வியாழன், 8 ஜனவரி, 2015

ஐஸ் ப்ரூட்.. ஐஸ் ப்ரூட்...

டாடி...கொஞ்சம் வந்து காரை எடுங்க..

ஏன் ராசாத்தி ?

பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கட் போய் கொஞ்சம் ஐஸ் கிரீம் வாங்கணும்.

ஐஸ் க்ரீம்மா? இதோ கிளம்புறேன். ஒரு ஐந்து நிமிடம் கொடு மகளே...

கிளம்ப தயாராகி கொண்டு இருக்கும் வேளையில் அடுத்த அறையில் இரண்டு பிள்ளைகளும் சிரிக்கும் சத்தம் கேட்டது... காதை அந்த பக்கம் விட்டேன்.


அக்கா... அது என்ன உனக்கு எப்ப சூப்பர் மார்க்கட் போய் என்ன வாங்க வேண்டும் என்றாலும் அப்பாவிடம் ஐஸ் க்ரீம் வாங்கலாம்னு சொல்ற?

வேற என்ன சொன்னாலும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லுவாரு? ஆனால் ஐஸ் க்ரீம் கேட்டா மட்டும் உடனே ஓடி வருவார். "ஹி லவ்ஸ் ஐஸ் க்ரீம்", அதனால் தான்.

ஆமா நானும் கவனித்தேன், நான் கூட இனிமேல் இந்த பிளான்  தான்!

என்ன தைரியம் இருந்தால் என்னை இப்படி ஏமாத்தி இருப்பிங்க ? இப்ப என்ன பண்றேன் பாரு, என்று ஒன்னும் சொல்லாமல் ... "ஐஸ் க்ரீம்" வாங்க நான் ரெடி நீங்க ரெடியான்னு ஓடோடி வந்தேன்..


பிள்ளைகள் சொல்லியது போல நான் ஐஸ் க்ரீம்க்கு அடிமை தான். சிறு வயதில் இருந்தே ஐஸ் க்ரீம் என்ற வார்த்தை கேட்டவுடனே எனக்கு வாய் எல்லாம் பல் தான். இந்த அடிமைத்தனம் தாறுமாறாக போனதினால் வாயில் ரெண்டு பல் கம்மியானதும் "மறைக்க முடிந்த உண்மை". அதை பற்றி மற்றொரு நாள் பார்ப்போம்.

நேராக கடைக்கு வண்டியை விட்டேன், கடையின் உள்ளே நுழைந்தவுடன் :

அப்பா நீங்க இங்கேயே இருங்க, நான் ஒரு 15 நிமிடத்தில் வருகின்றேன்.

ஐஸ் க்ரீம் வாங்க ஏன் மகள் 15 நிமிடம்?

அதற்க்கு முன் இன்னும் சில விஷயங்கள் வாங்க வேண்டி இருக்கு டாடி.. ப்ளீஸ் வெயிட் ..

கையில் இருந்த அலை பேசியில் நேரத்தை குறித்து கொண்டு, அந்த ஐஸ் க்ரீம் வைத்து இருந்த இடத்தை நோக்கி நடந்தேன்!

அடேங்கப்பா ..எத்தனை விதமான ஐஸ் க்ரீம்.. நூற்று கணக்கில் வெவ்வேறு நிறத்தில், வெவ்வேறு படங்களோடு , வெவ்வேறு பழங்களோடு... கொழுப்பு  குறைந்தது.. சர்க்கரை குறைந்தது ... பால் வகை பொருள் இல்லாமல்... பல விதம் .. பல விதம், ராசாத்தி  வரும் வரை இதில் உள்ள ஒவ்வொன்றாக ரசித்து பார்க்க ஆரம்பித்தேன்,

பார்வை அங்கே இருந்தாலும் மனது பல்லாயிரம் மைல்கள் தாண்டி தமிழ் நாட்டில் உள்ள சிறு கிராமத்திற்கு என்னையும் மீறி ஓடியது...

பாம்.. பாம்.. பாம்...

டேய் விசு, இன்றைக்கு என்ன செவ்வாய் கிழமையா? ஐஸ் வண்டி வந்து இருக்கு..

அந்த தெருவில் இருந்த அத்தனை பிள்ளைகளும் ஓடி வர அந்த ஐஸ் சைக்கிள் இருந்த இடத்தை நோக்கி ஓடினோம்.

ஒரு பழைய சைக்கிள். அதன் முன்னே மணிக்கு பக்கத்தில் ஒரு சத்தம் போடுவதற்கான ஹார்ன். அதன் பின்னால் ஒரு மரத்தினால் செய்த பெட்டி. அந்த பெட்டியை ஒரு பழைய "சைக்கிள் டுயுப்" மூலம் கட்டி வைத்து இருந்தது.

ஆளுக்கு ஐந்து காசு வீட்டில் தந்து இருந்தார்கள்.  அதை விற்பவரிடம் கொடுத்தவுடன் அவர் கேட்ட ஒரே கேள்வி .. "சிவப்பு - பச்சை - நீலம்". அந்த மூன்றில் ஒரு நிறத்தை ஒவ்வொருவராக சொல்ல அவரும் ஆளுக்கொரு ஐஸ் எடுத்து கொடுத்தார்.

இப்படி போய் கொண்டு இருக்கையில்.. எங்கள் பள்ளியில்  படிக்கும் ரமா மற்றும் யோகராணி ரெண்டு பேரும் அங்கே வந்தார்கள். இவர்கள் இருவரின் பெற்றோரும் அரசு அலுவலகத்தில் மூத்த அதிகாரிகள். இவர்கள் எங்களை போல் ஐந்து காசு ஐஸ் சாப்பிடமாட்டார்கள்.

