வியாழன், 22 அக்டோபர், 2020

"எழுமின்" - சர்வதேச தமிழ் பெண்களுடன் ஒரு காலை!

 எழுமின் - சர்வதேச தமிழ் பெண்களுடன் ஒரு காலை!

அனைத்திற்கும் முன்...

எனக்கும் "எழுமின்" பெண்களுக்கும் என்ன?

மூன்று தலைமுறை மகளிரோடு வாழும் என் வாழ்வின் இலட்சியத்தை சொன்னால் அது புரியும்  .

அம்மா (எனக்கு நான்கு வயது இருக்கும் போது கணவனை இழந்தவர்கள்) :

இவன் வாழ்வை பார்க்க அவருக்கு கொடுத்து வைக்கவில்லையே என்று எண்ண வேண்டும்.

மனைவி : நான் பெற்ற என் இரு மகள்களுக்கும் இவனை போலவே ஒருவன் அமைய  வேண்டும்.

மகள்கள் : நாளை  எங்களுக்கும் மகள்கள் பிறக்கையில் இவனை போல் ஒரு தந்தை வேண்டும்.

இந்த மூன்றை மட்டுமே இலட்சியமாக வைத்து கொண்டு வாழும் ஒரு சராசரி மனிதன் தான். வாழ்வின் மற்ற அனைத்துமே இந்த மூன்றில் தான் அமைந்துள்ளது. இதில் வெற்றி என்றால் வாழ்வே வெற்றி.

சரி, தலைப்பிற்கு வருவோம்.



நேற்று, "எழுமின்" என்ற அமைப்பை சார்ந்த அருமை தோழி புவனா கருணாகரன்...

"விசு!!, எழுமின் சார்பாக  TWI  (சர்வதேச தமிழ் பெண்கள்) ஒரு Zoom நிகழ்ச்சி நடத்த போறோம், நேரம் இருந்தால்  வரவும்" 

என்று ஒரு அழைப்பை தர.. 

"அங்கே என்ன செய்ய போகின்றீர்கள்?!!"

"என்னையும் சேர்த்து பதினாறு பெண்கள் பேச போகின்றோம், பெண்களில்  எழுச்சியை (Empowerment?) பத்தி!!!"

மனதில்.. அட பாவத்த!  பதினாறு பெண்கள் பேசுவதை கேட்க வேண்டுமென்றால்   நாள் முழுக்க தேவை படுமே.. என்ன செய்வது, என்று யோசிக்கையில்..

"ஆளுக்கு மூணு நிமிஷம் தான்... இழுத்து வளைச்சு இல்லாமல் நெத்தியில் அடிச்ச மாதிரி... "

நம்ம தான் கணக்கு பிள்ளையாச்சே.. ஆளுக்கு மூணு நிமிடம் பதினாறு பேர்  , கூட்டி கழிச்சி பார்த்தா ஒரு மணி நேரம். நமக்கு காலையில் ஏழரைக்கு! சரி, என்று காலண்டரில் போட்டு காலையில் எழுந்து கணினியின் எதிரில் அமர்ந்தேன். 

It was a blessing ... !

தமிழ் தாய் வாழ்த்தை அருட்தந்தை கஸ்பர் ராகம் பிசிராமல் பாட ...

Dr. Azeeza Jalaludeen என்ற அம்மையாரின் வரவேற்புரை, "கற்க கசடற" என்று ஆரம்பித்து சற்றே எதிர்ப்பார்ப்பை தூக்கி வைத்தது என்று தான் சொல்லவேண்டும்.

பதினாறும் பெற்று வாழ்வோம் என்று நான் இருக்க, முதலில் வந்தது ...

ஹேமா இமயவரம்பன். 

பெயரிலே இமயத்தை வைத்துள்ளார்கள் என்ற வியப்பு முடியும் முன்பே அவர்களின் இமாலய எண்ணங்கள் உண்மையாகவே வியக்க வைத்தது.  

இமாலய  அளவில் பெரிய பெரிய நிறுவனங்களை இந்த "எழுமின்" அமைப்பின் மூலம் தமிழ் பெண்கள் நிறுவவேண்டும். அப்பெண்களின் குரல் அறம் சார்ந்த குரலாய் மட்டும் இராமல் அன்பு குரலாகவும் இருக்க வேண்டும்.

