திங்கள், 11 ஆகஸ்ட், 2014

எழுதியதோ "கை நாட்டில்", படித்ததோ "வெளி நாட்டில்..."

ஸ்மிருதி இரானியும் யேல் பல்கலைகழகமும்..

2004 தேர்தல் நேரத்தில் தான் டெல்லி பல்கலைகழகத்தில் "BA" படித்துள்ளேன் என்று தேர்தல் மனுவில் எழுதிய மத்திய அமைச்சர், மாண்புமிகு "ஸ்மிருதி இரானி" சென்ற தேர்தல் மனுவில் தான் மற்றொரு பல்கலைகழகத்தில் B.com படித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது சாத்தியம் ஆகுமா? கண்டிப்பாக. ஒருவர் BA படித்து முடித்து விட்டு அந்த படிப்பை வேண்டாம் என்று நிராகரித்து விட்டு B.Com படிப்பது தவறே இல்லை. ஆனால் இவர் தனது படிப்பை பற்றி வேட்பு மனு படிவத்தில் தவறாக குறிப்பிட்டு இருகின்றார் என்று காங்கிரஸ் கட்சிக்காரன் சொல்லும் போது இவர் ஒழுங்காக பதில் சொல்ல முடியாமல் தட்டு தடுமாறி வெவ்வேறு விதமான பதிலை கூறுகின்றார் அது தான் தவறு.


கடந்த சில வருடங்களாக, நம்ம சுப்ரமணியசாமி, சோனியா காந்தி என்ன படித்தார், எப்படி பொய் சொன்னார், அது சட்ட ரீதியாக எவ்வளவு பெரிய தவறு என்பதை பல்வேறு ஊடகங்களின் வழியாக நமக்கு எடுத்து காட்டி சொல்லி வருகிறார். இவர் இவ்வாறாக பேசும் போது நான் இவரின் துப்பறியும் திறமையை கண்டு வியந்தேன். காந்தி குடும்பத்தின் மீது தான் இவருக்கு எவ்வளவு அக்கறை என்று.  சோனியா காந்தியும் சரி, ஸ்மிருதி இரானியும் சரி என்ன படித்தார்கள் என்று எனக்கு தெரியாது அதை அறிந்து கொள்வதில் எனக்கு நாட்டமும் இல்லை. இவர்கள் இருவரும், வேட்பு மனு விண்ணப்பத்தில் பொய்யான தகவலை கொடுத்து இருந்தால் இவர்களை கண்டிப்பாக தண்டிக்க வேண்டும். சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.

ஸ்மிருதி இரானி படிக்காதவர், எப்படி இவருக்கு இவ்வளவு பெரிய பதவி தராலாம் என்று எதிர் கட்சிகாரகள் கேட்க்க, இவர் உடனடியாக, என்னிடம் "யேல்"   பல்கலைகழகம் கொடுத்த டிகிரி உள்ளது என்கிறார்.
12 வது மட்டும் படித்த  இவர் உலகபுகழ் பெற்ற இந்த பல்கலைகழகத்தில் எப்போது, எங்கே, எப்படி வாங்கினார் என்பது தான் எனக்கு உள்ள ஐயப்பாடு. என்னையே இந்த "ஐயப்பாடு" இந்த "பாடு" படுத்தினால் காங்கரஸ் கட்சிகாரனை எவ்வளவு "பாடு " படுத்தி இருக்கும்?

சரி இந்த நேரத்தில் இங்கே இன்னொரு காரியத்தை சொல்லியே ஆகவேண்டும். படிக்காதவர்கள் பெரிய பொறுப்பில் இருக்க கூடாதா? தவறே இல்லை. கண்டிப்பாக இருக்கலாம். படித்த "அறிஞரை" விட படிக்காத "கர்மவீரர்" மேல் எனக்கு மரியாதை அதிகம். ஆனால் படித்தேன் என்று பொய் சொல்லுபவர்கள் பெரிய பதவியில் இருக்க கூடாது.
படிப்பு கொஞ்சம் அவசியம் தான் போல இருக்கு, ஒரு சின்ன எழுத்து பிழை தான்.. ஆனாலும் அர்த்தம் வேற ஆகி விட்டதே....


