புதன், 12 ஆகஸ்ட், 2020

என் புருஷன் தான்...

வெளிநாட்டில் வசித்து வருவதால் இந்தியாவில் குடும்பத்திலும் மற்றும் நட்ப்புகள் மத்தியில் நடைபெறும் விசேஷங்களுக்கும் துக்கங்களுக்கும் போக முடியாதது பெரிய வருத்தமே.

திருமணம் - பிள்ளை வரவு போன்ற நற்காரியங்களை தொலை பேசியில் மகிழ்ச்சியாக கொண்டாடினாலும், மரணம் போன்ற துக்கமான காரியங்களை தொலை பேசியில் பேசி ஆறுதல் தர முடியாத கையாலாகாத நிலைமையை நினைத்து அடிக்கடி நொந்து கொள்வேன்.

கிட்ட தட்ட முப்பது வருடங்கள் இப்படி போனாலும் எனக்கு நானே ஒரு சட்டம் எழுதி வைத்து கொண்டுள்ளேன்.

எப்போது இந்தியா சென்றாலும் முதல் வேலையாக சமீபத்தில் இறந்தோர் கல்லறைக்கு சென்று ஒரு மலர் வளையம் வைத்து விட்டு தான் மற்ற வேலை பார்ப்பேன். 

அதில் தான் என்ன ஒரு திருப்தி.

 வருடங்கள் கழித்து குடும்பத்தில் ஒருவரை இழந்தவர் இல்லத்திற்கு செல்கையில் கண்ணில் முதலில் தென்படுவது சுவற்றில் இருக்கும் அவரின் படம் தான். 

அவர் தவறிய பின்பு அந்த குடும்பம் முதல் முறையாக நம்மை பார்க்க நேரிடும் போது, அந்த தருணம் அழுகை கண்ணீராக மாறிவிடும். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி வருகையில், ஒவ்வொரு முறையும்,

"நீ கொஞ்சம் பிரீயா  இருந்தா... வாயேன், கல்லறை வரை போய் வரலாம் "

என்று ஆவலோடு அவர்கள் கேட்க்கையில்...

"ஐயோ.. நீங்க எல்லாம் எப்படி எந்த நிலைமையில் இருக்கீங்கன்னு தெரியாது. அதனால நான் ஊர் வந்தவுடன் நேரா அவங்க கல்லறைக்கு போய்ட்டுதான் வந்தேன்"

ஒவ்வொரு முறையும் இந்த பதிலை தரும் போது அவர்களின் முகத்தில் வரும்  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அந்த சோகமான தருணம் உடனே ஒரு மனநிம்மதியான தருணமாகிவிடும்.  

"அவரு கூட அப்படி தாங்க.. நல்ல காரியம் போறோமே இல்லையே.. துக்க நிகழ்ச்சிக்கு முதலில் போய் ஆறுதல் சொல்லணும்னு தலை கீழ நிப்பாரு."

இன்னும் சிலர் உறவினர்களை அழைத்து, தங்கள் சோகத்தையெல்லாம் மறந்து...

"இவரை பாரு.. வந்தவுடன் முதல் வேலையா கல்லறைக்கு போயிட்டு மாலை மரியாதை செஞ்சிட்டு தான் வந்து இருக்கார். இப்படி செய்யனும்னா.. அவங்களுக்குள்ள என்ன அன்பு, பாசம், நட்ப்புன்னு", 

பிரிந்தோரின் நற்குணத்தை சொல்லி சிரிக்கையில், என்னை அறியாமலே ஒரு திருப்தி"

இவர்களுக்கு நான் சொல்லும் ஒரே பதில்..

"அவர் இருந்து இருந்தா இதை தான் செஞ்சி இருப்பார். அவருட்ட இருந்து கத்துக்குனது தான் இது"

குடும்பத்தோடு ஊருக்கு செல்லும் போது கூட பிள்ளைகளை கையோடுஅழைத்து கொண்டு அவர்களுக்கும் இந்த காரியத்தை சொல்லி கொடுத்துள்ளேன். அவர்களும் கூட, நல்ல காரியங்களை தவிர்க்க நேர்ந்தாலும் துக்க நிகழ்ச்சிகளுக்கு கண்டிப்பாக கூட இருக்க வேண்டும் என்று உணர்ந்துள்ளார்கள் என்று தான் நம்புகிறேன்.

சரி, தலைப்பிற்கு வருவோம்.

