வியாழன், 1 அக்டோபர், 2020

"விழியில் என் விழியில்"

 "வாத்தியாரே..."

ஓடோடி வந்தான் ஏழாம் அறிவு பெற்ற  என் நண்பன் குரு!

"சொல்லு!!"

"ராம் லக்ஷ்மணன் படம் பாத்தியா!!?"

2020 ல் 1981ன் இளையராஜாவோடு!

"குரு,!!! அது நான் +2 பர்ஸ்ட்  இயர் படிக்கும் போது வந்துச்சி"

"+2 பர்ஸ்ட் இயர்!!! ?  வாத்தியாரே, அதை +1 ன்னு சொல்லுவாங்க"

"முட்டா பசங்க, +1ன்னு ஒன்னு கிடையாது, + 2 பர்ஸ்ட் இயர் , + 2 செகண்ட் இயர்"

"ரொம்ப முக்கியம், விஷயத்துக்கு வா, ராம் லக்ஷ்மணன் பாத்தியா!!?"

"குரு, நான் தேவர் பிலிம்ஸ் படம் பாக்குறது இல்ல, குரு!"

"ஏன்!!?"

"இந்த காக்கா குருவி ஒட்டகம் பாம்பு ஆடு பூனை ஆனை அம்புட்டையும் BBC யில் " The Living Planet" ன்னு ஒரு நிகழ்ச்சியில் விலாவாரியா காட்டுறாங்க. அங்கே பாத்துக்குவேன்" 

"ஆனா அந்த நிகழ்ச்சியில் இளையராஜா இசை இல்லையே"

"என்னாது!!? தேவர் பிலிம்ஸ் படத்துக்கும் இளையராஜா இசையா?"

"ஏன் இருக்க கூடாதா!!?" 

"இல்ல, தேவர் பிலிம்ஸ் எந்த படத்தையும் MSVட்ட கூட கொடுக்காம சங்கர் கணேஷை வைச்சே எண்னை ஊத்தாம தாளிப்பாங்களே, அவங்க எப்ப இருந்து இளையராஜாட்ட போனாங்க!!!?"

"அன்னை ஒரு ஆலயத்திலே ஆரம்பிச்சிட்டாங்க, அப்பனே அப்பனே புள்ளையார் அப்பனே பாட்டை மறந்துட்டியா ?"

"சரி விடு , ராம் லக்ஷ்மணன் வேணாம். அந்த போஸ்டர் பார்த்தேன், கமல்ஹாசன் யானை மேல்.. "

"உனக்கு யானை புடிக்காதா!!?"

"யானையை விடு. தேவர் பிலிம்ஸ் இதே யானையை வைச்சி ரெண்டு மூணு படம் எடுத்துட்டாங்க!  இதுவும் அப்படி தான் இருக்கும்"

"வாத்தியாரே, ஒரு விஷயம் சொல்லட்டுமா?!"

"நானே ஆரம்பிச்சி வைக்கிறேன், இந்த படத்துல, இளையராஜா ..... கன்டினியூ...!!"

"இந்த படத்துல இளையராஜா, சொன்னா நம்ப மாட்ட..."

"சொல்லு!!!"

"இந்த படத்து பாட்டும் சரி, பேக் கிரௌண்ட் மியூசிக்கும் சரி, அம்பது வருசத்துக்கு பின்னால வர வேண்டியது வாத்தியாரே. 80 க்கும் இந்த  கம்போஸிங்குக்கும் சம்பந்தமே இல்லை  ..."

"ரியலி..!!!!?"

"அப்சாவில் காலை காட்சி போட்டு இருக்கான், வா போலாம்!"

போனோம். 

அங்கே..

"இரு, டிக்கட் வங்கின்னு வரேன் "

"வேணாம், அதெல்லாம் வாங்கியாச்சு"

எதிரில் சிரித்து கொண்டே , கையில் நான்கு "தம்ப்ஸ் அப்" பாட்டிலோடு மேலும் இரு நட்ப்புகள், விஜய், மற்றும் எலி மாம்ஸ்!

உள்ளே சென்று அமர்ந்தோம்.

"தம்ப்ஸ் அப் "வுடன் படம் ஆரம்பிக்க.. யானை என்றாலே அதற்கென்றே தேவர் பிலிம்ஸ் உருவாக்கி வைத்த "ட்ரம்ப்பட்" ஓசையுடன் BGM ஆரம்பிக்க குரு சொன்ன .. இது இன்னும் ஐம்பது வருஷம் கழிச்சி வர வேண்டிய இசை என்பது காதில் ரீங்காரமிட்டது.

யானையை  பார்த்தவுடன், பள்ளி நாட்களில் MGRன் "நல்ல நேரம்"படம் நினைவிற்கு வந்தது.  பள்ளி கூட வயது MGR யானைகளோடு ஆடி பாடி இருக்கும் காட்சியும் அவரே வளர்ந்து KV மஹாதேவன் இசையில் "ஆகட்டும் டா தம்பி ராஜா,  நாடா ராஜா " என்று பாடுகையில்  ..

நானும் MGR தான். அந்த காட்சிகள் நினைக்கையில்...

அருமையான இசையுடன். கமல் ஹாசன் " நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம் " என்று பாட குருவை நோக்கி..

"சரியா சொன்ன குரு.. என்னமா போட்டு இருக்கார்... "

"யு ஆர் வெல்கம். இதுக்கே அலறாத, இன்னும் சில ஐட்டங்கள் இருக்கு"

அவன் சொன்னது தான் எவ்வளவு உண்மை.

