செவ்வாய், 12 ஜனவரி, 2016

இது விளம்புமா சுலோ ?

ஊரில் நன்கு படித்த, பெயர் பெற்ற, கொழுத்த பணக்காரி  தான் "சுலோ" என்று அழைக்கபடும் சுலோச்சனா! காலையில் எழுந்தவுடன் தன்னிடம் பணிபுரியும் உதவியாளரிடம் அன்றைக்கான நிகழ்சிகளை பற்றி பேசி கொண்டு இருந்தாள்.

அம்மா, இன்றைக்கு ஒரு முக்கிய கூட்டம், நிறைய படித்தவர்கள் , அரசியல்வாதிகள் , சினிமா நட்சத்திரங்கள்   எல்லாரும் வருகின்றார்கள். அங்கே நீங்கள் தான் சிறப்பு பேச்சு.


அதற்கு ஏற்றாற்போல் உடை அணியுங்கள் என்று சொல்லியபடிய.. ஆயிரக்கணக்கில் அடுக்கி வைத்து இருந்த "பட்டு" புடவைகள் தாங்கிய அலமாரியை திறந்து வைக்க .

சுலோ ஒவ்வொன்றாக பார்த்து அந்த சிவப்பு நிற புடவையை தேர்ந்தெடுத்தாள்.

அம்மா, போன வாரம் கூட ஒரு கூட்டத்தில் வேறு ஒரு சிவப்பு  சாயலான புடவை தான் கட்டி இருந்தீர்கள். இன்றைக்கு பச்சை அணியலாமே..

இல்லை .. நேற்று நண்பர் ஒருவர் காஷ்மீர் பகுதியில் இருந்து உயர்ந்த ரக "செம்மறி ஆட்டு" மயிரினால் செய்யப்பட்ட ஒரு மேலாடை கொடுத்துள்ளார். அதன் நிறம் இந்த புடவைக்கு தான் ஒத்து போகும் என்று சொல்லி சாப்பாடு மேசையில் அமர.

அங்கே பணிபுரியும் 13 வயது சிறுமி,

அம்மா, பால்..

என்று கூறி ஒரு கோப்பையை  அங்கே வைக்க, அதை எடுத்து குடித்த சுலோ அந்த சிறுமியை பளாரென்று அறைந்தாள்.

வாயே சூடு பட்டுடிச்சி . எவ்வளவு  நாளா சொல்லி இருக்கேன்.. எனக்கு பால் இதமான சூடா தான் தரனும்னு . அறிவு இல்லை உனக்கு?

என்று சத்தம் போட..

அந்த சிறுமியோ வலி தாங்க முடியாமல்  மன்னிப்பு கேட்டு கொண்டே அங்கு இருந்து வெளியேறினாள்.

அப்போது அங்கே வந்த பணியாளர் பெண்..

அம்மா. இந்தாங்க இதமான பால் ..

என்று வேறொன்றை கொடுக்க.. அதை ருசி பார்த்த சுலோ,

இது என்ன "பசு மாட்டு" பாலா?

ஆமா .. அம்மா..

உனக்கு தெரியாதா? நான் காந்தியவாதியாயிற்றே . "ஆட்டுப்பால்" தான் குடிப்பேன் ..

என்று அதட்ட..

அந்த பணியாளரும் மிரண்டடித்து "ஆட்டு" பாலை தேடி ஓடினார்.

அடுத்து மேசைக்கு காலையுணவை பரிமாற வந்த அம்மணி..

அம்மா..

பிரட்.. பட்டர்..தரட்டுமா?

நிறைய தூரம் வாகன பயணம் இருக்கு .. பட்டர் நெஞ்சு  மேலே இருக்கும். அந்த ப்ரெடில் கொஞ்சம் "தேன்" தடவி கொடு ... கூடவே ஒரு "ஹால்ப் பாயில் முட்டை" கொடு.

அனைத்தையும் உண்டு விட்டு, வெளியே கிளம்புமுன்  "முதலை "தோலினால் செய்ய பட்ட தனக்கு மிகவும் பிடித்த விலைவுயர்ந்த கை பையை  எடுத்து கொண்டு,

சொலாபூரில் இருந்து வரவைக்க பட்ட "சீமை மாட்டு" தோலில்  செய்த காலனியை எடுத்து வர சொல்லி அணிந்து கொண்டாள்.

