Tuesday, August 25, 2015

யார் இந்த "மதன் கார்க்கி"...

ஆகஸ்ட் 25ம் தேதி இன்று. இந்த வருடத்தின் இன்னொரு முக்கியமான நாள். இரண்டு ராசாதிக்களுக்கும் இன்னொரு வருட பள்ளி ஆரம்ப நாள். காலையில் சீக்கிரமாக எழுந்து அடித்து பிடித்து இருவரையும் பள்ளிகூடத்திற்கு அனுப்ப வண்டியில் ஏறி போய் கொண்டு இருக்கையில், இருவர் கையிலேயும் ஒரு விண்ணப்பம்.. அதில் நீ வளர்ந்தவுடன் என்ன துறையில் வேலை செய்ய ஆசை படுகின்றாய்.

மூத்தவள் அதற்கு "தணிக்கையாளர் துறை" என்று எழுத இளையவளோ "மருத்துவ துறை " என்று எழுதி இருந்தாள்.


இருவரையும் அவரவர் பள்ளியில் இறக்கி விட்டு வண்டியை என் அலுவலகத்தை நோக்கி விடுகையில் .. மனமோ பிள்ளைகளின் எதிர் காலத்தை நோக்கி சென்றது.

மூத்தவள் நான் செய்யும் துறையையும் இளையவளோ தன் தாயாரின் துறையையும் தேர்ந்து எடுத்து இருகின்றார்கள். பிறந்ததில் இருந்தே தன் தகப்பனையும் தாயையும் பார்த்து அவர்கள் செயல்களையும் வாழும் முறையையும் "அலுவலகம் மற்றும் மருத்துவமனையையும்" பார்த்து  தங்கள் துறையை தேர்ந்து எடுத்து இருகின்றார்கள்.

அப்போது மனதில், இந்த மாதிரியான வாரிசுகள்  தம் பெற்றோர் துறையில் வெற்றி பெறமுடியுமா என்ற கேள்வி வந்தது. நான் கண்ட கேட்ட சில நபர்களின் பெயர்கள் நினைவிற்கு வந்தது.

முதலாவதாக இந்த துறைகளை பற்றி சற்று பார்ப்போம்.  நான் வளரும்  போது பொதுவாக .. "மருத்துவர் - பொறியியல் நிபுணர் - சட்ட நிபுணர் - தணிக்கையாளர்" துறை போன்ற துறையில் ஒருவரின் வாரிசு வர வேண்டும் என்றால் அதற்கு படிக்க வேண்டும் ( இந்த காலத்தில் தணிக்கையாளர் துறையை தவிர மற்ற துறைகளில் தேர்ச்சி பெறுவது மிக எளிது, தெருவிற்கு ஒரு கல்லூரி வேற), அதனால் இதில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

விளையாட்டு துறைக்கு வருவோம் .இந்த துறையில் வாரிசுகள் நுழைவது  மிகவும் சுலபம். உதாரணமாக ..மஞ்ச்ரேகர் - கவாஸ்கர்-லால அமர்நாத் - ஸ்ரீகாந்த் - பின்னி -ஷிவலால் யாதவ் போன்றவர்களின் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களின் பெயரினால் உள்ளே நுழைந்தாலும் அமர்நாத் மற்றும் மஞ்ச்ரேகர் (ஓரளவு வெற்றி) பெற்றார்கள் .மற்றவர்களின் பிள்ளைகள் எல்லாரும் தன் தகப்பனின் பெயரினால் உள்ளே நுழைந்தாலும் திறமை இல்லாத காரணத்தினால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதில் இன்னொரு அநியாயம் என்னவென்றால் கவாஸ்கர் -ஸ்ரீகாந்த்-சிவ்லால்-பின்னி அவர்களின் வாரிசுகள் வேறு யாருடைய பிள்ளைகளாக இருந்து இருந்தாலும் ஒரு மாவட்ட அணிக்கு கூட விளையாடி இருக்க முடியாது. இவர்களின் திறன் இப்படி.

அடுத்தது சினிமா துறைக்கு வருவோம். இது ஒரு சாபக்கேடு என்று தான் சொல்லவேண்டும். இது இந்தி துறையில் கபூர் குடும்பம் ஆரம்பித்து வைத்தது. தகப்பன் வெற்றி பெற்றவுடன் தன் தன் பிள்ளைகளை அந்த துறையில் தள்ளிவிட ஆரம்பித்தான்.

