சனி, 16 ஜனவரி, 2016

நாங்க "புது"சா ....நாங்க "புது"சா ...

 "புது" கல்லூரி வருடம் ஆரம்பிக்கும் நேரம்.

ஜூன் 11, 1982.  இளங்கலை படிக்கையில் இரண்டாம் ஆண்டு கோடை விடுமுறை முடிந்து "புதிய" கல்லூரி ஆண்டு துவங்கும் நேரம். முதலாம் ஆண்டில் கல்லூரி நான் "புதிது" அல்லவா. அனைத்து பாடங்களையும்  ஒழுங்காக படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற "புது" ஆசையை "புது"ப்பித்து  கொண்டு "புத்"துயிர் பெற்றவன் போல் படித்த வருடம் ... முதலாம் ஆண்டு. பள்ளிகூடத்தில் இருந்த ஒழுக்கம் பயம் எல்லாம் கொஞ்சம் கூடவே இருந்தது.


இரண்டாம் ஆண்டு... ஆரம்பத்தில் இருந்தே "புது"சா ஒரு தைரியம், திமிர்.  

என்னாது... நம்ம வகுப்பில் இல்லாவிட்ல் வீட்டுக்கு தெரியாதா? இது "புது"சா இருக்கே ..சொல்லவே இல்லையே.

என்ற ஒரு "புதிய" எண்ணம் மனதில் வர, பழைய நற்குணங்கள் மறைய, வகுப்பிற்கு அருகிலே அடியேனை பார்ப்பதே அரிதான வருடம் தான், இரண்டாம் வருடம். டிசம்பர் மாதம் மூன்று பாடங்களுக்கான பரீட்சை. அந்த மூன்றிலும் தவறியதால் மே மாதம் ஆறு பரீட்சையாக மாறியது.  82 ஏப்ரல் மாதத்தில் எழுதிய அந்த ஆறு தேர்வில் ஒன்றே ஒன்றில் தேர்வு பெற்றதால், கடைசியாக வர இருக்கும் மூன்றாம் ஆண்டில் பதினொன்று பாடங்களை எழுத வேண்டும் என்ற நிர்பந்தம்.

கோடை விடுமுறையின் போதே... பக்கத்து வீட்டு அண்ணாமலை...

என்ன விசு? இந்த வருடம் பதினோரு பரீட்சை போல் இருக்கே ..

ஆமாம் மலை... எந்த பண்றது.. ?

வீட்டுக்கு தெரியுமா? 

தெரியாதே.. பள்ளிகூடத்தில் போல ஒரே வகுப்பில் "பைல்" பண்ணி உட்க்கார வைப்பதிலையே.. அதனால் தப்பித்தேன். 

அட பாவி.. அப்ப  இந்த வருடம் பதினொன்றும் பாஸ் பன்னாட்டி மவனே உனக்கு தீபாவளி தான்..

ன்னடா சொல்ற?

விசு.. இளங்கலை மூன்று வருடம் தான். இந்த வருடம் அரியர்ஸ் வைச்சா  வீட்டுல தெரிஞ்சிடும் ..

அன்று தான் புரிந்தது, இதன் சீரியஸ் ...

கோடை விடுமுறையிலே  டுயுசன் செல்ல ஆரம்பித்து படிக்க ஆரம்பித்தேன். 82 கோடை விடுமுறையில் அடியேனை போல் படித்தவன்  உலகிலேயே யாரும் இருக்க முடியாது.

மே மாதம் முடிந்தது.. ஜூன் ஆரம்பித்தது. ஜூன் 14, 1982 மூன்றாம் ஆண்டின் துவக்கம் , அதற்காக "புது புது" புத்தங்களை வாங்கி எல்லாவற்றிக்கும் "புதிதாக" ஒரு அட்டையை போட்டு  விட்டு  திங்கள் ஆரம்பிக்கும் "புதிய" வகுப்பிற்காக வெள்ளி அன்றே தயாராகி விட்டேன்..

மீண்டும் வந்தான் அண்ணாமலை.தனக்கு "புதி"தாக வாங்கி தரப்பட்ட "சைக்கிள்" ஒட்டி கொண்டே.

என்ன விசு.. முழு கோடை விடுமுறையிலும் ஒரு முறை கூட கிரிக்கட் ஆட வரல..

டுயுசன்...

இது என்ன "புது" பழக்கம்? விடுமுறையில் டுயுசன்? 

