இடம் :எருக்கஞ்சேரி, தரங்கம்பாடிக்கு அருகில்
வருடம் :1977 போல்
வயது :13 போல்
படங்கள் எடுத்த தேதி : ஆகஸ்ட் 8 , 2020 ,
படங்கள் எடுத்த இடம் ;கலிபோர்னியா, அமெரிக்கா
இன்னொரு கோடை விடுமுறை வர, இம்முறை தரங்கம்பாடி அருகில் உள்ள எருக்கஞ்சேரி என்ற கிராமத்தில் வாழும் தாத்தா வீட்டு பண்ணைக்கு பயணம்.
எங்கே எங்கே இருந்தோ கிளம்பி, ரிக்ஷா, ஆட்டோ. பஸ் பிடித்து விழுப்புரம் சந்திப்பை வந்து சேர அங்கிருந்து மாயவரத்திற்கு ரயில். மாயவரம் அடைந்து அங்கு இருந்து ஒரு பஸ் பிடித்து எருக்கஞ்சேரி வர, பஸ்ஸை விட்டு இறங்கும் போதே, அங்கே நொங்கு விற்று கொண்டு இருந்தவர்...
"தாத்தா வீட்டுக்கு வந்தீயா..? நீ வருவேன்னு சொன்னாரு, "
என்று சொல்லி அவரின் 12 வயது மகளை
"இவனை நேரா தாத்தா வீட்டுக்கு கூட்டினு போ!! "
என்று அனுப்பி வைக்க. அவளும் லாவகமாக மூன்று கண்ணு வைத்த இரண்டு நொங்குகளான வண்டியை ஒரு குச்சியை வைத்து தள்ளி கொண்டே ஓட நான் பையை சுமந்து கொண்டே துரத்தினேன்.
தாத்தா வீட்டில் என் வயது ஒத்தோர் யாரும் இல்லை, அடுத்த ஒரு வாரம் காலை முதல் மாலை வரை இவள் தான் என் கம்பெனி என்று அறியாமலே.
"எப்பவும் சுத்தி முத்தி பாத்து நட, இங்கே நாகம் அதிகம்"
என்று அந்த நடை பாதை அருகில் இருந்து முட்செடியில் இருந்த ஒரு பாம்பு சட்டையை குச்சியை வைத்து தூக்கி பிடித்தாள்
அலறினேன்.
"பயந்துட்டியா, இது தண்ணி பாம்பு, கடிச்சாலும் ஒன்னும் ஆகாது"
"நாக பாம்பு இங்கே இருக்கா!!!?"
"இருக்கு, ஆனா அது நம்மை பார்த்தா பயந்து ஓடிடும்"
சற்றே ஆறுதல்.
பஸ்ஸில் இருந்து இறங்கும் போதே மாலை வேலை, சில நிமிடங்களிள் வீட்டை அடைய அங்கே இருந்த மல்லி தோட்டத்தில் பல பெண்கள் பூ பறித்து கொண்டு இருந்தார்கள். பாட்டியின் அருமையான விரால் குழம்பை ருசித்து கொட்டாவி விடும் போது...
"நாளைக்கு வரேன், குளம், கடலுக்கு போவலாம் "
கிளம்பினாள்.
பாம்பு சட்டை நினைவில் வர உறங்க சென்றேன்.
காதில் என்னமோ அதுவரை நான் அறியாதா ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சத்தம் வேறு.
அடுத்த நாள்..
காலையிலே நொங்கு விற்பவரும் அவளும் வர,
தாத்தா...
"நீ இவங்களோட போய் நொங்கு சாப்பிட்டு வா, கொஞ்ச நேரத்துல மாட்டு வண்டி அனுப்பி வைக்கிறேன். அதுல நீங்க ரெண்டு பெரும் கடல் வரை போயிட்டு வாங்க"
நொங்கு மரத்தை நோக்கி சென்றோம்.
"இது என்ன தனி மரமா இருக்கு?"
"இது ரொம்ப பழைய மரம், இதுல காய் இருக்காது,, நம்ம பனம்தோப்புக்கு போறோம்"
என்று நான் சைக்கிளின் முன்னால் அமர, அவள் பின்னல் அமர, ட்ரிப்ல்ஸ்.
ஒத்தையடி பாதையில் இருபுறமும் அருமையான மரங்கள். பச்சை பசேலென்று, என்னமோ வாலாற்று வாத்தியார் சொல்லி கொடுத்த.
"அசோகர் சாலையின் இருபுறமும் மரம் நட்டார் " என்பது நினைவிற்கு வந்தது.
ஒத்தை மரத்தை தாண்டி ஒரு சிறிய திராட்சை தோப்பு.
"திராட்சை பழம் காய்ச்சி இருக்கா?"
"இப்ப தான் பூத்து இருக்கு., இன்னும் நாளாகும்"
சைக்கிள் தோப்பை நோக்கி ஓடியது..
சாலையின் இருபுறமும் சீராக அமைக்க பட்ட காய் கறி தோட்டம்.
"இதுல என்ன வளருது?"