தமிழில் இது சிவாஜி-பிரபு மூலம் ஆரம்பித்தது என்று நினைக்கின்றேன். சங்கிலி என்ற படத்தில் பிரபுவை பார்த்தவுடன், இவருக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு "சிவாஜியின் மகன்"  என்ற ஒரே  ஒரு தகுதி தான் என்று என்ன தோன்றியது.
இது "சிவாஜி - பிரபு-விக்ரம்" என்று ஆரம்பித்து இப்போது .. "முத்துராமன் -கார்த்திக் -கௌதம் " என்று போய் கொண்டு இருகின்றது. இந்த துறையில் தகப்பன் பெயரில் நுழைவது மிகவும் எளிது. இதற்கு கடின உழைப்பு என்று எதுவும் அவசியம் இல்லை. நேரம் உங்கள் பக்கம்.

 இங்கே ஒரு காரியத்தை சொல்லியாகவே வேண்டும். இன்றைய முன்னணி நடிகர் விஜயின் முதல் படமான " நாளைய தீர்ப்பு" என்ற படத்தின் விமர்சனத்தில் , குமுதம் (குமுதம்  என்று தான் நினைக்கின்றேன்.. வருடங்கள் பல ஆகியதால் நினைவு தடுமாறுகின்றது).

" ஹீரோ விஜய்.. இதையெல்லாம் ஒரு முகம் என்று கதாநாயகனாக பார்க்க வேண்டும் என்பது நம்ப தலை எழுத்து, ஒரு இயக்குனரின் மகன் எற்ற தகுதியை தவிர இவருக்கு கதாநாயகனாக நடிக்க எந்த தகுதியும் இல்லை" என்று எழுதி இருந்தது.

நான் ஏற்கனவே சொல்லிட்டது போலஇந்த துறையில் நேரம் தம் பக்கம் இருப்பதால் நடிகர் விஜயினால் அமோக வெற்றி பெற முடிந்தது. இந்த சினிமா துறையில் அனைவரின் பிள்ளைகளும் நடிக்க தான் வருகின்றார்களே தவிர.. இயக்க - ஒளிபதிவு மற்றும் அடுத்த துறையில்  நுழைய முடிவது இல்லை.

இசை துறைக்கு வருவோம். இளையராஜாவின் வாரிசுகள். இவர்கள் நன்றாக இசை கருவிகள் மீட்ட கூடியவர்கள், அது ஏன் என்றால் இளையராஜா அவர்கள் ஆயிர கணக்கில் பணத்தை செலவு செய்து இவர்களை இசை படிக்க வைத்தார்கள். என்னை பொறுத்தவரை இந்த வாரிசுகளுக்கும் இளையராஜாவின் வாரிசுகள் என்ற தகுதி தான் பெரிதும் உதவியது.

சரி தலைப்பிற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம்?

வலைத்தளத்தில் எதையோ தேடி போக எங்கேயோ போய் .. வைரமுத்து  ( கவியரசு என்ற பட்டம்  கண்ணதாசன் அவர்களுக்கு  மட்டுமே, அதுக்கு மேல் பேரு .. ஊரு.. நாடு.. உலகம் என்று என்ன போட்டு கொண்டாலும் அது சகிக்க முடியாத விஷயம்) அவர்கள் தன் வாரிசான மதன் கார்க்கி தான் "தமிழுக்கு வாரிசு" என்பதை போல் பேசுவதை கண்டேன்.

தந்தையா ... திறமையா ? அல்ல இரண்டும் சேர்ந்த கலவையா ?

சரி யார் இந்த மதன் கார்கி என்று அறிய முற்பட்டு.. தேடுகையில் .. அடேங்கப்பா..இவரின் முதல் பாடலே .. எந்திரன் படத்தில் ரஜினி அவர்களுக்காக எழுதிய பாடல் என்று அறிந்தேன்.  இது எப்படி சாத்தியமாகும். வைரமுத்து என்பவற்றின் மகனாக பிறந்ததினால் தானே.  

ஏற்கனவே நான் அதிக இடத்தில் எழுதியதை போல் படையப்பாவிற்கு பிறகு படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன் (நடுவில் ஒரு இரண்டு அல்லது மூன்று படங்கள் பார்த்து இருப்பேன், சிங்கம் உட்பட).

