வியாழன், 13 ஆகஸ்ட், 2015

வாழும்மட்டும் நன்மைக்காக......



"டேய் ... பஸ்சுல ஏறும் போது கண்டக்டர் என்ன வயசுன்னு கேட்டா என்ன சொல்லணும்!!?"

"13....அப்பா"

"முட்டா பயலுக்கு பிறந்தவனே...  நான் என்ன சொல்லி கொடுத்தேன்..?""


"11...ப்பா"

"மறந்துடாத..!!

"சரி.. இப்ப நான் தான் கண்டக்டர் .. நீ பஸுல ஏற போற.."

"தம்பி, உனக்கு என்ன வயசு...?"

13 சார்..


"அட பாவி.. 11ன்னு சொல்லுன்னு எத்தனை தரவை சொல்றது...மர மண்டை.. மர மண்டை...!!!"



"திரும்பவும் சொல்லு .. உனக்கு எத்தனை வயசு...!!?"

"11.. .."


சரி..! ஜாக்கிரதையா இரு... நீ மட்டும் சரியா சொன்ன .. ராணிபேட்டையில்  பஸ் நிக்கும் போது உனக்கு பால்கோவா வாங்கி தரேன்..சரியா..!!?"

"ஐ பால்கோவா..!!"

வேலூரில் இருந்து சென்னை போகும் பஸ்சில் 13 வயதாகிய தன் மகனுக்கு 11 என்று பொய் சொல்ல சொல்லி கொடுத்து கொண்டு இருந்தார் ஒரு தகப்பனார் .

அந்த சிறுவனுக்கு அப்பா ஏன் தன்னை பொய் சொல் சொல்கின்றார் என்று புரியவில்லை. 12 வயது வரை அரை டிக்கட் அதற்கும் மேல் முழு டிக்கட் என்று அவனுக்கு எடுத்து சொல்ல அந்த தகப்பனுக்கும் நேரம் இல்லை.

வண்டியும் வந்தது, வண்டியில் ஏற போன சிறுவன் மனதில் .. பதினொன்னு.. பதினொன்னு.. என்று சொல்லி கொண்டே படி அருகில் சென்றான். கண்டக்டர் அவன் அருகில் வந்து ...

"தம்பி, இந்த படிக்கட்டு கிட்ட ஒரு அளவு கோல் இருக்கு, அங்கே கொஞ்சம் நில்."

"சரி சார்...!!"

"நீ, அந்த 12 வயது பிள்ளைகளுக்குக்கான கோட்டை  விட உயரமாய் இருக்க ..  உனக்கு முழு டிக்கட்..."

அப்போது தான் அவனுக்கு புரிந்தது .. டிக்கட் கட்டிணத்தை பாதியாக்க தன் தகப்பன் தன்னை பொய் சொல்ல சொல்கிறார் என்று..

தகப்பனோ, கண்டக்டரிடம் .. சார்..

"நான் ஆறு அடி.. என் மனைவியும் நல்ல உயரம்..அதனால் தான் பையன் நல்ல உயரம்.. அவனுக்கு..."

"ஒரு நிமிஷம் சார்.. நான் பையனிடம் பேசி கொள்கிறேன்.. நீங்க அமைதி.."

"தம்பி .. உன் பெயர் என்ன?"

"சந்திரன்.."

"உன் வயசு என்ன !!!?"

"11.."

"எங்க ..? விரல் விட்டு கூட்டாம சொல்லு... 8 + 7 எவ்வளவு!?"

"15 சார்..!"

"பரவாயில தம்பி! நீ உண்மையாவே கெட்டிகாரன் ..ஒரு நாலாவது வகுப்பு பையன் இவ்வளவு சீக்கிரமா இந்த பதில சொல்லுவேன்னு நான் எதிர் பார்க்கவில்லை!"

"சார்.. நான் நாலாம்ப்பு இல்ல.. ஏழாம்ப்பூ.."

"அப்படியா தம்பி...ரொம்ப சந்தோசம்.. நீ போய் உள்ள உக்காரு...!"

அந்த சிறுவன் அங்கு இருந்து நகர்ந்தவுடன்...

"ஏன் சார்? ஒரு அரை டிக்கட்டுக்காக சின்ன பிள்ளைக்கு பொய் சொல்ல சொல்லி கொடுக்குரிங்களே.."

"மன்னிக்கணும்.. பிள்ளை குட்டிக்காரன்.. தவறாகிவிட்டது.."

"இந்த முறை  கொடுக்குறேன், அடுத்த முறை இந்த மாதிரி பண்ணாதீங்க.."

"நன்றி..."

வண்டி ஓட ஆரம்பித்தது.. அந்த சிறுவனுக்கோ..

