வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

அவ்வையாருக்கே "சுட்ட பழமா"?

விடுமுறைக்காக இந்தியா சென்ற நாட்கள். அங்கே, என் பால்ய நண்பன் கோபாலை சந்திக்க அவன் வீட்டிற்கு போகும் வழியில் மலரும் நினைவுகள்.



கோபால் சின்ன வயதிலே பெரியவர்களை போல் செயல்படுபவன். பிராட்வேயில் உள்ள தூய கபிரியேல் பள்ளிகூடத்தில் இருவரும் படித்து கொண்டு இருந்த நாட்கள் நினைவிற்கு வந்தது.அந்த நாட்களில் பள்ளிக்கு வெளியே விற்றுக்கொண்டு இருந்த நாவல் பழத்தை வாங்கி தின்று கொண்டு இருந்த என்னை, விசு.. என்ன இன்னும் நாவல் பழம் சாப்பிட்டு கொண்டு?என்னோடு வா என்று ஆசிரியர்கள் உண்ணும் இடத்திற்கு அழைத்து சென்று டீயும், சமோசாவும் சாப்பிட பழகி கொடுத்தான். அங்கிருந்து கிளம்புகையில்

வழியில் கோபால் அவன் தந்தை ஓர் நண்பருடன் வருவதை பார்த்து விட்டு "அப்பா.. எத்தனை முறை சொல்லி இருப்பேன், இங்கே நாவல் பழ கடைக்கு உன் நண்பர்களோடு வராதே என்று? என் நண்பர்கள் எல்லாரும் என்னை பார்த்து நகைகின்றனர் என்று செல்லமாக சத்தம் போட்டான்.


அதே போல், மாலை வேளைகளில் சில நாட்களில் அருகிலுள்ள பேக்கரிக்கு சென்று, மாடர்ன் பிரட், அமுல் பட்டர், கிசான் ஜாம், போன்றவைகளை வாங்கி அதை இலகுவாக தடவி தருவான். படிப்பிலும் கெட்டி, அவன் நட்ப்பிற்காக அவனவன் அலைகையில், ஏதோ விட்ட குறை தொட்ட குறை போல் அவன் எனக்கு நண்பன் ஆகிவிட்டான். நட்ப்பு வளர்ந்தது, நாங்களும் வளர்ந்தோம். வளர்ந்தவர்கள் பிரிந்தோம், இப்போது ஒரு 25 வருடங்கள் கழித்து அவனை பார்க்க போகிறேன்.

 அதே விலாசம், ஆனால் அவன் தங்கி இருந்த "ஒடு வீடு"  இப்போது கான்க்ரீட் வீடாகமாறியுள்ளது. என்னோடு கணிகவியல் படித்தவன்  ஆயிற்றே. நன்றாக படித்து தணிக்கையாளர் ஆகி சொந்தமாக ஒரு நிறுவனம் நடத்துகின்றான். அருமையான குடும்பம்.  வாழ்க்கையை எப்படி திட்டமிட்டு வாழவேண்டும் என்பதற்க்கான இலக்கணம் இவன் குடும்பம்.

வீட்டின் வெளியே இருந்த அழைப்பு மணியை அடித்தேன். கதவு திறந்தது. அட பாவி, அப்படியே இருக்கீயே,கொஞ்சம் கூட மாறவில்லையே என்றேன்.

மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு...

"டாடி செட் தட் யு வில் பி கமிங்,ப்ளீஸ் கம் இன்சைட்"

அப்போதுதான் புரிந்தது இது கோபாலின்  மகன் என்று
.
"யு லுக் ஜஸ்ட் லைக் யுவர் டாட்"! அப்பா எங்கே" என்றேன்.

இப்ப வந்து விடுவார்,இங்கே பக்கத்தில் தான் பேக்கரி போய் இருக்கார் என்றான்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று நினைக்கையில்,

கோபால்... ஒரு சின்ன தொப்பையோடு, முகத்தில் கண்ணாடி வேறு... சற்று ஓரத்தில் நரைத்த முடி...