இது ரப்பரினால்  செய்த காலனி போல் இருக்காது. இன்னும் சொல்லபோனால் இந்த காலனியை நாம் அணிவது நமக்கே தெரியாது. அவ்வளவு உயர்தரம்.

வாகனத்தில் ஏறி அமர.. மூச்சு வாங்கி கொண்டே வந்தார்  அறுபது வயது ஓட்டுனர்.. சிலவருடங்களாகவே அவருக்கு கொஞ்சம் மூச்சு திணறல். பதினைந்து  வயதில் இவரின் தகப்பன் சுலோவின் தாத்தாவிடம் வாங்கிய கடனை திரும்ப கட்டமுடியாதலால் "இவன் வேலை செய்து அடைப்பான்" என்று சொல்லி விட வாழ்நாள் முழுவதும் இரண்டு வேளை அரை சாப்பாடிற்காக இந்த வீட்டிற்கு வேலை  செய்தே கழித்து விட்டார்.

வீட்டு வேலைக்கு சரியான பெண் கிடைக்கவில்லை, அப்படியே கிடைத்தாலும் அவளுக்கு சம்பளம் வேறு தர வேண்டும், என்று எண்ணி சுலோ இவருக்கு கிராமத்தில் இருந்து செல்லதாயி என்ற ஒரு பெண்ணை பார்த்து மணம் முடித்து வைத்து அந்த பெண்ணையும் சம்பளம் இல்லாமலே நாற்பது   வருடம் வேலை வாங்கி கொண்டாள்.

வண்டி கிளம்புகையில் வாசல் அருகே இருந்த மரக்கிளை ஒன்று வண்டியின் மேல் லேசாக பட.

சுலோவா .. ஆத்திரம் அடைந்து..

மாணிக்கம். உனக்கு போன வாரமே சொன்னேன் இல்ல.. அந்த கிளையை வெட்டுன்னு .

இல்ல அம்மா.. அது வந்து..

நீ வர வர ரொம்ப சோம்பேறியா ஆயிட்ட .

இல்ல அம்மா அது வந்து..

பின்ன ஏன் அந்த கிளையை வெட்டல?

ஒரு "மாடப்புறா" ஜோடி அந்த கிளையில் கூடு கட்டி அவையம் இருக்கு! இன்னும்  ரெண்டு வாரத்தில் அது குஞ்சுகளோடு பறந்துடும் . அப்புறம் வெட்டலாம்ன்னு..

அறிவு இருக்கா உனக்கு ? வெளிநாட்டு கார் முக்கியமா ? மாடப்புறா கூடு முக்கியமா? உடனே போ அரிவாளை எடுத்துன்னு வந்து வெட்டு.

அம்மா..

போ மாணிக்கம்..

என்று அதட்ட... மாணிக்கம் அந்த கிளையை வெட்ட .. மாணிக்கத்தின் மனைவி செல்லத்தாயி பதறி அடித்து கொண்டுவந்தார்கள்.

ஐயோ.. நாசமா போறவனே.. அந்த கிளையில்தான்யா புறா அடகாக்குது.. என்ன காரியம் பண்ற?

என்று கதறியவர்கள், சுலோவை பார்த்தவுடன் ..

கும்புடறேன்ம்மா .

என்று சொல்லி கொண்டே விலகி விட்டார்கள்.

ஒரு பறவையின் அடை கலைவதை தாங்கி கொள்ள இயலாத மனம் செல்லதாயுக்கு.

முப்பது வருடத்திற்கு முன் , அவள் திருமணமாகி சுலோ வீட்டிற்கு வந்த சில மாதங்களிலே வாந்தி எடுக்க..

இந்த சனியனன்களுக்கு ஒரு பிள்ளை பிறந்தால், அதை யார் கவனிப்பது என்று எண்ணி, "செல்லதாயுக்கு" வயிற்றில் ஏதோ வியாதி என்று சொல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கே வயிற்றில்  வாழும் "சிசு"வையும் நசுக்கிவிட்டு மீண்டும் கருத்தரிக்காமல் இருக்க செல்லதாயுக்கு சொல்லாமலே நிரந்தர அறுவை சிகிச்சையும் செய்ய சொன்னதும் சுலோ  என்று  ..

