வியாழன், 10 டிசம்பர், 2015

முண்டாசே நான் முண்டம் தான் :(

நல்ல வேளை.. நீ இல்லை..

இருந்து இருந்தால்..

முண்டாசே என்னை முண்டம் என்றிருப்பாய் .


இன்னுயிர் தந்தென்னை ஈன்றெடுத்த இந்நாடு என்றாய்..
இமையசைத்தால்  இன்னல்கள் இது நாடில்லை சுடுகாடு.

அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்த நாடென்றாய்..
அன்னை என்று அர்த்தமின்றி சென்னையை இழந்தோம் இன்று நாங்கள்.

கன்னியராகி நிலாவிலாடி களித்ததும் இந்நாடென்றாய்
கண்ணியம் அன்றி கன்னியும்  இன்று தண்ணி அடித்து.. என்னத்த சொல்வேன்..

பொன்னுடல் இன்புற நீர்விளையாடி இல் போந்ததும் இந்நாடென்றாய்
 நீர் வெள்ளமாகி இல் போந்து பொன்னுடலும் பிணமாய் போனதே.

வெள்ளி பனிமலையின் மீதுலாவுவோம் என்றாய்.
வெள்ள சாக்கடையில் அல்லவா மிதக்கின்றோம்.

அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்றாய்
அடி மேல் அடி பட்டு காகித கப்பல் ஆனோம் ஐயா!

பள்ளி தளம் அனைத்தும் கோவில் செய்குவோம் என்றாய்
பள்ளி கோயில் நடுவிலும்டாஸ்மாக் வைத்தோம்.

// காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி என
மேவிய யாறு பலவோடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு...//

மன்னிக்கவேண்டும் முண்டாசு...

"நலங்கெடப் புழுதியில் நல்லதோர் வீணையை வீசிவிட்டோம் ...."

நல்லவேளை நீ இங்கில்லை.. இருந்திருந்தால்..
பாரதி யார் ? என்றும் கேட்டு இருப்போம்...
உன் பிறந்த நாளை கொண்டாடும் மனநிலை இப்போது இல்லை..மன்னிக்கவும் ..


2 கருத்துகள்:

  1. அருமை விசு அருமை! முண்டாசுக் கவிஞன் ஒரு பித்தன்...பைத்தியம் அதனால் அவன் ஏதோ தன்னுலகில் பாடித்திரிந்தான். அவன் கண்டானா அவன் இறுதிநாட்களில் வாழ்ந்த இந்தச் சென்னை இப்படி உருக்குலையும் என்று....அரசு அலுவலகங்களில் அவன் புகைப்படமாய் சுவரில் தன் மீசையை முறுக்கிக் கொண்டு கோபக் கண்களோடு பார்த்துக் கொண்டிருக்கின்றான்...என்ன செய்ய அவனும் கேட்கத்தான் செய்கின்றான் வருடத்திற்கு இரு முறை மட்டும் எனக்கு மாலை அணிவித்துப் போட்டிகள் வைத்துப் பாடிவிட்டு, அப்புறம் நீ யார் என்று கேட்கின்றீர்களே என்று...இந்த வருடம் அதுவும் இல்லை...

    என்னது தென்பெண்ணை? பாலாறு? பாலாற்றிற்குப் "பால்" ஊற்றிப் பலவருடங்கள் ஆயிற்றே.....இவை எல்லாம் எப்போதோ வரைபடத்தில் பார்த்ததுண்டு..நீங்களும் தான் இல்லையா..

    நல்லதோர் வீணை.....வேண்டாம்....வேண்டாம்..ஹும் அது குப்பைக் கிடங்கிற்குள் நாறிக்கொண்டிருக்கின்றது...

    பதிலளிநீக்கு
  2. அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்த நாடென்றாய்..
    அன்னை என்று அர்த்தமின்றி சென்னையை இழந்தோம் இன்று நாங்கள்.///
    ஆஹா விசு மழை தந்த வரங்களில் உங்களில் எழுத்தும் ஒன்று...
    அருவியாய் கொட்டுகிறது வார்த்தைகள்...மழையைத்தான் விட்டு விட்டு பிழை செய்தோம்...
    உங்கள் வரிகளைத்தொலைக்க மாட்டோம்... இன்னும் எழுதுங்கள்....

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...