14 வயது இருக்கும்.
ஐரோப்பா பயணத்தை முடித்து திரும்பி வந்த அன்னை அடியேனுக்கு எடுத்த வந்த பரிசு.
"அங்கே ஆபிசில் இருக்குற ஒரு ஜெர்மனி ஆளிடம் உன் வயசை சொல்லி வாங்கி வர சொன்னேன், இந்தா"
தொட்டு பார்த்தேன். இது என்ன காட்டன் டெரிகாட்டன் பாலிசியஸ்டர் போல இல்லாமல் ரொம்ப தடியா. வெளியே ஒரு கலர் உள்ள வெளுத்து இருக்கே.. என்று நினைக்கையில், அம்மா,
"பிடிச்சு இருக்கா?"
ஏமாற்றத்தை மறைத்துவிட்டு
"ஆமா "
என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த மில்க் சாக்லெட்டை தாக்க ஆரம்பித்தேன்.அன்றில் இருந்து இன்று வரை மில்க் சாக்கலேட்டுக்கு அடிமை, அது வேற கதை.
பரிசை எங்கே வைத்தேன் என்று கூட மறந்துவிட்டேன். ஏனோ பிடிக்கவில்லை. சில மாதங்கள் கழித்து பெங்களூர் செல்ல அங்கே ஒரு பிறந்தநாள் விழாவிற்கு வந்து இருந்த அனைத்து இளசுகளும் அதையே அணிந்து இருந்தார்கள். பார்க்கவும் நன்றாகத்தான் இருந்தது. இருந்தாலும் அதன் மேல் ஓர் ஈர்ப்பு வரவில்லை.
மாதங்கள் கழிந்தது. சகலை ஒருவன், இந்த வார சன் இதழில் "கிரீஸ்" என்ற ஆங்கில படத்தின் போஸ்டர்.
ஆஹா...
ஓஹோ..
அருமை..
அட்டகாசம்.
என்று சொல்ல..மேலே செல்லும் முன்...
அந்த காலத்தில் "தி சன் " என்ற ஆங்கில பத்திரிக்கை வாங்கும் பழக்கம் இருந்தது. அதன் நடுபக்கத்தில் மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகர் , கிரிக்கட் வீரர் , ஆங்கில பாடகர் , சினிமா போஸ்டர் போன்று ஏதாவது இருக்கும். அந்த போஸ்டருக்காகவே இந்த இதழை வாங்குவோம். விலை ஒன்னரை ருபாய் (70களில்).
ஓடி சென்று வாங்கி வந்தேன். அருமையான போஸ்டர். இன்னாதான் சொல்லு வெள்ளைகாரன் வெள்ளைக்காரன் தான் . வாழ தெரிஞ்சவன். என்னமா அனுபவிச்சு வாழறான் என்று நினைக்கையில், அந்த போஸ்டரில் "அது" தென் பட்டது.
அம்மா வாங்கி வந்த அந்த "ஜீன்ஸ்".
அட பாவத்த, இம்புட்டு அழகா இருக்கே. என் கண்ணே பட்டுடும் போல இருக்கேனு, நினைத்து கொண்டே..
அணிந்தேன்..
அணிந்தேன் என்று சொல்வதை விட அது என்னை அணிந்தது என்றது தான் சொல்லவேண்டும்.
ஒவ்வொரு காலாய் உள்ளே விட்டு இடுப்பிற்கு மேல் ஏற்றி விட்டு பட்டனை போட்டு விட்டு வெண்கல ஜிப்பை மேலே இழுத்து விட்டு கண்ணாடியில் என்னை நானே பார்த்தேன்..
"விசு.. இனி உன் வாழ்வில் இதை விட உன்னை யாரும் அதிகம் தொட போறது இல்லேனு ஒரு அசரீரி"
பள்ளிக்கூடத்தில் சீருடை வெள்ளை - வெள்ளை ... இன்னாடா இது ? கைக்கு எட்டியது காலுக்கு எட்டவில்லையே என்று மாலையிலும் மற்றும் வார இறுதியிலும் அணிந்து அணிந்து கருநீலத்தின் இருந்த ஜீன்ஸ் சாயம் போய் சாம்பல் நிறத்திற்கு வந்து இருந்தது.
பெங்களூரில் இருந்து விடுமுறைக்கு வந்த சகலை..
"விசு, செம்ம ஜீன்ஸ்.. "Levis or Wrangler" என்று கேட்க, அன்று தான் இவை இரண்டும் செம ஜீன்ஸ் வகைகள் என்று அறிந்து கொண்டேன். ஊருக்கு திரும்பி போகுமுன் அவன்.. காலில் விழாத குறையாக..