என்னமா? எப்படி இருக்க?

இருக்கேன் விசு.. நீ ரொம்ப மாறிட்ட விசு. நான் வெளியே ரோட்டில் பார்த்து இருந்தால் கண்டு பிடிச்சி இருக்க மாட்டேன்.

என்ன பண்ணுவேன் கோபால். காலத்தின் கோலம்..எப்படி சுகம் என்றுகேட்க்கும் போது அவனின் மனைவியும் மகளும் வந்தார்கள். வணக்கத்தை பரிமாறி கொண்டு அமர்ந்தோம்.

கோபால் கையில் இருந்த பையை திறந்தான்..."பிரட்...பட்டர், ஜாம்.."

விசு வீட்டில் பல விதமான உணவு தாயார்.. இருந்தாலும் நான் என் மனைவியிடம் 'எங்களுக்கு மிகவும் பிடித்தது இது தான் என்று சொல்லிவிட்டேன்" என்றான்.

பல மணி நேரம் பேசி முடித்த பின் ...

விசு , நாளை காலை எதுவும்  முக்கியமான வேலை இல்லாவிட்டால் பள்ளிக்கூடம் பக்கம் வர முடியுமா?

ஏன் கோபால்?

இல்ல, நீ  நேரா இங்கே வீட்டிற்கே வந்து விடு.. மற்றதை நாளைக்கு பார்த்துகொள்ளலாம்.

விடை பெற்றோம், மறு நாள் காலை கோபால் வீட்டில்.

விசு..அப்படியே வா அந்த காலத்தில் பள்ளிக்கூடம் போவேமே, அதே போல் நடந்து போகலாம்.

பல வருடங்களுக்கு பின் நானும் கோபாலும் காலை  8 மணி போல், நாங்கள் பள்ளிக்கு போகும் அதே வழியில்...அந்த காலத்தில் இருந்த வேகம் இல்லை...

அருகில் உள்ள மகளிர் பள்ளி கூடத்தில் உள்ள பெண் பிள்ளைகள் எங்களை தாண்டி நடந்து போகின்றார்கள். ஒருவரை ஒருவர் பார்த்து ஒரு புன்னகையை பகிர்ந்து கொண்டோம். தகப்பன் ஸ்தானத்தில் இருந்து இந்த பிள்ளைகளை பார்ப்பதே ஒரு தனி சுகம்.

பள்ளி கூடம் வந்தது. கோபால் அந்த நாவல் பழ கடையின் அருகில் நின்று... விசு இந்த இடம் நினைவிற்கு இருக்கிறதா என்றான்.மறக்க முடியுமா கோபால், இங்கே தானே நாம் முதல் முதலில் சந்தித்தோம், நன்றாக நினைவு இருக்கிறது. நாவல் பழம் வாங்கி கொண்டு இருந்த என்னை பள்ளிகூடத்தின் உள்ள அழைத்து சென்று "சமோசா" வாங்கி கொடுத்தாயே...எப்படி மறக்க இயலும்?

நல்ல "மெமரி" விசு உனக்கு.. சரி, ஒரு ரெண்டு ருபாய் இருந்தால் ஆளுக்கு ஒரு ரூபாய்க்கு பழம் வாங்கு.

கோபால்.. என்ன சொல்ற?...ஈ எல்லாம் இருக்குது, கோபால்.

ஒன்னும் ஆகாது, வாங்கு விசு...

கோபால் சொன்னது போல வாங்கி வாயில் வைக்கும் போது..

"அப்பா... என்ன நீங்களும் உங்க நண்பரும் சின்ன பையங்க போல... என் நண்பர்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள்"?

 என்று சற்று கோபத்துடன் பேச.... நண்பன் கோபால்... சாரி டா, நாங்க கிளம்புறோம் என்று சொல்ல கிளம்பினோம்...

http://www.visuawesome.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...