செவ்வாய், 8 நவம்பர், 2016

ஆயிரம் நிலவே வா !

அருமை அண்ணன் ஜார்ஜ் அவர்களுக்கு....

சென்ற வாரம் தாம் அடியேனின் இல்லத்தில் இருக்கையில் அடியேனின் இளைய ராசாத்தி என்னை  அலை பேசியில் அழைத்து உடனடியாக இல்லத்திற்கு வர சொன்னாள்.

அலுவலகத்தில் சில முக்கியமான வேளையில் இருக்கின்றேன் என்றேன். அவளோ பிடிவாதமாக உடனடியாக வரவேண்டும் என்ற கட்டளையிட ...

உடனடியாக வண்டியை எடுத்தேன்.


இல்லத்திற்கு வண்டியை ஓட்டுகையில்....  அவளுக்கு மீண்டும் ஒரு போன் போட்டு அப்படி என்ன விஷயம் என்றேன்?

இந்தியாவில் இருந்து வந்துள்ள ஜார்ஜ்  பெரியப்பாவிடம் தான் எத்தனை நல்ல பழக்கங்கள் ...

ஆமாம் மகள் .. அது எனக்கும் தெரியும்.. அதற்கு ஏன் என்னை அழைத்தாய் என்றேன்.

இன்று நவம்பர் மாதம் முதல் தேதி அல்லவா?

ஆம்.

ஒவ்வொரு மாதம் முதல் தேதி அன்றும் அவர் அருகில் உள்ள எல்லாருக்கும் பணம் தருகிறார்.. எனக்கும் கிடைத்தது நீங்களும் உடனே வாருங்கள் என்றாள்..

அதை கேட்டவுடன் நானும் வேகத்தை அதிகரித்து இல்லத்தை அடைந்தேன்.

என்னை பார்த்த நீங்கள்....

என்ன மதியம் சாப்பாட்டிற்கு வர மாட்டாய் என்றாயே .. இப்போது வந்துள்ளாய் என்றீர்...

நானோ..

இன்று மாதத்தின் முதல் நாள் அல்லவா.. அதனால் தான் என்று நாசூக்காக சொல்ல..

நீங்களோ...

ஓ அப்படியா என்று சொல்லி வழக்கம் போல் தங்களின் அலை பேசியில் நுழைந்து விட்டீர்கள்.

அங்கே இருந்த இளைய ராசாத்தியை நான் பரிதாபமாக பார்க்க அவளோ தம்மிடம்...

எங்க அப்பாவிற்கும் பணம் கொடுங்கள் என்று சொல்ல...

நீங்களும்....

இந்தா .. உனக்கும் ஒரு ஆயிரம் என்று கொடுத்தீர்கள்.

ஆயிரம் என்றவுடன் மிக மகிழ்ச்சியோடு எழுந்து தம் அருகில் வந்த எனக்கு அந்த ஆயிரத்தை கண்டவுடன் ஒரு அதிர்ச்சி.

அது இந்திய ஆயிரம்..

சரி ....சிரித்து கொண்டே அதை பெற்று கொண்ட நான்.. பரவாயில்லை.. அடுத்த முறை இந்தியாவிற்கு செல்லுகையில் இது நல்லதோர் பிரியாணிக்கு உதவும் என்று பத்திரப்படுத்தி வைத்து இரண்டு நாட்கள் கூட முடியவில்லை.

அதற்குள்... இன்று ஒரு செய்தி.. இன்றோடு இந்தியாவில் ஆயிரம் ரூபாய் செல்லாதாம்?


தாம் இன்னும் அமெரிக்காவில் தான் இருக்கின்றீர்கள் என்று அடியேன் அறிவேன். தங்கள் விலாசத்தை தந்தால் அந்த ஆயிரத்தை அனுப்பி வைக்கிறேன். தாம் அதற்கு நிகரான  டாலரை மணி ஆர்டர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பின்குறிப்பு :

மிகவும் ரகசியமாக இந்திய அரசாங்கத்தால் எடுக்க பட்ட இந்த முடிவு இரண்டு நாட்களுக்கு முன்பே உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று நினைத்து நினைத்து இரண்டு நாட்களாக தூக்கம் இல்லை!

2 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...