திங்கள், 13 ஜூன், 2016

காக்கா கூட்டத்த பாருங்க....

சில நாட்களுக்கு முன் ஒரு வார இறுதி... ஞாயிறு காலை குடும்பமாக கோயில்  சென்று விட்டு திரும்பும் வேளையில்....

மதியம் சாப்பாடு என்ன?

என்று அம்மணியிடம் கேட்க ...அவர்கள் பதிலோ....

இன்னைக்கு நான் கொஞ்சம் பிசி..நேத்து இரவு பண்ண சாம்பார் மீதி இருக்கு. கொஞ்சம் சோறு மட்டும் வடிச்சி.. ஊறுகாய் வச்சி மேனேஜ் பண்ணிக்கலாம்.

மேனேஜ் பண்ண இது என்ன ஆபீஸா? ஐயகோ.. ஞாயிறும் அதுவுமா இப்படி ஆயிடிச்சே

என்று புலம்ப...

அம்மணியோ..

என்னவோ... பூகம்பம் வந்தமாதிரி அலறுரிங்க... இது ஒரு விஷயமா ?

என்று கேட்க அவர்களுக்கு விளக்கும்  நேரம் வந்தது.

சின்ன வயசில் ஹாஸ்டலிலும் சரி... வீட்டிலும் சரி...ஞாயிறு மதியம் ஒரு நல்ல "கறி குழம்பு" இருக்கணும். அப்படி இல்லாட்டி அந்த வாரமே விளங்காது..

ஏங்க. அந்த காலத்தில் வாரத்துல ஒரு நாள் மதியம் "கறி குழம்பு".. அப்ப சரி.. இந்த காலத்தில் தான் காலை டிபனுக்கு கூட கறி வைச்சி தாக்குரிங்களே.. இப்பவும் அப்படியே இருக்கணுமா?

நீ என்ன தான் சொல்லு.. நமக்குன்னு ஒரு  கலாச்சாரம்   இருக்கு, அதை மாத்த கூடாது.

கலாச்சாரம் இருக்கு சரி... ஆனால் நேரம் இல்லையே..!?

என்று சொல்லி கொண்டே அம்மணி சோறு சாம்பார் ஊறுகாய் பரிமாறுகையில் ..

ஏங்க,ஒரு ஞாயிறு கறியில்லன்னு  இந்த மாதிரி அலறுரிங்களே., அந்த காலத்தில் சின்ன வயதில் ... என்னைக்காவது ரொம்ப பிசியாகி... மதியம் "கறி குழம்பு"  செய்ய முடியாட்டி என்ன பண்ணுவிங்க..?

ஒ... வீட்டில் எப்பவுமே "உப்பு கண்டம்" இருக்கும்.

தண்ணில கண்டம் கேள்வி பட்டு இருக்கேன்.. இது என்ன உப்பு கண்டம்!?
காக்கா கூட்டத்த பாருங்க ...

நல்ல இறைச்சிய வாங்கி .... நல்ல மசாலா போட்டு ஒரு மூணு நாள் வெயிலில் காய வைச்சி, காஞ்சவுடன் ஒரு டப்பாவில் போட்டு வைச்சிடுவோம். எப்ப வேணுமோ அப்ப அப்பளம் மாதிரி செஞ்சிக்குவோம். ரொம்ப நல்லா இருக்கும்.

இந்த அறிவை படிப்புல காட்டி இருந்தா எங்கேயோ போய் இருப்பீங்க..

சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே... மனதில்...

இங்கேயும் இந்த மாதம் கொஞ்சம்  வெயில்.. நல்ல கறி... இதை ஏன் இங்க செய்ய கூடாது, என்ற எண்ணம் வந்தது.. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே...அம்மணியோ...

அது எல்லாம் இருக்கட்டும்.. இங்கேயும் வெயில்-கறி இருக்குனு செய்ய ஆரம்பிச்சிடாதிங்க..



அது எப்படி? அப்படியே என் மனசுல இருக்கிறத சொல்ற?

ஒரு வருசமா ரெண்டு வருசமா? 18 வருஷம் குப்பை கொட்டுறேன் இல்ல, அதுதான்.

இல்ல.. சும்மா செஞ்சி பார்க்கலாம்.. ரொம்ப நல்லா இருக்கும்.பிள்ளைகளுக்கும் பிடிச்சி இருக்கும். ப்ளீஸ்...

