வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

ஆல்ப்ஸ் மலையில் தோசை மாவு!

முதல் முதலாக விமானத்தில் ஐரோப்பியாவை கடக்கபோகும் நாள் வந்த போது, ஒரு முறைக்கு மூன்று முறை பிரிட்டிஷ் ஏர்வேஸ் அலுவலகம் சென்று 

"எனக்கு ஜன்னல் சீட் தான் வேண்டும்!!"

என்று கேட்டு அதை உறுதி படுத்தி கொண்டு அந்நாள் வர விமானத்தில் ஏறினேன். என் ராசி அந்த முழு பயணமும் பகல் நேரத்தில். எதிரில் இருந்த பெரிய டீவியில் நாங்கள் தற்போது எங்கே பறக்கின்றோம் என்று  காட்டி கொண்டு  இருக்க.. கீழே ஆல்ப்ஸ் மலை!

அம்மாவின் நினைவு வந்தது..


அம்மா  மாற்றுத்திகனாருக்கான பல பள்ளிகளை திறந்து அதை நடத்தி நிர்வாகித்து வருபவர்கள். பணி நிமித்தம் ஐரோப்பா நாடுகளுக்கு, சென்று வருவார்கள். அப்படி ஒருமுறை திரும்பி வந்த அவர்கள், பள்ளி விடுதிக்கான  சமையலறையில் ஒரு பெரிய அண்டாவில் இருந்த தோசை மாவு நிரம்பி வழிவதை பார்த்து...

"இது என்ன ஆல்ப்ஸ் மலையின் மேல் வழியிற ஸ்னோ போல இருக்குதே!!!" 

என்று சொல்ல, அங்கு இருந்தவர்கள், 

"என்னம்மா  சொல்றீங்க!!!?" 

என்று விசாரிக்க.. 

ஐரோப்பாவிற்கு விமானத்தில் போகும் போது  ஆல்ப்ஸ் மலை மேல பறப்போம். அப்ப கீழ அந்த மலைமேல் பல நூறு கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்னோ.. வெள்ளையா கொட்டி கிடக்கும். இந்த மாவு நிரம்பி வழியுறத பார்த்தவுடன் அந்த நினைப்பு வந்தது "

என்றார்கள்.

மூடியிருந்த சன்னலை தூக்கிவிட்டு கீழே பார்த்தேன். பல நூறு கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்னோ.. அம்மா சொன்னதை போலவே தோசை மாவு போல தான் தெரிஞ்சது. 

பல வருடங்களுக்கு பிறகு வளைகுடா நாட்டிற்கு வேலை நிமித்தம் போகையில், பாம்பயில் இருந்து நீல அரபிக்கடலை தாண்டி அரேபியா நிலப்பரப்பு வந்து சேருகையில் ..

இந்த தோசை மாவை காணமுடியவில்லை. மாறாக.. 

பலநூறு கிலோமீட்டருக்கு சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்தது போல்  ஒருவித மஞ்சள் நிரபரப்பு. இது மொத்தமும் பாலைவனம் என்று அறிய சில நொடிகள் பிடித்தது.

ஒரு மனிதனாய் பிறந்த எவனுக்கும் ஒரு ஆசை கண்டிப்பாக இருக்கும். வாழ்வின்  எந்த ஒரு நல்ல தருணத்திலும்... 

அட அட அட.. இப்ப மட்டும் இதை மட்டும் இங்க மட்டும் அம்மா இருந்து இருந்தாங்கனா ... என்ற ஒரு நப்பாசை!

இந்த நப்பாசை அநேகருக்கு ஆசையாகவே இருந்தாலும் நம்மில் சிலருக்கு  உண்மையிலே நடந்து விடும்.  எனக்கு அப்படி ஒரு ராசி தான் எப்பவுமே. 

வளைகுடா போனவுடன் கூட அம்மாவை வர வைச்சி ..

பறக்கும் போது  தோசை மாவை எல்லாம் எதிர்பாக்காதீங்க.. வழிமுழுக்க சப்பாத்தி மாவு தான் என்று சிரித்தோம்.


