வெள்ளி, 30 அக்டோபர், 2015

பாட்டு பாடவா ? வா .....


பல வருடங்களுக்கு முன் என் கல்லூரி தோழன் "முத்து" வை  போலிஸ் கைது செய்த விஷயம் எனக்கு இன்றும் நன்றாக நினைவில் உள்ளது.

வேலூர் அருகே காந்திநகரில் வாழ்ந்த நாட்கள். ஒவ்வொரு வீடும் "சீட்டு கட்டு கணக்காக" அருகே அருகே கட்டப்பட்டு இருக்கும்.நண்பன் முத்து நமக்கு மிகவும் வேண்டியவன்.

சில நாட்களாகவே நண்பன் முத்து காலை வேளையில் கோழி கூவுவதற்கு முன்பே எழுந்து குளித்து  நண்பர்கள் அனைவரையும்  " என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று நினைக்க வைத்தது மனதில் இன்றும் பசுமரத்து ஆணி போல் உள்ளது.

என்ன முத்து ? இப்பெல்லாம் காலையில் சீக்கிரமா ரெடி..

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல விசு..

டேய்.. .முயல் புடிக்கிற நாயை ... பழமொழி தெரியும் இல்ல..

அப்படி என் மூஞ்சில் என்ன தெரிஞ்சது ?

ஒரே புன்னகையா இருக்கியே..

அப்படி ஒன்னும் இல்ல..

காதல் ஏதாவது...


ச்சே.. ச்சே .. நா போய் அப்படி..

நீ பொய் சொல்ற .. நல்லா தெரியுது.. நடக்கட்டும்..நடக்கட்டும்.

ஏற்கனவே முத்துவின் நண்பர்கள் பலருக்கு முத்துவின் மேல் பொறாமை. சென்ற வருடம் மின்சாராவாரிய துரையின் மேலாளராக வந்த அதிகாரியின் பிள்ளை அல்லவா அவன். வந்தது தான் வந்தான்.. "ஊரு சனம் தூங்கிடுச்சி ஊத  காத்தும் அடிட்சிடிச்சு" என்ற பெண் பாடலை கல்லூரி மாணவர்கள் அனைவரையும் பாடவைத்த மேரியின் பக்கத்து வீட்டிற்கு இவர்கள் குடும்பம் குடி புகுந்தவுடன் அனைவரின் பொறாமைக்கும் ஆளானான்.

வழி மேல் செல்லும் மேரியின் பார்வை விழி மேல் படாதா என்று அனைவரும் வழி மேல் விழியாக காத்து இருக்க .. இவனுக்கோ .. இந்த பார்வை "கடை தேங்காய் வழி பிள்ளையார்" என்று வலிய கிடைத்தது நிறைய பேருக்கு மன உளைச்சல் என்று சொன்னால் அது மிகையாகாது.

இவன் அந்த இல்லத்தில் குடியேறிய அன்றே நிறைய கல்லூரி தோழர்கள் " வர வர காதல் கசக்குதையா" என்ற பாடலை பாடி நொந்து போனதும் உண்மையே.
இருந்தாலும், நானும் சரி, மற்றும் சிலரும் சரி முத்துவின் நட்ப்பை  பெற்று   அடிக்கடி "கூட்டு படிப்பிற்காக" முத்துவின் இல்லத்திற்கு செல்வோம்.

 கூட்டு படிப்பு...

யார் கண் பட்டதோ, அது தன் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்றும், இனிமேல் நாங்கள் யாரும் இல்லத்திற்கு வரகூடாது என்றும் நண்பன் முத்து சொன்ன பேச்சை தட்ட முடியாமல் " ஊரை தெரிஞ்சிகிட்டேன், உலகம் புருஞ்சிகிட்டேன் " என்று பாடி கொண்டே நாங்கள் அங்கே போவதை நிறுத்தி கொண்டோம்.

முத்து சில நாட்களாகவே " இந்த புன்னகை என்ன விலை" என்ற பாடலில் வருவதை போல் ஒரு சிரிப்போடு இருக்கின்றான் . யார் என்ன கேட்டாலும் " போக போக புரியும்" என்ற ஒரே ஒரு பதில். ஒருவேளை .. வாலி சொன்னதை போல் "அவளுக்கென அழகிய முகம், இவனுக்கென இளகிய மனம்" கதையா?

