Saturday, July 8, 2017

வெள்ளிக்கிழமை விஷேஷம் ..

இறக்கி வைச்சிருக்கேன்!   இறக்கி வைச்சிருக்கேன்
!பொன்னாங்கன்னி மிளகாய்  போட்டு  இறக்கி வைச்சிருக்கேன்!. 

இந்த வாரம் செவ்வாய் கிழமை விடுமுறை ஆச்சே.. அதனால வெள்ளி கிழமை வந்ததே தெரியல. வெள்ளி மாலை வந்தவுடன் பொதுவாக அம்மணி வேலையில் இருந்து வர்றதுக்குள்ள வீட்டு பின் புற  தோட்டத்தை சுத்தம் பண்ணிடுவேன்.

ஏன்னு கேக்குறீங்க? நல்ல கேள்வி தான்.

நம்ம சுத்தம் பண்ணும் போது அம்மணி அங்கே இருந்தாங்கனா சுபர்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.. அது நமக்கு ஆகாது. அது மட்டும் இல்லாம.. இப்படி பண்ணுங்கோ.. அப்படி பண்ணுங்கோன்னு ஒரே விஷயத்தை மேஜர் சுந்தராஜன் பாணியில்  இங்கிலிஷ் - தமிழ்ன்னு மாத்தி மாத்தி அறிவுரை வேற..

இந்த வெள்ளியும் அப்படி தான் ஆரம்பிச்சது.. இங்கே இப்ப எல்லாம் ஒரு கான்சப்ட் வந்து இருக்கு.. "Raised Garden Bed" உயர்த்தி அமைக்க பட்ட படுக்கை!

புதுசா ஒன்னு வந்துட கூடாதே.. அம்மணி வாங்கி வந்து அதுல கத்திரி - புதினா - தக்காளி - லொட்டு - லொசுக்குன்னு போட்டுட்டாங்க. அதுக்கும் மேலே ஒரு ஓரத்தில் ஒரு சின்ன தொட்டியில் பொன்னாங்கன்னி கீரை.. அந்த  பொன்னாங்கன்னி கீரை தொட்டிய இந்த உயர்ந்த படுக்கை தோட்டம் மேலே வைக்கணும். வீட்டை சுத்தி நிறைய முயல். எட்டிச்சினா மொத்தத்தையும் கும்பலா சேர்ந்து அரை மணி நேரத்தில் காலி பண்ணிடும்.
உயர்த்தி தோட்ட படுக்கையின் மேல் பொன்னாங்கன்னி.. 

இந்த மாதிரி தான் இந்த வெள்ளியும் ஆரம்பிச்சேன். பொன்னாங்கன்னி தொட்டிய தூக்கி கீழே வைச்சிட்டு மத்த எல்லாத்தையும் சுத்தம் பண்ணிட்டு வீட்டுக்குள்வரும் பொது எட்டு மணி.

அம்மணியும் வீட்டை வந்து சேர..

பின்னால சுத்தம் பண்ணிடீங்களா...

எஸ் மேம்...

சூப்பர், பொன்னாங்காணி நல்லா வளந்து இருக்கு... இந்த ஞாயிறு சமைக்கிறேன்..

சூப்பர்.. ஆண்டவன் பொன்னாங்கன்னிய படைச்சதே அம்மணி சமைக்க தான். இவங்க சமையல் அப்படி இருக்கும்.

நினைத்து கொண்டே படுத்தேன்..

காலையில் அம்மணியும் கண்மணிகளும் வெளியே கிளம்ப.. நானும் தோட்டத்து புறம் வந்து பார்க்கையில் ... பேய் அறைந்தது போல் அலறினேன்.

சுத்தம் செய்யும் போது கீழே வைத்த பொன்னாங்கன்னியை மீண்டும் மேலே வைக்க மறந்துவிட்டேன். மொத்த கீரையையும் முயல்  ஸ்வாஹா..

