Friday, November 20, 2015

"நல்லதொரு குடும்பம்.... பல்கலைக்கழகம்"

மற்றும் ஒரு நாள் காலை வேலை. குளிர் காலம் ஆரம்பித்து விட்டது. பரதேசி மற்றும் மதுரை தமிழன் வாழும் இடங்களை போல் இங்கே பனி பெய்யாது. ஆனாலும் சற்று குளிரும். காலை 5: 30 க்கு எழுந்து மூத்த ராசாத்தியும் நானும்

பள்ளிக்கும் வேலைக்கும் கிளம்பினோம்.

வண்டியில் ஏறி அமர்ந்ததும்..

அம்மாடி.. ரொம்ப குளுருது... அந்த ஹீட்டர் போடு..

டாடி... அவ்வளவு குளிர் இல்ல. அப்படியே ஓட்டுங்க..

நீ இளங்கன்று மா.. குளிர் அறியாது. தயவு செய்து போடு.

எனக்கு இது நல்லா இருக்கு. வேணும்னா உங்களுக்கு மட்டும் போட்டுக்குங்க.

எனக்கு மட்டுமா?

டாடி.. உங்க சீட்டை மட்டும் சூடு பண்ணி கொள்ளுங்கள்.

அப்ப உனக்கு?


என் சீட் சூடாகாது..

அடே டே இது சூப்பர் சிஸ்டம். சரி. இந்த சுவிட்ச் எல்லாம் ஏதோ விமானத்தில் இருக்கிற மாதிரி இருக்கு நீயே போட்டுவிடு..

என்று நான் சொல்ல, அவளும் எதையோ தட்டி விட.. அடே டே.. "என்ன சுகம்,  இது என்ன சுகம்" என்ற பாடல் என்னையும் அறியாமல் என்னிடம் இருந்து வந்தது.

என்ன என்ன  முன்னேற்றம்.. ஒரே வண்டியில், அவர் அவருக்கென்ற வெப்ப நிலை. மனிதன் எங்கேயோ போய் விட்டான் என்று நினைக்கையில்..

மனதின் ஒரு மூலையில் மனிதன் தவறி விட்டானா என்ற கேள்வி வந்தது. அவரவருக்கு தனி தனியாக தனக்கு தேவையானது இவ்வளவு எளிதாக கிடைத்து விட்டால், நம்மில் விட்டு கொடுக்கும் பழக்கம் எப்படி வரும்? எப்படி வரும்?

என்று நினைக்கையில்... 1980ம் வருடங்களில் மதராசில் உள்ள ஒரு சராசரி இல்லம் நினைவிற்கு வந்தது.

அரசு பணியில் உள்ள தகப்பன், அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக உள்ள தாய். கல்லூரி செல்லும் மூத்த மகன். +2 படிக்கும் இரண்டாவது மகன். ஆசைக்காக பெற்ற எட்டாவது படிக்கும் ராசாத்தி.

காலை 5 மணி..

அடே டே..நேத்து ராத்திரி சமையலறை மூடும் போது  விறகை உள்ளே எடுத்து வைக்க மறந்துட்டனே.. வெளியே எல்லாம் ஈரமா இருக்குமே என்று அந்த தாய் சொல்லும் போதே.

படுக்குறதுக்கு முன்னால நான் கவனித்தேன், நீ அயர்ந்து தூங்கிட்ட, அதனால உன்னை எழுப்பாம நானே கொஞ்சம் விறகை எடுத்து உள்ளே வைச்சேன். போ, போய் காபி போடு..

உங்க புண்ணியத்தில் தப்பிச்சேன். நீங்களும் மறந்துட்டு இருந்தீங்க ..இன்னைக்கு சமையல்.... நினைக்கவே முடியல

என்று சொல்லி கொண்டே அந்த தாய் சமையலறை போக.. தகப்பனோ ...இரண்டாவது மகனை எழுப்பினார்..

டேய்.. 6 க்கும் மேல ஆச்சி. சீக்கிரம் போய் பால் வாங்கின்னு வா..

நேத்து கூட நான் தாம்பா வாங்கினேன் அவனை அனுப்புங்க.

டேய் ..அவன் தூங்கும் போது 2:30 மணி, இன்னைக்கு ஏதோ தேர்வு போல இருக்கு , அசந்து தூங்குறான்.. நீ போய் வாங்கினு வா.

சரி, இதோ போறேன்..

சின்னவள் தூங்கினு இருக்கா.. விளக்கு எதுவும் போடாத..அவளுக்கு கண்ணு கூசும்.