அப்பா சொல்லி கொடுத்தை போல் "பதினொன்று" என்று சரியாக சொன்னேனே .. ராணிபேட்டையில் பால் கோவா கிடைக்கும் என்ற ஒரே எண்ணம். தான் ஏழாவது படிக்கின்றோம் என்று சொன்னதில் தான் சொன்ன வயது "உண்மை" தெரியவந்தது கூட அவனுக்கு புரியவில்லை.

"அப்பா... ராணிபேட்டையில் பஸ் எவ்வளவு நேரம் நிற்கும் ?"

"அதுக்கு என்ன இப்ப?"

"இல்ல.. சும்மா கேட்டேன்..."

"அமைதியா வா..!"

சிறுவன் பொறுமை இழந்து... கண்டக்டரிடம்..

"சார் ... ராணிபேட்டையில் பஸ் எவ்வளவு நேரம் நிற்கும்?"

"அஞ்சி நிமிஷம்..?"

அவன் நினைவு பால்கோவாவை  நோக்கி சென்றது...




"அப்பா... நான் பதினொன்னுன்னு சரியா சொன்னேனே.. பால்கோவா வாங்கி தருவிங்க தானே.."

"டேய்.. சும்மா இருக்க மாட்ட...?"
என்று சொல்லும் போதே...ராணிபேட்டை வந்தது, சிறுவனின் கண்களோ பால்கோவாவை தேட.. சில பயணிகள் இறங்க முயல்கையில். ..டிக்கட் பரிசோதனை செய்யும் அரசு அதிகாரிகள் சிலர் படிக்கட்டை மறைத்து அனைவரின் டிக்கட்டையும் பரிசோதிக்க ஆரம்பித்தனர்..

ராணிப்பேட்டையில் இறங்குபவரின் டிக்கட்களை பரிசோதித்து விட்டு .. அவர்கள் வண்டியின் உள்ளே ஏறி.. அமர்ந்து இருக்கும் அனைவரின் டிக்கட்களை பரிசோதிக்க ...

தகப்பனின் முகம் மாறியது...

ஐயகோ.. அரை டிக்கட் தானே வாங்கினோம். இப்போது மாட்டி கொள்வோமே.. அனைவரின் எதிரேலேயும் அசிங்கம்.. ஒரு சிறிய லாபத்திற்காக தன் மகனை பொய் சொல்ல சொல்லி..

"சார் டிக்கட்..!"

"இந்தாங்க.."

பரிசோதித்துவிட்டு..

"நீங்க நல்ல மனுஷன் சார்.. பையனுக்கு முழு டிக்கட் வாங்கி இருக்கீங்க..
இந்த வயது பசங்களின் பெற்றோர்கள் எப்போதும் ஏதாவது ஒரு பொய் சொல்லி .. பசங்களையும் பொய் சொல்ல சொல்லி கொடுத்து அரை டிக்கட் வாங்க முயற்சிப்பார்கள்..."

"சார்.. நான்..!!!"

என்று அவர் வாய் திறக்க முயற்சிக்கையில்...

கண்டக்டர் .. பரிசோதகரிடம்.. சார்.. கொஞ்சம் சீக்கிரம் ப்ளீஸ்.. ரயில் கேட் .. விழ போகுது...

என்று சொல்ல .. பரிசோதகர் அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.

வண்டி மீண்டும் ஓட .. தகப்பனோ அந்த கண்டக்டரை பார்க்க..

"உங்கள் குழப்பம் எனக்கு புரியுது. உங்களிடம் அரை டிக்கட்டிற்கு தான் பணம் வாங்கினேன், ஆனால் முழு டிக்கட்டை தான் கொடுத்தேன்"

"அதுக்கு பணம்..!!?"

இது பங்களூரில் இருந்து ஆரம்பித்த பஸ்...கிருஷ்ணகிரியில் இறங்கிய ஒருத்தரிடம் சில்லறை இல்லன்னு சொன்னேன். பராவாயில்லை ... சில்லறை கிடைத்தவுடன் ஏதாவது ஒரு சின்ன புண்ணியம் பண்ணுங்கன்னு சொன்னார்.. அதை வைச்சி தான்..

"ரொம்ப நன்றி.. சார்

 என்று தன் மகனை பார்த்தவர்..

"டேய்.. ஏதுடா உனக்கு பால்கோவா?"

கண்டக்ட்டர் மாமா வாங்கி கொடுத்தார்..

"சார்...பால்கோவா...!!?"

"ஓ .. அதுவா? நான் இந்த இடத்தில தான் வளர்ந்தவன்.. வளரும் வயதில் ...இந்த பால்கோவாவிர்க்காக நான் ஏங்கிய ஏக்கம் எனக்கு தான் தெரியும். பையன் உங்களிடம் கேட்பது என் காதுக்கு எட்டுச்சி.. அதுதான்.."