"தக்காளி, கீரை , வெள்ளரி பிஞ்சி கூட இருக்கும். அப்புறமா பிடிங்கி தரேன்"
கண்ணுக்கு எட்டியவரை பச்சை பசேலென்று காட்சி.. அடுத்த சில நிமிடங்களில், பெரிய குளம்..
"நீ நேத்து சாப்பிட்டியே விரால் மீன், இங்கே இருந்து தான் பிடிச்சாங்க", நாளைக்கு தூண்டில் எடுத்துன்னு வாறன், நம்ம பிடிக்கலாம்"
அழகான குளம், சுற்றிலும் புத்தர் மற்றும் செடி கொடிகள்.
பனந்தோப்பை அடைய அங்கே சிலர் மரத்தில் ஏறி கொண்டு இறங்கி கொண்டும் இருக்க..
"பேராண்டியா.. வா.. வா.. வருவேன்னு தாத்தா சொன்னார்..."
அசால்ட்டாக ஒரு நொங்கை வெட்டி இந்தா சாப்பிடு "
என்றார் இன்னொரு பெரியவர்..
அவ எங்க? என்று கண்கள் தேட, புதிதாக ஒரு நொங்கு வண்டியை ஒட்டி கொண்டு இருந்தாள்.
"இங்கே வா, என்று அழைத்து இன்னொரு நொங்கை அவளுக்கு தர, இடது கையில் அந்த நொங்கை பிடித்து வலது கட்டை விரலை அந்த நொங்கில் விட்டு..
ஸ்ரர்ப்...என்ற சப்தம் மூன்று முறை கேட்டது, மூன்றே நொடியில் நொங்கு ஸ்வாஹா...
பத்து நிமிடமாக நொங்கை கையில் வைத்து கொண்டு எப்படி சாப்பிடுவது என்று நோண்டி கொண்டு இருந்தவனை பார்த்து..
"இப்படி தான் சாப்பிடணும் "
இடது புறத்து புதரில் சலசல வென்று சப்தம் கேட்க,
"அது என்ன சப்தம்!!!?"
என்று பயத்தை கொண்டு வினவ..
"முசலு, தாத்தாகிட்ட சொல்லு, முசலு வறுவல் உங்க பாட்டி ரொம்ப நல்லா செய்வாங்க... "
முயல்கள் எங்களை கண்டு ஓடியது.
இடது புறத்தில் பல பானைகள் அடுக்கி கிடைக்க...
"அது உனக்கு இல்ல, சுண்ணாம்பு போட்டாங்களானு தெரியாது..."
என்றாள். விழித்தேன்..!
மாட்டு வண்டி வந்தது.
"எங்கே போறோம்?"
"கடலுக்கு, அங்கே மீன் வாங்கணும்...."
"நேத்து ராத்திரி தூங்கும் போது ஒரே ஸ்ஸ்ஸ்ஸ் உஸ்ஸ்ஸ்ஸ்ணு சத்தம்...என்னமோ ஒரு பாம்பே பக்கத்துல படுத்துன்னு இருக்க மாதிரி.."
'நீ இதுவரை கடலை பார்த்தது இல்ல!!? "
"இல்லை"
என்று சொல்லும் போதே அந்த ஸ்ஸ்ஸ் என்ற சப்தம் மிகவும் அருகில் கேட்க,
எதிரில் வங்காள விரிகுடா .....
அடேங்கப்பா... வானமே தரையில் இறங்கியது போல் காட்சி. ஸ்ஸ்ஸ் என்ற சப்தத்தோடு அலைகள் ஒன்றை ஒன்று துரத்தி கொண்டு ஓட...
'பேராண்டியா, தாத்தா வருவேன்னு சொன்னார்"
ஒரு கூடை முழுக்க மீன் நண்டு இறால் என்று அவர் கொடுக்க...
கடலை விட்டு பிரிய மனமில்லாமல் மீண்டும் மாட்டு வண்டி.
என்ன ஒரு காட்சி, என்ன ஒரு அன்பு,
வியந்தேன்.
இளையவளோடு இன்று கோல்ப் விளையாட வந்தேன்.வருடங்கள் பல கழிந்து இருந்தாலும் இன்று என்னோமோ எருக்கஞ்சேரி நினைப்பு வந்தது.
பனை மரம், திராட்சை தோட்டம், குளம், காடு, கடல்.. அனைத்தும் எதிரில் வந்தாலும், எதோ ஒன்று மிஸ்ஸிங்..
மனம் இளவயது நினைவுகளை நினைத்து, தென்றலாய் வருடியது...!
பதிலளிநீக்குஎனக்கென்னமோ பதிவில் உள்ள படங்கள், எருக்கஞ்சேரி தரங்கம்பாடிக்கு அருகில் எடுத்த அழகான படங்களாகவே தெரிகிறது...! இது எனக்கு மட்டும் தானா...?
பதிலளிநீக்கு"பேராண்டியா? வா... நீ வருவேன்னு தாத்தா சொன்னார்.."
பதிலளிநீக்குஇந்த வரிக்குப் பின்னால் எவ்வளவு விஷயம் மறைந்திருக்கிறது...