ஒவ்வொரு  முறையும்  ஐஸ் க்ரீம் சாப்பிடும் போது ..

தணிக்கையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற போது..

முதல் சம்பளம் வாங்கும் போது..

மனைவி கர்ப்பம் என்று சொன்ன  போது...

ராசாத்திக்கள் பிறந்த போது..

புது வாகனங்கள் வாங்கும் போது..

ராசாத்திக்கள் முதல் நாள்   பள்ளிக்கூடம் செல்ல துவங்கும் போது .

அம்மணியும் அடியேனும் புது வேலைகளில் சேர்ந்த போது

புது இல்லத்தில் குடி பெயர்ந்த போது

அன்றில் இருந்து இன்று வரை காய்ச்சல் வரும்  போது..

மீன் குழம்பு ருசியாக இருக்கும் போது ...

வாழை குலை தள்ளும் போது ..

கருவேப்பிலை குட்டி போடும் போது ..

ரோசா வண்ணம் வண்ணமாக பூக்கும் போது ..

பொது வெளியில் யாராவது நம்மை பாராட்டும் போது...

என்னை அறியாமலே.. 

அம்மா எங்கே என்று கண்கள் தேடும். ஆண்டவன் புண்ணியத்தில் அவர்களும்  பெரும்பாலும் அருகில் இருப்பார்கள்.

இது எல்லாம் ஓகே.. 

தவறுகள் செய்ய நேரிடும் போது, அம்மாவின் கம்பீரம் தலை குனிய வைக்கும்! 

                                                                கம்பீரம்! 

அய்யகோ..!!

அம்மா பார்த்து இருப்பாங்களா?

அம்மாவுக்கு தெரிஞ்சா?

அந்த அம்மா பையனா நீ?

என்று பயந்த நேரங்களும் உண்டு.

இன்று கூட, புதிதாக யாருக்காவது அம்மாவை அறிமுக  படுத்தும் போது ..

"இவங்க தான் என்னை பெத்த மகராசி" என்று தான் சொல்லுவேன். அதை கேட்க்கையில் அவர்களின் முகத்தில் வரும் புன்சிரிப்பே தனி தான்.

 அம்மா என்பது ஒரு வரம். அவர்களை கொண்டாடுவோம்!


5 கருத்துகள்:

  1. நீண்ட இடைவெளிக்குப்பின் அம்மாவை பார்ப்பது என் பாக்கியம். என்னுடைய வணக்கங்களும் நமஸ்காரங்களும். படங்கள் அத்தனையும் சிறப்பு. நீங்கள் சொன்னதுபோல் இப்போ அம்மா அப்பா நம்முடன் இல்லையே என ஏங்கி அழுத தருணங்கள் எண்ணிக்கையில் அடங்காது.

    பி.கு: கல்லூரி நாட்களில் பார்த்த அதே ஜீன்ஸ்…இன்னுமா.....,

    பதிலளிநீக்கு
  2. அம்மாவுக்கு என் நமஸ்காரங்கள்.  அம்மாவின் பெருமையை வார்த்தைகளில் சொல்லி முடியாதுதான்.

    பதிலளிநீக்கு
  3. அம்மாவுக்கு எங்கள் பணிவான சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

    அம்மாவின் படம் இப்போதையதா?

    துளசிதரன்

    கீதா

    அம்மாவின் படங்களைப் பார்த்ததும் அவர்களோடு நான் இருந்த நாட்கள் மனதில் வந்தது. அந்த அன்பு சொல்லி முடியாது.

    அம்மா என்றாலே அது தனிதான். என் அம்மாவை தினமும் நினைத்துப் பேசுவதுண்டு. நினைக்கும் போது எனக்கு என்னென்னவோ எண்ணங்கள் தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்பு நிறையும் பதிவு. God bless ..Praise the Lord
    அம்மாவுடனான உங்கள் படங்கள் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...