"என்னோட புது Levis இல்லாட்டி Wranglerரில் ஒன்னை எடுத்துக்கோ. இதை எனக்கு தா"
என்று சொல்ல ...
இவன் என்ன சாயம் போன ஜீன்சுக்கு புதுசு தரேன்னு சொல்றான், இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் இருக்கும் போல இருக்கேன்னு கூகிளை தட்டினேன்.
சாயம் போன ஜீன்ஸ் (Faded Jeans) வகையறாவின் பெருமையை அன்று தான் அறிந்து கொண்டேன்.
நிற்க!!உங்களில் பலர்...!!
என்னமா அளந்து விடுற விசு ? ஒரு அளவு வேணாமா!!? அந்த காலத்தில் கூகிள் எங்கே இருந்ததுன்னு நாக்கை புடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி பின்னூட்டத்தில் கேட்கலாம்னு துடிக்கிறீங்க..
சும்மா ஒரு ப்ளோவில் சொன்னேன்.
"சாயம் போனதுக்கு எதுக்குடா புதுசு தாரேன்னு சொல்ற" என்று சகலையிடம் நான் கேட்டதற்கு அவன் தான் அதன் மகிமையை விளக்கினான்.
"இவ்வவளவு தெரிஞ்ச பிறகும் எப்படி தருவேன்..?!! "
"ப்ளீஸ்.. வேணும்னா.. ரெண்டையும் தாரேன். ப்ளீஸ்.. " கெஞ்சினான்.
"கொஞ்ச நாள் போட்டுட்டு அப்புறமா தாரேன்.. "
அந்த கொஞ்ச நாள் அடுத்த வருடம் முழுக்க என்று எங்கள் இருவருக்குமே தெரியாது.
நம்ம ராசி பிரகாரம் அடுத்த ஆண்டு வேறொரு பள்ளிக்கு மாற்ற பட.. அங்கே சீருடை சாம்பல் நிற பேண்ட் -வெள்ளை சட்டை .
சாயம் போன என் ஜீன்ஸிற்கும் அவர்கள் சொன்ன சாம்பல் நிறத்திற்கும் ஆறு வித்தியாசம் கூட இல்லை. நம்பினால் நம்புங்கள் இல்லாவிடில் பரவாயில்லை. ஒரு முழு ஆண்டை அந்த ஒரே ஒரு ஜீன்ஸில் சமாளித்தேன்.
மாதங்கள் கழிந்தன.
அம்மாவும் உடன் பிறந்தோரும் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதால், கால் நிறைய ஜீன்ஸ். நம்ம வேற கடைக்குட்டி சிங்கமாச்சே.. கேட்டது எல்லாம் கிடைக்கும் காலம். ஏறக்குறைய அனைத்து நிறங்களில் வந்து இருந்தாலும் நமக்கு பிடித்தது என்னமோ நீலம் தான். நான் மட்டும் போட்டு ரசிக்காமல் ஜீன்ஸ் அணியும் தோழர் தோழிகளையும் ரசித்தது உண்டு.
கல்லூரி நாட்கள்!
அவனா... !!?அந்த ப்ளூ கலர் பேண்ட்டு போட்டுன்னு இருப்பான்.. அவன்தானே..
அவனே தான்.
அடுத்து வேலை.
நல்லதோர் பேண்ட், சூட் கோட் பூட் டைஎன்று தான் அலுவலகம் செல்ல வேண்டும் .
பெங்களூரிலும் சரி, பாம்பேயிலும் சரி, வளைகுடாவில் சரி.. இந்த கருப்பு கோட் வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் மட்டும் டை என்பது உடன்பிறப்பாகிவிட்டது.
வேலைகள், வேளைகள், நட்புகள், பகைகள், பழக்கங்கள் அனைத்தும் மாறி மாறி வந்த போதும்.. ஜீன்ஸ் மட்டும் கூடவே நின்றது.
திருமணமான புதிதில் . இது என்ன சாக்கு மூட்டை போல இருக்கு என்று சொன்ன அம்மணியிடம் கூட இப்போது அரை டசன் ஜீன்ஸ் இருக்கும். நமக்கு பிடித்தது தானே, அவர்களுக்கும் பிடிக்க வைத்து விட்டேன். பிள்ளைகளும் சரி ஜீன்ஸ் மேல் அதே காதல் தான்.