இந்தோனேசியாவில் புயலாயினும்,தெற்கு அமெரிக்காவில் பூகம்பமாயினும் சரி, எங்கேயும் நம் பெண்களின் உதவி கரங்கள் நீண்டு இருக்க வேண்டும்.

ஐ நா வில் இந்த அமைப்பு இடம் பெற வேண்டும், மற்றும் முன் மாதிரி கிராமங்களை துவங்க வேண்டும். பெண்களை மட்டுமே வைத்து ஆண்டுக்கு 100 நிறுவனங்கள் துவங்க வேண்டும்.

"பசி" ...

பசியோடு ஒரு மானிடன் உறங்க கூடாது. பசியை அறவே ஒழிக்க வேண்டும் என்று உரக்க கூறி முடிக்கையில்..

அருட்தந்தை மீண்டு(ம்) வந்து... 

"பசி"பிக் பகுதி பெண்கள் வேலைக்கு செல்ல இருப்பதால் அவர்கள் முதலில் பேசுவார்கள் என்று சொல்ல அடுத்து வந்தது...

"வல்லமை வரும்" என்ற தலைப்பில் விஜி ஜெகதீஷ், "வானளாவிய கனவை தட்டி எழுப்பிய அருட்தந்தை" என்று துவங்கி ..

"Nothing in life is to be Feared" 

"அச்சம் தவிர்" என்ற நச்சென்ற தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் கூறி மேலும்..

"உன்னால் முடியும் தங்கச்சி, திறன் வளர் . எண்ணங்களை சீர் செய் என்று மட்டும் சொல்லாமல், உலகம் நம்மை எப்படி பார்க்கின்றது என்பற்கு முன்பு நம்மை நாமே சரியாய் பார்த்துக்கொள்ள  வேண்டும் என்று முடித்தார்.

ஒவ்வொரு முறையும் அவர் RISE RISE என்று கூறும் போது நமக்கு RICE RICE என்று மீண்டும் ஒரு முறை "பசியோடு யாரும் உறங்க கூடாது" என்ற வார்த்தைகளை நினைவு படுத்தியது.

அடுத்து வந்தது, மலேசியாவை சார்ந்த நந்தினி ராமலு ...

"மூன்று நிமிடத்தில் எங்கள் மூச்சிருக்கும்" என்ற பாணியில் துவங்கி, ஆங்கிலத்தில் பேசினார்கள். 

ஐரோப்பாவிலும் ஐநாவிலும் சாதித்தவைகளை எடுத்துரைத்து  "எழுமின்"  ஒரு Global level Organization  ஆகவேண்டியதின் இன்றியமையாமையை  சுட்டி காட்டினார்.

பின்னர் வந்தது வழக்கறிஞர் கனிமொழி.

அது எப்படி என்றே தெரியவில்லை . கனிமொழி என்ற  பெயர் கொண்டோருக்கெல்லாம்  பேச்சு திறன் தாமாகவே அமைந்து விடும் என்ற நினைப்பை உறுதி படுத்தினார். 

"உண்மையில் உறுதியாக " என்ற தலைப்பில் படி படியாக இறங்கி கீழடி வரை சென்று அனைத்தையும் ஒரு படி மேல் சென்று மேலடியில் எடுத்து வைத்தார்.

"We shall be the 21st Century" என்று ஆர்ப்பரித்து "நன்றிகளை விட பணிகள் முக்கியம் " என்ற சொற்களோடு அமெரிக்க பெண்களின் பங்கேற்புகளை பறை சாற்றினார். 

1920 ம் வருடம் Betty Friedan  அம்மையாரின் போராட்டத்தினால்   கிடைத்த பெண்களின் வாக்குரிமை பற்றி அவர் பேசுகையில் புல்லரித்தது என்று தான் சொல்லவேண்டும்.

பெண்களுக்கான சம நிலை ஏன் இல்லை? 

சமூதாயத்தின் நிர்பந்தம், வீட்டு வேலை, பொறுப்பு, 

இல்லத்தில் உள்ள அனைவரையும் திருப்தி செய்தல் மட்டுமே  இலக்கு என்ற மனப்பாங்கு மற்றும் உடற்பாதுகாப்பு என்பவற்றை  விளக்கி கூறி 

"சமூக போர் குரல் " தேவை என்று கொக்கரித்தார்.

அடுத்து ..

