சனி, 25 நவம்பர், 2017

வியட்நாம் வீடு விசுவாசம்

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நான்காம்  வியாழன் அன்று நன்றி திருநாள் (Thanks Giving Day) இங்கே கொண்டாடப்படும்.

வியாழக்கிழமை அன்று இந்நாள் கொண்டாட படுவதால் தொடர்ந்து வரும் வெள்ளியும் சேர்த்து விடுமுறை என்பது எழுத படாத சட்டம். அதனால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை.

இந்த நாள் எப்படி ஆரம்பிக்க பட்டது என்று ஏராளமான கதைகள் உண்டு. அதில் சோகம் - சந்தோசம் - ஒற்றுமை - வெறுப்பு - சமாதானம் - போர் - கொள்ளை - கொலை என்று பல அம்சங்கள் உண்டு.

கனி இருக்க காய் எதற்கு என்பதை போல்.. நான் இதில் உள்ள நல்ல விடயங்களை கொண்டாடுவேன்.

நன்றி...

இந்நாளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி.. உணவு மேசையை சுற்றி  அமர்ந்து கடந்த ஒரு வருடத்தில் தங்களுக்கு நேர்ந்த நல்ல காரியங்களை கூறி அதை தமக்கு ஈர்ந்தொருக்கு நன்றி அனைவருக்கு எதிரேலேயும் நன்றி கூறுவார்கள்.



இந்நாளிற்க்கான உணவில் வான் கோழி இருந்ததாகவே வேண்டும். முழு  வான் கோழியை அப்படியே சமைத்து மேசையில் மீது வைத்து வெட்டி வெட்டி உண்பார்கள்.

இங்கே வந்த முதல் வருடம் .. வான் கோழி .. வான் கோழி என்று காஞ்ச மாடு கம்பம் கொள்ளையில் அலைந்ததை போல் அலைந்து விட்டு, பிறகு அதை உண்ணும் போது .. இது என்ன கரும்பு சக்கை போல் ஒரு ருசி இல்லாமல் இருக்கின்றதே என்று முதல் வருடத்தோடு நிறுத்தி விட்டோம்.

சரி.. இதற்கு பதிலாக ... முழுசாக ஏதாவதை மேசையில் வைக்க வேண்டுமே.. என்று நினைக்கையில் ,,. நமக்கு மிகவும் பிடித்த மீனை இப்படி முழுதாக சமைத்து வைக்கலாம் என்றெண்ணி.. அதை அனைவருக்கும் பிடித்து போக.. இப்போதெல்லாம்.. நன்றி திருநாள் அன்று ஸ்டீம் பிஷ் (Steam  Fish ) தான் உணவு.


இந்த வருடமும் புதன் அன்று வேலை முடித்து அடித்து பிடித்து இல்லத்திற்கு வந்து அம்மணியை அள்ளி தூக்கி வண்டியில் அமரவைத்து அருகில் உள்ள வியட்நாம் கடைக்கு சென்றேன்.  கடந்த பதினைந்து வருடமாக இங்கே தான் மீன் வாங்குகிறோம். அங்கே சுத்தம் செய்யும் நபர் அம்மணிக்கு மிகவும் பழகிவிட்டார்.

உள்ளே சென்றவுடன் ..

நேராக மீன்  பகுதிக்கு அம்மணி சென்று..  பெரிய நான்கு ரெட் சனப்பேர்  (Red Snapper ) என்ற மீனை வாங்கி கொண்டு.. சுத்தம் செய்பவரிடம் கொடுக்க..

நானோ..

அவரிடம்.. ஆங்கிலத்தில்..

எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்ல..

அம்மணியோ..

அவருக்கு ஆங்கிலம் தெரியாது.. நான் பாத்துக்குறேன்..நீங்க போய் தேவையான மத்த சாமான்கள் வாங்குங்க என்று சொல்லி..

அம்மணி அவரிடம்.. ஒரே வார்த்தையில்.. Thanks Giving Style  என்று சொல்ல.. அவரும் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

நமக்கு தான் வாயில் பிரச்னையாயிற்றே..

அது எப்படி.. ஒரே வார்த்தைல...

அந்த ஆளு நான் சொல்றத கவனிப்பார்.. எனக்கு என்ன வேணும்ன்னு தெரியும். மொழியே தெரியாட்டிலும் பரவாயில்லை.. என்ன எப்படி புரிஞ்சி நடந்துக்குறாரு பாருங்க..  நீங்களும் இருக்கீங்களே.. 20  வருஷம்.. குப்பை கொட்டி என்னத்த கண்டேன்.

என்று ஆரம்பிக்க..

நான் அந்த பக்கம் போகின்றேன் என்று கிளம்பி.. பார்க்கையில்.. அங்கே மான் - முயல் .. லொட்டு லொசுக்கு என்று அம்புட்டு  விலங்குகளும் சமைக்க தயாரான நிலையில் இருந்தது.

