சனி, 10 அக்டோபர், 2015

நினைவுகளுக்கு நன்றி,ஆச்சி!

தமிழ் திரை  உலகிற்கு  இறைவனால் கொடுக்க பட்ட ஒரு பொக்கிஷம் அல்லவா " ஆச்சி மனோரமா" , என்ன ஒரு நடிப்பு. என்ன ஒரு திறமை.

மே 26, 1937ல் பிறந்து தன் வாழ்க்கை பயணத்தை கலையுலகில் நடத்தி வந்து 78வது வயதில் இறைவனை சேர்ந்தார். தம் நடிப்பால் கலையால் திரை உலகில் தனக்கு என்று ஒரு வழியை ஏற்படுத்தி கொண்டு முடிசூடா ராணியாக வளம் வந்தவர் அல்லவா? இருந்தாலும் கடந்த சில வருடங்களாக வயதினால் வரும் பிரச்சனைகளினால் நடிப்பு துறையில் இருந்து விலகி இருந்தார்.


எனக்கு "ஆச்சி" எப்படி பரியந்தம்..? இதோ சொல்கிறேன்.

புறநகரில் இருந்து சென்னைக்கு படிக்க வந்த நாட்கள். 10வது முடியும் வரை சென்னை பக்கமே போகாத என்னை, +2 படிப்பிற்காக என் அன்னை சென்னை அழைத்து வந்தார்கள்.

சென்ட்ரல் நிலையத்தில் இறங்கி வெளியே வந்து டவுன் வண்டி பிடிக்கும் வழியில் இருந்த சினிமா விளம்பரங்களை பார்த்த நான் பேய் அறைந்ததை போல் ஆனேன். ( பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்). எங்கே பார்த்தாலும் பெரிய பெரிய போஸ்டர்.  கண்கள் இரண்டும் மிரண்டு போயின.

பள்ளி கூடத்தில் சேர்ந்த நான், இங்கே என்ன மொழி பேசுகின்றார்கள் என்று நினைக்கும் படி, ஒரு வித்தியாசமான தமிழ். மாணவர்கள் பேசுகையில், ஒவ்வொரு வாக்கியத்தின் முன்னும் ஒரு "இனிசியல்" வைப்பது போல் ஒரு வார்த்தை.

என்னடா இது, வித்தியாசமாக இருக்கின்றதே, நாம் பேசுவதை வைத்தே இவர்கள் நம்மை "கிராமத்து மின்னல் " என்று நினைக்கையில், அருமை நண்பன் சோமு, விசு இந்த மொழியை கற்று கொள்ள வேண்டுமா? கவலையை விடு.

கமல் ஹாசன் அவர்கள் நடிக்க "சவால்" என்ற படம் ஒன்று வந்து  உள்ளது. அதில் மனோரமா அவர்களும் கமல் அவர்களும் பேசும் பேச்சை ஒரு நான்கு முறை பார், இந்த மொழியை கற்று கொள்ளலாம் என்று சொல்ல .. அந்த வாரத்தில், அந்த படத்தை ஆறு முறை பார்த்தேன்.

ஆச்சி (1937-2015)
படம் வரைந்தது : அருமை நண்பர் சுரேஷ் சீனு (சவுதி அரேபியா)  

பனியன் ஒன்றை போட்டு கொண்டு , லுங்கியும் கட்டி கொண்டு என்ன ஒரு "பாணி" (கமல் அல்ல, மனோரமா அவர்கள்). "ஹே" என்று வில்லன் கூறும் போது .. "ஹே ... ஹே" என்று சொல்லி "வீடு" கட்டுவார்களே , அன்றில் இருந்து இவர்கள் கலைக்கு நான் அடிமை.

அதன் பின் ஆச்சியின் பழைய படங்கள் எல்லாவறையும் பார்க்க ஆரம்பித்தேன். அவற்றில் என்னை கவர்ந்தது தில்லான மோகனம்பாள்  மற்றும் அனுபவி ராஜா அனுபவி.

நாகேஷ் அவர்களுடன் ஆச்சி நடித்த படங்கள் தான் எத்தனை. யார் கண் பட்டதோ , ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசுவதை கூட நிறுத்தி கொண்டனர்.

விசு அவர்களின் (நான் இல்லைங்க ) இயக்கத்தில் "மணல்கயிறு" மற்றும் "சம்சாரம் ஒரு மின்சாரம்" படத்திலும் இவர்களின் நடிப்பு சிறப்பாக இருக்கும்.

பின்னர், சிரிப்பில் இருந்து சற்று மாறி முன்னணி நடிகர்களுக்கான அம்மாவாக நடிக்க ஆரம்பித்தார்.

"சின்ன தம்பி"யில், விதவையான இவர்களின் வெள்ளை சேலை மேல் வர்ணநிற சாயத்தை வீசும் போது ... இவர்களின் முகம் காட்டும் சோகம் தான் எவ்வளவு.

மற்றும் அண்ணாமலையில் ரஜினியின் அம்மாவாக, அபூர்வசகோதார்களில் கமலின் தாயாக என்று. என்ன ஒரு நடிப்பு.

பல தலைமுறைகளை பார்த்து வந்தவர் தானே ஆச்சி. இன்று அவர் இறைவனடி சேர்ந்தார் என்பதை நினைக்கையில் மனம் ஒரு அறியா சோகத்தை தழுவுகின்றது.

நன்றி ஆச்சி அவர்களே, நினைவிற்கு.

ஒ.. மறக்கும் முன்னர்..

ஆச்சியின் பாட்டு திறமை. " வா வாத்தியாரே வூட்டாண்ட "  பாடலில் ஆரம்பித்து எத்தனை மனதை கவரும் பாடல்கள்.

எத்தனனையோ பாடல்கள் இருந்தாலும் இளையராஜா இசையில் இவர் பாடிய ஒரு பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த பாடலில் ஆசியும் பாடுகின்றார் என்பதே எனக்கு சில வருடத்திற்கு முன் தான் தெரியும். என்ன பாடல் அது என்று நீங்கள் கேட்பது காதை கிழிக்கின்றது. அதை கேட்க  நீங்கள் என் பழைய ஒரு பதிவை இங்கே படிக்கவேண்டுமே..

படியுங்கள்..

இளையராஜாவிடம் சுட்டியா?....நல்லா இருக்கே!



தங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் ஆச்சி அவர்களே.. மீண்டும் நன்றி...
 நினைவுகளுக்கு நன்றி,ஆச்சி!

4 கருத்துகள்:

  1. விசு,

    மனோரமா பாடிய பல பாடல்களில் வாழ நினைத்தால் வாழலாம் படத்தில் உள்ள கானாங்குருவி என்ற ஒரு ஊமைப் பாடல் கேட்க அருமையாக இருக்கும். இதற்கு இசை இளையராஜா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி காரிகன். எங்கே ஆலைய காணோம். இதோ அந்த பாடலை கேட்க ஓடி செல்கிறேன்.

      நீக்கு
  2. ஆச்சி மனோரமா தென்னிந்திய திரை உலகின் துருவ நட்சத்திரம் போன்றவர்! ஆழ்ந்த இரங்கல்கள்!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...