அண்ணாமலை, இது அடுத்த வருடம் "புதுசா"  வர பாடத்துக்கு இல்ல , ரெண்டாம் வருடம் தவறிய பாடத்திற்கு ...அது தான், மொத்தம் பதினோரு பரீட்சை.

சரி.. திங்கள் தானே கல்லூரி.. இன்றைக்கு தானே வெள்ளி.. வா.. ரஜினியின்  "புது" படம் ரிலீஸ் ஆயிருக்கு .. போய் காலை ஆட்டம் பார்த்துட்டு வரலாம்.

என்ன, இன்னைக்கு ரஜினி "புது" படம் வருதா?

இதுகூடவா தெரியல?

அண்ணாமலை, தினத்தந்தி படிச்சே ரெண்டு மாசம் ஆச்சே.. எல்லாம் இந்த ரெண்டாம் வருடத்து அரியர்ஸ் தான். 

ஆமா விசு..கவிதாலயா ... படம்..

அடே.. KB   இயக்கமா ?

இல்ல  SP ..

அப்ப மசாலாவா இருக்குமே, இருந்தாலும் என்னால முடியாது.. கொஞ்சம் படிக்கணும்.. 

விசு.. "புது"படம்.. திங்களில் இருந்து படிக்கலாம் .. இன்னைக்கு மட்டும்.. வா..

வேண்டாம்.. எனக்கு கொஞ்சம் வேலையும் இருக்கு.

என்ன வேலை?

திங்கள் கல்லூரியில் "புது" ஆண்டு.. "புதுசா" ஒரு "ஸ்டெப் கட்டிங் " ஸ்டைல் வந்து இருக்கு.. அது ஒன்னு போடணும். 

சரி வா, நானும் ஷேவ் பண்ணவேண்டும் ...  , சலூனுக்கு போகலாம்.

இருவரும் சலூனை அடைய அங்கே எங்களுக்கு முன் வரிசையில் சிலர்.. 

அங்கே பணி புரிபவர்.. விசு, மலை.. ஒரு அரை மணிநேரம் ஆகும். 

சரி.. 

என்று சொல்லிவிட்டு, அருகில் இருந்த டீ கடைக்கு சென்று.. 

அண்ணாமலை .. டீயா .. காபியா?

விசு..டீ தான் .. ஆனால் இப்ப ஆர்டர் பண்ணாத.

ஏன்?

விசு.. டீ போடறவர கொஞ்சம் கவனி. அவர் எப்ப அந்த பில்டரை எடுத்து பழைய டீ  பொடியை கொட்டிட்டு "புதுசு" போடறாரோ .. அப்ப ஆர்டர் பண்ணனும் .அப்ப தான் டீ சூப்பர்..

எப்படி அண்ணாமலை.. ? இவ்வளவு விவரமா இருக்க ?

என்று சொல்லிவிட்டு .. அவர் "புது" டீ தூள் போட்டவுடன் இரண்டு டீ வாங்கி குடிக்க .. அண்ணமாலை சொன்னது உண்மை தான். சூப்பர்..

குடித்து கொண்டே இருக்கையில் .,

டீ கடை ரேடியோவில்... மூன்றம் பிறையில் வந்த.. "பூங்காற்றே .. "புதி"தானதே ..." என்ற பாடலை ஜேசுதாஸ் பாடி கொண்டு இருந்தார்.. 

அண்ணாமலை.. என்னதான் SPB தொடர்ந்து "புது புதுசா" ஹிட்ஸ் கொடுத்தாலும்.. ஜேசுதாஸ் ஜேசுதாஸ் தான், அண்ணாமலை ..

என்று கூறுகையில்..

நீங்கள் இப்போது கேட்டது ...மூன்றாம் பிறையில் ஜேசுதாஸ் பாடியது. அடுத்த பாடல், அதே ஜேசுதாஸ் ஜானகியோடு இணைந்து பாடிய ... என்று சொல்லி பாடலை ஆரம்பிக்க.. ஜானகி அவர்கள்.. 

ஆ... ஆ ... அ ஆ... என்று ஒரு அருமையான ராகத்தை ஆரம்பிக்க... ஜேசுதாஸ் அவர்கள்... "வெள்ளை புறா ஒன்று ..." என்று பாட ஆரம்பித்தார்.

முதல் முறை கேட்கும் போதே மனம் சிலிர்த்தது.