அதையும் தாண்டி சென்ற எனக்கு கண்ணின் எதிரில் ஒரு தொப்பி தென் பட்டது. நமக்கு தான் தொப்பி என்றால் உசிராயிற்றே (உடனே இவருக்கு வழுக்கை என்று நினைக்காதீர்கள். தலைக்கு மேலே  தேவைக்கும் மேலே நிறைய உள்ளது. தலைக்கு உள்ளே கொஞ்சம் கம்மி தான் .. அதை பற்றி வேறொரு நாள் பார்ப்போம்).

வியட்நாம் தொப்பியை எடுத்து தலையில் போட்டு பார்த்து.. மனதில் ஒரு நிமிடம் பச்சை கிள்ளி முத்துச்சரம் பாடி கொண்டு இருக்கும் போது அலுவலகத்தில்  கூட பணி புரியும் ஒரு அம்மணியின் நினைவு வர.. ஒரு செலஃபீ  எடுத்து .. எப்படி என் வியட்நாம் ஸ்டைல் என்று எழுதி அனுப்பிட்டு விட்டு.

ஒரு பலாப்பழம்.. கொஞ்சம் வஞ்சிரம் கருவாடு.. சில வஞ்சிரம் மீன் வாங்கி கொண்டு...


கடையில் இருந்து வண்டி வரும் போது புதிதாக வாங்கிய தொப்பியை பெருமையுடன் அணிந்து கொண்டு நடக்க.. அங்கே இருந்த அனைத்து வியட்நாமி மக்களும் என்னை பார்த்த அன்போடு சிரிக்க.. நானும் சிரிப்பை பரிமாற...

அம்மணியோ...

இது என்ன தலையில்..?

இது வியட்நாம் தொப்பி.. அங்கே எல்லாரும் இப்படி தான். இனிமேல் இந்த கடைக்கு வரும் போது இதை தான் போட போறேன்.இதை போட்டுன்னு வந்தா .. இவரு நம்ம ஆள்ன்னு "வியட்நாம் வீடு சுந்தரம்"ன்னு  சொல்லி எக்ஸ்டரா மரியாதை..

என்னங்க,பொதுவா வியட்நாம் மக்கள் மூஞ்ச உம்ம்ன்னு வைச்சின்னு இருப்பங்களே.  ஒரு தொப்பி போட்டதுக்கே இம்புட்டு பிரெண்ட்ஸா இருக்காங்களே ..

நானோ.. அது எல்லாம் நம்ம கையில் இருக்கு.. அவங்க மத்தியில் நல்ல பேரு வேணும்னா அவங்கள போலவே மாறனும்...

என்று சொல்லி என் முதுகை நானே தட்டி கொண்டு..

அம்மணியோ.. இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல என்பதை போல் ஒரு பார்வை பார்க்க..

ஒரு டெக்ஸ்ட் வந்தது.

அம்மணியிடம்  அலை பேசியை கொடுத்து என்ன என்று பார் ?

என்று கேட்க.

உடனே தலையில் இருந்து அந்த தொப்பியை எடுங்க.. கொஞ்சம் கூட அறிவு இல்லையா?

நான் தொப்பி போட கூடாதே. உடனே கோவம் வருமே..  டெக்ஸ்ட் யாரு அனுப்புனா?

உங்க கூட வேலை செய்யுற அந்த வியட்நாம் அம்மணி தான்..

போட்டோ எப்படியாம்? தொப்பி சூப்பர்ன்னு சொன்னாங்களா?

முதலில் கழட்டுங்க..

ஏன்?

அது தொப்பி இல்லையாம்..

பின்ன?

சோறு வடிக்கிற கூடையாம்..

5 கருத்துகள்:

  1. "சோறு வடிக்கிற கூடையாம்.."
    Ha! Ha!!
    So what?
    You like it please wear it. This is what I love in the U.S. One can dress as s/he likes; No questions asked. Imagine the same thing happening elsewhere where Rajas would question anything you do without their approval.

    Yous
    Nambalki

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Nambalki... What? Is that Nambalki?

      Thanks for your comments.

      நீக்கு
    2. யெஸ் விசு! நம்ம மருத்துவர் நண்பர் நம்பள்கி தான்னு நினைக்கிறேன்...ஓ பதிவுதான் எழுதலை பட் பார்த்துட்டுருக்கார் போல!!! ஹை நம்பள்கி நல்லாருக்கீங்களா??!!

      கீதா

      நீக்கு
  2. என்ன சோறு வடிக்கற கூடை யா....


    ஹா ...ஹா..

    ஹா...செம்ம...கடவுளே...முடியல...

    பதிலளிநீக்கு
  3. ஹாஹாஹாஹா விசு முதல்ல உங்க படத்தைப் பாத்துட்டு இது என்ன தொப்பி போல இல்லையே நம்மூர்ல கல்யாணங்கள்ல அப்புறம் எங்க வீட்டு விசேஷத்துல சமைக்க வரவர் யூஸ் பண்ணற சோறு வடிக்கும் மூங்கில்/ஓலைக்கூடை போல இருக்கேனு நினைச்சேன்....கடைசில அதானா??!!!!!! ஹாஹாஹாஹா ஆனா நல்லாருக்கு விசு! இந்தத் தொப்பி ரொம்பவே நல்லாருக்கு...!!!!

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...