வியாழன், 23 அக்டோபர், 2014

"இது நம்ம ஆளின் வேதம் புதிது"...அமெரிக்காவில்

அருமையான நாள். விடுமுறை வேறு! சூரியனவன் காலை 5 க்கு வெளியே வர, இன்று நாம் ஏன் கடல் கரைக்கு செல்ல கூடாது என்ற ஒரு கேள்வி. நாங்கள் வாழும் இடம் தான் "நெய்தல்" ஆயிற்றே. வீட்டை விட்டு வெளியே வந்து பத்து நிமிடத்தில் பசிபிக் பெருங்கடல். சரி, இந்த மாதிரி இடத்திற்கு செல்லும் போது நண்பர்களோடு சேர்ந்து போனால் நன்றாக இருக்குமே என்று நண்பர்களில் சிலரையும் அழைத்து செல்லலாம் என்று தொலை பேசியை எடுத்தேன்.



பாணி..

என்ன விசு, காலையும் அதுவுமா 6 மணி போல, "வண்ணான் துணி துவைக்கிற நேரத்தில்" கூப்பிடற?

டேய், தண்டம் ... தண்டபாணி... நீ எப்படா வண்ணான் 6 மணிக்கு துணி துவைப்பதை பார்த்த? ஏன் அப்படி பேசுற?

நான் இதுவரை பார்த்தது இல்லை விசு, இது எங்கேயோ கேள்வி பட்ட பழமொழி. அதிகாலையில் யாராவது வெளியே போனா இப்படி தான் கேட்ப்பார்கள். சரி, நீ விஷயத்திற்கு வா.

விசயம் இருக்கட்டும் தண்டம். அதுக்கு முன்னால இதை பத்தி பேசணும். நீ ஏன் எப்ப பாரு .. ஜாதியையும் பழமொழியையும் வச்சியே பேசுற.

வாத்தியாரே, நான் என்ன "உள்குத்தம்" வைச்சா பேசுறேன். சின்ன வயசில் இருந்து கேட்டது,  அது தான் பேச்சுவாக்கில் வருது. பல மொழி சொன்னா கேட்கனும் வாத்தியாரே, ஆராய கூடாது. சம்மல் K பம்பந்தம் என்ன சொன்னாரு?

அவர் யாரு, விடுதலை போராட்ட வீரரா?

அப்படினும் சொல்லலாம் வாத்தியாரே? அவர் பாணியே தனி. "வருமுன் காப்போம்", அது தான் வாத்தியாரே, அடிமை ஆனால் தானே விடுதலை வேண்டும், நீ அடிமையே ஆகாதான்னு அழகா எடுத்து சொல்வாரு.

டேய் அது "சம்மல் K பம்பந்தம்" இல்ல. அவர் பெயர் பம்மல் K சம்பந்தம்.

சரி அதை விடு, நீ என்னா "இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்", ன்னு சொன்ன மாதிரி என்னை கண்டிக்கிற?.

டேய், இப்ப தானே சொன்னேன், அப்படி பேசாதேன்னு நீ எப்படா "கொல்லன் இரும்பை அடிக்கிறத பார்த்த"?

விசு... நீ விஷயத்திற்கு வா?!

இன்றைக்கு நாள் நல்லா இருக்கு பாணி, நம்ம எல்லாரும் சேர்ந்து கடற்கரைக்கு போலாமா?

என்னதான் சொல்லு வாத்தியாரே, "கெட்டாலும் செட்டி, கிழிஞ்சாலும் பட்டு" நீ திட்டினாலும் பரவாயில்லை, உன் ஐடியா நல்லா இருக்கு. வாத்தியாரே, நம்ப பிள்ளையும், முதலியும் கூட இங்கே தான் இருக்காங்க.

"கழுதை கெட்டா குட்டி சுவர்தானே" தண்டம், வேற எங்க போவாங்க.

ஏன் வாத்தியாரே, என்னை மட்டும் வண்ணான பத்தி பேசாதன்னு சொல்லிட்டு நீ மட்டும் இப்ப அவனுடைய வாயிலா ஜீவன பத்தி கிண்டல் பண்றியா?

தண்டம், கழுதைக்கு வாய் இல்லானு யாருடா சொன்னது?

ஆமா வாத்தியாரே, அதுக்கு பெரிய வாய் இருக்கு, பின்ன ஏன் பழமொழியில் தப்பா சொன்னாங்க.

அதை பத்தி நீ யோசி. நீ வரியா இல்லையா?

நான் வரேன் வாத்தியாரே, இவங்களையும் கூப்பிடேன்,

நீயே கூப்பிடு,

வாத்தியாரே, இவங்க "பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, கொட்டைப் பாக்கு என்ன வெலை"ன்னு கேட்க்கிற ஆளுங்க... நீயே  பேசு.

