Sunday, December 27, 2015

நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால், நினைத்தாலே இனிக்கும்!

இப்போது தான் ஆரம்பித்தது போல் இருந்தது, கண் மூடி திறப்பதற்கு முன் இந்த வருடம் முடிந்து விட்டது. எல்லா வருடங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இந்த வருடம் சில விஷயங்களில் ஒரு தனி தன்மை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும்.


இந்த வருடத்தில் .. ஆண்டவனின் அருளால் அடியேன் ஐம்பதை கடந்தேன். இது ஒரு விஷயமா?
கண்டிப்பாக.. என்னை பொறுத்தவரை நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நமக்கு அந்த இறைவனால் கொடுக்கபட்ட அருள். இந்த நாட்களில் வாழ்க்கையை ருசித்து வாழ்வது நம் கையில் தான் உள்ளது. அந்த முறையில் பார்த்தால் ஐம்பது ஒரு பெரிய காரியமே.

அடுத்து..
ஆலை இல்லாத ஊரில் இலுப்ப பூ சக்கரை கதையாக, என் வாழ்வின் நிகழ்ச்சிகளை பதிவாக எழுதி கொண்டு இருந்த நான், சக பதிவர்களின் உந்துதலால் ஒரு "விசுவாசமின் சகவாசம் -புத்தக ஆசிரியர்" ஆனேன். இது ஒரு விஷயமா என்று சிலர் கேட்கலாம். கண்டிப்பாக.

புத்தகம் வெளியீடு என்பதை .. "கல்யாணம் பண்ணி பார்... வீட்டை கட்டி பார்.. புத்தகம் வெளியீட்டு பார்" என்று சொல்லும் அளவிற்கு என்னை பாதித்தது. எவ்வளவு பெரிய வேலை.

எனக்கு அருமையாய் கிடைத்த தோழமைகள் தில்லையகத்து கீதா மற்றும் துளசி, நினைவு அறிந்த நாளில் இருந்து என்னை அறிந்த நண்பன் கோயில்பிள்ளை, வளைகுடாவில்  எண்ணை கிணற்றில் வாளி வாளியாக எண்ணை சேந்தி கொண்டு இருந்த என்னை அமெரிக்க தேசத்திற்கு ஒரு வேலையும்  போட்டு கொடுத்து அழைத்து வந்தது மட்டும் அல்லாமல் ...
"பதிவுகள் எழுது, பதிவுகள் எழுது" என்று இழுத்து விட்ட அருமை அண்ணன் அல்பி என்னும் "பரதேசி", என் எழுத்துக்களை படித்து ரசித்து தன் வார்த்தைகளினால் என்னை உற்சாகபடுத்தும் கிழக்கு சீமை மைனர் "மதுரை தமிழன்", தமிழுக்கும் என்மேல் காதல் உண்டு என்று பொய் சொல்லி என்னை நம்ப வைத்த பேராசிரியர் தருமி, வெளியீடு விழாவிற்கு வந்து என்னை கௌரவ படுத்திய வளரும் கவிதைகள் எழுத்தாளர் முத்து நிலவன், ஊக்குவித்த திண்டுகல் தனபாலன், மற்றும் பலரின் உதவியால் தான் இந்த புத்தகம் வெளியட பட முடிந்தது.

இந்த இடத்தில் நான் நண்பர் "தமிழ்" அவர்களை பற்றி கூற வேண்டும். என்னே ஒரு படைப்பாளர். என்னுடைய ஒவ்வொரு பதிவிற்கும் கார்ட்டூன் போட்டு கொடுத்து அந்த பதிவிற்கு உயிர் ஊட்டினார் என்று சொன்னால் மிகையாகாது.

மேலே நான் குறுப்பிட்ட நண்பர்கள் தவிர மற்றும் பலர் தந்த உற்சாகம் தான் இந்த "விசுவாசமின் சகவாசம்" புத்தகம் வர காரணம்.
கார்ட்டூனிஸ்ட் "தமிழ்" அவர்கள் படைப்பில் என் புத்தக அட்டை. 

சரி, 2015 எப்படி கழிந்தது என்று பார்ப்போம்.

ஆண்டவனின் அருளால் அடியேனின் அன்னையும் உடன் பிறந்தோரும், பிள்ளைகளும் சுகமாய் இருக்கின்றோம்.

உருப்படியான சில விஷயங்கள் ..

ஏற்கனவே கூறிய படி..

ஐம்பாவது பிறந்த நாள்.

புத்தகம் வெளியீடு.

பல வருடங்களாக தள்ளி கொண்டே சென்ற ஐரோப்பிய நாடுகள் சென்ற விடுமுறை

வருடம் துவங்கியது முதல் முடியும் வரை உடம்பில் அதே எடை .. (குறைய வில்லை என்ற ஒரு வருத்தம் இருந்தாலும்.. கூடவில்லையே அது ஒரு சந்தோசம் தான்)

கிட்ட தட்ட 200 பதிவுகள்.

இவை தவிர சில சில்லறை காரியங்கள் வேறு ..

வெளி வந்த ஒரு தமிழ் படம் (மற்ற இந்திய படங்கள் நான் எப்போதுமே பார்ப்பது இல்லை. சில ஆங்கில படங்கள் பார்ப்பேன், அதுவும் இந்த வருடம் பார்த்த படமே இரண்டு தான்) கூட பார்க்கவில்லை.

"கிரிக்கட்" என்ற கேடு கெட்ட விளையாட்டை பார்ப்பதற்காக ஒரு நிமிடம் கூட செலவு செய்யவில்லை.

இந்த வருடத்தில் மனதை மிகவும் பாதித்த சில..

உலகில் தொடரும் தீவிரவாதம் ..

தமிழகத்தின் அவல நிலை.