10 காசு கொடுத்தால் அதற்கு  ஏற்றார் போல் ஒரு சேமியா அல்ல ஜவ்வரிசி போட்ட ஐஸ் கிடைக்கும். 20 காசிற்கு சுத்தமான பாலினால் செய்த "பால் ஐஸ்".


இந்த சேமியா- ஜவ்வரிசி- பால் ஐஸ் க்ரீம் போன்றவற்றை என்னை போன்றோர் பண்டிகை நாட்களில் சாப்பிட்டு உள்ளோம், அதனால் அதன் ருசி எங்களுக்கு தெரியும். அவர்கள் சாப்பிடுவதை பார்த்து கொண்டே.. திருவிளையாடலில் தருமி சொன்னது போல்  " எனக்கு இல்லை , எனக்கு இல்லை " என்று சொல்லி கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினோம்.

போகும் வழியில், என் நண்பன் முருகன்..

விசு.. இங்க பாரு, என் ஐஸ்ல் ஒரு சேமியா இருகின்றது என்று பெருமை பட்டு கொண்டான்.

வலது புறத்தில் இருந்த நரசிமனின் ஐஸ் தன் பச்சை நிறத்தை இழந்து சாதாரண ஐஸ் போல் வெறும் தண்ணீரால் செய்தது போல் காணப்பட்டது.

 இந்த ஐஸ் க்ரீம் நிறம் இழக்காமல் எப்படி சாப்பிட வேண்டும் என்று அவனுக்கு விளக்கினேன்.

இனிமேல் நீ சொல்லி கொடுத்த மாதிரி செய்யறேன் விசு, உனக்கும் ஒரு ஐடியா சொல்றேன். அந்த ஐஸ் பெட்டியில் கீழே கையை வைத்து கொண்டால் அதின் உள்ளே இருந்து ஐஸ் உருகி உருகி அதில் சொட்டு சொட்டா கொட்டும். அதை நம்ம கையில் பிடித்து கொண்டு ரசித்து குடிக்கலாம்.

டேய் பாவி, அதனால்தான் நீ எப்ப ஐஸ் வண்டி வந்தாலும் கையில் காசு இல்லாட்டிகூட அங்க வந்து சைக்கிள் பக்கத்தில் நிர்ப்பாயா?

ஆமா விசு. இனிமேல் நீ ஒரு பக்கம் நில் நான் மறுபக்கம் நிக்கிறேன்.

ரொம்ப தேங்க்ஸ், சரி.. என்று சொல்லிவிட்டு என் கையில் இருந்த ஐஸ் சாப்பிடலாம் என்று வாயை திறக்கையில் ...

டாடி... என்ன இது.. முன்னே பின்ன பார்க்காது போல் இங்க எல்லார் எதிரேலேயும் வாயை திறந்து கொண்டு... லெட்ஸ் கோ.

ஐஸ் க்ரீம்..?!

வாங்கியாச்சு டாடி..

என்ன கலர்? பச்சையா  - சிவப்பா - நீலமா?

டாடி.. உணர்ச்சி வசபடாதீர்கள், இந்த ஒரு பாக்கெட்டில் 18 கலரில் வித்தியாச வித்தியாசமா இருக்கு.

பின் குறிப்பு :
என்னதான் 18 நிறத்தில் இருந்தாலும் அந்த ஐந்து காசில் வாங்கி உண்ட இன்பம் இல்லையே.. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, எல்லாரும் அங்கு இருந்து கிளம்பியவுடன் .. மீண்டும் அந்த "ஐஸ் க்ரீம்" சைக்கிள் நின்று இருந்த இடத்திற்கு வந்தேன். அங்கே .. வெங்கலத்தில் செய்யப்பட்ட வட்ட வடிவில் ஒரு 20 காசு நாணயம் கொஞ்சமும் நாணம் இல்லாமல் என்னை எடுத்து கொள், என்னை எடுத்து கொள் என்றது.  இது யார் கையில் இருந்து விழுந்து இருக்கும்? ரமாவா .. யோகராணியா? அதை பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

நண்பர்களே,
என்னுடைய பதிவுகளும் மற்ற படைப்புகளும் www.visuawesome.comhttp://www.visuawesome.com/blog/  என்ற தளத்திற்கு மாற்ற பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த  Blog Spot  ல் அடியேன் இருக்க மாட்டேன். என் எழுத்துக்கள் தங்களுக்கு பிடித்து இருந்தால் www.visuawesome.com  என்ற தளத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர் பார்த்து..
  

5 கருத்துகள்:

  1. சைக்கிள் வண்டியில் ஐஸ்கிரிம் சாப்பிட்ட காலம் எல்லாம் பொற்காலம்! அந்த சுவை இப்போதைய ஐஸ் கிரிமில் துளியும் கிடைக்காது!

    பதிலளிநீக்கு
  2. சைக்கிள் வண்டியில் ஐஸ்கிரிம் சாப்பிட்ட காலம் எல்லாம் பொற்காலம்! அந்த சுவை இப்போதைய ஐஸ் கிரிமில் துளியும் கிடைக்காது!

    பதிலளிநீக்கு
  3. பள்ளிக் கால நினைவுகள் மீண்டும் நெஞ்சில் அலை வீசுகின்றன நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. விசு,

    ஐஸ் அனுபவம் நைஸ் பதிவு.

    பழைய நினைவுகளில் உள்ளத்தை உருக்கினாலும் நினைவில் சுவைகூட்டியது.

    நல்ல தொரு பால் ஐஸ் பதிவு.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...