"நன்றி சார்....!!!"

என்று அவர் சொல்ல...

அந்த பஸ்சின் ஒழி பெருக்கியில் SPB  " வாழும்மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா " என்று "கண்ணதாசன்-இளையராஜா" அவர்களின் உதவியோடு பாடி கொண்டு இருந்தார்.


பின்குறிப்பு;

என்னமோ... மனதில் ஒரு சிறு கதை எழுத வேண்டும்ன்னு தோன்றியது... ஏழைக்கு   ஏத்த எள்ளுருண்டை போல் ஒன்னு பிடிச்சு வைச்சேன். நிறை எதுவும் இருக்காது... குறை தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்..





13 கருத்துகள்:

  1. கதை அருமை...குறை சொல்ல ஒன்றுமில்லை...காரணம் இது கதைதானே நிஜம் அல்லவே.... நிஜத்தில் அப்பா எதுக்கு பொய் சொல்ல சொல்லுறான்னு இந்த கால பசங்களுக்கு நல்லாவே தெரியும். அதே நேரத்தில் இப்படி நல்ல மனசு கொண்ட கண்டெக்டர் நிஜத்தில் அதுவும் இந்த காலத்தில் இருக்க சான்ஸே இல்லை... அல்லது கதை அந்த காலத்தில் நடந்தது என்று சொல்லி இருந்தால் கொஞ்சமாவது நம்பி இருப்போம்...



    சரி ஒரு குறையை கண்டுபிடித்துவிட்டேன் இப்படி பால்கோவை பற்றி சொல்லி ஆசையை தூண்டிவிட்டீர்கள் அது மிகப் பெரிய குற்றமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தமிழா.. பால்கோவாவை நினைவு படுத்தியதற்கு மன்னிக்கவும். கதை அந்த காலத்து கதை தான்.. அதனால் தான் 80 போல் வந்த காளி படத்தின் பாடலோடு முடித்தேன் .

      நீக்கு
    2. என்னடா காளி படப்பாடல் என்று சொல்லுறீங்களே அப்படி ஏதும் சாமி பாடல் பதிவில் இல்லையே என்று நினைத்து ஒரு யூடர்ன் அடித்து மீண்டும் படித்து பார்த்தேன் அப்போதுதான் புரிந்தது ஒல்ட்மேன் ரஜினி படப்பாடல் என்று...ஹும்ம்ம்ம்ம்ம் என்ன மாதிரி யூத் கிட்டே 80 பாடலை சொன்ன எப்படி புரியும்

      நீக்கு
    3. சரி, வேண்டும் என்றால் " உன் பணம் பணம் என் பணம் பணம் .. என் பணம் உன் பணம் " போட்டுடலாமா.. ?

      நீக்கு
  2. உண்மையிலேயே அருமையான சிறுகதை நண்பரே
    சிறுவர்களிடம் இதுபோல் நடந்து கொள்ளும் தந்தையர்கள் நிறையபேர் இருக்கத்தான் செய்கிறார்கள்
    இது போன்ற நடத்துனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கரந்தை அவர்களே.. ஏதோ மனதில் ஒரு சிறு கதை எழுதவேண்டும் என்று தோன்றியது. எழுதினேன். தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி..

      நீக்கு
  3. sirukathaiyaa!!!
    nan etho unmai sampavam pola padiththu vanthen!!!
    kadaisiyilthaan therinthathu!
    nallaa ezuthi irukkuringa sir!
    Bus Conductor character arumai.
    thodarnthu ithu pondra sirukathaikal padaikkaa vaztthukkal!


    பதிலளிநீக்கு
  4. கதை பிரமாதம்.. நிறைய எழுத வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. மிகவும் சிறப்பாக எழுதுகிறீர்கள்! சுவாரஸ்யத்துடன் உங்கள் நடை பிரமாதமாக இருக்கிறது! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  6. நல்ல கதை. இது போன்று ஒரு கண்டக்டரும், சில்லறை இல்லை என்றவுடன், பரவாயில்லை, அதை வைத்து ஏதாவது ஒரு சின்ன புண்ணியம் செய்யுங்கள் என்று கூறும் பயணியும் எத்தனை அபூர்வம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    அறிவை விதைக்கும் கதை நன்றாக உள்ளது படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. நிறையவே நிறை இருந்தது. ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. கதை அருமை நண்பரே! சூப்பர்...அந்தக் காலத்தில் நடப்பதை ...அருமை...இப்போது கூட கிராமங்களில் நடக்கத்தான் செய்கின்றது..ஆனா கண்டக்டர் பால்கோவா எல்லாம் வாங்கிக் கொடுக்கறது இல்லை....பரிசோதகரிடம் இருந்து தப்பிக்க வைப்பதும் இல்லை...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...