"ஒற்றுமையே நம் அடையாளம் " என்று வந்தார் நிர்மலா வெஸ்லி. 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற பொற்கூற்றை ஆங்கிலத்தில் " Unity is the power and gives strength" என்றும் மற்றும் கூடி வாழ்தல்  கோடி நன்மை என்று கோடிட்டு.

வெற்றிக்கான வழிக்கு ஒற்றுமை தேவை என்றார்.

மேலும், "If you want to go fast go alone if you want to go far go together," என்ற ஆங்கில பழமொழியை இடஞ்சூட்டி விளக்கினார்.

அவரை தொடர்ந்து குமரியின் குமாரி மஞ்சு. தான் ஒரு பள்ளி ஆசிரியை என்பதையும்..

"நீ நல்லா வருவ" என்று தனக்கு அருட்தந்தை தந்த அருள் வாக்கின்  மந்திரத்தையும் இந்த மூன்று வார்த்தைகளை நாம் மற்றோருக்கு சொல்லும் போது அதனால் வரும் பலனையும் சொல்லுகையில் ..

நான் கல்லூரியில் இருக்கையில் எனக்கும் "நீ நல்லா வருவ " என்று சொன்ன பேராசிரியரின் நினைவு வந்தது. அந்த வார்த்தைகள் தான் என்னை எவ்வளவு உற்சாக படுத்தியது என்பதை நான் அறிவேன். 

பள்ளி ஆசிரியை தானே! "Students Right" மாணவ மாணவியரின் உரிமையின்  முக்கியத்தை எடுத்துரைத்தார். 

அடுத்து கொங்கு மண்டலத்தில் இருந்து சாந்தி ராஜ்குமார் அவர்கள் பேசுவார் என்று அறிந்து.. அருமை..

ஏனுங்கோ .. வாங்கோ .. போங்கோ ... என்று கொங்கு தமிழ் வரும் எதிர் பார்க்க, வந்தது இலக்கியமே..   :(

"சமூக அமைதிக்கு " என்று பேசிய சாந்தி அவர்கள், தனி மனித அமைதியே உலக அமைதிக்கு அடிப்படை என்ற தீவிர கருத்தை தீர்க்கமாக முன்வைத்தார்கள்.  

அன்பு,சகிப்பு தன்மை மற்றும் நேர்மை இவை மூன்றும் இல்லாமல் சமூக அமைதி இருக்காது.  மனிதன் மனிதனாக மாறினால் மட்டுமே சமூகம் சீர்படும் என்றுரைத்தவர்கள் "தன்னை சமூகம் கவனிக்க தவறியது என்று ஒருவர் எண்ணுவதால் மட்டுமே  தீவிரவாதம்  உருவாகின்றது என்று பசுமரத்தாணி போல் அடித்தார்.

அன்னை தெரேசா மற்றும் அப்துல் கலாமை சுட்டி காட்டியது மட்டுமில்லாமல்  தான் அகன்று தன் பற்று அகன்று வாழவேண்டும் என்றும்..

விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் என்று தன் பேச்சை முடித்தார்.

அவரை தொடர்ந்து "தமிழே எங்கள் அடையாளம் " என்று Dr. தனபாக்கியம் அமிழ்து என்றாலே தமிழ் என்று ஆரம்பித்து பாரதி  மற்றும் வள்ளுவனை மேற்கோள் காட்டியது மட்டுமல்லாமல் 'உணவு எனப்படுவது யாதெனில்" என்று புறநானானுருக்கே நம்மை அழைத்து சென்றார். 

தொல்காப்பியத்தின் பிறப்பு முறையை இவர் சொல்கையில், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று எனக்கு நானே சொல்லி கொண்டேன். 

திரு மந்திரம் மற்றும் வள்ளலாரையும் கூறி முடிக்கும் முன் "வரப்புயுற நீர் உயரும்" என்ற அவ்வையின் பாடலை கூறி நம் ஆவலை அதிகரித்தார். 

என்ன பேச போகின்றார்கள் என்று தெரியாமலே இங்கு வந்த எனக்கு இன்ப அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு அம்மையாரும் தம் தம் கருத்துக்களை அவருக்கேற்ற பாணியில் சொல்ல, திகட்டி விடுமோ என்று நினைவே  இல்லாமல் மேலும் பயணித்தேன், ஆவலோடு.

