Tuesday, September 9, 2014

(4)மூன்றாம் பிறை - தொடர் கதை

மறைந்த இயங்குனர் பாலு மகேந்திராவுக்கு ஓர் அஞ்சலி!

ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும்

தொடர் கதை... (சென்ற இடுகை படிக்க இங்கே சொடுக்கவும்)தண்டவாளத்தில் "தடக் தடக்" என்று ரயில் புரண்டு ஓட.., சந்துருவின் மனதும் ஓட  துவங்கியது.

சீனு, என்ன ஒரு நல்ல மனிதன், சிறந்த நண்பன், அவனின் நல்ல குணங்களை பற்றி பேச வேண்டும் என்றால் நாள் முழுவதும் பற்றாது..அப்படி ஓர் குணம். அவனை முதலில் சந்தித்த நாள் இன்னும் நன்றாக நினைவிற்கு வருகிறது..

9ம் வகுப்பு, மதராசில் உள்ள சிறந்த தனியார் பள்ளி கூடத்தில், விடுதியில் படித்து வந்த நேரம்.

சந்துருவின் அப்பா ஒரு வங்கியில் உயர்ந்த பதவியில் இருந்தார். சந்த்ருவிற்கு 8 அல்லது 9வயது இருக்கும். அப்போது ஒரு நாள் வெளிய சென்ற அவன் தாயார் மீண்டும் திரும்பவில்லை. அவர்கள் தன் தந்தையோடு பணிபுரியும் மற்றொருவரோடு ஓடி விட்டதாகவும் மீண்டும் வரமாட்டார்கள் என்றும் வேலைகாரர்கள் சொல்ல கேள்வி பட்டுள்ளான்.

9-15 வரை தாய் இல்லாமல் வளர்ந்தவன். தந்தைக்கு அநேக கெட்ட பழக்கங்கள். குடி-பெண்கள்-குதிரை என்ற பழக்கங்களை அறியாத வயதில் அப்பனின் அருளால் தெரிந்து கொண்ட இவன் பிஞ்சிலேயே பழுத்து விட்டான். ஒரு நாள் தகப்பனை தேடி வந்த ஒரு பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசி, நடக்க முற்பட்டவனை அடித்து இழுத்து வந்து இங்கே விடுதியில் சேர்த்து விட்டார் அவன் அப்பா.

இங்கேயும் சும்மா இருக்க வில்லை. மற்ற சில நண்பர்களோடு சேர்ந்து சிகரெட், குடி என்ற பழக்கத்தை தொடர்ந்து கொண்டு இருந்த காலம், அப்படியான ஒரு நாளில்..

டேய் சந்துரு, நம்ம விடுதிக்கு புதுசா ஒரு பையன் வந்து இருக்கான்டா.

எங்கே, அவனை வர சொல்லு..

அம்பி.....உன் பேர் என்னா?

ஸ்ரீநிவாசன்....

இது என்ன ரொம்ப நீளமா இருக்கே... என் பெயர் கூடத்தான் சந்திரசேகர்... ஆனா சுருக்கமா சந்துருன்னு வைச்சிக்கிட்டேன். இனிமேல் உன் பெயர்... சீனு... ஓகே வா..

சரி சந்திரசேகர், நான் வரேன்..

என்ன சீனு அவசரம்...வா ஒரு தம் அடி.

எனக்கு பழக்கம் இல்லை..

ஆமாடா, நாங்க எல்லாரும் பிறக்கும் போதே கையில் சிகரட்டை வைத்து கொண்டு, "லைட் ப்ளீஸ்"என்று சொல்லி கொண்டா வெளியே வந்தோம்.. இது எல்லாம் அப்ப  அப்ப அந்த அந்த வயசில் கற்று கொள்ள வேண்டும்.

எனக்கு வேண்டாம்.

சரி, இன்னைக்கு நாங்க சுவர் எகிறி குதித்து சினிமா போக போகிறோம் வரீயா?

சந்துரு.. அவனிடம் காசு இருக்காதுடா... அவன் ஒரு அநாதை...எதோ நல்லா படிப்பானாம், அதனால் ஒரு பெரியவர் காசு கட்டி இங்கே படிக்க வைக்கிறார்.

என்ன சீனு...அப்பா அம்மா இல்லையா...? ஐ அம் சாரி, சீனு..

இட்ஸ் ஓகே.

உனக்கு இல்லையேன்னு விசனம், எனக்கு இருக்காங்களேன்னு விசனம்.

சந்துரு நேரம் ஆச்சி சினிமாக்கு போகணும், கிளம்பு.

சந்துரு சினிமா வேண்டாம்டா! இன்னும் ஒரு முறை தப்பு பண்ணி மாட்டினா உன்னை பள்ளிகூடத்தில் இருந்தே டிஸ்மிஸ் பண்ணிடுவேன்னு பிரின்சிபால் உங்க அப்பாவிடம் சொல்லி இருக்காரு. இங்கே இருந்து அனுப்பிடாங்கன்னா உனக்கு வட இந்தியாவில் மிலிடரி பள்ளி கூடம் தான்.