என்னனா பண்ணுங்க.. ஆனா ஒன்னு.. உங்க "பிரெண்ட்ஸ்" இங்க ஜாஸ்தி பாத்து செய்யுங்க?

பிரெண்ட்ஸ்!? புரியல...

காக்கைகளை சொன்னேன்...

எங்கள் இல்லத்தில்எப்போது மீன் சமைத்தாலும் (தினந்தோறும்  தான் )அதை வீட்டின்  பின்புறம் வெளியே அமைந்துள்ள  அடுப்பில் தான் செய்வோம். மாலை 5 மணி போல் அடியேன் சமையலுக்காக பின்புறம் போனால் காகங்கள் வந்து விடும். அவைகளுக்கு  பரிமாறி விட்டு தான்  நமக்கான உணவு இல்லத்தின் உள்ளே வரும். ராசாத்திக்கள் இருவரும்.....

உங்களுக்கு எங்களை விட உங்கள் "காக்கா பிரெண்ட்ஸ்"  மேலே தான் பாசம் என்று கிண்டல் பண்ண  நாட்களும் உண்டு.

மூத்தவள் ""கோல்ப்" பயிற்சிக்கு செல்ல இளையவளும் அம்மணியும் கடைவீதி சென்றார்கள். உடனே கடைக்கு சென்று இரண்டு கிலோ கறி வாங்கி வந்தேன். இல்லத்திற்கு வந்து .. இஞ்சி, பூண்டு.. பச்சை மிளகாய், கொத்தமல்லி. புதினா, மிளகு மற்றும் கொஞ்சம் சீரகம் தேவையான உப்பையும் போட்டு நன்றாக அரைத்து கறியில் ஏற்றி,,மல்லிகை பூவை கட்டுவதை போல் அதை நன்றாக ஒரு கயிற்றில் ஏற்றி வெயிலில் கட்டலாம் என்று வந்தவுடன்.. தோழர்கள் குடும்பத்தோடு வந்து விட்டார்கள்.
கொடியில மல்லிய பூ... 
பொதுவாக அவர்கள் வந்தால்.. அவற்றை சமையல் முடியும் வரை பொருட்படுத்த மாட்டேன்..இன்று மட்டும் இவை உங்களுக்கு அல்ல என்று கூறும் வகையில் .....ஒரு குச்சியை எடுத்து சுழற்ற அவை அனைத்தும்.. இவனுக்கு என்ன ஆச்சி என்று குழம்பி  தொலைவில் சென்று ஒரு மரத்தில் அமர்ந்து கறியை நோட்டமிட்டு கொண்டு இருந்தன.
வெயிலோடு விளையாடி ....

நல்ல வெயில்.... கறியை காயவைத்து விட்டு அதன் அருகிலேயே கையில் ஒரு குச்சியோடு அமர்ந்து இருந்தேன்....நேரம் கடக்க அம்மணியும் இளையவளும் கதவை தட்டும் நேரம். அலை பேசியில் அவர்களை அழைத்து.. என்னால் கதவை திறக்க இயலாது.. பின் புறம் வாருங்கள் என்று சொல்ல.. அம்மணி இளையவளை மட்டும் அனுப்ப..அவளோ அடியேனை பார்த்து..

வாட் ஆர் யு டூயிங் ?

கறிய, காய வச்சி இருக்கேன்.

ஐ கேன் சி தட்.... பட் ஸ்டில், வாட் ஆர் யு டூயிங் வித் தட் ஸ்டிக் இன் யுவர் ஹேன்ட்?

ஒ.. காக்கா ....அதுக்கு தான்.

தே ஆர் நாட் யுவர் பிரெண்ட்ஸ் எனிமோர் ?

தே ஆர்.. பட் ஸ்டில்... கறி காஞ்சவுடன் அவங்களுக்கும் கொடுப்பேன்.

யு நீட் டு க்ரோ அப் டாடி. திஸ் லூக் சில்லி...

இப்ப அப்படி தான் சொல்லுவ ... இதை சமைக்கும் போது... வேற மாதிரி பேசுவ? அம்மா எங்க...?

ஒ மறந்தே போயிட்டேன்.. வெளிய கதவு திறக்க சொன்னாங்க என்று ஓடினாள்...