கவிதை என்பது ஒரு படைப்பு.அது ஆண்டவனால் கிடைக்கும் வரபிரசாதம். இந்த வரபிரசாதம் மதன் கார்கியிடம் இருகின்றதா அல்ல இவர் வைரமுத்துவின் மகன் என்ற ஒரே காரணத்தினால் முன்னணியில் இருகின்றாரா?

மதன் கார்க்கியிடம் இருப்பது திறமையா ? தந்தையா? அறிந்தவர்கள் தயவு பண்ணி பின்னூட்டத்தில் (பின்னோட்டத்தில்) எழுதவும்.

www.visuawesome.com

15 comments:

 1. விசு அவர்களுக்கு,

  திரு.மதன் கார்க்கி அவர்களுக்கு சினிமாவில் பாட்டு எழுத வாய்ப்புக் கிடைக்க காரணம் அவர் திரு.வைரமுத்து அவர்களின் மகன் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது எனது கருத்து. மதன் கார்க்கி அவர்கள் கணினி துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறந்த தமிழ் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பாடல்களை எழுதுகிறார். அதற்க்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார். அண்ணா பல்கலைகழகத்தில் துணை பேராசிரியராகவும் இருக்கிறார்.

  இன்னாரது மகன் என்பாதால் கிடைத்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி தன் முயற்சியாலும் உழைப்பாலும் முன்னேறிக் கொண்டிருப்பவர்களில் (நடிப்புத்துறை தவிர்த்து) மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, யுவன் போன்ற சிலர் என்பது எனது கருத்து.

  More details @ https://en.wikipedia.org/wiki/Madhan_Karky

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி.

   //வைரமுத்து அவர்களின் மகன் "என்பதும்" ஒரு காரணமாக இருக்கலாம் //

   என்று எழுத்து உள்ளீர்கள். எனக்கு என்னவோ "என்பதே" ஒரு காரணம் என்று தோன்றுகின்றது. உங்கள் எண்ணத்தில் கார்க்கி அவர்களிடம் இருப்பது "திறமையே" என்று தெரிகின்றது.

   ஆனாலும் வைரமுத்து அவர்கள் தன பிள்ளையை " ஏதோ ஆண்டவன் தமிழுக்கு போட்ட பிச்சை " என்பது போல் கூறுவது மற்ற வளரும் வளர்ந்த கவிஞர்களை தூற்றுவது போல் உள்ளது.

   Delete
  2. இவரின் படிப்பு மற்றும் வேலை பற்றி நானும் அறிந்தேன். அவருக்கு என் பாராட்டுகள். ஆனால், இங்கே நான் முன் வைப்பதோ.. இவர் வைரமுத்துவின் மகனாக இருந்து இராவிட்டால் சினிமாவில் இந்த சந்தர்ப்பம் கிடைத்து இருக்குமா? இவர் நுலநிததின் காரணம் திறமையா - தந்தையா? இல்லாவிடில் தந்தையின் திறமையா?

   Delete
 2. இவரைப் பொறுத்தவரை திறமையைவிட தந்தை என்பதே முன்னிற்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஐய்யா.. நானும் அப்படிதான் நினைக்கின்றேன். இவர் வைரமுத்துவின் மகனாக இருந்திராவிட்டால் இந்த வாய்ப்பு கண்டிப்பாக கிட்டி இருக்காது.

   Delete
 3. மதன் கார்க்கி வைரமுத்துவின் மகனென்று அறிவேன்! அவரது பாடல்கள் கேட்டது இல்லை! கேட்டிருந்தாலும் அவர் எழுதியது என்று உணரவில்லை! என்னைப்பொறுத்தவரை இவரும் தந்தையின் பிரபலத்தைக் கொண்டு சினிமாத் துறையில் நுழைந்துவிட்டதாகவே தோன்றுகின்றது!

  ReplyDelete
 4. பின்புலம் இருந்தால் முன்புலம் வெகு எளிது இங்கு...நண்பரே! அப்படித்தான் வாரிசுகள் இங்கு பிரபலமாகின்றார்கள்....

  கால்நடைத் துறையையும், மருத்துவத் துறையையும் உங்கள் லிஸ்டில் பாதி பகுதியாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். பாசாவது கொஞ்சம் கஷ்டம்தான்....பாசானாலும் இங்கு கால் நடைத் துறையில் பிழைப்பது கஷ்டம்

  ReplyDelete
 5. தான்தான் தமிழ் என்று வைரமுத்து சொல்வது வழக்கம்...அதே எண்ணத்தில் இதை சொல்லி இருப்பார்...பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் :)

  ReplyDelete
  Replies
  1. இவர் தான் தமிழ் என்றால்.... பார....வேண்டாம் விட்டுவிடலாம்.