தொட்டியை பார்த்தால்.. ஊரான் காசை கொள்ளையடித்து விட்டு திருப்பதிக்கு மொட்டை போட்ட சேகர் ரெட்டி.. கும்புடுறேன் சாமி OPS இருவரின் தலை போல் இருந்தது..

கண்ணும் மணியுமா அம்மணி காத்து வந்தாங்கா..
அய்யயோ.. என்ன பண்ணுவேன்..


இவர்கள் மூவரும் இல்லம் வருமுன் ...


அடிச்சி புடிச்சி மார்க்கெட் போய்.. பச்சை நிறத்தில் இருந்த அம்புட்டு இலையும் வாங்கியாந்து.. பிரட்டி வைச்சேன்..

பின்னர் :

என்னங்க இது.. வித்தியாசமா இருக்கே?

நம்ம

வீட்டு பொன்னாங்கன்னி தான்.. கூட இந்த ஊர் கீரையும் ஒன்னு போட்டேன்.
உனக்கு பிடிக்கும்னு நானே பிரட்டிட்டேன்...

ஓ..  பொன்னாங்கன்னி நல்லா வளந்து இருந்ததே .. நாளைக்கு நானே கூட்டு  பண்ணலாம்னு யோசித்தேன். இனிமேல் இந்த கீரையை நீங்க சமைக்காதீங்க நானே சமைக்கிறேன்.

பின்குறிப்பு :

இனிமேல் நீங்க இதை சமைக்காதன்னு சொன்னாங்களே.. ஒரு வேளை சமையல் கேவலமா? பொதுவா நல்லா இருக்குன்னு தானே சொல்லுவாங்க..

எது என்னமோ.

மயிரிழையில் தப்பித்தேன். 

Monday, July 3, 2017

ஹோட்டலில் போய் சாப்பிடுறவன் எவன்?

ஹோட்டலில் போய் சாப்பிடுறவன் எவன்? - நிர்மலா சீதாராம்.


ஆணவ திமிர் பிடித்த அமைச்சருக்கு...ஒரு விளக்கம்..

இங்கிலாந்து நாட்டில் மேல் படிப்பு படிக்க செலவு செய்யும்
 வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து ஆந்திராவில் காங்கிரஸ் அமைச்சரின் மகனை  காதல் திருமணம் செய்து கொண்டு.. பிறந்த நாளில் இருந்து இன்று வரை பசி - பட்டினி - சமையலறை - கழிவறை இல்லாத பத்து அடி அறை - கைக்கும் வாய்க்கும் எட்டும் அளவான கூலி ... என்று எதையும் அறியாத தமக்கு
ஹோட்டலில் சாப்பிடுறவன் எவன் என்று தான் கேட்க தோன்றும்.


என் வாழ்க்கையில்  24  வயதில் பாம்பாயில் வாழ்ந்து கொண்டு இருந்தேன் .. அன்று ஒரு நாள்..

அலுவலகத்திற்கு சென்ற என்னோடு இன்னும் மூன்று பேர். நால்வருமே தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக பாம்பே சென்றவர்கள். தம்மை போல் இங்கிலாந்து சென்று படிக்க எங்கள் பெற்றோர்கள் அரசியல் ஆதாயம் கொண்டவர்களாய் இல்லாவிடினும் . அவர்களின் கடின  உழைப்பால் அவர்கள் செய்த தியாகத்தினால்  நாங்கள் நால்வருமே அவரவர் துறையில் முதுகலை பெற்றவர்கள்.

சம்பளம் .. ஆளுக்கு 2 ,500  மாதத்திற்கு..

தங்கியதோ பத்துக்கு பத்துக்கு என்ற அறை. காலையில் ஆறு மணிக்கு முன்னால் நாங்கள் விளக்கையோ மற்றும் சத்தம் எதுவும் போட கூடாது. வீடு உரிமையாளரின்  எழுதாத சட்டம்.

Friday, June 30, 2017

தண்டத்துடன் ஒரு XXX பதிவு....

வெள்ளி மாலை....

அலுவலகத்தை விட்டு வெளியே வந்து வண்டியை  எடுக்கையில்......அலறியது அலை பேசி...