பாவம் செல்லதாயுக்கு தெரியவே வேண்டாம்.

மூச்சு இறைக்க மாணிக்கம் அந்த கிளையை வெட்ட , கிளையோடு சேர்ந்து  கூடும் சிதற.. .கூட்டில் இருந்த இரண்டு முட்டையும் உடைந்து தெறிக்க, சில நிமிடங்களுக்கு முன் இந்த உலகில்  வந்த ஒரு மாடபுராகுஞ்சு பிறக்கும் முன்னே இறக்க ..

வந்து வண்டியை ஒட்டு!

ஓட்டினான், ஈர கண்களோடு.

நேரா புள்ளையார் கோயிலுக்கு ஒட்டு,

அடுத்த சில நிமிடங்களில் வண்டி அங்கே அடைய.. சுலோ இறங்கி கோயில் உள்ளே சென்றாள் அங்கே அலங்கரிக்கப்பட்ட ஒரு "யானை" நான்கு கால்களிலும் சங்கிலியில் கட்டபட்டு  தன் பாகனின் ஆணைகிறங்கி  சுலோவை தன் தும்பிக்கையால் ஆசிர்வதித்தது.

அங்கு இருந்து கிளம்பியவள்...நேராக அருகில் உள்ள "குதிரை" பந்தய மைதானத்தில் நுழைந்தாள். கடந்த ஆறு  தலைமுறையாக இங்கே சுலோவின் குடும்பத்தினருக்கு சொந்தமான குதிரைகள் தான் சாம்பியன். சுலோவின்  குடும்பத்து சொத்தில் ஐந்தில் நான்கு பாகம் இந்த  குதிரைகளின்  மூலமாக வந்தவை தான்.

அங்கே உள்ள கிளப்பில் அமர்ந்து .. தனக்கு பிடித்த "நாட்டு கோழி" சூப் ஒன்றை   மட்டும் வாங்கி பருகி கொண்டு இருக்கையில், மாணிக்கம் அங்கே வந்து..

அம்மா .. பொது கூட்டத்திற்கு நேரமாகி விட்டது.

சரி வண்டியை எடு..

அரங்கில் நுழைந்தாள்.. ஊரிலே பெரிய பணக்காரி அல்லவா.. அனைவரும் தம் தம் இருக்கையில் அமர்ந்து சுலோவின் சிறப்புரைக்காக காத்துகொண்டு இருந்தார்கள்.

சுலோவின்  நேரம் வந்து..

என் இனிய தோழர் தோழிகளே.. இது ஒரு சாதாரண கூட்டம் அல்ல. ஒரு மாபெரும் அநியாயத்தை எதிர்த்து மனசாட்சி உள்ள மாமனிதர்கள் மட்டும் போராடும் போராட்டம்.

ஒரு வாயில்லா ஜீவனை ஓட விட்டு .. அதை கொடுமை படுத்தி துரத்தி துரத்தி பிடிப்பது .. ஒரு விளையாட்டா ? ஜல்லிகட்டை உடனே தடை செய்ய வேண்டும்.

என்று தொண்டை கிழித்து கத்தி கொண்டு இருக்க.

செல்லதாயோ... இறந்த  புறாகுஞ்சையும் உடைந்த முட்டைகளையும் ஒரு குழி தோண்டி புதைத்து கொண்டு இருந்தார்கள்.

மேலே.. எங்கே எங்கள் கூட்டை  தாங்கிய கிளையை காணோம் என்று அந்த ஜோடி புறாக்கள் வட்டமடித்து தேடி கொண்டு இருந்தது.

பின் குறிப்பு :

மாணிக்கம், வண்டிய நேரா காட்டு பங்களாவிற்கு   விடு.. அந்த வாசலில் இருந்த கிளைய  போல வீட்டை சுத்தி நிறைய மரங்கள் ரொம்ப வளர்ந்து இருக்கு. நாளைக்கு ஆட்களை கூப்பிட்டு அத எல்லாத்தையும் வெட்டி போட   சொல்லு..

