புதன், 29 ஜூலை, 2015

ஊரை தெரிஞ்சிகிட்டன் ...

இந்த ஆண்டு துவக்கத்தில் ஐரோப்பா சுற்றுலா என்று முடிவு செய்ததுமே அனேக நண்பர்கள் எல்லா நாட்டிற்க்கும் விமானத்திலேயே போகாதே.. குறைந்த பட்சம் ஒரு பயணமாவாது ரயில் அல்ல பேருந்தில் இருக்கட்டும்  என்றார்கள்.

இவ்வாறான தரை பயணத்தில் ஐரோப்பாவின் நாட்டுபுற பகுதியும் இயற்கை அழகும் காண ஒரு சந்தர்ப்பம் என்றும் கூறினார்கள் . இதை கூறியவர்கள் என்னிடம் கூறி இருந்தால் பரவாயில்லை. அம்மணியிடம் கூறி விட்டார்கள் ... அதனால் பாரிஸ் நகரில் இருந்து பெர்லின் நகரம் பேருந்து பயணம்.

எங்கேயும் நிற்காத பேருந்தில் பயணம் செய்தால் 11-12 மணி நேரத்தில் போய் சேரலாம். ஆனால் கடைசி நிமிடத்தில் நாங்கள் கேட்டதால் மொத்த பயணம் கிட்ட தட்ட 18 மணி நேரம். நடுவில் ஒரு பட்டிணத்தில் பேருந்தை மாற்ற வேண்டும். அங்கே ஒரு 3 மணி நேரம் காக்க வேண்டும் என்ற  நிர்பந்தம்.


பாரிஸ் நகரில் காலை 10 மணி போல் ஹோட்டலை விட்டு கிளம்பி  பேருந்து நிலையத்திற்கு கிளம்பினோம் . அந்த இடத்தை அடையும் போது  மணி 11:30. 12 மணிக்கு கிளம்ப வேண்டிய பேருந்து.  ஆளுக்கொரு  காபி வாங்கி கொண்டு வந்து பேருந்தில் அமர .. ஓட்டுனர் ஒவ்வொரு பயண சீட்டை பரிசோதித்து வண்டியை சரியாக 12க்கு எடுத்தார்.

வசதியான பேருந்து  
வண்டி ஆரம்பிக்கும் முன் அவர் ஒலிபெருக்கி மூலமாக ஜெர்மன் மொழியில் ஏதோ சொல்ல அனைவரும் கை தட்டினார்கள் .அருகில் இருந்த ஆங்கில பேசும் நபரிடம் விசாரிக்கையில் .. நீண்ட பயணம் ஆயிற்றே   ஆதலால் பயணிகள் அனைவரும் ஓட்டுனரை கை தட்டி வாழ்த்தினார்கள். இந்த முதல் பயணம் 7 மணி நேர பயணம்.  பாரிஸில் இருந்து ஜெர்மனியின் எல்லையில் உள்ள கார்ல்ஸ்ரு (Karlsruhe ) என்ற நகரம்.

பேருந்து பாரிஸ் நகர வாழ்க்கையை கடந்து நாட்டுப்புற பகுதி வந்தவுடன்  நண்பர்கள் கூறியது எவ்வளவு உண்மை என்று தெரிந்து.  மைல் கணக்கில் விவசாய நிலங்கள்.  அங்கே இங்கே நிறைய பாத்திகள் இல்லாததினால் அண்ணன் தம்பி நில தகராறு இங்கே அதிகம் இல்லை போல் உள்ளது.


இங்கே மற்றொரு காரியத்தையும் சொல்ல வேண்டும். வழியில் நான் கண்ட ஆறுகள் அனைத்திலும் நீர்  புரண்டி அடித்து ஓடி கொண்டு இருந்தது.



நடு நடுவே சிறிய சிறிய கிராமங்கள் . ஒவ்வொரு கிராமத்திலேயும் ஒரு உயர்ந்த கோபுரத்தை கொண்ட கோவில்  ஒன்று அமைந்து உள்ளது.

இந்த பேருந்தின்  உள்ளே ஒரு சிறிய கழிவறை ஒன்று உள்ளது. 3 மணி நேரம் கழிந்த பிறகு ஓட்டுனர் பிரெஞ்சு மொழியில் எதோ சொல்ல.. அம்மணி என்னிடம் ..


அருகில் இருப்பவரிடம் என்னவென்று விசாரியுங்கள்

 இதில் என்ன விசாரிப்பு ... இது எனக்கே புரிந்து விட்டது ..

என்ன சொன்னார் ?

பேருந்து ஒரு 15 நிமிடம் நிற்கும் சாப்பாடு மற்றும் வேறு ஏதாவது வேண்டும் என்றால் வாங்கி கொண்டு சீக்கிரம் வாருங்கள்.. அம்புட்டுதேன்..