வாத்தியாரே...

சொல்லு தண்டம்...

ஜூலை 4  ...இப்பதான் போன மாதிரி இருந்தது வந்துடுச்சி ...

எங்கே இருந்து பேசுற... நவம்பரில் தானே வரேன்னு சொன்ன...

பசங்க தொந்தரவு வாத்தியாரே. பத்து நாள் லீவ் போட்டு வந்து இருக்கேன். ஜூலை 4 க்கு என்ன பண்ற?

இதுவரை ஒன்னும் பிளான் இல்ல .. என்ன பண்ணலாம் சொல்லு?

சுந்தரி வரும் போதே ஒரு கண்டிஷனோடு தான் வந்தா..

என்ன கண்டிஷன்...

இந்த பத்து நாளும் கிச்சனில் நுழைய மாட்டாளாம்..

கொடுத்துவைச்சவன் தண்டம் நீ.. அடுத்த பத்து நாள் உனக்கு ருசியான  சாப்பாடு...

Wednesday, June 28, 2017

எஸ் வீ க்கு சுப வீயின் பதில் என் மூலம்..

சுப வீ அவர்களுக்கு எஸ் வீ சேகர் எழுதிய பதில் கடிதத்தை படித்தேன்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த நாடக நடிகரின் IQ என்னவாக இருக்கும் என்று வியந்தேன்.

ஏன் என்று பார்ப்போம்.

Tuesday, June 27, 2017

அரளி !

அருகில் சென்றேன்
அதிர்ந்து நின்றேன்
அழகின் இலக்கணம்
அயர்ந்தேன் ஒரு கணம் .

அவளும் தமிழா
அசையில் உமிழா
அவளுக்கு என்றேன்
அருகே சென்றேன்

Monday, June 26, 2017

சிம்புவுக்கு ஒரு ....

சிம்புவுக்கு ஒரு ....

சிலம்பரசன்.. இதை எழுத ஆரம்பிக்கும் முன் ஒரு உண்மை. இதுவரை நீ நடித்த எந்த படத்தையும் நன் பார்த்ததில்லை. தொழில் நுட்ப வளர்ச்சியினால் தமிழ் திரை உலகின் பாடல் அல்ல சிரிப்பு காட்சி ஏதாவது பார்க்கலாம் என்று யு டுயூப் பக்கம் சென்று தட்டினால் அங்கே நீ நடித்த படங்களின் காட்சிகளும் வரும். அதில் கூட இதுவரை உன் நடிப்பை ஒரு நிமிடத்திற்கு மேல் பார்த்தது இல்லை.

ஏன் பார்ப்பதில்லை?

என்  கல்லூரி நாட்களில் தான் உன் தந்தை கொடி கட்டி பறந்தார். ஆரம்பத்தில் அவரின் இரண்டு படங்களை ரசித்தேன்.. ஆனால், அதன் பின்னால் வந்த படத்தில் படத்தில் அவரின் காட்சிகள் அதிகமாக வருவதால் அவர் படத்தையும் பார்ப்பதை தவிர்த்து விட்டேன்.

இனிய தளத்தில்  எங்கே சென்றாலும் டி ராஜேந்தர் அவர்களின் பேச்சை பார்த்தால் முக்கால் சுளிக்க தோன்றும். ஒரு மனிதன் எப்படி கொஞ்சமும் கூச்சமில்லாமல் தன்னை தானே இப்படி போற்றி கொள்ள இயலும் என்று வியந்த  நாட்கள் உண்டு. TR போல் சுயஸ்துதி யாராலும் பாட இயலாது என்ற எண்ணம் உன் பேச்சை  கேட்டதும் தவிடு பொடியாகியது.

Thursday, June 22, 2017

முதல் முதலாக பார்த்த போது...


மூத்தவள் பிறந்த அன்று
முழுமையானேன் என்று இருந்த வேளையில்..
மூன்றே வருடத்தில்
முழுவாம இருக்கேன் என்று

முந்தானையில் முகத்தை துடைத்து கொண்டே
மூச்சு வாங்க
முணுமுணுத்தாள்
மூன்று முடிச்சி வாங்கியவள்..