அம்மணி வந்தார்கள்..

வீட்டுல எவ்வளவு வேலை இருக்கு.. அதை எல்லாம் விட்டுட்டு .. இப்படி தோட்ட காரன் போல்... எவ்வளவு நேரம் இப்படியே இருக்க போறீங்க?

மூணு நாள்...

இன்னும் அரை மணிநேரத்தில் கோயிலில் ஒரு விசேஷம்.. நாளைக்கு வேலை.. அப்ப என்ன பண்ணுவீங்க...?

கார் காரேஜில் காய போட்டுட்டு வரேன்.

இந்த கறி .. வீட்டுகுள்ள வர கூடாது. பூச்சி எல்லாம் வரும்.. இங்கேயே இருக்கட்டும்...

என்று சொல்ல...சுற்றி இருந்த காகங்களோ அம்மணி சொன்னது புரிந்தது போல் தலையாட்டின...

சிறிது நேரம் கழித்து மூத்தவள் வந்தாள்.

வாட் ஆர் யு டூயிங் ?

கறிய, காய வச்சி இருக்கேன்.

ஐ கேன் சி தட்...! வாவ்.. இட் ரியலி ஸ்மல்ஸ் குட்...நீங்க இங்க என்ன பண்ணறீங்க..?

இல்ல.. இந்த மீட் காக்கைக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுதான்...

சீ..  ஐ ஹேவ் டோல்ட் யு மெனி டைம்ஸ், யு லைக் தோஸ் காக்காயிஸ் மோர் தென் அஸ். இவ்வளவும் அதுக்கேவா? வி ஆல்சோ வான்ட் சம்!

ஐயோ , இது நமக்கு தான்..

பின்ன காக்கான்னு ஏன் சொன்னீங்க..

இல்ல ... காக்காக்கு இது ரொம்ப பிடிக்கும் அதனாலே தான் இங்கேயே இருக்கேன்.

டாடி .. யு நீட் டு க்ரோ அப்... அண்ட் கெட் எ  லைப் !

6 அடி ஒரு அங்குலம் .. இன்னும் என்ன வளரனும். இதை சமைக்கும் போது நீங்க மூணு பேரும் வந்து கேட்டு பாருங்க...

நாங்க கேக்கவே வேணாம்.. நீங்களே செஞ்சி எடுத்துன்னு வந்து கொடுப்பீங்க.

ஏங்க .. கோயிலுக்கு நேரமாச்சி ..சீக்கிரம் வந்து கிளம்புங்க.

நீங்க யாராவது சீக்கிரம் ரெடி ஆயிட்டு இங்க வந்து ஒரு பத்து நிமிஷம் இந்த குச்சிய வச்சின்னு  இருங்க நான் ரெடி ஆகுறேன்.

இந்த குச்சி வச்சி கறிக்கு காவல் காக்குற அளவிற்கு எங்களுக்கு நேரம் இல்லை.. சீக்கிரம் வாங்க.

என்ன செய்வது .. எப்படியும் இப்போது கோயிலுக்கு போக வேண்டுமே  என்று மூளையை அலசி ஆராய்ந்து, தற்காலிகமாக  ஒரு முடிவு எடுத்து கிளம்பினேன்.

கோயிலில்.. நண்பர்களிடம் கறியின் படத்தை காட்டி .. பெருமையாக பேசி கொண்டு இருந்தேன். ஒரு அம்மணியின் முகத்தில் சற்று பொறாமை தெரிந்தது.

இப்ப தான் கறிய வெளிய போட்டுட்டு வந்துடீங்க இல்ல .. பூனை இல்லாட்டி காக்கா நீங்க வீட்டுக்கு போறதுக்குள்ள தின்னுடும்.

எங்க வீட்டு பக்கம் பூனை கிடையாது....காக்காவிற்கு நான் வேற ஒரு பிளான் வச்சி இருக்கேன்

என்று கூறி அடுத்த படத்தை காட்டினேன்..
பொத்தி  வைச்ச மல்லிக மொட்டு... 
பொறாமை மறைந்து.. இப்போது..

அண்ணே ... அண்ணே.. எங்களுக்கு ? என்று கூற..

இந்த முறை ரொம்ப நல்லா வந்து இருக்கு.. வேணும்னா அடுத்த முறை தரேன்..