அடுத்து.. எழுமின் அமைப்பின் மனசாட்சி "அன்பில்"  வெண்ணிலா சத்யமூர்த்தி. 

படைப்பு - உடல் - உணவு  என்று துவங்கி இவை மூன்றிலும் உணவே முக்கியம் என்று வாதிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 "உணவு  கொடுத்தார் உயிர் கொடுத்தார்" என்று கூறி, கோவிட் நோயின் தாக்கத்தினால் உணவற்று இருக்கும் பிள்ளைகள் மற்றும் முதியோரின்  நிலையை விவரிக்கையில் நம்மை அறியாமல் ஒரு வலி. 

வள்ளுவனின் "பகுத்துண்டு பல்லுயிர்" மட்டுமல்லாமல் பாரதியின்  "தனி மனிதனுக்கு உணவில்லையேல்" என்பதையும்  நமக்கு நினைவூட்டியவர் ஏழைகளின் பசியை போக்கியவனின் செல்வம் நிலைத்து நிற்கும் என்று நம்மை திகைக்க  வைத்தார்.

தொடர்ந்து நூறு தொழில் அதிபர்களை உருவாக்க வேண்டும் என்று சபதமிட்டு கொண்டு வந்தார் Francis Porsingula. நீயெல்லாம் மன்னனா ? என்று ஓலமிட்டு கண்ணகியை முன்னிறுத்தி, பாதை வெகு தூரம் என்றும் நமக்கு சுட்டி காட்டியது மட்டுமல்லாமல், உற்பத்தியில் ஆரம்பித்து  ஏற்றுமதிவரை பெண்கள் செல்லவேண்டும் என்றார்.

அடிமட்ட பெண்களின் அபரிதமான திறமைகளை பண்படுத்தி சீரமைத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல் பட்டால் நூறல்ல ஆயிரத்தை அடையலாம் என்றும் திசை காட்டினார்.

தயக்கத்துடன் ஆரம்பித்து ஆங்கிலத்தில் உரையாடினார் அனிதா செல்வின். "We are the Change" அது தான் அவரின் தாரக மந்திரம். "எழுமின் " என்பது ஒற்றுமை படுத்துவதே என்பது மட்டுமல்லாமல், பாளையங்கோட்டையில் இருந்து  வாஷிங்டன் வரை நடந்ததை - நடப்பதை - நடக்க போவதை ஆர்வத்தோடு பகிர்ந்தார்.

முழுவதுமே ஆங்கிலத்தில் பேசினாலும் நடுவில் "அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதெற்க்கு " என்ற நையாண்டி கேள்வியை இன்னும் சிலர் கேட்பதை அவர் நினைவூட்டுகையில் சோகமான சிரிப்பு தான் வந்தது. 

இந்தியாவின் Oxford என்று பெயர் பெற்ற திருநெல்வேலியிலே, பெண்களின் பெற்றோர்கள், உன்னை நல்லா படிக்க வைச்சதே நல்ல மாப்பிள்ளை அமையணும்னு தான்" என்று அவர்கள் சொல்கையில், வெட்க்கி குனிந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

இங்கே என் அன்னையின் நினைவு தான் வந்தது. "டே.. ஒழுங்கா படி., இல்லாட்டி நான் எங்கே போய் உனக்கு பொண்ணு கேப்பேன் என்று சொல்லியும், 100 கோடிக்கும் மேலாக உள்ள இந்தியாவில் இருந்து பெண் கிடைக்காமல் இலங்கையில் தானே கேட்டார்கள்   :).

"Dont blame your Parents, husband and children" at any cost. Be courageous and take responsibility என்று  பெண்களுக்கு அறிவுரை கூறினார். 

கிழக்கு சீமையில் எதோ ஒரு சாலையில் வாகனத்தை நிறுத்தி வைத்து தன் பணியின் சீருடையோடு பேச துவங்கினார் என்னை இந்நிகழ்ச்சிக்கு அழைத்த புவனா கருணாகரன்.

"நீதிக்கான குரல் " அவருக்கு அழைக்க பட்ட தலைப்பு. ஆங்கிலமும் தமிழும் கலந்து அவர் உரையாடியது, யானை பசி வேளையில் அருமையான புளிசோற்றுக்கு அட்டகாசமான French Fries  வைத்தது போல் இருந்தது.