முத்து மட்டும் "வாடி என் கப்ப கிழங்கு" என்ற பாடலை பாடி கொண்டு இருக்க மற்றவர்களின் முகமோ "வாடிய கப்ப கிழங்கு" போல் மாறியது.

 இவன் இவ்வளவு சந்தோசமாக இருக்க என்ன காரணம்.. என்று யோசித்து .. "கண்டு பிடிச்சேன் .. கண்டு பிடிச்சேன் " என்று  பாடி கொண்டே கல்லூரி உணவு வேளையில் முத்துவிடம் என்ன சாப்பாடு என்று பேச்சை ஆரமபித்த என்னிடம்..

"தேனே தென் பாண்டி மீனே சாப்பிட்டேனே .. சாப்பிட்டேனே.. நானே சாப்பிட்டேனே " என்று பாடலை பதிலாக சொல்லிவிட்டான்.

இப்படி சந்தோசமாக இருந்த முத்துவை போலிஸ் ஏன் கைது செய்தது, என்று அறிய அவன் வீட்டிற்க்கு சென்றோம். அங்கே, மேரியின் அப்பா வும் முத்துவின் அப்பாவும் பேசி கொண்டு இருந்தார்கள்..

என்னய்யா பையன வளத்து வைச்சி இருக்கீங்க?

பையனா அப்படி இப்படி தான் இருக்கும் . உங்க பொண்ணுதான் ஜாக்கிரதையா இருக்கனும். இப்ப என் பையன் என்ன பண்ணிட்டான்னு போலிசை கூப்பிட்டிங்க ..

என்ன பண்ணான? குளிக்க போன என் பொண்ணு பின்னாலே போய் இருக்கான்.. அதுவும் எங்கள் வீட்டில் நுழைந்து..

சரி, தவறி நடந்து போச்சு.. இனிமேல் அப்படி செய்ய மாட்டான்.. நீங்க கேசை வாபஸ் வாங்குக .. ப்ளீஸ்..

அவர் பேச்சை இவர் கேட்ட்க.. கேசும் வாபஸ் பெற, அன்று மாலை முத்து வெளியே வந்தான்.

முத்துவை பார்க்கலாம் என்று அவன் இல்லத்திற்கு சென்ற எங்களை முத்துவின் பெற்றோர்,..

ஏன் தம்பி.. முந்தி எல்லாம் "கூட்டு படிப்புக்காக" வருவீங்க.. ஏன் திடு திப்ப்னு நிருத்திடிங்க ..

நீங்க தான் வரகூடாதுன்னு முத்து சொன்னான்.. என்று நான் சொல்கையிலே..

முத்து குறுக்கிட்டு..

வாங்க.. வாங்க.. எப்படி இருக்கீங்க என்று எங்களை அவன் அறைக்குள் அழைத்து சென்றான்..

அங்கே..

என்ன ஆச்சி முத்து? ...(மவனே, எங்களை இங்கே வராத மாதிரி பண்ண இல்லை, உனக்கு இது தேவை தான்)?

ஒரு சின்ன "மிஸ்அண்டர்ஸ்டான்டிங்"

 "மிஸ்அண்டர்ஸ்டான்டிங்கா" இல்லை "மிஸ்ஸ சரியா அண்டர் ஸ்டாண்ட்" பண்ணலையா?

அதே தான்..

விளக்கமா சொல்..

விசு, எனக்கு பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும்.

எனக்கு கூடத்தான் ஹார்லிக்ஸ் ரொம்ப பிடிக்கும், குடிக்க கூட வேண்டாம் .. அப்படியே சாப்பிடுவேன்.. ஆமா .. அதுக்கு என்ன இப்ப..

மேரி எப்ப வீட்டின் பின்புறம் வந்தாலும், நான் அவளுக்கு கேக்குற  மாதிரி ஏதாவது ஒரு நல்ல காதல் பாடல் பாடுவேன்.

மேலே சொல்லு..

இன்னைக்கு காலையில்.. அவ பின் தோட்டத்தில் பூ பறிக்கையில்..

"'உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா"

பாட்டு பாடினேன்.

நல்ல பாட்டு தான்.. அதுக்கா போலிஸ் கைது பண்ணாங்க. உனக்கு பாட வராதா? நல்லா பாடாட்டி கூடவா கைது செய்வாங்க ?

இரு விசு..