   Delete
 6. சார்... முனைவர் பட்டம் பெற்று 10,000 ரூபாய்க்கு ஜல்லியடிக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவருக்கு அண்ணா பல்கலையில் வேலை கிடைத்தது, திமுக தொடர்பு. சினிமாவில், வைரமுத்தின் பெயரால், தொடர்பால் கிடைத்தது. வைரமுத்து, நான் இப்போதான் கருணானிதியிடம் பேசினேன் என்று பில்டப் கொடுத்தே தனக்கு ஒரு கூட்டத்தை உருவாக்கியிருக்கிறார். (திறமை உள்ளது மறுப்பதற்கில்லை... ஆனால், பலரிடம் கவிதைத் திறமைதான் இருக்கிறது. மற்ற திறமைகள் இல்லை). ஒரு கவிதைக்கு 50,000 ரூ சினிமாவில்தான் கிட்டும். கவிதைப் புத்தகம் போட்டு வாழ்க்கையை இழந்த எத்தனையோ இலக்கியவாதிகள் இருக்கிறார்கள்.

  விக்ரம், ரஜினிக்கு வில்லனாக நடிக்கத் தயார்..ஆனால் அடுத்த படத்தில் என் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தணும் என்று கண்டிஷன் போடுகிறார். இது, எல்லா இடத்திலும் இருக்கிறது. (கிரிக்கெட், ஐபிஎல், அரசியல், சினிமா).

  ஆனாலும் வைரமுத்து, ஓவர் பில்டப்.

  ReplyDelete
  Replies
  1. அது என்னமோ தெரியல. வைரமுத்து அவர்களை நல்ல ஒரு மனிதன் என்று இதுவரை யார் எழுதியும் நான் பார்த்தது அல்ல.

   Delete
 7. Vairamuthu used to say that he is the one feeding Tamil!, So its natural that he thinks that his son has all rights!! :-)

  ReplyDelete
  Replies
  1. நானும் எங்கேயோ படித்தேன்.. தான் தமிழுக்கு சோறு போட்டதாக இவர் சொன்னதை...

   Delete
 8. நீங்கள் சொல்வது போல் வைரமுத்து என்ற மனிதன் மேல் எனக்கு எப்போதுமே நல்ல எண்ணம் கிடையாது. ஆனால் எனக்கு தெரிந்து எந்திரன் இயக்கிய ஷங்கர் இப்படிதான் கூறினார்

  " ரோபோடிக்ஸ் பற்றி நன்கு தெரிந்த ஒரு நபரை சில தொழில் நுட்ப ரீதியாக தெரிந்து கொள்ள சில பல விஷயங்கள் எந்திரன் படம் பற்றி விவாதிக்க என்ற ரீதியில் அவர் மதன் கார்கியை அணுகினர். அப்போது ஒரு நாள் அவர் ஷங்கரிடம் சில கவிதை தொகுப்பை அனுப்பினார். அதை வைத்து தான் அவருக்கு முதல் வாய்ப்பு அமைந்தது. அப்போது அவர் வைரமுத்துவின் மகன் என்பது தெரியாது. அதனால் அவர் திறமையினால் தான் முதல் வாய்ப்பு அமைந்தது. ஆனால் மறுபடி மறுபடி வாய்புகள் கிடைபதற்கு வேண்டுமானால் வைரமுத்து வாரிசு என்பது உதவியிருக்கிறது என்பது என் கருத்து.

  நன்றி,
  ராஜன்

  ReplyDelete
  Replies
  1. வைரமுத்துவின் மகன் என்று அறியாமல் கார்க்கிக்கு ஷங்கர் வாய்ப்பு வழங்கினார் என்பது.. இறந்தபின் எழுத்தாளர் ஜெயகாந்தான் வைரமுத்துவிற்கு எழுதிய சிபாரிசு கடிதம் போல் உள்ளது. கார்க்கி அவர்களின் எழுத்துக்களை பார்த்தேன் ...படித்தேன்... இதை பார்த்து படித்து ஷங்கர் வைப்பு தந்தார் என்றால்... என்னத்த சொல்வது.. ?

   Delete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...