1999 போல நினைக்கிறன். வளைகுடா பகுதியில் குப்பை கொட்டி கொண்டு இருந்த நாட்கள். அப்போது ஒரு நாள் வேலை விஷயமா மஸ்கட்டில் இருந்து துபாய் போக வேண்டி இருந்தது.
காலையில் ஐந்து மணிக்கு வீட்டை விட்டு நேராக மஸ்கட் விமான நிலத்திற்கு சென்று அங்கே வண்டியை பார்க் செய்து விட்டு ஒரு மணி நேர விமான பயணம்.
துபாய் அடைந்து அங்கே ஏற்கனவே ஏற்பாடு செய்து இருந்த வாடகை வண்டியை எடுத்து கொண்டு நேராக அலுவலகம், மற்றும் மதிய உணவு அங்கே வாழும் நண்பர்களுடன்.. மீண்டும் அலுவலகம்.
மாலை ஆறு மணி போல் அங்கே இருக்கும் அஞ்சப்பர் உணவகத்தில் போய் அம்மணிக்கும் அடியேனுக்கும் .. பிரியாணி மற்றும் சில உணவினை வாங்கி கொண்டு நேராக துபாய் விமான நிலையம்.
அங்கே வாடகை வண்டியை திருப்பி கொடுத்துவிட்டு, குடிவரவையும் கடந்து என் விமான கதவை நோக்கி செல்லும் போது.. எதிரில் இரு இந்தியர்கள் என்னை கடந்து செல்ல..
இவர்களை எங்கேயோ பார்த்து இருக்கிறேனே .. என்று நினைக்கையில்..
விமானம் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும் பட்சத்தில் அங்கே இருந்த டுயூட்டி பிரீ ஷாப் சென்று அம்மணிக்கு ஏதாவது வாங்கலாம் என்று நுழையும் போது அங்கே இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இருந்தனர்.
அப்போது தான் நினைவிற்கு வந்தது.. வழியில் பார்த்தது கங்குலி மற்றும் டேபாஷிஸ் மோன்டி என்று.
அனைத்து கிரிக்கெட்டர்ஸ் அங்கே இருக்கையில் அங்கே வந்த சக இந்திய பிரயாணிகளின் முட்டாள் தானம் என்னை வியக்கவைத்தது.
அங்கே இருக்கும் விளையாட்டு வீரர்கள் ஆளுக்கு ஒரு பொருளை கையில் வைத்து விலை என்று பார்த்து கொண்டு இருக்க.. பயணம் செய்ய வந்துள்ள முட்டாள்களோ ..
Sir... Can I pay for your shoes.. bottle.. perfume ...
என்று ஏதோ பிறவி பயனை அடைந்தது போல் மகிழ்ந்தனர். நானோ சற்று ஓரத்தில் அமர்ந்து அடுத்து நடக்கும் காட்சிகளை எடை போட்டேன்.
நம் விளையாட்டு வீரர்கள் எந்த ஒரு பொருளையும் வாங்கினோமா.. விலை கொடுத்தோமா என்று இருக்கவில்லை. எவனாவது ஒரு ஏமாந்த சோனாங்கிரி மாட்டுவான் என்று அந்த பொருளை கையில் வைத்து கொண்டு அங்கேயே காத்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் நினைத்ததை போல் எவனாவது ஒருவன் வருவான்..
Sir, can I buy this for you...?
சரி, வீரர்களுக்கு தான் இப்படி என்றால் .. வர்ணனையாளர்களுக்கும் இதே உபசரிப்பு தான்.
இந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் லட்ச கணக்கில் சம்பாதிப்பவர்கள்.. அவர்களுக்கு இந்த ஜந்துகள் ஏன் இப்படிபோட்டி போட்டு கொண்டு செலவு செய்கின்றார்கள் என்று நினைக்கையில்...
கடைசி அழைப்பு வர விமானத்தில் ஏறினேன்.
சில மாதங்களுக்கு பின் அந்த உலக கோப்பை கூட முழுமையாக பிக்ஸ் செய்ய பட்டு இருக்கலாம் என்று அறிந்தேன். அந்த செய்தியை படித்த இந்த ஏமாந்த சோனகிரிகள் எப்படி பீல் பண்ணி இருப்பார்கள்?