ஹலோ,  பிள்ளை,  எப்படி சுகம்?

விசு, பாத்தியா உன் வேலையே காட்டிட்ட? எங்கள கழட்டி விட்டு "அடுத்த வூட்டு கொல்டி, அடிச்சான் பாரு பல்டி" ஸ்டைலில்  கடற்கரைக்கு பிளானா?

பிள்ளை, இப்பதான் அவன் தண்டபாணியிடம் இந்த ஜாதி - பழமொழி விட்டு தொலை என்று சொன்னேன், இப்ப நீ ஆரம்பிச்சிட்டியா?

விசு, பழமொழி சொன்னா ரசிக்கணும், ஆராயக்கூடாது.  கம்மல் K தம்பந்தம் என்ன சொன்னார்?

டேய், அது பம்மல் K  சம்மந்தம்.

யார் சொன்னாங்க என்பதா முக்கியம்? என்ன சொன்னாங்கன்னு என்பது தான் முக்கியம்.

அப்ப ஏன் நீ அவர் பெயரை எடுத்த?

விசு, உன்னிடம் வாய் கொடுத்து மீள முடியுமா, நீ தான் 'கொல்லன் தெருவிலேயே ஊசி வித்து வந்த ஆள் ஆச்சே"

டேய், இன்றைக்கு ஏன்டா எல்லாரும் கொல்லன கொல்றிங்க? சரி கடற்கரைக்கு வரியா இல்லை..?

 வரேன் வாத்தியாரே, இவன் "முதலி" இங்க தான இருக்கான், அவனையும் கூப்பிட்டு விடு, இல்லாட்டி..."முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு' கதை ஆகி விடும்.

போனை அவனிடம் கொடு.

என்ன விசு... பிள்ளை என்னமோ " ஆசாரி போனான் வெப்பேரி , ஆத்துக்காரி வைத்தாளாம்  ஒப்பாரி' கதையா  "முதலி - விளக்கெண்ணை"  கதை சொல்றான்?

அட பாவி, நீயும் பழமொழி?, வெப்பேரிக்கும் ஒப்பாரிக்கும் என்னடா சம்மந்தம்?

விசு, பழமொழி சொன்னா ரசிக்கணும், ஆராய கூடாது,  தம்மல் K மன்மந்தம் என்ன சொல்லி இருக்காரு?

அட பாவி, ஒரு ஒருத்தனுக்கும்  தனி தனியா சொல்ல வேண்டியதாகி விட்டதே... அது பம்மல் K  சம்மந்தம்.

அதே தான் விசு, அவரே தான். அவர் பெயரை மட்டும் தெரிஞ்சி வைத்து கொண்டால் போதாது விசு, அவர் சொன்ன மாதிரி பழமொழிய ரசிக்கணும்.

சரி கடற்கரைக்கு வரியா?

எனக்கு நீச்சல் தெரியாதே, அங்கே வந்து நான் என்ன பண்ண போறேன்? "பொக்கை வாயனுக்கு பொரி உருண்டை கிடைத்தாற் போல" அங்கே போறதிற்கு பதிலா நான் இங்கேயே இருக்கேன். அது மட்டும் இல்லாம என் மனைவி சொந்தகார ஜோசியர் ஒருத்தர்  எனக்கு தண்ணில தான் கண்டம்னு .சொல்லி இருக்கார்.

டேய், அவர் சொன்னது அந்த தண்ணி இல்ல,

சரி விடு விசு.. நீ ஒன்னு ."பகலில் பசுமாடே கண்ணுக்குத் தெரியாது, இரவில் எருமைமாடா தெரியப்போகிறது?" நீங்க கிளம்புங்க..

பேசி முடித்து எந்த கடற்கரை என்றும் முடிவு  செய்து விட்டு  10 மணி போல் அங்கே சந்திக்கலாம் என்று அவனனவன் கிளம்பினோம். கடற்கரை அருகே வண்டிகளை நிறுத்தி விட்டு,

பிள்ளை நீ இடது பக்கம் போய் பார், பாணி நீ வலது, எங்கே நல்ல இடம் இருகின்றதோ அங்கே போய் பாயை போடலாம்


என்று இவர்களுக்காக காத்து கொண்டு இருக்கையில், பிள்ளை ரெண்டே நிமிடத்தில்  கோபமாக திரும்பி வந்தான்

பிள்ளை, என்னடா ஆச்சி?