அண்ணாமலை.. இது எந்த படம் .. அண்ணாமலை? இந்த படத்தை நான் பார்த்த மாதிரி தெரியலையே..

விசு.. இந்த படத்த இன்னும் யாரும் பாக்கல, இது இன்னைக்கு ரிலீஸ் ஆகும் ரஜினியின் "புது" படத்தில் வர பாடல்.

படம் பெயர் என்ன? 

"புது கவிதை "

அடே டே .. பாட்டு சூப்பரா இருக்கே ..இந்த பாழா போன அரியர்ஸ் மட்டும் இல்லாட்டி இன்றைக்கு காலை காட்சி போய் இருக்கலாமே.. 

என்று நினைக்கையில் அண்ணாமலையோ..

விசு.. இன்னைக்கு ஒரு நாள் தானே... வா போகலாம் 

என்று கூறுகையில்... சலூனில் இருந்து ஒரு சத்தம்... 

விசு,  மலை... வாங்க..

நான் ஸ்டெப் கட்டிங் தயாராக.. அடுத்த இருக்காய் காலியாக இருப்பதை பார்த்து..

அண்ணா மலை .. அதுல உட்கரு, வேலை முடியும்.

விசு.. அவரை கவனித்து பார். அவர் எப்ப "புது" ப்ளேடு போடறாரோ அப்பத்தான் உட்க்காரனும்..

அண்ணாமலை.. நீ எங்கேயோ போய்ட்ட...

என்று சொல்லி அமர.. சலூனில் இருந்த டேப் ரெகார்டர் .."வா வா வசந்தமே "என்ற பாடலை ஆரம்பித்தது.

அண்ணாமலை.. இந்த பாடல்..

மலேசியா .. "புது கவிதை" படத்தில் தான். வா விசு போகலாம்.

என்று சொல்ல ... நானும் ஒத்துகொள்ள.. விசு ஒரே நிமிஷம்.. போற வழியில் வீட்டிற்கு கொஞ்சம் மளிகை சாமான் வாங்கணும்.. என்று சொல்ல..இருவரும் அங்கே போக... 

செட்டி... அம்மா .. மளிகை வாங்கியர சொன்னாங்க..

என்ன வேணும்.. காபி தூள்.. "புதுசா" வந்து இருக்கா ?

இருக்கு...

புளி..

என்று அவனும் கேட்க்க.. நானோ.. அவசரகுடுக்கையாக .. புளியும் "புது"சான்னு பாத்து கொடு, செட்டி என்று சொல்ல.

செட்டி என்னை ஒரு மாதிரி பார்க்க... 

அண்ணாமலையோ..

செட்டி..விசு தமாஸ் பண்றான்.. புளி பழசாவே கொடு என்று சொல்ல... 

அது சரி அண்ணாமலை.. இப்ப "புது கவிதை " படத்துக்கு டிக்கட் காசு?

என்ன விசு "புது"சா கேக்குற...

காபி தூள்... புளி... இன்னும் சில மளிகை சாமான்.. இதை வாங்குற கமிசனில் "புது"கவிதை படம் மட்டும் இல்ல விசு.. இடைவெளியில் "புது"சா வருமே ... க்ரீம் பன் .. அதுக்கு கூட காசு வரும். 

6 கருத்துகள்:

  1. அருமையான நினைவுகள். இடையிடையே அன்றைய பாடல்களை சொல்லியிருப்பதும் மனதை தொட்டது.
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. புதுக்கவிதையின் பாடல்கள் அதுவும் அந்த வெள்ளைப்புறா ஒன்று... என்றென்றும் ரசிக்கக் கூடிய பாடல்! எப்படியெல்லாம் ப்ளான் பண்ணி படம் பார்த்திருக்கீங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. செம ரெட்ரோ எஃபக்ட். செம ப்ளான் !!! போகிற போக்கில் பாடல்க்ளைச் சொல்லியவிதமும் அருமை...

    பதிலளிநீக்கு
  4. இதைச் சொல்ல மறந்தே போய்விட்டோம்...புது புது...என்று பதிவு முழுவதும் சொல்லி புதுக்கவிதை" படத்தையும் சொல்லித் தலைப்போடு ஒன்றி அழகா சொல்லிட்டீங்க விசு...

    பதிலளிநீக்கு
  5. Good article but it seems to be combination of imagination and real, anyhow good one

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...