முழுக்க பொய் தானே
முகத்தை பார்த்து சொல் என்றேன்..
முன்னே வந்தாள் சொல்லவில்லை..
முகத்திலே தெரிந்தது  அகத்தின் அழகு...

முன் ஏற்பாடு எதுவும் இல்லையே
முன்பின் உதவிக்கும் ஆள் இல்லையே
மூன்று பேர் என்று தானே இருந்தோம்
முதலுக்கே என்றேன் .. வாய் அடைத்தாள்..

மும்மாரி பொழிய மாதங்கள் கழிய
முழு கற்பிணியானாள்
முதலில் எனக்கு சொல்லுங்க
மூத்தவள் ஆசைக்கு அடுத்தது  ஆஸ்திக்கா?


மூடினேன்  வாயை
முகர்த்தேன் மூத்தவளை ஆஸ்தி எனக்கெதற்கு
முடிந்தால் ஆசைக்கு இரண்டு கொடு
முனங்கினேன்  அவள் காதில்

Wednesday, June 21, 2017

கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா ?

கோடை விடுமுறை ஆரம்பித்து ஒரு இரண்டாம் வாரம். மூத்த ராசாத்தி ஒரு வாரம் விடுமுறையை அனுபவித்து விட்டு இரண்டாவது வாரம் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டாள். அவள் பணி  புரியும் "கோல்ப் கோர்ஸ்" அவளுக்கு மிகவும் பரிச்சயமான இடம். 8 வயது முதல் வருடத்தில் பாதி நேரத்தை இங்கேயே செலவழித்தவள், அதனால் அனைவரையும் தெரியும்.

இளையவளுக்கு 14 வயது . முழு நேர வேலைக்கு செல்லாவிடிலும், அவளும் மூத்தவளோடு காலையில் கிளம்பி சென்று விடுவாள். அங்கே நடக்கும் சம்மர் கேம்பில் வாலெண்டியராக பணி புரிவாள். அதற்கு பணம் பெறாவிட்டாலும் உணவு கிடைக்கும்.

நாட்கள் இப்படி போக.. நேற்று இளையவளோடு ஒரு உரையாடல்..

டாடி .. போன  ஞாயிறு (Fathers Day)  நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் அவங்க அவங்க கல்யாணத்த பத்தி பேசினோம்.சற்று அதிர்ந்தேன். சுதாரித்து ...பதினைஞ்சு ஆக  இன்னும் ஒரு வாரம் இருக்கு. இப்ப கல்யாணத்த பத்தி என்ன அவசியம்? அப்படி என்ன பேசுனீங்க. யாரை கட்டிக்க போறேன்னு பேசுனீங்களா?

"வானம் பார்த்த விவசாயி"...!

காலை 4 மணிக்கு எழுந்து  நேற்றைய மிச்ச மீதியை "பழையது" என்ற பெயரில் உப்பை மட்டும் சேர்த்து பருகிவிட்டு , தன் கால்நடைகளோடு கால்நடையாக மொத்த நாளையும் வெயிலிலே தாரை வார்த்து விட்டு, தூவிய விதைகளால் வரும் விளைச்சலை கனவில் கொண்டு தூங்க செல்கிறான்.
பட உபயம் :புவனா கருணாகரன் 

தூக்கம் வரவில்லை .எப்படி வரும்? முகத்தில் அடிக்கும் காற்றை வைத்தே மனது சொல்லுகின்றது ... நாளை மழை வராது.  இரவு இரண்டு மணி, அருகில் இருந்த பசு, கன்று ஈனுகையில் உயிரை விட அதையும் தோண்டி புதைத்து விட்டு, ஐயகோ நாளையில் இருந்து பிள்ளைகளுக்கு பால் இல்லையே என்ற துக்கத்தோடு பெருமூச்சு விட... அருகில் இருந்த மனைவி கேட்கின்றாள்..