உங்களுக்கு வயிறு வலி தான் ...

என்று ..சொல்லி.. கிளம்பினார்கள்..

இல்லம் வந்து சேர்ந்தவுடன்..கறி அனைத்தும் பத்திரமா இருக்கின்றதா என்று பார்த்து விட்டு...

தூங்க சென்றேன்..

ஏங்க.. என்ன மதியத்தில் இருந்து ... எங்க மூணு பேரை மறந்துட்டு அந்த கறியோடவே  நேரம் செலவு செஞ்சின்னு இருக்கீங்க?

இன்னும் ரெண்டே நாள் ... அப்புறம் இப்படி இருக்காது.

காலையில் எழுந்து முதல்வேலையாக கறி எப்படி இருகின்றது என்று பார்க்க போகையில் .. கோயிலில் பொறாமை பட்ட அம்மணியிடம் இருந்து ஒரு டெக்ஸ்ட்..

ராத்திரி பனியில் கறி நனைஞ்சு எல்லாம் சொதசொதன்னு சொதப்பி போய் இருக்கும். உங்களுக்கும் இல்ல, எங்களுக்கும் இல்ல..

உடனடியாக, இரவு நான் படுக்க போகும் முன் எடுத்த படத்தை அந்த அம்மணிக்கு அனுப்பி விட்டு கறியை பார்க்க சென்றேன்.
பனி விழும் கறிவனம் ... 
டாடி.. ஸ்கூல் லேட் ஆகுது..

உங்க அம்மாவை விட சொல்லு..

ஏன் உங்களுக்கு என்ன ஆச்சி..

இல்ல, கொஞ்சம் கறிக்கு வெயில் காட்டனும்.

கறிக்கு வெயில் இல்லாட்டி பரவாயில்லை.. பிள்ளை பெயில்  ஆனா தான் பிரச்சனை என்று சொன்ன அம்மணியிடம் ..

சரி.. என்று சொல்லி விட்டு.. ஓடினேன்.

அடுத்த இரண்டு நாள் இப்படி தான் போனது.

மூன்றாவது நாள்.. கறியை இறக்கி , பொறித்து.. மூவரிடம் எடுத்து சென்று...
இது எப்படி இருக்கு .. ?


இது எப்படி இருக்கு .. என்று  கேட்க்கையில்..

"சூப்பர்" என்ற பதில் வந்தது...

ஏங்க .. உங்கள்ட்ட ஒரு விஷயம் கேக்கணும்.

சொல்லு..

கடந்த மூணு நாளில் இந்த கறிய காய வைக்கிற அக்கறையை வீட்டிலேயும் காட்டுனீங்கனா .. நம்ம குடும்பம் எங்கேயோ போயிடுங்க..

எங்கேயும் போக வேணாம்...இங்கேயே நல்லாத்தான் இருக்கோம் ..

என்று அடியேன் கூறுகையில்.. இளையவள்..

டாடி.. யுவர் பிரெண்ட்ஸ் ஆர் ஹியர்!

என்று சொல்ல, ஒரு  தட்டில் சில கறி துண்டை போட்டு கொண்டு காகங்களை தான் பிரெண்ட்ஸ் என்று சொன்னாள் என்று எண்ணி வந்த நான் தண்டத்தை பார்த்தவுடன்... பேய் அறைந்தது போல் மாறி ( பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்) ..

"நீயா"

என்று அலற.. அவனோ.

நானே தான்.. வேணும்னா " ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்" பாடினே, கையை தூக்கி வைச்சு "படம்" எடுத்துன்னே வரட்டா .. வாத்தியாரே.. அதுசரி கையில என்ன? உப்பு கண்டமா ? ரொம்ப நாளாச்சி வாத்தியாரே.. எனக்குனே செஞ்சியா?

என்றான் கிண்டலாக ...

ஆமா தண்டம்.. என்று நீட்ட.. அவன் உண்டு விட்டு மீதியை பார்சல் செய்து கொண்டான்.

அவன் சென்றவுடன்..

ராசாத்தி..தண்டபாணி மாமா வந்து இருக்காருன்னு ஏன் சொல்லல?

நான் தான் சொன்னேனே.. யுவர் பிரெண்ட்ஸ் ஆர் ஹியர்னு .. ..