என்னை மட்டும் எழுப்பி விட்டுருங்க.. அவங்க ரெண்டு பேரும் தூங்கட்டும்..
என்று முனவி கொண்டே இவன் கிளம்ப நேற்று மீதியான பாலில் போட்ட காபி தகப்பனின் கைக்கு வந்தது.
காப்பியை குடித்து கொண்டே இருக்கையில் மனைவி  செய்திதாளை இவரிடம் கொடுத்து விட்டு ... ஏங்க.. சுடு தண்ணி என்று நினைவு படுத்த, ஒரே நிமிஷம் என்று மனைவியிடம் சொல்லி விட்டு, வெளியே இருந்த அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி ஒவ்வொருவராக குளிக்க சூடு பண்ண அந்த பொறுப்பான தகப்பன்  ஆரம்பிக்கையில்..

பெரியவன் வந்தான்.

அப்பா.. இன்னைக்கு நீங்க பஸ்ஸில் போக முடியுமா?

ஏன்டா?

எனக்கு ஒரு பரீட்சை. அதற்கு  இன்னும் கொஞ்சம் படிக்கணும். போற வழியில் லைப்ரரி போயிட்டு அங்கே இருந்து போக உங்க சைக்கிள் இருந்தா வசதியாக இருக்கும் என்று கூறுகையில்.

சரி.. ஆனால் போற வழியில் உங்க அம்மாவை பள்ளி கூடத்தில் இறக்கி விட்டு போ.

சரி, அப்பா என்று சொல்லி விட்டு முதல் வாளியில் இருந்த நீரில் சுடு தண்ணீரை கலந்து குளிக்க தயாரானான்.

அம்மா.. இந்தாங்க பால்..

என்று  கொண்டு வந்த இளையவன்..

ஐயையோ.. எனக்கு இன்றைக்கு பள்ளிக்கு சீக்கிரம் போகணுமே.. அதுக்குள்ள இவன் ஏன் குளிக்க போனான் என்று அலற ..

அப்பாவோ..

டேய்.. மூத்தவனே.. ஆரம்பிச்சிடியா ?

இல்ல அப்பா.

அப்ப கொஞ்சம் வெளிய வா.. இவனுக்கு கொஞ்சம் அவசரமா பள்ளிக்கூடம் போகணும்..

என்று சொல்ல மூத்தவன் கட்டிய துண்டோடு வளியே வர..

இளையவனோ, துண்டை நீ கட்டினு இருந்தா நான் எதுல துவட்டுவன்.. கலட்டி கொடு என்று சொல்ல...

அப்பா... அடுத்த மாச சம்பளத்தில் இன்னொரு டவல் வாங்குக.. அஞ்சு பேருக்கு ஒரு டவல் பத்தல.. அஞ்சாவது ஆள் துவட்டும் போது தொப்பை கட்டையா ஈரமா இருக்கு.

சரி .. சரி .. அதை அடுத்த மாசம் பார்க்கலாம். இப்ப அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.

என்று மூத்தவனை சமாதான படுத்தி விட்டு, சரி.. கொஞ்சம் மெதுவா அந்த ரேடியோவ போடு.. செய்திகள் கேக்கலாம்..

என்று தகப்பன் சொல்ல, மூத்தவன் அதை செய்ய.

ராசாத்தியோ.. ஆல் இந்தியா ரேடியோ, செய்திகள் வாசிப்பது உங்கள் செல்ல மகள்.

மதராசில் இன்று காலையில் ஒரு எட்டாவது படிக்கும் பெண்ணை தூங்க விடாமல் ரேடியோ போட்டு எழுப்பியதற்காக அந்த பெண் அவளின் தகப்பனின் காதை  கடித்து துப்பி விட்டாள். 

என்று சொல்லி கொண்டே எழ ..

அம்மாடி .. இளையவன் சீக்கிரம் போகனுமா? நீயும் ரெடி ஆகி அவனோடவே சைக்கிள்ளில்  போய்டு..

அப்பா .. எனக்கும் ஒரு சைக்கிள் வாங்கி கொடுங்க.

உனக்கு எதுக்கு சைக்கிள்? அவன் ஒட்டாத அன்னிக்கு அவன் சைக்கிள் சும்மாதான் இருக்கு. அதை ஒட்டு.

எனக்கு லேடீஸ் சைக்கிள் வேண்டும்பா. இதை ஓட்டினா என் பிரெண்ட்ஸ் கிண்டல் பண்ணுறாங்க.

என்று சொல்லும் போதே..

ராசாத்தி.. இன்றைக்கு எல்லாரும் சீக்கிரம் கிளம்பனும். கிச்சனில் அம்மா  சமைச்சு முடிச்சி இருந்தா எல்லார் சாப்பாட்டையும் டிப்பன் பெட்டியில் போடேன்.

இருங்கப்பா.. பல்ல விளக்கிடு வரேன் என்று ஓடியவள்..சற்று கோபமாக ..