Tuesday, June 20, 2017

ஏமாறாதே ஏமாறாதே..

1999 போல நினைக்கிறன். வளைகுடா பகுதியில் குப்பை கொட்டி கொண்டு இருந்த நாட்கள். அப்போது ஒரு நாள் வேலை விஷயமா மஸ்கட்டில் இருந்து துபாய் போக வேண்டி இருந்தது.

காலையில் ஐந்து மணிக்கு வீட்டை விட்டு நேராக மஸ்கட் விமான நிலத்திற்கு சென்று அங்கே வண்டியை பார்க் செய்து விட்டு  ஒரு மணி நேர விமான பயணம்.

துபாய் அடைந்து அங்கே ஏற்கனவே ஏற்பாடு செய்து  இருந்த வாடகை வண்டியை எடுத்து கொண்டு நேராக அலுவலகம், மற்றும் மதிய உணவு  அங்கே வாழும் நண்பர்களுடன்.. மீண்டும் அலுவலகம்.

மாலை ஆறு மணி போல் அங்கே இருக்கும் அஞ்சப்பர் உணவகத்தில் போய் அம்மணிக்கும் அடியேனுக்கும் .. பிரியாணி  மற்றும் சில உணவினை வாங்கி கொண்டு நேராக துபாய் விமான நிலையம்.

அங்கே வாடகை வண்டியை திருப்பி கொடுத்துவிட்டு, குடிவரவையும் கடந்து என் விமான கதவை நோக்கி செல்லும் போது.. எதிரில் இரு இந்தியர்கள் என்னை கடந்து செல்ல..

இவர்களை எங்கேயோ பார்த்து இருக்கிறேனே .. என்று நினைக்கையில்..

விமானம் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும் பட்சத்தில் அங்கே இருந்த டுயூட்டி பிரீ ஷாப் சென்று அம்மணிக்கு ஏதாவது வாங்கலாம் என்று நுழையும் போது அங்கே இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இருந்தனர்.

அப்போது தான் நினைவிற்கு வந்தது.. வழியில் பார்த்தது கங்குலி மற்றும் டேபாஷிஸ் மோன்டி  என்று.

அனைத்து கிரிக்கெட்டர்ஸ் அங்கே இருக்கையில் அங்கே வந்த சக இந்திய பிரயாணிகளின் முட்டாள் தானம் என்னை வியக்கவைத்தது.


அங்கே இருக்கும் விளையாட்டு வீரர்கள் ஆளுக்கு ஒரு பொருளை கையில் வைத்து விலை என்று பார்த்து கொண்டு இருக்க..  பயணம் செய்ய வந்துள்ள முட்டாள்களோ ..

Sir... Can I pay for your shoes.. bottle.. perfume ...

என்று ஏதோ பிறவி பயனை அடைந்தது போல் மகிழ்ந்தனர். நானோ  சற்று ஓரத்தில் அமர்ந்து அடுத்து நடக்கும் காட்சிகளை எடை போட்டேன்.

 நம் விளையாட்டு வீரர்கள் எந்த ஒரு பொருளையும் வாங்கினோமா.. விலை கொடுத்தோமா என்று இருக்கவில்லை. எவனாவது ஒரு  ஏமாந்த சோனாங்கிரி மாட்டுவான் என்று அந்த பொருளை கையில் வைத்து கொண்டு அங்கேயே காத்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் நினைத்ததை போல் எவனாவது ஒருவன் வருவான்..

Sir, can I buy this for you...?

சரி, வீரர்களுக்கு தான் இப்படி என்றால் .. வர்ணனையாளர்களுக்கும் இதே உபசரிப்பு தான்.

இந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் லட்ச கணக்கில் சம்பாதிப்பவர்கள்.. அவர்களுக்கு இந்த ஜந்துகள் ஏன் இப்படிபோட்டி போட்டு கொண்டு செலவு செய்கின்றார்கள் என்று நினைக்கையில்...

கடைசி அழைப்பு வர விமானத்தில் ஏறினேன்.