 Peace = Presence of justice என்பதை ஆணித்தரமாக அடித்து சொன்னார்.  ஒடுக்க பட்ட ஒருவனுக்கு விழும் ஒவ்வொரு அடியும் நம் அனைவருக்கும் விழும் அடியே என்று அடித்து சொன்னார்.

 அமெரிக்காவில் தற்போது நடக்கும் Black Lives Matters மற்றும் அதை தொடர்ந்து நடந்தவைகளை எடுத்துரைத்த புவனா இறுதியில் எனக்கு மிகவும் பிடித்த Maya Angelou அவர்களின் " You may write me down, but I will RISE" என்ற கவிதையை படிக்கையில் என்னை அறியாமலே ஒரு பரிபூரணம்.  

"Shared Prosperity " செல்வத்தை  பகிர்ந்து  வாழ் என்று சொன்ன அவர், தொடர்ந்து இன்றைய சமூக வலைத்தளங்களில் ஒரு பெண் தன் கருத்தை வைத்தால், அப்பெண்ணின் நடத்தை, குடும்பம், வாழ்க்கை என்று எப்படியெல்லாம் தரக்குறைவாக பேசப்படுவார்கள் என்ற அநீதியை கூறினார்.

வட அமரிக்காவில் இருந்து மீண்டும் வளைகுடாவிற்கு, அடுத்து வந்தவர் ஷகிலா குயிண்டோஸ்.  " We shall Co- create Global Enterprises"   என்று ஆரம்பித்து இன்று இங்குள்ள பெண்களுக்கான பொதுவான இணைப்பே "தமிழ்" என்றார்.

உலகின் எந்த மூலைக்கு என்றாலும் அங்கே ஒரு தமிழ் பெண்ணின் வியாபாரம் இருக்க வேண்டும் என்று வற்புறுத்திய ஷகிலா, இவர் என்ன இவ்வளவு சமத்தாக இருக்கிறாரே எப்படி என்று வியக்கையிலே தானும் ஒரு கணக்கு பிள்ளை என்று கூறி கணக்கு பிள்ளையான என் வயிற்றில் பாலை வார்த்தார் :).

கை  தொழில் ஒன்றை கற்று கொள் என்பதையும் மீறி, வீட்டில் தயாரிக்கும் இட்லியை வைத்தே வியாபாரத்தை ஆரம்பிக்கலாம் என்று கை காட்டினார்.

அவருக்கு பின் அருட் தந்தை மீண்டும் வந்து "Good  Food " என்ற நிறுவனத்தின்  "உயிர் " என்ற லோகோவை சிலரோடு சேர்ந்து வெளியிட்டு  நல்ல உணவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க.. இந்த லோகோவின் பெயர் "உயிர்" என்றாலும் இதன் உயிரே "பயிர்" என்று நினைக்க தூண்டியது.

அதன் பின், சிறப்புரையாற்றினார் சென்னை சில்க் நிறுவனத்தின் வினீத் குமார். மதிப்பீடு இழக்காமல் தொழில் வளர்ந்த விதத்தை சிறுகதை என்று எடுத்துரைத்த வினீத், தாத்தா போட்ட விதை அப்பா வளர்த்த மரத்தின் நிலையில் இந்த தலைமுறையினர் வாழ்வதை பாசமிகுந்த நன்றியோடு பகிர்ந்தார். 

ஒரு நாள் வியாபாரத்திற்காக பல நாள் உழைப்பை வீணடிக்காதே என்று கூறிய வினீத், தம் நிறுவனத்தின் மூலம் செய்து வரும் தொண்டுகளை கூறுகையில், "வாழ்க வளர்க" என்று நம்மை  அவரை வாழ்த்த செய்தது.

மீண்டும் அம்மணிகளின் பேச்சு தொடரும் என்று கூற அடுத்த வந்தது பூங்குழலி கைலாஷ். "Micro Enterprises" என்ற தலைப்பில் பேசியவர் மிக நுணுக்காமாக பேசினார் என்று தான் கூற வேண்டும்.

பத்து பேரோடு சேர்ந்து ஏதாவது ஆரம்பி . தமிழகத்து சேலத்தில்  உற்பத்தி செய்தததை அமெரிக்க சேலத்தில் விற்க ஏற்பாடு செய், உன்னால் முடியும் என்று உறுதியாக சொன்னார். 

