என்ன தான் அனுபவம் இருந்தாலும் சில நேரங்களில் பொது இடங்களில் மேடை பேச்சுகளில் "ஆனைக்கும் அடி சறுக்கும் " என்பது போல் எவருக்கும் தடுமாற வாய்ப்புண்டு.
எனக்கு தெரிந்த ஒரு சிறந்த ஆங்கில பேச்சாளர் .... அவர் திருமண விழாவில் நன்றி அறிவிக்கையில்...
" I thank everyone from the bottom of my heart and my Wifes bottom too...."
என்று நன்றி கூறியதை எப்படி மறக்க முடியும்?
சில நேரங்களில் பட்டிமன்றத்தில் மற்றும் பொது இடத்தில் அடியேன் உபயோகித்த தவறான வார்த்தைகள் தான் எத்தனை... எத்தனை..? அதை வைத்து தொடர் பதிவே போடலாம்.
சிலர், பேசுகையில் ... நகைசுவையாக பேசுகின்றோம் என்று நினைத்து சொதப்பி விடுவார்கள்.. நகைச்சுவை என்பது ஒரு உணர்வு. அது அனைவருக்கும் கிடைக்காது. நகைச்சுவையை செயற்கையாக நம் இயல்பான வாழ்க்கையில் சேர்த்தோமானால் அது விவஸ்தையாக தான் முடியும்.
சரி தலைப்பிற்கு வருவோம்.
கபாலி தோல்வி என்று வைரமுத்து பொது மேடையில் பேசினார் என்று ஒரு செய்தி வந்தது. இந்த செய்தியை படித்ததும்.. எனக்கு முதலில் உதித்த எண்ணம்...
அட பாவி... ஒரு வேளை இந்த படத்தில் வைரமுத்துவிற்கு பங்கு இல்லையா...மற்றும்.... தமிழின் அடுத்த நம்பிக்கை கார்க்கி வைரமுத்துவுக்கு பங்கு இல்லையா?
இவர்கள் இந்த படத்தில் பணி புரியவில்லை என்று ஊர்ஜிக்கப்படுத்தி கொண்ட பின்னர், ஒரு வேளை ... இது பொறாமையா? அல்ல ஒரு இளம் இயக்குனர் தனக்கு வாய்ப்பு தரவில்லை என்ற ஒரு வெறுப்பா?
என்று நினைத்தேன்.
பேரரசு ஆயிற்றே.. ஒரு வேளை, இவர் புகழ்ச்சி வஞ்சில் (அதுதாங்க வஞ்புகழ்சசிக்கு எதிர்பதம், இதுக்கு சரியான வார்த்தையை பின்னூட்டத்தில் போடுங்க) பேச வந்ததை மக்கள் தவறாக புரிந்து கொண்டார்களா.. ?
இருக்காதே.. காலையில் கக்கூசுக்கு போனேன் என்பதை கூட பேரரசு நிறுத்தி
நிதானமாக.... அவருடைய சிம்ம குரலில்...
காலையில் கக்கூசுக்கு போனேன்.....
நான் ...
வாங்காத கடன் தீர்க்க
காலையில் காகக்கூசுக்கு போனேன் ..
அப்படின்னு நின்னு நிதானமா தானே பேசுவார்..
மக்கள் தவறாக புரிந்துகொள்ள முடியாதே ..
என்று நினைத்து கொண்டு ... காணொளியை தட்டினேன்.
வைரமுத்து பேசி கொண்டு இருந்தார்..
பா ரஞ்சித் ... கோட்.... கபாலி --- என்று ... நகைச்சுவையாக பேசுவதாக நினைத்து கொண்டு சொதப்பி கொண்டு இருந்தார். இவர் நகைசுவை என்று நினைத்து பேசி கொண்டு இருந்ததற்கு சிலர் சிரிக்க.. அடுத்து...
புரிந்து கொள்வதை பற்றி பேசினார்,,,
அதை புரிந்து கொண்டேன்.. இதை புரிந்து கொண்டேன் என்று பேசி கொண்டே வந்த பேரரசு ..
"கபாலியின் தோல்வி... காபாலியின் தோல்வி" என்று இரண்டு முறை
நிதானமாக பேசினார்.
இந்த செய்தி வெளியே வந்ததும், இப்போது, என்னை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் ... நான் இங்கே ஒரு வார்த்தையை விட்டுவிட்டேன்... சொல்ல வந்த்ததே வேறு என்று புலம்ப ஆரம்பித்தார்.
வைரமுத்து அவர்களே....
"சட்டியில் இருப்பது அகப்பையிலே ... புத்தியில் இருப்பது வார்த்தையிலே.."
கவியரசின் பாடலை தாம் நிச்சயமாக கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அந்த கருத்தையே பயன் படுத்தி... தாம் எழுதிய....
"தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து .."
என்ற வார்த்தைகளும் எவ்வளவு உண்மை.
சொல்ல வந்ததை சொல்லிவிட்டீர்கள்.. இப்ப சாக்கு போக்கு எதுக்கு?
பின் குறிப்பு :
இந்த வார நாதரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்யணும் விருதை பெறுபவர்... பேரரசு..
இவருக்கு பேரரசுன்னு பெயர் வந்த கதைக்கு இந்த விருதை இவருக்கு வாழ்நாள் விருதா தரலாம்.. அது வேற கதை..
ஒரு வார்த்தையை விட்டுட்டேன்.. ஒரு வார்த்தையை விட்டுட்டேன்னு சொல்றாரே.. ஒரு வேளை அவர் சொல்லவந்தது....
கபாலியின் (படு) தோல்வி... கபாலியின் (படு) தோல்வி...யா..
கூடுதல் செய்தி...
கபாலி படம் கண்டிப்பாக எனக்கு பிடிக்கும் என்று என்னை அறிந்த சில நல்ல உள்ளங்கள் சொன்னதால்..இந்த வார இறுதியில் பார்க்க இருக்கின்றேன்.
அறிந்த நண்பர் ஒருவர் பேரரசின் இந்த பேச்சுக்கான தொடர்பை இணைக்க சொன்னார்.. அவர் விருப்பத்திற்கு இணங்கி... இதோ.... எங்கே பார்த்து விட்டு சொல்லுங்கள் அவர் என்ன வார்த்தையை தவற விட்டார் என்று ..?