அது நடந்து ஒரு அஞ்சி நிமிஷம் கழித்து மீண்டும் அந்த பக்கம் போகும் போது.. மேரி பாட்ற சத்தம் கேட்டது.  அந்த பாட்ட கேட்டு கொஞ்சம் தவறா புரிஞ்சிக்கினு ஒரு சின்ன தப்பு பண்ணிட்டேன்..

பாட்ட தவறா புரிஞ்சிக்கினியா ? அப்படி என்ன பாட்டு பாடுனா..

"முத்து, குளிக்க வாரீகளா"!.. அம்புட்டுதென்.

19 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வேற என்னத்த சொல்வேன் கிரேஸ் .. அம்புட்டுதேன்..

      நீக்கு
  2. அடடா....! எத்தனை பாடல் வரிகள்... தலைவரே... வணக்கம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான். வருகைக்கு நன்றி .. டி டி ...

      நீக்கு
  3. பின்னி எடுக்கறீங்க ஒவ்வொரு வரியிலும் நகைச்சுவை .இந்தப் பதிவை படிச்சு முடிக்க பத்து நிமிஷம் ஆயிடுச்சு. பின்ன? ஒவ்வொரு வரிக்கும் சிரிக்க வேண்டி இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே.. மலரும் நினைவுகளே இனிமை தானே. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு
  4. நகைச்சுவையுடன் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறீர்கள், விசு! வரைந்த படமும் அருமை, உங்கள் கைவண்ணமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரங்கா... இவ்வளவு ரசனையோடு என்னால் வரைய முடியாது ஐயா.. இதை வரைந்தவர்..என் அருமை நண்பர் தமிழ். சென்னை வாசி.

      நீக்கு
  5. ஆஹா..! எத்தனை ரசனையாக கூறுகிறீர்கள்! இடையிடையே பாடல் வேறு, அற்புதமான நகைச்சுவை மலரும் நினைவு. கடைசியில் முத்து குளித்தாரா..? இல்லையா..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசியில் முத்து குளித்து இருந்தால் இந்த பதிவை நான் பொறாமையோடு சோகமாக அல்லவா எழுதி இருப்பேன். இதுதான் சந்தோசமாக எழுதிய பதிவாய்ற்றே . வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வயிறு வலிக்கலாம் நண்பரே.. வயிறு எரிய தான் கூடாது.

      நீக்கு
  7. எப்படி எப்படிங்க இப்படி? சிரிச்சு சிரிச்சு புண்ணாயிருச்சு! மேரி சிரிச்சு சிரிச்சு சிறையில் இடாம போனாளே நல்ல வேளை! ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியா சொன்னீங்க தளிர். சரி கீதா அவர்களிடம் என் புத்தகத்தை பற்றி பேசினீர்களா ? கிடைத்ததா?

      நீக்கு
  8. தாங்கள் கணக்குப்பிள்ளையாய் ஆகியிருக்க வேண்டாம்.
    அருமை, வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வாங்க டீச்சர் , முதுகலை முடித்த கையோடு நானும் நண்பர் "கோ"வும் சினிமாவில் சேர எடுத்த முயற்சி மட்டும் வெற்றி பெற்று இருந்தால், நான் ஏன் கணக்கு பிள்ளை ஆகி இருப்பேன்... என்னை போனால் போகட்டும் போடா என்று பாட வைத்து விட்டீர்களே..

    பதிலளிநீக்கு
  10. சூழலுக்கு ஏற்ப
    பாட்டு வரிகள்
    கேளாமல் வருமே!

    பதிலளிநீக்கு
  11. அம்புட்டுதென்.//
    ஹாஹாஹா.
    முத்து பாவம்:)

    பதிலளிநீக்கு
  12. ஹஹஹஹ செம...கலக்கல்...அதுவும் முத்து, குளிக்க வாரீகளா...டண்டணக்கா ணக்கா ணக்கா நு பாடினீங்களா முத்து போலீஸ் கேசான போது...ஓ இந்தப் பாட்டு அப்போ வரலியோ...
    அஹஹஹ்ஹ் எல்லா பாட்டும் பொருத்தமாக..சூப்பர்..
    சரியான கார்ட்டூன் தமிழ் வாழ்க!!! சகவாசத்தில் மேரி வந்திருக்கலாமோ..
    முத்துக் குளிக்க வாரீகளா என்ற ஒன்று உங்கள் பதிவு உண்டே முன்பு இல்லையா...அதன் கன்டென்ட் வேறதான்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...