ஞாயிறு, 10 ஜனவரி, 2016

மீண்டும் விசு, வரும் புதன் வரை...

இதை படிக்கும் முன் என் கடந்த பதிவான


நாளை முதல் என்னை இங்கே தேட வேண்டாம்...

என்ற பதிவை படித்து விட்டு வாருங்கள், அப்போது தான் விஷயம் முழுமையாக புரியும்.

இரவு 8 மணி ஆனது. இந்த குலுக்கல் நடப்பதை சற்று மறந்து விட்டு இருந்த நான், செய்திகள் படிக்க கணினியை தட்ட, அதில் 900 மில்லியன் வென்றது யார் ? என்ற தலைப்பு செய்தி இருந்தது.


மனதில் ஒரே திக்.. திக்.. மூளையில் மீண்டும் .. எப்படி செலவு செய்ய போகிறோம் என்ற பெரிய கேள்வி குறி ...

என்னுடைய சீட்டை எடுத்து எதிரில் வைத்து கொண்டு அந்த வெற்றி பெற்ற எண்ணை பரிசோதிக்க ஆரம்பித்தேன்.

ஏற்கனவே சொன்னது போல், இந்த குலுக்கல் முறையில் 1ல் இருந்து 69 வரை ஆறு எண்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் . அந்த ஆறு எண்களும்  சரியாக வந்தால் 900 மில்லியன்.

மனதில் இருந்த திக் திக்கை கட்டு படுத்தி கொண்டு .. சீட்டை பரிசோதித்தேன்.

முதல் நம்பர் ...

அடேங்கப்பா.. என் எண்ணும் வெற்றி பெற்ற எண்ணும் ஒன்றே.. மீண்டும் மனதில்..

விசு .. இது உனக்கு தான் போல் இருக்கு.. எப்படி இவ்வளவு பணத்தை செலவு செய்ய போகிறாய் ? என்ற கேள்வி மனதில் மின்னல் போல் வந்து சென்றது..

அடுத்த எண்.. என் தலையில் இடி விழுந்தது.. வெற்றி பெற்ற எண் வேறு. என்னிடம் இருக்கும் எண் வேறு.

அதிர்ந்தே விட்டேன். இப்போது என்ன செய்வது ? எப்படி செலவு செய்ய வேண்டும் என்று எழுதி அல்லவா வைத்து இருந்தேன்.

ஐயகோ.. இவ்வளவு செலவு இருக்கின்றதே, நான் எங்கே போவேன் என்ற சோகத்துடன்.. சரி.. 900 மில்லியன் தான் கிடைக்க வில்லை, வேறு ஏதாவது ஆறுதல் பரிசாவது இருக்கின்றதா என்று அடுத்த எண்களை பரிசோதித்தேன். ஆறாவது எண்ணும் ஒரே மாதிரியாக இருந்ததால் .. எனக்கு கிடைத்த பரிசு எட்டு டாலர்.

வேறு எந்த விஷயமாய் இருந்தாலும், நாலு மடங்கு லாபத்திற்கு சந்தோஷ  பட்டு இருக்கலாம். இங்கே முடியவில்லையே. சரி, 900 மில்லியனை யார் தான் வென்றார்கள் என்று ஆர்வ கோளாறும் பொறாமையும் சேர்ந்து தேட ஆரம்பித்தேன் .

அப்போது கிடைத்தது தான் ஒரு ஒரு நல்ல அதிர்ச்சி செய்தி.

இந்த வாரமும் யாருக்கும் முதல் பரிசு கிடைக்கவில்லை. அதனால், இந்த  குலுக்கல் மீண்டும் அடுத்த புதன் என்று அறிவிக்க பட்டு இருந்தது.

அடுத்த புதனா? இன்னும் மூன்று நாட்கள் உள்ளதே. என்று யோசித்து கொண்டே படிக்க ஆரம்பித்த எனக்கு மேலும் ஒரு அதிர்ச்சி .
900 மில்லியன் மட்டுமே இருந்த பரிசு தொகை, அடுத்த புதன் குலுக்கலுக்கு 1.3 பில்லியனாக கூடி போனது" என்ற செய்தி தான் அது.

