Monday, December 1, 2014

கைக்கு எட்டியது வாய்க்கு.......

லேசாக மழைத்தூறல் பார்த்தவுடனே எல்லா தமிழனுக்கும் வரும் ஆசை தான் எனக்கும் வந்தது.

அடே டே.. இந்த நேரத்தில் மட்டும் ஒரு மிளகாய் பஜ்ஜி கிடைத்தால் ...? எவ்வளவு நன்றாக இருக்கும்..

மனைவியிடம் கேட்டு வாங்க முடியாது? ஒரு பஜ்ஜிக்காக நமக்கு அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு பஜ்ஜியால் உடம்பிற்கு வரும் கேடை பற்றி விளக்கி நம்மை வாழ்க்கை முழுவதும் பஜ்ஜி சாப்பிட முடியாதவாறு செய்து விடுவார்கள்.என்ன செய்வது என்று நினைத்து கொண்டு இருக்கையிலே...

என்னங்க..

சொல்லு மா?

மழைக்கும் அதுக்கும் மிளகாய் பஜ்ஜி இருந்தால் எப்படி இருக்கும்?

ஆமா இல்ல...நல்லாத்தான் இருக்கும்.. இருந்தாலும் அந்த பஜ்ஜி எண்ணையில்  முழுக்கி எடுத்து சுட படுவதால் உடம்பிற்கு ஆகாதே...

அட போங்க.. என்றைக்கோ ஒரு நாள்.. நீங்க கடைக்கு போக தாயார்னு சொல்லுங்க, நான் கடலை மாவு தயார் பண்ணி வைக்கிறேன்.

இதோ இப்பவே போறேன். என்ன வேணும்?

நல்லதா பெருசா நாலு மிளகாய் வாங்கி வாங்க? மிளகாய் பஜ்ஜி செய்யலாம்.

ஏன் மா... அது கூடவே கொஞ்சம் கத்திரிக்காய், உருளை கிழங்கு மற்றும் முட்டை பஜ்ஜியும் செய்யலாமே..

போனா போதுன்னு மிளகாய் பஜ்ஜி செய்யலாம்ன்னு பரிதாபப்பட்டு சொன்னா, திஸ் இஸ் டூ மச். எவரிதிங் கேன்சல்ட்..

ஐயையோ, கொஞ்சம் உணர்ச்சிவச பட்டுவிட்டேன். மன்னித்து கொள். மிளகாய் பஜ்ஜி ஒன்றே போதும் ....

என்று சொல்லி கொண்டே வண்டியை எடுத்தேன்...

அருகில் இருந்த கடைக்கு சென்று பார்த்தால் வித விதமான மிளகாய்கள். இதில் எதை வாங்குவது என்று தெரியவில்லை. வீட்டு அம்மணியை கூப்பிட்டு கேட்டுவிடலாம் என்றால், ஒரு மிளகாய் வாங்க தெரியவில்லை, உமக்கு எதற்கு பஜ்ஜி என்று சொல்லி அதுமட்டும் இல்லாமல் "எவரிதிங் கேன்சல்ட்" என்ற பதிலும் வரும்.

இப்போது என்ன செய்வது என்று திண்டாடி கொண்டு இருந்தேன். பொதுவாக இந்த மாதிரி கடையில் என்ன வாங்குவது என்று திண்டாடுகையில் அங்கே உள்ள இந்திய காய்கறி பகுதிக்கு சென்று ஒரு ஐந்து நிமிடம் காத்து இருந்தால், நம்ம ஊரை சேர்ந்த  தாய்குலம் யாராவது வருவார்கள். அவர்களிடம்.. நமக்கு உள்ள சந்தேகத்தை பரிதாபமாக சொன்னால் அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.

இந்த தாய் குலத்தின் உதவிக்காக காத்து கொண்டு இருக்கையில், அங்கே இந்திய தாய்குலம் யாரும் வரவில்லை. சரி இன்னும் ஒரு 5 நிமிடம் காத்து பார்க்கலாம் என்று நினைக்கையில், அலை பேசி அலறியது...

ஏங்க...

சொல்லு மா?

மிளகாய் அறுவடைக்கா போனீங்க.  கடையில் தானே வாங்க போனீங்க, அதற்க்கு ஏன் இவ்வளவு நேரம்?

அது வந்து, வந்து...

எந்த மிளகாய் வாங்குவது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கீங்களா ?

சீ  ச்சீ , அப்படியெல்லாம் இல்லை, இதோ வாங்கிட்டேன், இன்னும் ஒரு 10 நிமிடத்தில் இருப்பேன்.

சீக்கிரம் வாங்க..

சரி...என்று சொல்லிவிட்டு.. யாராவது வர மாட்டார்களா என்று காத்து கொண்டு இருக்கையில் அங்கே என் அருமை நண்பன் தண்டபாணி வந்து சேர்ந்தான்.

வாத்தியாரே... என்ன மழையும் அதுவுமா இங்கே?