சில மாதங்களுக்கு பின் அந்த உலக கோப்பை  கூட முழுமையாக பிக்ஸ் செய்ய பட்டு  இருக்கலாம் என்று அறிந்தேன். அந்த செய்தியை படித்த இந்த ஏமாந்த சோனகிரிகள் எப்படி பீல் பண்ணி இருப்பார்கள்?

Saturday, June 17, 2017

அ(ர்)ப்பனுக்கு வாழ்வு வந்தால்...


அப்பா...
என்றாள்...


அடித்து பிடித்து ஓடி
மூச்சு வாங்க..
பல படி தாண்டி மேலே வந்தேன்.....

வழியில் அவள் அம்மா கேட்டாள்..
ஊரிலேயே உனக்கு மட்டும் தான் பிள்ளையா ..

நல்ல கேள்வி...

நினைவரியாத நாளில் அடுத்தவன் போல்..
அவன் தோளில் நிற்க முடியாத   பாக்கியம் ...

முதல் வகுப்பிற்கு அவனவன்
அவரின் அரவணைப்பில் வரும் போது...
அனாதை   போல் நின்ற துர்பாக்கியம்...


Friday, June 16, 2017

கிரிக்கெட் : நாட்டை பிடித்த ஏழரை ..


மீள் பதிவு தான் !

இந்த பதிவை ஆரம்பிக்கும் முன் ஒரு காரியத்தை சொல்லி கொள்கிறேன். கிரிக்கட் விளையாட்டை மிகவும் விரும்பி ரசித்து விளையாடியவன் அடியேன். விளையாடினது மட்டும் அல்லாமல் தொலைகாட்சியில் இந்த ஆட்டத்தை அதிகமாக பார்த்து நாட்களை தொலைத்தவனும் நான் தான். இந்த ஆட்டத்தில் சூதாட்டம் நுழைந்து அஜாருதீன் – மாலிக் (அக்ரமும் தான்) – ஹன்சி போன்றவர்கள் அதில் ஈடுபட்டார்கள் என்று தெரிந்தவுடன் இந்த விளையாட்டை அறவே வெறுத்து விட்டு விட்டேன். இந்த கேடு கெட்ட ஆட்டம் நாட்டை மேலும் கெடுக்க வந்தது தான் ஐ பி ல் …

ஐ பி ல் … இந்த சனியன் உருவானதின் காரணமே ஊழல் தான் . இதை உருவாக்கியவர் லலித் மோடி என்று அவருக்கு வேண்டிய சிலர் பாராட்டி புகழ்ந்து தள்ளினார்கள் .
யார் இந்த லலித் மோடி . ஒரு குஜராத்தி வியாபார குடும்பத்தில் பிறந்தவர். தனது வாலிப வயதில் அமெரிக்காவில் கல்லூரி படிப்பு படிக்க வந்து இருக்கையில், அமெரிக்க நாட்டில் கோக்கைன் (Cocaine ) என்னும் போதை பொருளை கடத்தியதர்காகவும் மற்றும் வேறு ஒரு நபரை “கிட் நப் ” பண்ணியதர்காகவும் இங்கே கைது செய்ய பட்டார். இங்கே உள்ள நீதி மன்றத்தில் தன் தவறை ஒப்பு கொண்டு சில மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து அது முடிந்ததும் இன் இந்த பக்கம் எட்டி பார்க்காதே என்று இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப பட்டார். இந்த புகழ் பெற்ற மோடி தான் ஐ பி ல் உருவாக்கியவர் .அமெரிக்காவில் உள்ள நகரங்களுக்கு மத்தியில் NBA மற்றும் NFL போன்ற ஆட்டங்களின் விதிமுறைகளை காப்பி அடித்து ஐ பி ல் என்ற சனியனை உருவாக்கினார் .

Thursday, June 15, 2017

குற்றம் புரிந்தவன்..

ஆர்டர் !ஆர்டர் ! ஆர்டர் !..

ஆல் ரைஸ்.. கோர்ட் இஸ் இன்  செஷன்..