இப்போது:"யேல்" பல்கலைகழகத்திற்கு வரலாம்.  இந்தியாவில் முதுகலை வரை படித்து விட்டு இங்கே அமெரிக்காவில் வந்து மேற்படிப்பு படித்தவன் தான் நான். இங்கே "யேல்" பல்கலைகழகத்தில் படிப்பது என்பது "குதிரை கொம்பு". ஸ்மிருதி இரானி,  தான் இந்த பல்கலைகழகத்தில் டிகிரி வாங்கியுள்ளேன் என்று சொன்னதும் அலறி விட்டேன்.

அடேங்கப்பா... இந்த மாதிரி ஒருவர் அமைச்சர் ஆகி இருப்பது இந்தியாவிற்கு கிடைத்த பரிசு என்று தான் நினைத்தேன். இதை கேட்டவுடன் நானே பேய் அறைந்தது (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்) போல் ஆகிவிட்டேன், காங்கிரஸ் காரன் சும்மா இருப்பானா? எப்போது படித்தாய் என்று ஆராய ஆரம்பித்து விட்டான். அதற்கு ஸ்மிருதி இரானி அவர்கள் சில வருடங்களுக்கு  முன் தானும் மற்றும் 10 பேர் சேர்ந்த குழு ஒன்றும் "யேல் பல்கலைகழகத்திற்கு"    வந்து 6 நாட்கள் தங்கி இருந்து இந்த பட்டதை பெற்றதாக சொல்கின்றார்கள்.  6 நாட்களில் வாங்கியது கண்டிப்பாக ஒரு டிகிரி பட்டமாக இருக்காது. அது ஒரு சான்றிதழ்(certificate) வகுப்பாக -  பாடமாக இருந்து இருக்கும்.  பட்டபடிப்பிற்கும் - சான்றிதழ் படிப்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் உளறிவிட்டார் என்று வைத்து கொள்வோம். அது யாருக்கும் நேர்ந்து இருக்கலாம்.

என்னுடைய கேள்வி?

இவருடன் சேர்ந்து "யேல்" பல்கலைகழகத்திற்கு வந்து படித்த 11 பேர் யார்? 12வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு மேற்படிப்புக்காக பொது மக்கள் வரி பணத்தில் பயண செலவு-  உணவு, விடுதி செலவு, மற்றும் இதர செலவுகள் செய்ய எங்கே இருந்து வந்தது பணம்?.  இன்னும் எத்தனை நாட்கள் தான் இந்த அரசியல்வாதிகள் நம் எல்லாரையும் முட்டாள்கள் என்றே பார்க்க போகின்றார்கள்?  பொது மக்கள் வரி பணத்தை செலவு செய்து இவர்கள் படித்து வாங்கிய இந்த வகுப்பினால் நாட்டுக்கு என்ன பயன்?

சுப்ரமணிய சுவாமிக்கும், மற்றும் BJP தலைவர்களுக்கும் ஒரு கேள்வி. கடந்த ரெண்டு மாதங்களாக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே எந்த கேள்வி கேட்டாலும், காங்க்ரஸ் செய்யாத அட்டூழியமா? அவர்கள் சொல்லாத பொய்யா? அவர்கள் திருடாத திருட்டா?  என்று ஒரே பதில் தான் வருகிறது. காங்க்ரஸ் இப்படி எல்லாம் செய்தது என்று மக்களுக்கு தெரிந்ததில் தான் அவர்களை ஒழித்து கட்டிவிட்டு உங்களை தேர்ந்து எடுத்துவிட்டு ஒரு நல்லகாலம் வரும் என்ற எதிர்ப்பார்ப்போடு இருகின்றார்கள்.

இனிமேலாவது, "அவனை பார்" என்ற நொண்டி சாக்கை விட்டு விட்டு, ஆக வேண்டிய காரியத்தை கவனியுங்கள். இல்லாவிடில் மக்கள், உங்களுக்கு ஆகவேண்டிய "காரியத்தை" பற்றி நினைக்க ஆரம்பித்து விடுவார்கள்.

1 கருத்து:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...