மனம் தான் என்ன ஒரு குரங்கு. முதலில் எனக்கு தான் என்ற ஒரு எண்ணம். பிறகு அது எனக்கு இல்லை என்றவுடன், யாருக்கு என்ற பொறாமை. பிறகு யாருக்கும் இல்லை என்றவுடன் அதில் ஒரு திருப்தி. மீண்டும் அது எனக்கே வரும் வாய்ப்பு உண்டு என்றவுடன் உடனே சந்தோசமாக மாறும் திருப்தி.

சற்று நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை நான் "எப்படி செலவு செய்வது " என்று எழுதி வைத்து இருந்த குறிப்பை நோட்டமிட்டேன். 900 மில்லியனை செலவு செய்யவே இவ்வளவு சிரம பட்டேனே. இப்போது கூட இன்னொரு 400 மில்லியன் .

என்னய்யா சோதனை இது?

"கும்புட்ற தெய்வம் கூரைய பிச்சினு கொடுக்கும்"ன்னு சொல்வாங்களே, அதுதான் எவ்வளவு பெரிய உண்மை.. என்று நினைத்து கொண்டு, கூடுதலாக வர போகும் 400 மில்லியன் டாலர்களை எப்படி செலவழிக்க போகின்றோம் என்று எழுத ஆரம்பித்தேன் .

சனிகிழமை ரெண்டு டாலருக்கு வாங்கிய சீட்டு இப்போது எட்டு டாலராக மாறியுள்ளது. அதை வைத்து மொத்தம் நான்கு சீட்டுகள் வாங்கலாம்.  அதுமட்டும் அல்லாமல் , வீட்டில் அங்கே இங்கே சிதறி இருக்கும் சில்லறையை சேர்த்தால் கிட்டத்தட்ட இன்னும் ஒரு 20-25 சீட்டுக்கு  தேறும் என்று நினைத்து கொண்டே இருக்கையில்..

நண்பன் தண்டபாணியின் தொலை பேசி..

வாத்தியாரே..

சொல்லு பாணி..

உன் பிறந்த நாள் என்ன?

சொன்னேன் ..

மாதம்..

அதையும் சொன்னேன்..

வருடம் ..

அதையும் சொன்னேன்

மூத்த ராசாத்தி பிறந்த நாள்

அதையும் சொன்னேன்.

இளைய ராசாத்தி பிறந்த நாள்..

அதையும் சொன்னேன்..

கடைசியா ஒரு கேள்வி, வாத்தியாரே..

தண்டம்... திடீர்ன்னு உனக்கு என்ன என் வாழ்வில் நடந்த நல்ல காரியங்களின் நாட்கள் மேலே அக்கறை ..

புரியாத மாதிரி பேசாத வாத்தியாரே. லாட்டரி டிக்கட் மொத்த பரிசு 1.3 பில்லியன் .. வர புதன் அன்னிக்கு குலுக்கல். நீ தான் ரொம்ப ராசியானவனாச்சே .. அதனால தான் உனக்கு ராசியான எண்களை குறித்து  ஒரு டிக்கட் வாங்கலாம்னு இருக்கேன்.

டேய்.. நான் ராசின்னு உனக்கு யார் சொன்னா?

என்ன வாத்தியரே.. உனக்கு இருக்க மூளைக்கு நீ எட்டாம்ப்பு கூட பாஸ் பண்ணி இருக்க கூடாது. ஆனால் கணக்கு பிள்ளையாகி இருக்கியே..
இதைவிட ஒருத்தன் எப்படி ராசியா இருக்க முடியும்...

டேய்.. தண்டம்.. இது கொஞ்சம் டூ மச்..

சரி , கடைசியா ஒரே கேள்வி  .. நீ அமெரிக்காவில் முதல் முறையா கால் வைச்ச தேதி..

ஒ அதுவா.. என்று கேட்டு .. அதையும் சொல்லி அலைபேசியையும் வைத்தேன் .

பின்னர்.. அட பாவி.. நமக்குள்ளே இவ்வளவு ராசியான எண்கள் இருக்கே,இதை வைத்தே இந்த 1.4 பில்லியன் டாலரை தட்டி விடலாம் என்று அந்த எண்களை மீண்டும் குறித்து கொண்டேன்.

நாளை எப்படியாவது கடைக்கு சென்று என்னுடைய ராசியான எண்களை வைத்து முடிந்த அளவு டிக்கட்களை வாங்க வேண்டியது என்று எண்ணி .. குட் நைட் சொல்லாம் என்று மூத்தவளின் அறைக்கு சென்றேன்.

