வெள்ளி, 9 மார்ச், 2018

என் கண்ணுக்குள் 100 நிலவா...

நண்பர் ஒருவர் ... பார்வையற்றவருக்கு  பரீட்சை எழுதுவதை பற்றிய பதிவு ஒன்றை போட்டார்..

படித்தவுடன் நினைவு கடந்த காலத்திற்க்கு சென்றது..

சில நேரங்களில்  நாம் செய்யும் ஒரே காரியம்  நம்மை எல்லையில்லா இன்பத்திற்கும் மன நிம்மதிக்கும்.. அதே நேரத்தில் அதே காரியம் நம்மை சில நாட்களிலே எண்ணற்ற துன்பத்திற்கும் துயரத்திற்கும் தள்ளும்

 உதாரணம்..ஒரே காரியம்..

அடியேனின் அம்மா நடத்தி கொண்டு இருந்த பார்வையற்ற பள்ளியில் நிறைய மாணவர்களுக்கு பத்தாவது பொது தேர்வு எழுத உதவி தேவை என்று அழைப்பு வர..

நானும் சென்றேன்..   நான் தான் பள்ளி தலைமை ஆசிரியையின் பிள்ளையாயிற்றே.. அது மட்டும் இல்லாமல், படிப்பிலும் நான் ரொம்ப  கெட்டி என்று எனக்கு நானே ஏற்றி வைத்த  ரெப்புட்டேஷனும்   சேர்ந்து கொள்ள...

அந்த பார்வையற்ற பள்ளி மாணவர்களில் மிகவும் அறிவான மாணவனுக்கு பரீட்சை எழுத என்னை அழைத்தார்கள்.

விசு.. பார்த்திபன்.. நல்லா படிப்பான்.. ரொம்ப சமத்து... அவனுக்காக நீ பரீட்சை எழுதினா.. அவன் சொல்ற பதிலை நீ எழுதினா.. அவன் பள்ளி கூட முதல் மதிப்பெண் வர கூட வாய்ப்புள்ளது.. அதுவும் கணக்குல.. அவன் பிரில்லியண்ட்.. எதிர் காலத்தில் வங்கியில் தான் வேலை செய்யனும்ம்னு  அவன் கனவு.. ஆல் தி பெஸ்ட்.



பரீட்சை நாட்களும் வந்தது..  பார்த்திபன் சொல்லியத்தை  நானும் எழுதினேன். முதல் பரீட்சை தமிழ் பரீட்சை முடிந்தவுடன்.. பார்த்திபன்..

என்ன விசு.. ரொம்ப மெதுவா எழுதுற.. நான் சொல்றத ஸ்பீடா எழுது .. கணக்கு அறிவியல் பாடத்தில் இவ்வளவு மெதுவா எழுதினா.. ரொம்ப கஷ்டம்...

சாரி பார்த்திபன். நான் முயற்சி பண்றேன்.

அனைத்து பரீட்சையும் முடிந்தது. அனைவருக்கும் மகிழ்ச்சி.. எனக்கும் தான். ஐந்து பரீட்சைக்கு மொத்தம் ருபாய் 12 .50  கொடுத்தார்கள். அருகில் உள்ள திருப்பத்தூர் சென்று ஷோலே படம் பார்க்க அது மிகவும் உதவியது. ஹரே ஓ சம்போ .. என்று அம்ஜத் கான் குரலில் சுற்றிக்கொண்டு இருந்த போது ..

பரீட்சை முடிவுகள் வருமுன்பே.. அடியேனின் அம்மா.. நீ  மதராசுக்கு போய் சென்ட் . லூயிஸ் பார்வையற்றோர் பள்ளியில் பார்த்திபனுக்கு +2  விற்கு விண்ணப்பம் வாங்கி வா என்று அனுப்ப..

அங்கே...

வாங்க விசு.நீங்க தான் பார்த்திபனுக்கு பரீட்சை எழுதுநீங்களா?

நான் .. நானே தான்.. பின்ன மண்டபத்திலே...

என்ன..

சாரி.. உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.

நான்.. நானே தான்.

பார்த்திபன் ரொம்ப பிரில்லியண்ட்டு ன்னு கேள்வி பட்டேன் .. நீயும் சமத்தாமே.. எப்படியும்.. 450  மார்க்கை தாண்டும் இல்லை..

என்று வாழ்த்தி.. அருமையான மதிய உணவை அளித்து விண்ணப்போதோடு அனுப்பினார்.

சரி .. இது எல்லாம் நல்ல விஷயம் தானே.. சந்தோசம் தானே.. இதில் என்ன வருத்தம் என்று நீங்கள் கேட்பது தெரிகின்றது. பொறுமை ப்ளீஸ்.

பரீட்சை முடிவு வந்தது..

அனைத்து பாடத்திலும் பார்த்திபனுக்கு 40 -45  மதிப்பெண்கள் தான். அறிவியலில் மட்டும் நூற்றுக்கு 23  . தேர்ச்சி பெற வில்லை.

பள்ளியே அதிர்ந்தது. என்னவாயிற்று.. ? இது எப்படி சாத்தியம்?  பார்த்திபனை விடுங்கள்.. விசு எழுதிய பரீட்சை .. விசுவும் சமத்து.. இதில் எதோ தவறு நடந்து இருக்கின்றது  என்று ஊரே கூடி...

ஒரு புகார் அனுப்பி  இந்த அறிவியல் தேர்வு தாளை மீண்டும்  திருத்த  வேண்டும் என்று சொல்ல.

விண்ணப்பமும் அனுப்ப பட...

அதிகாரிகளிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.

அன்பான பார்த்திபன் அவர்களுக்கு..

தங்களின் தேர்வு தாளை மீண்டும் சரி பார்த்தோம். நீங்கள் நினைத்தது போல் மதிப்பெண் கூட்டுவதில் பெரு தவறு நிகழ்ந்துள்ளது.

பின் பக்கம் பார்க்க......

அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்க அடுத்த பக்கம் திருப்பினால்..

மொத்த மதிப்பெண்ணை மீண்டும் கூட்டி  பார்க்கையில் 19  தான் வந்தது.  இந்த கடிதத்துடன் தங்கள் விடை தாளையும் அனுப்பி வைத்துள்ளோம். நீங்களும் ஒரு முறை சரி பாருங்கள்...

என்று  எழுதி இருந்தது.

அனைவருக்கும் மீண்டும் அதிர்ச்சி.. 23  கூட தவறா.. மொத்தமே 19  தானா .. என்று அலறி அடித்து.

விடைதாளை பிரித்து   பார்க்கையில்..

முதல் கேள்வி...

What is the Equation for Water?

பதில் :

H I  J K L M N O

(பார்த்திபன் H2O ன்னு தான் சொன்னார்.. நான் தப்பா  புரிஞ்சிக்கிட்டேன். )


பின் குறிப்பு :

இந்த தற்காலிக  நிகழ்வினால் பார்த்திபன் தளர்ந்து விட வில்லை .  பிறவிலேயே இரு கண்ணும் இழந்த இவர்.. என் பால்ய நண்பன். என்னை மன்னித்து விட்டார்.

அது மட்டும் இல்லை.. இன்று டெல்லியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாக பணி புரியும் இவருக்கும் ஆண்டவன் புண்ணியத்தில் இரண்டு ராசாதிக்கள் ..  நல்ல கண் பார்வையோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...