உன்னிடம் உள்ள திறமை அது என்னவென்றாலும்சரி, அதை வைத்து  கூலி பெரு. அது மொழி பெயர்த்தலாக  இருக்கலாம் , அல்ல, மீன் வளர்ப்பு, உணவகம், தேநீர் கடை, சிப்ஸ் இப்படி ஏதுவாய் இருந்தாலும் செய், Time is Money என்றார். சிறுதுளி பெரு வெள்ளம் என்ற பழமொழியின் அர்த்தம் புரியும் படி பேசினார். 

 கடைசியாக "இன்னொருவரின் வெற்றி நம் வெற்றி" என்று போற்றிகொள் என்றும் ஒரு விதை போட்டார். 

பின்னர் கட்டார் நாட்டில் இருந்து நிர்மலா குரு.. "Economic  Freedom " என்ற தலைப்பில்.  

தன்னை ஒரு "Logical Thinker:" என்று அறிமுகப்படுத்தி தன் பேச்சை மூன்றாக பிரித்து கூறு போட்டார். 

Economic Freedom என்பதை மூன்று நிலை பிரித்தார்.

1 . கொடு (GIVE)

உற்சாகத்தோடு கொடு, மனம் திறந்து கொடு, சமுதாயத்திற்கு கொடு.

2  . பகிர் (SHARE )

அறிவை , வலிமையை மற்றும் NETWORKING , இவை மூன்றையும் பகிர்.

3 . பெரு (RECEIVE )

முதல் இரண்டு நிலையையும் சரியாக செய்தால் மூன்றாவது தாமாக அமையும். 

நூற்றுக்கணக்கில் செலவு செய்து மோட்டிவேஷன் டீச்சர்ஸ்ஸிடம் கற்று கொள்ள வேண்டிய விஷயத்தை இலவசமாக அள்ளி தூவினார். நன்றி நிர்மலா அவர்களே.

அடுத்து எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு துறையில் இருந்து  வந்த லதா அவர்கள். 

பாரதி பாட்டிலே எனக்கு மிகவும் பிடித்த பாட்டு., ஓடி விளையாடு பாப்பா.  என் இரண்டு மகள்களையும் தினந்தோறும் விளையாட்டுக்கு வருட கணக்கில் அழைத்து சென்ற ஆணவம் எனக்கு எப்போதும் உண்டு. 

காலை எழுந்து படிப்பு எவ்வளவு முக்கியமோ அதே போல் தான் மாலை விளையாட்டு என்பதை நம்புபவன் நான். அதனால் தான் என் இரு ராசாத்திக்களும் இன்றும் தம் தம் கல்லூரிக்களுக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர். 

மன்னிக்கவும், ஆணவம் பற்றிக்கொண்டது. 

அம்மணிகளின் பேச்சிற்கு வருவோம். 

உடற்பயிற்சி மற்றும் விளையாட்டின் முக்கியதத்துவதை எடுத்துரைத்த லதா அவர்கள், சமையலறையில் டம்ப்ளர்ஸ் மட்டும் இல்லாமல் டம்பிள்ஸ்ஸ்சும் இருக்க வேண்டும் என்று வித்தியாசமாக சொன்னார். 

தன்னை சந்திக்கும் யாராவது, மிகவும் Fit ட்டாக இருக்கின்றீர்களே, நீங்கள் ஸ்போர்ட்ஸ் பெண்ணா? என்று விசாரிக்கையில் ஒரு திருப்தி என்றார்.  

பெண்களின் ஆரோக்கியத்தை பற்றிய அருமையான பேச்சு. வியந்தேன்.

 அடுத்து வந்த நித்யா ரூபன் "We shall be the healing of the world " என்ற தலைப்பில் , கோவிட்டின் தாக்கத்தினால் பிள்ளைகள் மற்றும் முதியோர்கள் படும் பாட்டை எடுத்துரைத்தார். 

நாம் தான் மானுடத்தின் நம்பிக்கை, வரலாறே நம்மை தேர்ந்தெடுத்துள்ளது என்று விளக்கி சொன்னார். மேலும், "Empower yourself and become a community Ambassador" என்று கேட்கும் நமக்கும் தூது அனுப்பினார். 