"விழியில் என் விழியில்"  என்ற டூயட்!


இளையராஜாவின் பாணியில் லீட் கிட்டார் "என்னை பார் என் அழகை பார் " என்று ஆரம்பிக்க.. அத்துடன் சிந்தத்தசைஸர் - கீ போர்டு சேர்ந்து அடுத்த கியருக்கு தூக்க, "தம்ப்ஸ் அப்" பாட்டிலை இறுக்கமாக பிடித்து கொண்டு  நாங்கள் நால்வரும் சீட்டின் முனைக்கு வர...

ஆயிரம் வயலின்கள் மேலும் அழகு சேர்க்க.. ட்ரிபிள் பாங்கூசின்  தாளம் லேசாக மாறி எதிர்ப்பார்ப்பை கூட்ட. 

"This is Eargasm" என்று விஜய் அலற, SPB எங்கள் யாரையும் கண்டு கொள்ளாமல்  பல்லவியோடு கொன்றார் என்று தான் சொல்லவேண்டும்.

விழியில் என் விழியில்
ஒரு பூப் பூத்தது
பூ இங்கு பெண்ணானது.. 
இன்று ஒண்ணானது
இதழோடு... இதழ் சேர...
இதழோடு... இதழ் சேர..
அம்மம்மா அப்பப்பா என்ன
ஆனந்தம் தம்தம் தம்தம்..

இந்த பல்லவியில் தான் எத்தனை அமர்க்களம். நடுவில் மிக்ஸரில் கிடைத்த வறுத்த பூண்டை போல் (எனக்கு மிகவும் பிடித்தது), மற்றும்.. பல்லவி முடிக்கையில் வரும் தம் தம் தம் என்ற வார்த்தைகளோடு பேஸ் கிட்டார் போட்டி போடுவதை கேட்ட எலி மாம்ஸ் தன்னையும்  மறந்து  இரு கைகளினாலும் பேஸ் கிட்டார் வாசிக்க செல்ல தன் உயிரினும் மேலான  "தம்ப்ஸ் அப்"  பாட்டிலை கூட தவற விட்டான்.   

குருவோ.. 

"வெயிட் எ நிமிட் பார் ஒன் நிமிட், பல்லவிக்கே பதறாத, சரணத்தில் தான் சமாச்சாரம்.. "

 என்று சிரித்து கொண்டே ஆர்வத்தை தூண்ட, 

இன்டர் லோட்..

80களின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட ஒரு சாபம், நடனம்!! என்னதான் இளையராஜா பாத்தி கட்டி பாச்சினாலும் அது படமாக்க பட்ட விதம் படு மோசமாக இருக்கும் என்னும் கதை தொடர.. 

சரணம்..

தேன் தேன் உன்னைத் தானே
நான் நான் உண்ணத் தானே
ஏன் ஏன் அன்புத் தொல்லையோ..
ஓ... வா வா அள்ளிக்
கொண்டு போ போ இன்னும் என்ன
கேள் கேள் சொந்தம் இல்லையோ
மடியில் பாயும் நதியே என்னை நீராட்டு
பொன் பொன் அங்கம் துள்ள
கண் கண் கவ்விக் கொள்ள
இன்பம் இன்பம் கொள்ளை இன்பம்...

என்று சரணத்தை முடிக்கையில், எங்கள் சர்ச் கொயர் மெம்பெர்ஸ் போல நாங்கள் நால்வரும் 

"விழியில் என் விழியில்"

 என்று பல்லவியை SPB கூட சேர்ந்து பாடினோம்.

பாடல் முடிக்கையில் என்னமோ கிணற்றில் யார் அதிக நேரம் முழுகி மூச்சி பிடித்து கொண்டு  இருப்போம் என்ற போட்டியில் இனிமேலும் தாங்க முடியாது என்ற உணர்வோடு வெளிவர..

விஜய், " போலாமா"

குரு," இன்னொரு  பாட்டு இருக்கு, ஒண்ணான் ஒன்னு... "

விஜய், " அது சரி  இல்ல, லெட்ஸ் கோ"

அப்போது தான் கவனித்தோம், எலி எப்பவோ அங்கே இருந்து எகிறி இருந்தது. 

"எங்கடா எலி..!!!?"

விஜய், " அவன் எப்ப அப்சா தியேட்டரில் காலை காட்சி பாத்துட்டு நம்மோட திரும்பி வந்தான்?. கிளம்பு!"

"குரு நேரா பர்மா பஸார் போ.."

"தேவையே இல்லை, இந்த போஸ்டர் பாத்துட்டு நேத்தே அங்கே போய் நாலு  காப்பி  ஆர்டர் பண்ணிட்டேன்.ரெண்டு நாளில் தரேன்னு சொன்னான்"

"நாளைக்கு காலை என்ன பிளான்!!?"

"சொல்லு!"

"திரும்பவும் வரலாமா?"

"ஏன்!"?

"அந்த வாலிபமே வா வா பாட்டு குரு, அதுல சரணத்துல.. ,
அட ஆளைவிடு காதலுக்கு நேரம் இல்லையே.. ஜாதி முல்லையேன்னு ஒரு இடம்.."

"சூப்பர் ஸ்பாட்"

"அதை மறுபடியும் கேக்கணும்"

அடுத்த நாளே சென்று கேட்டோம் !



1 கருத்து:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...