என்று அந்த பணியாளர் சொல்ல ..நீதிபதியும் அங்கே வர...வழக்கு தொடர்ந்தது.

இன்றைக்கான வழக்கு?

வங்கி கொள்ளை!

இந்த நீதிபதிக்கென்று இங்கே நல்ல பெயர் உண்டு. ஒவ்வொரு வழக்கையும்   தீர விசாரித்து அதற்கான தீர்ப்பை சீராக வழங்குவது மட்டும் அல்லாமல் தீர்ப்பின் மூலம்  குற்றவாளி  மனம் திருந்தி  வாழ்க்கையை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்.

குற்றம் சாற்றபட்டவர்  கூண்டிற்குள் தலை குனிந்து கொண்டு நிற்க..

அரசு வக்கீல் வாதிட்டார்..

Monday, June 12, 2017

பதிலே(லோ) காற்றில் உள்ளது ...

வருடம் 1963  .. வியட்நாம் போர் நடந்த வேளையில்.. பாடகர் .. பாப்  டிலான் (BOB DYLAN)  ஒரு மனித நேயமான பாடலுடன் வந்தார்.

ஒவ்வொரு வார்த்தையும் இசையும் நெத்தியடி. உணர்ந்து எழுதிய பாடல் அமைக்க பட்ட இசை.

இவ்வாறு பல பாடல்களை எழுதிய பாப்  டிலனுக்கு 2016  ம் வருடம் ஆங்கில இலக்கியத்திற்கான நோபிள் பரிசு கிடைத்தது, அடியேனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதோ அந்த பாடலின் தமிழாக்கம். அதை தொடர்ந்து அந்த பாடலின் ஆங்கில வரிகளும் உள்ளது. அந்த பாடலையும் கண்டிப்பாக அவரே பாட கேளுங்கள்.


எத்தனை பயணம் அவனுக்கு
அவனை மனிதன் என்று மற்றவர்  அறிய...
எத்தனை கடலை வெண்புறா கடக்க வேண்டும்
அது கரையை சேர்ந்து அடைய ...
எத்தனை குண்டுகள் வெடிக்கவேண்டும்
அவை இனி வெடிக்காமல் இருக்க..

பதிலோ தோழா,  காற்றில் உள்ளது...
பதிலே காற்றில் உள்ளது ...

எத்தனை வருடம்  மலை நிற்கும்
அது கடலில் மூழ்கும்  வரைSaturday, June 10, 2017

பொன்னாங்கன்னி ...அது பொன்னான கன்னி..

சனி மதியம் ராசாத்திக்கள்  இருவரும் நட்புக்களோடு ஒரு "ம்யூசிக் கான்சர்ட்" செல்ல அம்மணியோ தம் பணி தொடர்பான ஒரு காரியத்தினிமித்தம் செல்ல.. அடியேனின் அம்மாவோ.. ரெண்டு நாளைக்கு உன் அண்ணன் வீட்டுக்கு போறேன் .. நீ திங்கள் வந்து என்னை கூட்டின்னு வந்துடு என்று கிளம்ப..


ஏங்க.. மதியம் முழுக்க வீட்டிலே தான் இருப்பீங்க.. கொஞ்சம் கூட்டல் பெருக்கல் பாத்துக்குங்க...

பிடித்த பாடல்களை சத்தமாக வைத்து வேலையை ஆரம்பித்தேன். சூப்பர்விஷன் செய்ய ஆள் இல்லாததால் வேலை வெகு சுலபமாக முடிந்தது.

மீண்டும் வந்து அமர்ந்து ஒரு பதிவு எழுதலாம் என்று யோசிக்கையில்..

சமையல் குறிப்பு போட்டு நெடு நாளாகிவிட்டதே.. ஒன்று போடலாம் என்று நினைத்து கொண்டு இருக்கையில்..அலை பேசி அலறியது.

ஏங்க...

சொல்லு..

வீடு..

சொர்க்கம் என்பது எனக்கு சுத்தம் உள்ள வீடு தான்..

தேங்க்ஸ்.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்களேன்.