிகவும் சொகுசாக வாழ முடியாவிட்டாலும் காலத்தை தள்ளி விடலாம். (இங்கே ஒரு விஷயம், கஜானாவில் அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை. இந்த ஊதியம் இன்னும் எத்தனைவருடத்திற்க்கு தருவார்கள் என்று விவாதமே நடந்து கொண்டு இருக்கின்றது) .

அமெரிக்கரின் சேமிக்காமல் வாழ்வதற்கான முக்கியமான காரணம் இந்த ஓய்வூதியம் தான். எதற்கு சேர்க்க வேண்டும். சம்பாதிப்பதை வைத்து இளம் வயதில் ஜாலியாக இருக்க வேண்டும். அனுபவிக்கும் போதே அனுபவிக்கவேண்டும். வயதானால் இருப்பதை வைத்து அடங்கி இருக்க  வேண்டும் என்ற ஒரு சூழல்.


இப்படி நாளைய சவாலை எதிர்க்க பண தேவையில்லாமல் வளர்ந்த அமெரிக்கர்களுக்கு கடந்த சில வருடங்களாக ஓய்வூதியம் இன்சூரன்ஸ் போன்றவை குறைந்ததால் எப்படி வாழ்வது என்று  தடுமாறுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு தணிக்கையாளர் என்ற முறையில் நான் என் நட்புகளுக்கு  சொல்வது..

எமெர்ஜன்சி சேமிப்பு என்று ஒன்று ஆரம்பியுங்கள். அதில் தங்களுக்கான  (வீடு வாடகை - மார்ட்கேஜ் - மற்ற செலவுகள் ) ஆறுமாத பணத்தை சேர்த்து வைத்து கொள்ளுங்கள் . குறைந்த பட்சம் ஆறு மாதம் தொகை இருப்பில் இல்லாமல் போனால்  பிரச்சனையே.

இன்சூரன்ஸ் எடுத்து வையுங்கள். ப்ரீமியம் அதிகம் தான். இருந்தாலும் மூச்சை பிடித்து கொண்டு  கட்டி வாருங்கள்.

பிள்ளைகளுக்கு சேமிப்பை  சொல்லி கொடுங்கள். அதே நேரத்தில் வாழ்வை எப்படி வாழவேண்டும் என்றும் பிள்ளைகளுக்கு வாழ்ந்து காட்டுங்கள்.

ஒர்க் ஹார்ட் அண்ட் பிளே ஹார்டர் !

2 கருத்துகள்:

  1. நம்மைப் போல் அமெரிக்கர்கள் சேமிப்பதில்லை என்றதன் பின்புலம் அறிய முடிந்தது. எங்கிருந்தாலும் சேமிப்பு என்பது மிக மிக முக்கியம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  2. விசு இப்போது அங்கு மாற்றங்கள் வருகிறது என்று சொன்னான் மகன். அவரள் லைஃப் ஸ்டைலுக்கு நம்மைப் போல் சேமிப்பு இருக்காதுதான் ஆனால் அங்கும் இப்போது மக்கள் சேமிப்பு பற்றி சொல்வதாக மகன் சொன்னான். இப்போதைய சூழ்ல் பற்றியும் சொன்னான்.

    நான் அவனுக்கு சேமிப்பு பற்றிச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் ரொம்ப சின்ன வயதிலேயே தொடங்கிவிட்டேன் அப்படிச் சொல்லிக் கொடுக்க. எனவே சமாளித்துக் கொள்கிறான். தேவைகளும் குறைவுதான். கடைசியில் நீங்கள் சொல்லியிருக்கும் சேமிப்பு அட்வைஸ் நல்ல விஷயம். கணக்குப் பிள்ளையாச்சே!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...