சரி அம்மா..

என்ற மாணிக்கமோ...

ஐயகோ.. வேப்பமரத்து  கிளி கூடு, கொய்யா மரத்து  தேன் சிட்டு, அரச மரத்து மைனா ...எல்லாவற்றையும் நினைத்து கொண்டே ...

அம்மா .. இந்த நேரத்திலே காட்டு பங்களாவா... வழியில் நிறைய மிருகம், முயல் , பாம்பு, மான்!

பின்னாலே இன்னொரு வண்டியிலே நம்ம கூர்க்காவும், வாட்ச்மன் ஆறுமுகமும் துப்பாகியோட வரங்கா... அப்படி ஏதாவது முயல் மானை  பார்த்தால் சொல்லு . நாளைக்கு மதியம் லஞ்ச் பிரச்சனை  முடிஞ்சது..

இது விளம்புமா சுலோ ? 

8 கருத்துகள்:

  1. நடுக்காட்டில் 'சுலோ'வை கட்டுப் போட்டு விட்டு வர வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. கூக்குரலிடுபவர்கள் யார், அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது, அவர்கள் சொந்தக் காரியங்களில் எவ்வளவு தூரம் சொன்னதைக் கடைபிடிக்கிறார்கள் என்று பார்த்தாலே, so called volunteers எல்லாம் வெத்து என்பதை அறியலாம்.

    ஜல்லிக்கட்டை முறைப்படுத்தினாலே போதுமானது.

    மிருக வதை என்று சொல்பவர்கள் எல்லோரும், பெல்ட், செருப்பு, ஜாக்கெட் போன்றவற்றிர்க்கான தோல் எங்கிருந்து எப்படி வருகிறது என்பதை ஆராயச்சொல்ல வேண்டும். அவர்கள் நடப்பதற்குத் தார் ரோடு போடும் வேலையாட்களை, சமூகம் எப்படி நடத்துகிறது, அந்த மனிதர்களுக்கு என்ன செய்தால் அவர்கள் வாழ்க்கைத்தரமோ, வேலைசெய்யும் சூழலோ உயரும் என்று ஆராய்ச்சி செய்தால் புண்ணியமாகப்போகும்.

    உங்கள் கட்டுரை, 6 வரிகள் படித்ததுமே எதை நோக்கிச் செல்கிறது என்பது தெரிந்துவிட்டது. அது சரி.. "விளம்புமா"ன்னா என்ன? "இது நாயமாரே.. மாதிரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி ஐயா...

      இந்த காரியம் உருப்படுமா? விளம்புமா? என்ற பேச்சு தமிழை கேட்டு இருக்கின்றேன்.

      நீக்கு
  3. சுலோ போன்றவர்களை “பாலோ” செய்யாமல் இருப்பதே நாட்டுக்கு நலம்! சிறப்பான பதிவு!

    பதிலளிநீக்கு
  4. வண்டி கிளம்புகையில் வாசல் அருகே இருந்த மரக்கிளை ஒன்று வண்டியின் மேல் லேசாக பட.

    சுலோவா .. ஆத்திரம் அடைந்து...
    நல்ல நையாண்டி .

    தலைப்பு-- விளங்குமா? என்றிருக்க வேண்டுமோ?


    கொஞ்சம் சுலோவா .. போய் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பதிவை எப்படித் தவற விட்டோம்! ம்ம் நல்ல பதிவு விசு! கதையாகச் சொல்லி ஏறுதழுவுதல் பற்றிய அரசியலையும் கமுக்கமாகச் சொல்லிவிட்டீர்கள்.

    பெரும்பான்மையான மக்கள் hypocrites தானே விசு. பேசுவது ஒன்று நடந்துகொள்வது வேறு. தனவான்களையும், ஆட்சியில் இருப்பவர்களையும் பற்றிக் கேட்கவே வேண்டாம்..

    பதிலளிநீக்கு
  6. இது வெளியிட இல்லை தலைப்பில் விளம்புதல் இல்லாமல் இது விளங்குமா?? என்றிருக்கணும் இல்லையா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...