யாரோ என் டூத் ப்ரஷ யூஸ் பண்ணி இருக்காங்க.. ஈரமா இருக்கு என்று அலற..

குளித்து முடித்து வெளியே வந்த இளையவன் ..

என்னாது.. உன் டூத் ப்ரஷா ? இது ஆளுக்கு ஒண்ணா? சொல்லவே இல்லை...நான் திங்கள் சிவப்பு, செவ்வாய் மஞ்சள், புதன் நீலம் அப்படின்னு எனக்கு புடிச்ச கலரா யூஸ் பண்றேன் என்று சிரித்து கொண்டே சொல்ல

சின்னவள் அழுதே விட்டாள்.

அடியே.. அவன் சும்மா சொல்றான்.

அடுத்த அரை  மணி நேரத்தில் அனைவரும் தயாரகி இருக்கையில்..
 எல்லாரும் சாப்பிட வாங்க.. என்று அன்னை ஆணையிட, அனைவரும் மேசையில் அமர்ந்து ஒருவரோடு ஒருவர் கை கோர்த்து, அவர்தம்  கண்ணை மூட அந்த குடும்ப தலைவன் ஜெபித்தார்.
 
    " For Food in a world where many walk in hunger,

 For faith in a world where many walk in fear,

    For friends in a world where many walk alone,

    We give You thanks, O Lord.”
   
   (– Source: spoken by Robert Duvall’s character as grace before a meal in the  movie Seven Days in Utopia)


ஜெபித்து முடித்தவுடன் அனைவரும் சாப்பிட்டு விட்டு அவரவர் நாளை துவங்க.. அந்த தகப்பனோ.. ஒரு  சிறிய "லிஸ்ட்" தயார் பண்ணி கொண்டு இருந்தார்.

இந்த மாத சம்பளத்தில் வாங்க வேண்டியவை.

ஒரு திரி வைத்த கேரோசின் ஸ்டவ்.

ஒரு லேடீஸ் சைக்கிள்.

ஒரு டவல்.

ஒரு டூத் ப்ரஷ்.

பின் குறிப்பு :

இந்த வாழ்வு முறையில் தான் எவ்வளவு விட்டு கொடுப்பு. இது இன்றைய வாழ்வில் இல்லையே. மனிதன் எங்கேயோ தவறி விட்டான் ... என்று நினைக்கும் போது, மூத்தவள் அலறினாள்..

டாடி.. எங்க பள்ளிகூடத்த  தாண்டி போறீங்க, உங்களுக்கு வயசு ஆயிடிச்சு. எனக்கும் 16 வயசாகி மூணு மாதம் ஆச்சி,போன மாசம் எனக்கு  லைசன்ஸ் கூட  வந்துடிச்சி இல்ல, சீக்கிரம் ஒரு கார் வாங்கி கொடுங்க...

7 comments:

 1. தற்போதைய சமுதாயத்தின் நிலை இதுதான்.

  ReplyDelete
 2. விசு சார்...கலங்கிப்போனேன்....இவையெல்லாம் என் வீட்டில் சாதரணமாக நடக்கும்...ஆறு பேர் உருண்டுபடுக்க போதாத ஒரு கூடத்தில் எட்டு பேர்.....கதைகள் சொல்லி, காதுகள் திருகி.....யாரேனும் உச்சா போக.....

  சின்னவள் கேட்டாள்....இங்க எப்படிப்பா வளர்ந்தீங்க?

  சின்னவளே...இங்கே தான் வளர்ந்தேன்..

  அருமை விசு சார்.....அழுகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் இனிமையான சுகம் எனக்கு புரிகின்றது நண்பரே

   Delete
 3. எனக்கும் என் சின்ன வயது நினைவுகள் கிளம்பின! அருமையான குடும்பம்! மீண்டும் அந்த நாட்கள் திரும்பாது என்பதே சோகம்!

  ReplyDelete
 4. வசதியற்ற காலங்களில் கிடைத்த சந்தோஷம் போல வசதி வந்த பின் கிடைக்கவில்லைதான்..பழைய நினைவுகளை தூண்டி விட்டது இந்த பதிவு. சின்னவயதில் சின்ன ரூமில் நாலு பேர் படுத்து உறங்கினோம். ஆனால் இப்போது இருப்பது 3 பேர், 3 பெட் ரூம் வீடூ ஆனால் படுப்பதோ என்னவோ தனிதனியேதான்..பாவம் எனது நாய்குட்டிக்கு என பெட் ரூம் இல்லாததால் அது எனது பெட்டில்தான் படுத்து உறங்குகிறது

  ReplyDelete
 5. நானும் இந்த வழியில் கடந்தவன் என்கிற வகையில்
  இரசித்துப் படித்தேன் கொஞ்சம் கலஙிய கண்களுடன்...

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...