சென்ற டிசம்பர் இந்தியா வருகையில், 55 வயதில் புற்று நோயினால் பாதிக்க பட்டு இறந்த நண்பர் ஒருவனின் கல்லறைக்கு சென்றேன். அவன் ஒரு கைதேர்ந்த மருத்துவன். படிக்கும் காலத்திலும் சரி, மருத்துவராக பணிபுரியும் போதும் சரி, அவ்வளவு புத்திசாலி. மிகவும் நல்ல மனது படைத்தவன். அவன் திருமணம் செய்தது கூட என் தோழியையே.  அப்படி என்ன தான் அவன் படிப்பு வேலையில் சமத்தாக   இருந்தாலும் அவனிடம் எனக்கு அதிகம் பிடித்ததே அவன் ஜோக்ஸ் சொல்லும் விதம்.

ஒரு சாதாரண விஷயத்தை கூட அவன் சொல்லுகையில் அனைவரையும் குலுங்கி குலுங்கி சிரிக்க மட்டும் வைக்காமல் ஏதாவது ஒரு கேள்வியை கேட்டு குழப்பி விடுவான்.

கல்லறைக்கு சென்று அங்கே பணி புரிந்தோரிடம் பெயர் சொல்லி கேட்க இடத்தை காட்டினார்கள். அறியா சோகம் தொற்றிக்கொண்டது. அவனை முதல் முதலாக சந்தித்ததில் இருந்து கடைசி முறை விடை பெற்றது வரை நினைவுக்கு வந்தது. 

என்னமா ஜோக் அடிப்பான்.. என்னமா சிரிக்க வைப்பான் என்று நினைக்கையில்.. 

அவன் கல்லறைக்கு   அருகில் இருந்த கல்லறையில் ...


மனதில்..

அட பாவி.. கல்லறையில் இருக்கும் அவனை பார்க்க வரும்போது கூட மறக்காமல் என்னை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்து குழப்பி விட்டானே!

"MY HUSBAND WAS ONE OF PRECIOUS BELOVED HUSBAND OF MRS. NAYANA"

"என் கணவர் திருமதி நயனா அவர்களின் பிரியமான கணவர்களின் ஒருவர்"

தன்னை பார்க்க வருவோரெல்லாம் திருப்பி போகையில் இதை படித்து விட்டு ஒரு சிரிப்போடு  போவார்கள் என்று தான் என் நண்பன் அங்கே உறங்கி கொண்டு இருக்கின்றான். 

போய் வா.. நண்பா.. மீண்டும் சந்திக்கும் வரை. RIP !

பின் குறிப்பு :

இங்கே என்ன சொல்ல வருகின்றார்கள்? யாருக்காவது புரிந்தால் பின்னூட்டத்தில் மொழி பெயர்க்கவும்.  

5 கருத்துகள்:

  1. உங்களின் திருப்தியான செயலை "என்ன சொல்லி பாராட்டுவது" என்று தெரியவில்லை...

    "ONE OF" இருக்கக்கூடாதோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையாவே திருப்தி தான் தனபாலன், அவர்களின் முகத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி தான்.

      ONE OF .. இருக்கலாம் தனபால். அதுக்குன்னு கல்லறையிலா எழுதி வைப்பாங்க...

      நீக்கு
  2. நண்பரின் மறைவுக்கு மாறுதல்கள்.   என்ன சொல்ல வந்திருக்கிறார்கள் என்று புரியவில்லை.  

    பதிலளிநீக்கு
  3. உங்களின் செயலுக்கும் கருத்திற்கும் பாராட்டுகள்.

    துளசிதரன்

    விசு நல்ல கருத்து சொல்லியிருக்கீங்க பதிவில். கல்யாண வீட்டுக்குப் போகிறோமோ இல்லையோ துக்க வீட்டுக்குப் போய் வரணும்னு சொல்வதுண்டு.

    கல்லறையில் இருப்பது நகைச்சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும்?

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அதை இரண்டு வாக்கியங்களாக இப்படித்தான் வாசிக்க வேண்டு: "என் கணவர் உலகில் தோன்றிய ஒப்பற்ற - போற்றுதலுக்குரிய மானிதர்களுள் ஒருவர்". "இங்கே உறங்குபவர் திருமதி. நயனா வின் அன்பு கணவர்.(சரியா?

    அதிலும் நீங்கள் சொல்வதுபோல் அர்த்தம் கொள்ள "one of beloved husbands என்றிருந்திருக்கவேண்டும். one of என்றால் அடுத்து pulural - பன்மை இருப்பதுதான் இலக்கணம் மறந்துவிட்டீரா?. இறந்தவர்களை குறித்து கேலி பேசுவது முறை அல்ல.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...