நான் சொன்ன மாதியே நடக்க ..

என்னங்க .. இவ்வளவு கரெட்டா .. எப்படி..

ஊரில் எத்தனை வண்டியில் போய் இருப்பேன்...

சாப்பாடு கட்டி கொண்டு வண்டியில் வந்து அமர .. இன்னும் சில மணி நேரங்களில் அந்த நகரம் வந்து சேர்ந்தது .

பேருந்து நிலையத்தில் நிறுத்துவதற்கு முன் ஓட்டுனர் மீண்டும் ஏதோ சொல்ல .. அனைவரும் கை தட்டி வாழ்த்தினர். இம்முறை அது ஏன் என்று புரிந்தது.

வண்டியில் இருந்து இறங்குகையில் ஏற குறைய அணைத்து பயணிகளும் ஓட்டுனரிடம் கை குலுக்கி நன்றி சொல்லி விடை பெற்றனர்.

நேரம் 7 மணி போல், அடுத்த பேருந்து  இரவு 10 மணிக்கு . அங்கேயே காத்து கொண்டு இருக்க அருகில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒரு மனிதர் "ஹலோ" என்று விசாரிக்க உரையாடல் ஆரம்பித்தது .

நீங்கள் இந்தியாரா?

ஆம்.

நீங்கள்.?

எனக்கு இந்த ஊர் தான். இங்கே இருந்து என் இல்லம் ஒரு 30 நிமிடம். ஒவ்வொரு நாளும் மாலையில் இங்கே வந்து அமர்ந்து பலவகையான பயணிகளின்  நடவடிக்கைகளை கவனிப்பேன். அது என் பொழுதுபோக்கு .
பேசி கொண்டே இருக்கையில் அவர் பையில் இருந்து ஒரு" பீர்" எடுத்து குடிக்க, பேச்சு தொடர்ந்தது.

உங்களுக்கு என்ன வேலை.

நான் ஒரு பொறியியல் நிபுணர். என் மனைவியும் கூட அதே தான். என் மனைவிக்கு என்னை விட அதிக சம்பளம், அதனால் நான் கூடிய சீக்கிரம் ஓய்வு பெறலாம் என்று முடிவு செய்து உள்ளேன் .



மனதில் .. அடே டே .. என் மனதில் உள்ளதை அப்படியே படம் பிடித்து காட்டுகின்றாரே ...என்று எண்ணும் போது அவர்...

சரி சந்திப்போம்...என்று அவர் சைக்கிள் எடுத்து கொண்டு கிளம்பினார் ..என் இளைய ராசாத்தி..

டாடி.. அவர் 55 வயது இன்னும் சைக்கிள் ஓட்டுகின்றார் .. நீங்களும் ஒட்டவேண்டும்.

சைக்கிள் விட்டு தொலை..பேசி கொண்டு இருந்த அரை மணி நேரத்தில் 4 பீர் குடித்தாரே.. அதையும் டாடி செய்யட்டுமா ...

அம்மா விட மாட்டார்களே...

அவரின் மனைவி விட்டு இருக்கின்றார்களே...

அவர்களும் விடவில்லை டாடி. அதனால் தான் அவர் பேருந்து நிலையத்தில் அமர்ந்து குடித்து கொண்டு இருகின்றார் ..

என்று சொல்லி முடிக்கையில் பெர்லின் நகர பேருந்து வந்தது. இது ஒரு இரட்டை மாடி பேருந்து.

சரியாக 10 மணிக்கு பயணம் ஆரம்பிக்க ...காலை 7:40க்கு போய் சேரும் என்றார்கள் . மீண்டும் கைதட்டல் ... தொடர  ,.. குடும்பத்தோடு  அனைவரும் தூங்க ஆரம்பித்தோம் ....

காலை ஏழு மணிக்கு எழுந்து சன்னல் மூலம் எட்டி பார்க்க நகர வாழக்கை  தெரிந்தது. சரியாக 7:40க்கு பேருந்து நிலையம் நுழைய ... என் மூத்த சகோதரியும் - மாமாவும் வாயெல்லாம் பல்லோடு எங்கள் பேருந்தை நோக்கி வந்தார்கள் ....

தொடரும்...

www.visuawesome.com

3 கருத்துகள்:

  1. நானும் பொரியல் நிபுணர்தான் ஆனால் சம்பளம் கிடையாது அதற்கு பதிலாக எங்க வீட்டு அம்மையார் சாப்பாடு போடுகிறார்கள்

    பதிலளிநீக்கு
  2. கை தட்டி தட்டி வலிக்கும் போல... ஹிஹி...

    யோசனை சொன்ன நண்பர்களுக்கு நன்றிகள்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...