குட் நைட் .. ராசாத்தி.

குட் நைட் டாடி..

என்று அவள் சொன்னவுடன்.. அவள் மேசையில் இருந்த உண்டியல் கண்ணில் பட்டது.

ராசாத்தி.. இந்த உண்டியல் ஒரு மூணு வருசமா இங்கே இருக்குமா?

ஆமா டாடி... உயர்நிலை பள்ளி சேர்ந்த நாளில் இருந்து எனக்கு கிடைத்த சில்லறை எல்லாம் இதில் தான் போட்டு வைத்து இருக்கேன்.

மூணு வருஷமாவா? மொத்தம் எவ்வளவு வரும்?

தெரியில. மினிமம் 500 டாலராவது வரும்.

ஐநூறு..

என்று காதில் விழுந்தவுடன் .. சொக்கா ... சோமநாதா என்று நான் அலற..

அவளோ..

டாடி.. ரொம்ப நாளா  உங்களை கேக்கனும்னு யோசித்தேன்.. ஒவ்வொருமுறையும் நீங்க "எக்சைட்" ஆகும் போது .. "சொக்கா.. சோமநாதா"  ன்னு கத்துரிங்களே.. வாட் இஸ்  "சொக்கா.. சோமநாதா" ?

அது ஒன்னும் இல்ல ராசாத்தி.. சரி நீ தூங்கு..

ஏன் டாடி.. திரும்பவும் அந்த உண்டியலையே பாக்குறிங்க?

ஒ.. அதுவா.. அழகா நல்ல பொம்பை போல் இருக்கு இல்ல.. அதுதான்..

இதையே அழகா இருக்குன்னு சொல்றிங்களே.. சின்னவ அறையில் போய் பாருங்க.. அவ உண்டியலை கிட்ட தட்ட ஆறு வருசமா வைச்சுனு இருக்கா...

ஆறு வருசமா... சொக்கா.. சோமநாதா ...!

பாத்திங்களா .. நான் சொன்ன மாதிரியே... ஒவ்வொருமுறையும் நீங்க "எக்சைட்" ஆகும் போது .. "சொக்கா.. சோமநாதா.." ன்னு கத்துரிங்க..

சரி குட் நைட்..

என்று சொல்லி விட்டு .. சிறியவள் அறையை நோக்கி செல்லுகையில்.. மூணு வருஷத்திலே ஐநூறு இங்கே தேரும்னா..அங்கே ஆறு வருஷத்தில் .. .ஐயோ... போற போக்க பாத்தா நிறைய டிக்கட் வாங்கலாம் போல இருக்கே.. என்று நினைத்து கொண்டே ...

குட் நைட் ராசாத்தி..

குட் நைட்..

இந்த உண்டியல் எவ்வளவு நாளா இருக்கு..?

ரொம்ப அவசியமா ?

இல்ல, சும்மா சொல்லேன்..

ஆறு  வருஷம் 3 மாசம்.. 5 நாள் 4 மணி நேரம்.

எப்படி இவ்வளவு சரியா சொல்ற.. என்று நான் ஆச்சரிய பட ..

இதுக்கே ..இவ்வளவு ஆச்சரிய படுரிங்களே .... அதுல எவ்வளவு இருக்குன்னு கூட என்னால சொல்ல முடியும்.

எப்படி?

ஒவ்வொரு முறையும் அதுல காசு போடும்  போது எழுதி வைச்சி தானே போடுறேன்..

அப்படியா? எங்கே சொல்லு எவ்வளவு இருக்கும்னு?

குட் ட்ரை.. டாடி.. நான் சொல்ல மாட்டேன்..

சரி ... விடு.. என்று சொல்லி கொண்டே.. என் அறைக்கு நான் வர...
தூக்கம் வர மறுத்தது.

ரெண்டு உண்டியலையும் காலி செய்து .. அதுக்கும் டிக்கட் வாங்கி.. 1.4 பில்லியன் வந்ததும்.. முதல் வேலையா.. அதுல சில நூறை சிலரையா மாத்தி இதுல திரும்பியும் போட்ட கண்டு பிடிக்கவா போறாங்க.

என்று நினைத்து கொண்டே தூங்க முயல்கையில்..