இங்கே தமிழகத்தில் அவலநிலையை பற்றி சற்று நொந்து கொண்டே கூற வேண்டும்.

அறிந்த நண்பர் ஒருவர் சென்ற மாதம் தென் இந்தியாவில் அமைந்துள்ள தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகம் மாநிலங்களுக்கு பல வருடங்கள் கழித்து சென்று இருந்தார். அவர் கூறியது.

மற்ற மாநிலங்களுக்கு ஒப்பிடுகையில் .. தமிழக மக்களிடத்தில் "தனி மனித ஒழுக்கம்" என்பது அறவே இல்லை. இதை பொது இடங்களில் பார்க்கலாம். எங்கே பார்த்ததாலும் குப்பை, குப்பை, குப்பை , மற்றும் பொது இடங்களில் அரசியல்வாதிகளுக்கும் சினிமா ஆட்களுக்கும் உள்ள விளம்பரங்கள், அருவருக்க தக்க நிலைமையில் உள்ளது.

இப்படி நண்பர் சொல்லும் போது , நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வாசகம் தான் நினைவிற்கு வந்தது.

2015ல் ..ஆண்டவனின் புண்ணியத்தால் அம்மணியும் கண்மணிகளும் சுகமே. ராசாதிக்கள் வளர்ந்து கொண்டே போகின்றார்கள். மூத்தவள் கல்லூரிக்கு தயாராகி கொண்டு இருகின்றாள். இளையவளோ இன்னும் என்னை ஒரு பெரிய "ஹீரோ" என்று தான் நினைத்து கொண்டு இருகின்றாள். இப்போது தானே 13. அடுத்த வருடம்..அடியேன் ஹீரோ அல்ல ... *ரோ என்று தெரிய வரும் என்று நினைக்கின்றேன்.

2015ல் நடந்த திருத்த கூடிய தவறுகள் ..

எழுதும் பதிவுகளில் எழுத்து பிழைகளை கட்டுபடுத்த வேண்டும்.

எழுதுவது மட்டும் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை படிக்க நேரம் ஒதுக்க வேண்டும்.
மற்றும், சாப்பாட்டில் உப்பு சற்று குறைக்க வேண்டும். உடம்புக்கு எதுவும் இல்லை. மனதிற்கு தான். ரோஷம் அதிகம் இருப்பதால் இல்லத்து விஷயங்களில் முன் கோவம் நிறைய "பொசுக்கு பொசுக்கென்று" வருகின்றது.

இன்னும் பொறுமை அமைதி வேண்டும்.

2016... செய்ய வேண்டிய முக்கிய வேலை , புனித வேதாகமத்தை ஒரு வருடத்தில் முழுதாக படித்து முடிக்க வேண்டும்.

பின் குறிப்பு :

என் பதிவுகளை படித்து அமைதியாக செல்வோரும் சரி, பின்னோட்டம் இட்டு என்னை உற்சாகபடுதுவர்களும் சரி, தங்கள் ஆதரவு இல்லாவிடில் என் பதிவில் வரும் விஷயங்கள் என்னிலே மறைந்து விடும். என்னை உற்சாகபடுத்தி வருவதற்கு மிக்க நன்றி.

9 comments:

 1. என்னது உங்களுக்கு ஐம்பதா நம்பவே முடியலைப்பா.....வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. என்னாலே நம்ப முடியல .. பாவம் நீங்க என்ன பண்ணுவிங்க ?

   Delete
 2. தமிழுக்கு ஒரு பேஸ்புக் அக்கவுண்டாவது அல்லது வலைத்தளமாவது ஆரம்பித்து அவரை அறிமுகப்படுத்துங்களேன்... மிக நல்ல இளைஞர்....

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக செய்ய வேண்டும். புத்தாண்டில் அதை கண்டிப்பாக செய்ய முயற்சிக்கிறேன் .

   Delete
  2. தமிழிடம் ஏற்கனவே சொன்னதுண்டு ...மிகத் திறமை வாய்ந்த இளைஞர்! நல்ல இளைஞரும் கூட

   கீதா

   Delete
 3. உங்கள் வீட்டு ராசாத்திகளிடம் சொல்லுங்கள் நீங்கள் என்றும் வலையுலகத்தின் ஹீரோ என்று

  ReplyDelete
  Replies
  1. அதே அதே...ஆமோதிக்கின்றோம்...

   Delete
 4. நண்பரே! முதலில் வாழ்த்துகள் அனைத்திற்கும். புத்தாண்டு வாழ்த்துகளும் வரும் புத்தாண்டும் இந்த ஆண்டைப் போல் தங்களுக்கு எல்லாவிதத்திலும் நன்மை உண்டாக்கட்டும்.

  எங்களையும் உங்கள் தோழமைகள் என்றுக் குறிப்பிட்டிருந்தமை சந்தோஷம் ஒரு புறம் கூச்சம் மறு புறம் நாங்கள் என்ன செய்துவிட்டோம் தங்களுக்கு என்று...உங்கள் நட்பு கிடைத்ததும் எங்களுக்கு மிக மிக சந்தோஷம்! எனவே எங்களுக்கும் 2015 ஒரு நல்ல வருடம்! அதன் சிறப்பு கூடுவதன் காரணம் உங்கள் நட்பினால் கிடைத்த எஸ்தர் அம்மா!!! வேறு வார்த்தைகள் இல்லை!!! சொல்ல...

  கீதா: மேலே சொன்னவற்றுடன்...ம்ம்ம் உப்பு குறைக்கணுமா விசு?!! அதைவிட தமிழகம் உருப்பட்டால்..இந்தியா உருப்பட்டால் உப்பைக் குறைக்க வேண்டாமோ??!!! ஹஹஹ்...

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...