விசு, நம்ம ஊரில் தான் ஜாதி பிரச்சனை, தீண்டாமை அது எல்லாம் பிடிக்காதுன்னு இங்கே வந்தா, இங்கே அதை விட மோசம். என்ன ஒரு அநியாயம். அங்கே பாரு என்ன எச்சரிக்கை வச்சி இருக்கான். இது எனக்கு பெரிய அவமானம். நான் ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க மாட்டேன், நீங்களும் கிளம்புங்க.

அப்படி என்னடா எழுதி வச்சி இருக்கான்.

"நோ நாடார், நோ ஸ்விம்மிங்" என்ன ஒரு தைரியம், இதுவே இந்தியாவா இருந்தா நடப்பதே வேறே,

என்று சொல்லி கொண்டே வண்டியை நோக்கி சென்றான். நானோ தண்டபாணியிடம்,

அது சரி, அப்படியே "நோ நாடர்"னு போட்டு இருந்தாலும் இவன் பிள்ளை தானே, இவன் ஏன் கோப  பட வேண்டும்?

வாத்தியாரே, அவன் பேரு தான் சுந்தரம்பிள்ளை, ஆனால் அவன் நாடார் சமூகத்தை சார்ந்தவன்.

அட பாவிங்களா, இவ்வளவு தூரம் வந்தும் நமக்கு ஏன்டா இந்த ஜாதியினால் பிரச்சனை என்று நொந்து கொண்டே வருகையில்...

எதிரில் ஒரு மெக்ஸிக்கன் குடும்ப தலைவன் அங்கே நீச்சல் அடிக்க கடலை நோக்கி ஓடி கொண்டு இருந்த அவன் குழந்தைகளை " நோ நாடார்.. நோ நாடார்" என்று சத்தம் போட்டான்.

நமக்கு ஏற்கனவே தெரிந்தது போல் ஆர்வ கோளாறு அதிகமாயிற்றே,
அவனிடம் சென்று... அமிகோ...வாட் இஸ் தி மீனிங் ஆப் "நோ நாடார்" என்று கேட்டதற்கு..

நோ நாடார் என்றால் ஸ்பானிஷ் மொழியில் " நீச்சல் அடிக்காதே" என்று அர்த்தம் என்று சொல்லி இந்த இடத்தில அலைகள் அதிகம் அதனால் இங்கே நீச்சல் அடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து உள்ளார்கள் என்றான்..
,
திரும்பி பார்க்கையில், பிள்ளையின் வண்டி எங்களை தாண்டி போய் கொண்டு இருந்தது..நானோ பாரதியின் பாடல்களிலே எனக்கு பிடித்த பாடலான...


சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”. 

என்று பாடி கொண்டே நடந்தேன். அருகில் இருந்த என் மனைவியோ... உனக்கு பிடித்த பாடல் இருக்கட்டும், எனக்கு பிடித்த "திரை கடல் ஓடி திரவியம் தேடு" என்பதை செய், என்று போட்டாங்களே ஒரு பிட்.

www.visuawesome.com

7 கருத்துகள்:

  1. நாடார் என்றால் ஸ்பானிஷ் மொழியில் " நீச்சல் அடிக்காதே" என்று அர்த்தம்///

    haahaahaa unga punniyathula Spanish molila oru vaartha katthukittom..

    super sir.

    nethu eluthiya nan siricha thipavaliyum ithuvum unga 2 post um nice.
    thodarnthu eluthungal sir.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி மகேஷ். நாடார் என்றால் "நீச்சல்" என்று அர்த்தம். நோ நாடார் என்றால் தான் நீச்சல் அடிக்காதீர்கள் என்று அர்த்தம். தொடர்ந்து ஊக்கபடுத்தும் தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாங்க தக்காளி, முதத முறையா வந்து இருக்கீங்க. வந்தது மட்டும் அல்லாமல் " ஒரு வாசகம் ஆனாலும் திருவாசகம்" என்ற பாணியில், ஒரே ஒரு வார்த்தை. வருகைக்குன் வார்த்தைக்கும் நன்றி தக்காளி அவர்களே. தொடர்ந்து வாருங்கள்

      நீக்கு
  3. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. அட நாடார் என்பதற்கு இப்படி ஒரு அர்த்தமா ஸ்பானிஷ்ல! அது சரி அப்போ அதை நம்ம நாஞ்சில் நாட்டுலயும், எழுதி வைச்சாங்கனா "அதெப்படிங்க எங்கள நீச்சல் அடிக்கக் கூடாதுனு சொல்லுவீங்கனு சண்டைக்கே வந்த்டுடுவாங்களோ?!!! ஹஹஹ்

    பதிலளிநீக்கு
  5. பல பழமொழிகளை கையாண்டு ஒரு சுவையான பதிவு! ஒரு புதிய சொல்லையும் அர்த்தத்தையும் அறிந்துகொள்ளவும் உதவியது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...