சரி, விசு.. அந்த கூடுதலா வர 400 மில்லியன எப்படி செலவு செய்ய போறனேன்னு முடிவு பண்ணலையே என்ற நினைவு வர..

அது சுலபம்.. இந்த பதிவை படிக்கும் சக பதிவர்கள் அவர்களுக்கு ராசியான எண்கள் .. 1ல் இருந்து 69 க்குல் ஆறு எண்கள் தர சொல்லலாம். அந்த எண்களில் சீட்டு வாங்கலாம். அதில் விழுற பரிசில் அவர்களுடைய பங்கை பிரிச்சி தரலாம் , என்ற நினைவு வந்தது.

ஒரு வேளை நிறைய பேர் எண்களை தந்தாங்கனா? பிரச்சனையாகிடுமே என்று உள்மனது சொல்ல.. சரி.. முதலில் வரும் பத்து பின்னோட்டங்களுக்கு மட்டும்ன்னு ஒருசட்டம் போடலாம்.. என்று எழுதி வைத்து கொண்டேன்.. (ஸ்டார்ட் மியூசிக் அண்ட் பின்னூட்டம்.. உங்களுக்கு பிடித்த ஆறு எண்கள் மட்டும் 1ல் இருந்து 69 க்குள் ).

பின் குறிப்பு :

என்ன விசு .. உனக்கு ராசியான எண்களை தண்டபாணிக்கு தாரைவார்த்து விட்டாயே.. ஒரு வேளை அவர் வெற்றி பெற்று விட்டால்... ?

எனக்கு என்ன அறிவா இல்லை. அவர் கடைசியா அமெரிக்கா எந்த தேதி வந்தேன்னு கேட்டார் இல்ல. அதுக்கு நான் பொய்யா ஒரு பதில் சொல்லிட்டேன்.

அப்படி என்ன பொய் தேதி சொன்ன?

தண்டபாணி திருமண நாள அவருக்கே சொன்னேன். அதுதானே அவருக்கு ரொம்ப ராசியான நாள்.. 

7 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. ராத்திரி 11. 30 மணிக்கு எனக்கு இது தேவையா.. விசு காசு என்னாச்சு ன்னு பாக்கணும்னுதான்! பாத்தா, அவர் என்னடான்னா நமக்கே லாட்டரி மேலே விசுவாசம் பண்ண வைக்கிறார். ( நான் லாட்டிரி கீட்டீரி )எல்லாம் திரும்பி கூட பார்க்காத டைப் . அட நமக்கே ஒரு சுவாரசியமான தகவல், நாமும் ஒரு எண் கொடுத்து வைக்கலாமே.. 1 4 8 1 9 4 7 !

    பதிலளிநீக்கு
  3. சொக்கா... சோமநாதா... உண்டியல் உடைபடக்கூடாது...
    10,21,34,44,52,60

    பதிலளிநீக்கு
  4. ஹஹஹஹஹஹ்ஹ்....ஐயோ விசு! ஹும் அருமை நண்பர் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்குமான மிஸ்டர் தண்டபாணியை இப்படி அவரது ராசியான திருமண நாளை???!!!! சொல்லி ஏமாத்திட்டீங்களே..உங்களையே கவுத்துக்கிட்டீங்களோ..??!!அவரு உங்களுக்குத்தானே டிக்கெட் வாங்கக் கேட்டார்.!! அப்ப அவரு உங்களுக்காக வாங்கும் டிக்கெட் கோவிந்தாவா! சொக்கா விசுவுக்கு வந்த சோதனை!! ராசாத்திஸ் பி கேர்ஃபுல்...சேவ் யுவர் Pocket!

    பதிலளிநீக்கு
  5. ராசாத்திங்களா உண்டியலைப் பத்திரமா எடுத்து வைங்கம்மா.. :)

    1, 1, 1, 1, 1, 1 அதுக்கு மேல எனக்குத் தெரியாதே :))))

    பதிலளிநீக்கு
  6. 4, 8, 19, 27, 34, 10 என்று வாங்குங்க.. நிச்சயம் பரிசு உங்களுக்குத்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட பாவி மனுசா.. இதை நாலு நாளுக்கு முன்னால சொல்லி இருக்க கூடாதா?

      வருகைக்கு நன்றி...

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...