ஒன்னும் இல்ல தண்டம் (பஜ்ஜி விஷயத்தை சொன்னால் இவன் உடனே வந்து நாள் முழுவதும் தங்கி விடுவான்)

ஏன் வாத்தியாரே, என்னை என்ன கேனை பையன் என்று முடிவே பண்ணிவிட்டாயா?

இல்ல, பாணி ,, ஏன் அப்படி கேட்கின்றாய் ?

நல்ல காலத்திலே நீ கடைக்கு வர மாட்ட, இப்ப மழை வேற, இங்கே வந்து இருக்க ...பஜ்ஜி ஏதாவது சுடலாம்னு மிளகாய் ஏதாவது வாங்க வந்தியா?

அட பாவி, டேய், எங்க வீட்டில் கமரா ஏதாவது வைச்சு இருக்கியா? எப்படி பாணி கண்டு பிடித்த..

ஒரு "தமிழ் ஆணின்" கஷ்டம் ஒரு "தமிழ் ஆணுக்கு" தான் தெரியும் வாத்தியாரே., மழைய பார்த்தவுடன் சுந்தரி என்னையும் மிளகாய் வாங்கி வா என்று சொல்லி இங்கே அனுப்பி விட்டாள்.

"கும்புட்ற தெய்வம் குறுக்கில் வந்த மாதிரி" வந்த பாணி.. சரி, இதில் எந்த மிளகாய் பஜ்ஜிக்கு நல்லா இருக்கும்?  இதுக்கு முன்னால நீ வாங்கி இருக்கியா?

வாங்கினது இல்ல வாத்தியாரே, ஆனால் சாப்பிட்டு இருக்கேன்.  நீ கவலையே படாதே. இங்கே ஒரு அஞ்சு நிமிஷம் காத்து இருந்தால், நம்ம ஊர் தாய் குலம் யாராவது வருவார்கள், அவர்களை கேட்டு வாங்கி கொள்ளலாம்.

பாணி, கிட்ட தட்ட 10 நிமிஷத்திற்கு மேல் இங்கே தான் காத்து கொண்டு இருக்கேன், யாரும் வர வில்லை. நீ ஒரு காரியம் பண்ணு. சுந்தரிக்கு ஒரு போனை போட்டு, எந்த மாதிரி மிளகாய் என்று கேள்.

ஏன் வாத்தியாரே, நான் நல்ல இருக்கிறது உனக்கு பிடிக்கவில்லையா? அவளிடம் கேட்டால் , மிளாகாய் வாங்க வக்கு இல்லை, உனக்கு பஜ்ஜி வேற கேடா என்று மட்டும் சொல்லாமல் அதையும் மீறி " எவரிதிங் கேன்சல்ட்" என்று வேற சொல்வாள்.  நீ வேண்டும் என்றால் உன் வீட்டிற்கு போன பண்ணி கேள்.

டேய் முட்டாள், வீட்டிற்கு போன் பண்ணி கேட்க்க முடிந்தால், இங்கே ஏன்டா 10 நிமிடம் காத்து கொண்டு இருப்பேன்?

"வீட்டிற்க்கு வீடு வாசப்படி ", சரி வாத்தியாரே, இப்ப என்னா செய்வது?

இருப்பதிலே பார்க்க நல்லா இருக்கிற மிளகாயில் நாலு எடுத்து கொண்டு போக வேண்டியது தான்..

என்று சொல்லி ஆளுக்கு நாலு மிளகாய் எடுத்து கொண்டு கிளம்பினோம்.

பின்னர் வீட்டில்..

ஏங்க இவ்வளவு நேரம்.?

மழை அல்லவா, அது தான் கொஞ்சம் மெதுவாக வந்தேன்.

சரி.. மிளகாய் எங்கே..

இதோ..

இது சரி, மிளகாய் எங்கே?

அது தான் இது...

இதுதான் எது.?
.
அது தான் மிளகாய்.

இந்த வித்தியாச வித்தியாசமான நிறத்தில் உள்ளதே, அதுவா?

அதே தான்.

நான் பஜ்ஜிக்கு வாங்கிய மிளகாய். இதில் செய்தால் பஜ்ஜி என்ன கோவித்து கொள்ளவா போகிறது?

இதை வைச்சி மிளகாய் பஜ்ஜி பண்ணலாம்னு யார் உங்களுக்கு சொன்னார்கள்?

அது வந்து.. ஏன் இதில் பண்ண முடியாதா?

இது "சலட்" செய்வதற்கான மிளகாய், இதில் காரம் ஒண்ணுமே இருக்காதே..

சரியா சொன்ன மா, நானும் அதே தான் யோசித்தேன், இந்த தண்டபாணி அங்கே வந்து மிளகாய் பஜ்ஜிக்கு இதுதான் நல்லதுன்னு என்னை குழப்பி விட்டான்.