நீ காக்கைய சொன்னேன்னு நான் நினைச்சேன்..

டாடி.. யு லவ் திஸ் காக்கைஸ் டூ மச். யு நீட் டு ஷேர்.. தி லவ் டு அதர்ஸ் அஸ் வெல்.

அட பாவி மகள்.. காக்கை லவ்வ ஷேர் பண்ணனுமா? மனுசனுக்கு ஷேர் என்ற விஷயத்த சொல்லி கொடுத்ததே காக்கா தானே..

புரியல..

உனக்கு புரியாது என்று சொல்லி..

காக்கா கூட்டத்த பாருங்க, அதுக்கு கத்து கொடுத்தது யாருங்கன்னு..   பாடி கொண்டே இடத்தை காலி செய்தேன்..


9 கருத்துகள்:

  1. விசு சார்...உப்புக்கண்டம் என்னும் வஸ்துவை நினைவுபடுத்தி அமெரிக்காவுலிருந்து புண்ணியத்தை கட்டிக்கொண்டீர்கள்..ரசித்து சுவைத்தேன்..எழுத்துகளை

    பதிலளிநீக்கு
  2. சார் நல்லாருக்கு உங்க பதிவு
    விஜயன்

    பதிலளிநீக்கு
  3. கட்டிவைத்த மல்லிகை மொட்டு
    மிகச் சரியாக விக்கிரமாதித்தன் வேதாளத்தை
    நினைவுபடுத்தியது.


    உப்புக் கண்டம் எழுத்தும் அத்தனை ருசி
    இரண்டும் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. முதல் படம் மிக அருமை கலரில் இருப்பது பதிவிற்கு மிகவும் அழகூட்டுகிறது..... பாட்டிவீட்டில் உப்புகண்டம் போட பாட்டிக்கும் உதவியது ஞாபகம் இருக்கிறது சிறு வயதில் என் வீட்டில் போட மாட்டர்கள் காரணம் அருகில் இருந்த அனைவரும் பிராமண குடும்பத்தை சார்ந்தவர்கள். இப்ப என் வீட்டில் நான் உப்புகண்டம் போட்டால் அடுத்த நாள் எங்க வூட்டுகாரம் என்னையையே உப்புகண்டமாக போட்டு காயவிட்டுவிடுவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தமிழா. அந்த படத்தை வரைந்தது நண்பர் தமிழ். அடுத்த படம் வரையும் போது கண்டிப்பாக அவர் கையெழுத்தையும் போடா வேண்டும் என்று ஒரு அன்பு கட்டளை இட்டுள்ளேன்.

      நீக்கு

  5. ரமணி சார் இந்த மாதம் நீயூஜெர்ஸி வருகிறார் அவருக்கு பார்சல் அனுப்பவும்

    பதிலளிநீக்கு
  6. யோவ் விசு தம்பி , உன் தண்டம் கதையும் சரி, உப்புக் கண்டம் கதையும் சரி ,ரொம்ப ருசிதான் போ .

    பதிலளிநீக்கு
  7. மகள்களை மட்டும் பெற்றவர்கள் பாக்கியவான்கள். நானும் தான் . உங்கள் பதிவுகளை படிக்கும் பொழுது என் மகள்களுடன் உரையாடுவதைப் போல இருக்கிறது. தம்பதியர்க்கு இரத்த வகை B+ வாக இருந்தால் பெண் குழந்தை தான் பிறக்குமாமே?. நான் மகள்களை பெற்றவர்களிடம் கேட்டதில் 90 சவிகிதம் இப்படித் தான் இருக்கிறது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் B+. அதனால் நாங்கள் எப்பவுமே பாசிடிவ்
    விஜயன்.

    பதிலளிநீக்கு
  8. எங்கள் வீட்டில் என் அக்கா செய்வதுண்டு எப்போதாவது...பதிவை ரசித்தோம்

    கீதா: நாங்க போடற உப்புக் கண்டம் நார்த்தங்காய், மாங்காய் மிளகாய், கொத்தவரங்காய், கத்தரிக்காய்....இவைதான்.கூழ் வற்றல்ஜவ்வர்சி போட்டால் காக்காய் கூட்டத்திற்குத் தனி செக்யூரிட்டி போட வேண்டும்.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...