மௌனராகம், மௌனகீதம் என்று சினிமாவை மட்டுமே அறிந்த என்னை போன்றோருக்கு மௌனபசி என்னவென்று விளக்கினார். பேசி முடிக்கையில் அடிவயிற்றில் என்னை அறியாமலே ஒரு வலி மற்றும் குற்ற உணர்ச்சி.

"Tears of a Mother cannot save a child, donate blood" என்று அவர் கூறுகையில் கண்டிப்பாக கொடுக்கணும் என்ற எண்ணம் வந்தது.

 "We could possibly be the Miracle" என்ற தலைப்பில் Dr. பிருந்தா பிரைட்டன் பேசுகின்றார் என்றதும் நிமிர்ந்தே அமர்ந்தேன், for I do believe in miracles.
நானே ஒரு அதிசயம் என்று எப்போதும் நினைப்பவன் நான்.

Miracle என்பது சந்தோசம், பூரிப்பு, அற்புதமான உணர்வு, நாளைக்கான ஊன்றுகோல் என்று விளக்கினார். 

தமிழனாக பிறந்து அதிசயம், அதுவும் தமிழ் பெண்ணாக பிறந்தது இன்னும் அதிசயம் என்று அவர் சொல்லும் போது எதோ ஒரு அதிரசம் சாப்பிட்டது போல் ஒரு இன்பம்.

தங்க பொண்ணு - ஸ்வாதி என்ற தாய்-மகள் ஒரு தேர்வு எழுத தவறான ஊருக்கு செல்ல அங்கு அதை அறிந்த ஒருவர் அவர்களுக்கு அனைத்து உதவியும்  செய்து சரியான ஊருக்கு அனுப்பி வைத்தது அதிசயமே என்று அசத்தினார். இங்கு இப்போது நாம் அனைவரும் ஒன்றாக இருப்பது கூட அதிசயமே என்றார்.

கற்று கொண்டே இரு என்று கல்வியின் முக்கியதுவத்தை சொல்லிஉற்சாகப்படுத்தினார்.

அதிசயத்தை தொடர்ந்து குவைத் நாட்டில் இருந்து Ms. Fathima Altaf தம் உரையை துவங்கினார்.

மனதில் உறுதி வேண்டும் என்று ஆரம்பித்து ..

"யாவதும் கேள் , யாவதும் குரல்" என்று அனைவரின் உரிமையையும் எடுத்துரைத்தார். விட்டு கொடுத்தல் நன்றே, தியாகம் அவசியம், கவனம் தேவை என்று பெண்களுக்கு சில அறிவுரைகள் விளங்கியவர் நம்  குறிக்கோள்   ஒரு முன்னுதாரணமாக அமையவேண்டும் என்றார். சோர்வில்லாமல் நிற்போம் நடப்போம், "சிங்கமும் நாமே தங்கமும் நாமே" என்று தன் உரையை முடித்தார்.

சரி... வெறும் பெண்கள் நாங்களே பேசினா எப்படி? போனா போகட்டும் .. திருஷ்டிக்காக நாலு பேர் வாங்கன்னு சொல்லி .. 

"இங்க பாருங்க.. அவங்க பேசுறதுல ஏதாவது விஷயம் இருக்கும் அதனால தலைக்கு மூணு நிமிஷம் தந்தோம். உங்களுக்கு ஒரு நிமிஷம் தான், சட்டு புட்டுன்னு நாலு வாரத்தை சொல்லிட்டு தள்ளி நில்லுங்கன்னு"

அன்பு கட்டளை வர, அம்மணிகளை வாழ்த்த சில ஆண்மகன்கள்.,

முதலாவதாக, Joseph Quinton.

வாழ்த்துக்கள்.. வட்டிக்கு வாங்காமல் வியாபாரம் பண்ணுங்கள். வீணடிக்காமல் உணவை பகிருங்கள். 

சொல்லிவிட்டு தள்ளிநின்றார்.

அடுத்து பேராசியர் லட்சிமி மோகன்.

தன்னம்பிக்கை இருக்கணும், சமூக முன்னேற்றம் தேவை. பத்தாயிரம் பெண்களுக்கு வாழ்க்கை தரணும். வாய்ப்புகள் கொட்டி இருக்கு, தாகம் உள்ளோருக்கு தண்ணீர் உண்டு..

தள்ளி நின்றார்.