பிள்ளைகள் ஜீன்ஸில் ஒரே பிரச்சனை . சாயம் போனது மட்டும் அல்லாமல் அங்கே இங்கே கிழித்து கொண்டு தான் அணிகிறார்கள். புதியதாக வாங்கி தரட்டும்மா என்றேன்..
"வேணாம்.. இப்படி ஜீன்ஸ் போடுறது தான் இப்ப பேஷன்"
என்று சொல்லி விட்டார்கள்.
பணியினிமித்தம் அமெரிக்கா வந்த புதிதில் முதல் நாள் அலுவலகத்திற்கு விதியே என்று மீண்டும் கோட் பூட் சூட் டை என்று செல்ல.. அங்கே..
"இப்படி தான் ஆபிசுக்கு டிரஸ் பண்ணுவியா?"
மனதில்.. ஏண்டா.. நானே விதியேன்னு இப்படி இருக்கேன். இது கூட பத்தலையா...
"எஸ்.. ஏன்?!!"
"இல்ல, இங்கே கலிபோர்னியாவில் நாங்க எல்லாரும் கஷுவலா டிரஸ் பண்ணுவோம். உனக்கு இப்படி பிடிச்சி இருந்தா அப்படியே இரு.. எங்களுக்கு டெனிம் ( Denim ஜீன்ஸின் மறுபெயர்), T ஷர்ட் ஹவாய் ஷார்ட் இருந்தா போதும்"
"என் காலுல்ல பாலை வார்த்த! ரொம்ப நன்றி"
இது நடந்து பதினைந்து வருடங்கள் ஆயிற்று. இன்னும் வேலையையும் மாற்றவில்லை ஜீன்ஸையும் மாற்றவில்லை.
ஜீன்ஸ் மேல் என் இம்புட்டு அன்பு?
நல்ல கேள்வி. பல பதில்கள். ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு காலத்திற்கு பொருந்தும்.
ஸ்டைல்.
வசதி (Comfortable)
Long Lasting
Long term Investment
துவைக்க வேண்டிய அவசியம் இல்லை
அப்படியே துவைத்தாலும்.
துவைப்பது சுலபம்.
இஸ்திரி தேவை இல்லை.
மேலே சட்டை டீ ஷர்ட் கோட் ஜிப்பா எதுவேண்டுமானாலும் அணியலாம்.
கோடை, குளிர் , மாலை, வெயில் எல்லாத்துக்கும் ஒத்து போகும் !
சாப்பிட்டு அப்படியே கைய துடைச்சிக்கலாம்.
நிறைய பாக்கெட்
சில இடங்களில் சிறப்பு மரியாதை.
இன்னும் பல.
சில நாட்களுக்கு முன் , பிள்ளைகள் ஒரு விஷேஷத்திற்கு அழைக்க.. நானும் அவர்கள் பாணியில் கிழிஞ்ச ஜீன்ஸ் அணிந்து கொண்டு செல்ல.. காரில் இருந்து இறங்கும் போதே என்னை பார்த்த இளையவள் ஓடி வந்தாள்.
"ஏன், பழைய கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டுன்னு வந்தீங்க?!!"
"ஹலோ, புதுசு .. .போன வீக்எண்டு தான் இந்த பார்ட்டிக்கு போடலாம்ன்னு வாங்குனேன்."
"என்கிட்டே சொல்றது இல்லையா? "
"நீங்க தானே சொன்னீங்க.. இந்த மாதிரி கிழிஞ்ச ஜீன்ஸ் தான் பேஷன்ன்னு , அதுதான்."
"ஐயோ, அது பேஷன் தான்,, ஆனா எங்களுக்கு, உங்களுக்கு இல்ல!!"
"ஏன்?"
நாங்க போட்டா அது புதுசுன்னு எல்லாருக்கும் தெரியும்?"
"இதுவும் புதுசு தானே.. வாங்கி ரெண்டு நாள் கூட ஆகல.. "
"நீங்க போட்டா.. பாரு.. கஞ்சன்.. கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டுன்னு வந்து இருக்கான். புதுசு வாங்குறது தானே.. அவ்வளவு என்ன கஞ்சம்ன்னு சொல்லுவாங்க"
"எனக்கு மட்டும் ஏன் அப்படி..!!?"
"உங்க ரெப்புட்டேஷன் அப்படி "
பின் குறிப்பு:
உண்மையாவே நான் போட்டு இருந்த ஜீன்ஸ் வயசாகி அடிபட்டு கிழிஞ்சி போனது தான் என்பதை அம்மணிகள் மூவரும் கண்டு பிடிக்காதவரை மகிழ்ச்சி.