அவர் சொன்னார்ன்னு சொன்னா எப்படி ? உங்கள் சுய புத்தி எங்கே போச்சி ?

சுய புத்தியா (அது தான் மூணாவது முடிச்சு போடும் போதே டாட்டா காட்டி விட்டு போய்விட்டதே, என்று சொல்லாமல்)...சரி, இதில் ஒன்னும் செய்ய முடியாதா?

இதில் நிறைய செய்யலாம், ஆனால் பஜ்ஜி செய்ய முடியாது...

என்னடா இது கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லையே..என்று நினைக்கையில்.. மனைவியின் அலை பேசி அலறியது..

அக்கா..

என்ன சுந்தரி..?

என்ன அக்கா, அண்ணனை கொஞ்சம் கூட சமையல் தெரியாத மாதிரி கெடுத்து வைச்சிருக்க?

இல்லையே.. சுந்தரி.. இவர் கொஞ்சம் சமைப்பாரே, என்ன ஆச்சி?

மழையும் அதுவுமா பஜ்ஜி போடாலாம்னு தண்டத்த மிளகாய் வாங்க அனுப்பி வைச்சேன்..

நீயுமா?

ஆமா அக்கா, கடைக்கு போய் வேலைக்கு ஆகாத மிளகாய் நாலு வாங்கி வந்துள்ளார்.

அங்கேயுமா?

எந்த முட்டாளாவது இதை வைச்சி பஜ்ஜி போடுவானா என்று கேட்டதற்கு..விசு தான் இதை வாங்கு, இது தான் பஜ்ஜிக்கு நல்லதுன்னு சொன்னார்ன்னு சொல்றாரு.

தண்டம் அப்படியா சொன்னாரு?

ஆமா அக்கா..

சுந்தரி, நான் ஒரு ரெண்டு நிமிஷத்தில் கூப்பிடறேன் , கொஞ்சம் அவசரமா ஒரு வேலை இருக்கு.

ஏங்க...?

என்ன மா?

உங்க நண்பர் இருக்காரே..

யாரு தண்டமா?

ஆமாங்க.. அவர் பேரு மட்டும் தான் தண்டம்... ஆனால் நீங்களோ......

15 comments:

 1. நேற்றுதான் கத்திரிக்கா பஜ்ஜி மனைவி வருவதற்கு முன்னால் செய்து சாப்பிட்டேன்.... அவ வந்த பிறகு கேட்டா நோ சொல்லிவிடுவாள். அதனாலதான் இப்படி.

  ஆமாம் எல்லாம் பெண்களும் இப்படிதானா பஜ்ஜி சாப்பிட்டால் உடம்புக்கு கேடு என்று சொல்லிக் கொண்டே கேக்கை மட்டும் பொளந்து கட்டுகிறார்களே அது மட்டும் உடம்புக்கு நல்லதா என்ன

  ReplyDelete
  Replies
  1. கத்திரிக்காய் பஜ்ஜி, கல்யாணத்திற்கு முன் சாப்பிட்டது, என்ன ஒரு ருசி ! போட்டு தாக்குங்கள் .

   Delete
 2. மிளகாம் வாங்கியும் பஜ்ஜி சாப்பிடமுடியாமல் போய்விட்டதே

  ReplyDelete
 3. அருமை..சிறப்பு..
  நல்ல நகைச்சுவை எழுத்து நடை..
  நீங்க சொன்னது மிகச் சரி..
  "" ஒரு "தமிழ் ஆணின்" கஷ்டம் ஒரு "தமிழ் ஆணுக்கு" தான் தெரியும் ""...

  ReplyDelete
  Replies
  1. இந்த சனி கிழமை அடியேன் பரதேசி அவர்கள் தலைமையில் நடக்கும் பட்டிமன்றத்தில் நியூ யார்க் நகரத்தில் கலந்து பேச உள்ளேன். அருகில் இருந்தால் வரவும்.

   Delete
 4. ஹா... ஹா...

  சாலட்டாவது கிடைத்ததா...?

  ReplyDelete
  Replies
  1. கிடைச்சது ... அதை மேய நான் பட்ட பாடு இருக்கே...?

   Delete
 5. கும்பிடப் போன தெய்வம் தண்டபாணி வடிவில் வந்து குறுக்க வந்து இப்பிடி காலை வாரி விட்டுட்டாரே...

  ReplyDelete
  Replies
  1. என்னத்த சொல்வேன் மாது...

   Delete
 6. ஹஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ் அய்யோ தாங்கலப்பா நண்பரே! ஸோ "எவ்ரித்திங்க் கான்சல்ட்"???!!! ஹஹஹஹ்

  ஆனா இங்க இந்தியாவுல னாங்க இந்த மொளகாயிலயும் பஜ்ஜி போடுவோம்ல.....உங்க வீட்டு எங்க சகோதரிக்கு நீங்க டிப்ஸ் கொடுத்து இன்னும் நிறைய பஜ்ஜி சாப்டுங்க நண்பரே!

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...