தொடர்ந்து Jose Michael Robin

பெண்களின் வேகத்திற்கு ஈடு இணை இல்லை.

வேகமாக தள்ளி நின்றார்.

அடுத்து Alfred Berkmans

குடை இல்லாமல் கருத்து மழையில்  நனைந்து விட்டேன், திக்கு முக்காடி கொண்டு இருக்கின்றேன். மனதில் உறுதி வேண்டும்.

தள்ளி சென்றார்.

பின்னர் வந்த John Morrris என்ற பட்டய கணக்காளர் 

சேமிப்பு மிகவும் முக்கியம்,  "எழுதாத கணக்கு அழுதாலும் வராது" என்று சொல்லி விட்டு விலகி செல்ல..

அடித்து பிடித்து அடுத்து வந்த வித்யாசாகர், வித்யாசமாக 

பெண்கள் முடிவு 
பெண்களே விடிவு
பெண்கள் தானே  வடிவு (இந்த மூணாவத அவர் சொல்லல, நான், நான் தான் சொல்றேன், அம்மணி யாழ்பாணமாச்சே!!)

அனைத்தும் பெண்களே, நீங்களே வெல்ல தகுந்தவர்கள் என்று சொல்ல வித்யாசாகரின் துணைவியாரை கண்டு நம்மை அறியாமலே சற்று பொறாமை வந்தது.  :)

பின்னர் நாம் அறிந்த மகேந்திரன் பெரியசாமி...

சிறகுகள் நீ ஒன்று நான் ஒன்று என்று ஆரம்பித்து ஒரு பாடலை பாடி காட்ட...
அங்கே இருந்த அனைவரும், பெரியசாமியினால் செய்ய முடியாதது ஏதாவது உண்டா என்று யோசிக்கையில்..

பாலா சாமிநாதன், பாரதி தாசனை நினைவூற்றினார். ஒரு பெண் ஆணை சார்ந்து இருக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய அநீதி, சதி என்று கூறி தாசன் வரிகளில் விளக்கினார்.

தொட்டில் என்பது யார் ஆட்டினாலும் அசையும். That was my lesson for the day. Thank you, Sir.

இறுதியாக  அருட்தந்தை மீண்டும் வந்து வாழ்த்த ஒரு அருமையான நிகழ்ச்சியில் பங்கேற்ற நிம்மதியுடன்.. மீண்டும் நான்... என் லட்சியங்களோடு..

அம்மா (எனக்கு நான்கு வயது இருக்கும் போது கணவனை இழந்தவர்கள்) :

இவன் வாழ்வை பார்க்க அவருக்கு கொடுத்து வைக்கவில்லையே என்று எண்ண வேண்டும்.

மனைவி : நான் பெற்ற என் இரு மகள்களுக்கும் இவனை போலவே ஒருவன் அமைய  வேண்டும்.

மகள் :       நாளை  எங்களுக்கும் மகள்கள் பிறக்கையில் இவனை போல் ஒரு தந்தை வேண்டும்.

நன்றி புவனா, அழைப்பிற்கு.
 
 



4 கருத்துகள்:

  1. வழக்கமான பதிவு அல்ல... இது மிகவும் சிறப்பான பதிவு...

    எண்ணங்கள் அனைத்தும் உயர்வு.... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. Thank you for a lovely write. You have a way with words. Made my day that you joined the meeting, stayed and paid attention to all details to pen this. Very encouraging. ����

    பதிலளிநீக்கு

  3. சிறப்பாக தொகுத்து வழங்கியதற்கு பாராட்டுக்கள் விசு. இந்த பதிவு மூலம் பல நல்ல விஷயங்களை மிக சுருக்கமாக அறிந்து கொண்டு யோசிக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  4. அனைவருடைய கருத்துகளும் அருமை அதை எல்லாம் பொறுமாயாகக் கவனித்து தொகுத்து இங்க கொடுத்ததற்கு உங்களுக்குப் பாராட்டுகள் விசு. நல்ல பாயின்ட்ஸ் அனைத்தும். நான் அடிக்கடிச் சொல்லுவது பெண்கள் உடல் நலம் பேண வேண்டும் அது மிக மிக முக்கியம் சிறிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மிக மிக முக்கியம் என்று. அது இங்கு மிக மிகக் குறைவு.

    உங்கள் லட்சியம் டாப்!!

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...