டேய், இவன் சுந்தர் ஒரு பயந்தாங்கோலி, அது எல்லாம் மாட்ட மாட்டோம்.. வாங்க போலாம். வா சீனு, நான் உனக்கு டிக்கட்  வாங்கி தரேன்.

இல்ல சந்திரசேகர், நம்ம பள்ளிக்கூடத்திற்கும் பக்கத்தில் ஒரு காது கேளாதோர்- ஊமை பிள்ளைகளுக்கான பள்ளி கூடம் இருக்கு. அங்கே போய் அந்த பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடலாம்ன்னு ஒரு பிளான்.

டேய் பாவி...ஊமை பிள்ளைகளோடு உனக்கு என்னடா வேலை..எங்களோடு வா.

"ஊமை என்றால் அதில் ஒரு அமைதி" சந்திரசேகர்...
எனக்கு இந்த அமைதி பிடிச்சி இருக்கு.

அன்று இரவு விடுதியின் வார்டன் மீசையை முறுக்கி கொண்டு...

இன்று மதியம் மூன்று பேர் சுவர் எகிறி சினிமா போய் உள்ளார்கள். அதில் ரெண்டு பேர் தங்கள் தவறை ஒத்து கொண்டு உள்ளனர் அவர்களை பிரின்சிபால் மன்னித்து விட்டார். அந்த மூன்றாவது மாணவன் யார்?

மாணவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, சந்துரு மிலிடெரி பள்ளி கூடத்தை நினைத்து சற்று நடுங்க ஆரம்பித்தான்.

உண்மையை சொல்லிவிட்டால் மன்னிப்பு, இல்லாவிடில் நாங்களே கண்டிபிடித்து கடுமையான தண்டனை கொடுக்க நேரிடும்.

யார் அது... யார் அது?

நான் தான் சார், என்னை மன்னித்து கொள்ளுங்கள் என்று ஓரத்தில் இருந்து ஒர் குரல் வர, சந்துரு உள்பட அனைவரும் அத்திசையை நோக்கி பார்க்க,  வார்டன் சீனுவை பிரின்சிபால் அறைக்கு அழைத்து சென்று கொண்டு இருந்தார்.

ஸ்ரீநிவாசன், நீ புது  மாணவன், நன்றாக படிக்க கூடியவன், முதல் தவறு என்பதால் உன்னை மன்னித்து விடுகிறேன், இனிமேல் இவ்வாறு செய்யாதே.

செய்ய மாட்டேன் சார்.


எனக்காக ஏன் சீனு பொய் சொல்லி,  உன் பேரை கெடுத்து கொண்டாய்?

சந்திரசேகர்., நீ என் மேல் காட்டின அன்பிற்காக..

நானா? உன்னை கிண்டல் தானே பண்ணேன்... எப்ப அன்பு காட்டினேன்?

என்னை பார்த்தவுடன் ஒரு "தம்" வேண்டுமானு கேட்ட...அப்புறம், சினிமாவிற்கு "டிக்கட்" வாங்கி தரன்னு சொன்னே... அப்புறம் எனக்கு அப்பா அம்மா இல்லைன்னு தெரிஞ்சதும், உன் முகத்தில் உன்னையும் அறியாமால் ஒரு சோகம். நீ ரொம்ப நல்லவன் சந்திரசேகர், முரடன் மாதிரி நடிக்கிற...

சரியா சொன்ன சீனு ..ஆனால் இந்த "நல்லவன்" விஷயத்தை இங்கே வேற யாரிடமும் சொல்லிடாதே.

சரி வா சந்திரசேகர், அந்த நூலகத்திற்கு போய் படிக்கலாம் ,

சீனு, படிப்பு எல்லாம் உனக்கு. பரீட்சையில் மட்டும் உட்கார்,  மீதி எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்னு  எங்க அப்பா சொல்லி இருக்காரு. நான் எப்படியும் அவர் வங்கியிலே ஏதாவது வேலை வாங்கி கொள்வேன்... ஆமா உனக்கு என்ன  ஆகவேண்டும்னு ஆசை சீனு?

"டீச்சர்"  .. எஸ்  ஐ வான்ட் டு பி  எ "டீச்சர்" !


சாப்பிட ஆரம்பித்த சந்துரு, சாப்பிட முடியாமல் காசு கொடுத்து வாங்கிய ரொட்டியை அங்கே மனநிலை சரியில்லாமல் பிச்சை எடுத்து கொண்டு இருந்து ஒருவரிடம் கொடுத்து விட்டு  கண்களை மூடினான்.

அங்கே ஊட்டியில், இவன் வருகையை அறியாமல் "சீனு", ரயில் நிலையத்தில் யாரோ பரிதாப பட்டு கொடுத்த ரொட்டியை "உனக்கு பாதி எனக்கு பாதி" என்று சுப்ரமணியோடு பங்கு போட்டு கொண்டு இருந்தான்.

தொடரும்...அடுத்த பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்


http://www.visuawesome.com

2 comments:

  1. நன்றாகத்தான் போகிறது, இதே போலவே தொடருங்கள் சார்....

    ReplyDelete
  2. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...