வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

புவனா ஒரு ஆச்சர்ய குறி

"உன் பேரு தான் விசுவா?"

மேலே செல்லும் முன்,

வருடத்திற்கு ஒரு பள்ளி என்ற முறை ஆறாம்ப்பை (6th Std) முடித்து  ஏழாம்ப்பிலும் (7th Std) தொடர்ந்தது. புது விடுதி, புது பள்ளி, அறிந்த முகங்கள்  அரிதானதால், நான் உண்டு என் வேலை உண்டு என்று அமர்ந்து இருந்து என்னிடம்  ..

"உன் பேரு தான் விசுவா? "             

என்றாள் ஒரு சக மாணவி.

"எஸ், ஐ அம்விசு"

"ஐ.. இங்கிலீஷ் , பேசுவீயா, நான்  கூட இங்கிலீஷ் பேச கத்துக்க டியூஷன் போறேன், மை நேம் இஸ் புவனேஸ்வரி"

"நைஸ் நேம்"

"தேங்க்ஸ்"

"யு ஆர் வெல்கம்"

"டோன்ட் மேன்ஷன் இட்னு சொல்லணும்னு தானே டுயூஷனில் சொல்லி தந்தாங்க"

"ஐ மீன் டோன்ட் மேன்ஷன் இட்"

மீண்டும் நான் உண்டு என் வேலை உண்டு என்று  தலை குனிய...அவளோ..

"நீ தான் இந்த வருஷம் ஏழாம்ப்புக்கு அசிஸ்டன்ட் மானிட்டராம்"

"அப்படினா?"

"வைஸ் கேப்டன் போல .. இந்த க்ளாஸுக்கு"


"கேப்டன் யாரு"

"ஒன்னாம்பில் இருந்தே இந்த க்ளாஸுக்கு நான் தான் கேப்டன், வருசா வருஷம் அஸிடண்ட் மானிட்டரை மட்டும்  மாத்திட சொல்லுவே..... இல்ல மாத்திடுவாங்க.?

"ஓ, ஓகே"

புது பள்ளி, ஆறாவது ஆங்கில மீடியத்தில் படித்தவன், ஏழாவது  தமிழ் மீடியம் பள்ளி. அதனால் மற்ற மாணவர்களை விட  ஆங்கிலத்தில் சற்று புலமை (?) கொண்டவன் என்ற ஒரு எண்ணம் வகுப்பிற்குள் நுழைய.. முதல் வார இறுதியில்...

ஆங்கில பேச்சு போட்டி, பங்கேற்பவர்கள்  பெயர் தரவும் என்று சொல்ல, புவனேஸ்வரி மட்டும் கைதூக்க..

அருகில் இருந்த அண்ணாமலை..

"விசு, கையை தூக்குடா.."

"ஏன்"?

"போன வருஷம் நான் தான் அசிஸ்டன்ட் மானிட்டர்.. இந்த வருஷம் எப்படியும் மானிட்டராகலாம்னு இருந்தேன்."

"இந்த வருஷம் புவனேஸ்வரி தான் மானிட்டராமே, அவ தான் சொன்னா!"

"இந்த வருசம் இல்ல விசு, இந்த வருசமும்... "

"இந்த வருசம் நான் தான் அசிஸ்டன்ட் மானிட்டர்ன்னு சொன்னா"

"யாரு அசிஸ்டன்ட் மானிட்டருன்னு முடிவு பண்ண இவ யாரு விசு"

"ஒன்னாம்பில் இருந்தே மானிட்டருன்னு சொன்ன"

"வேற யாரையும் மானிட்டராக விட மாட்டா .. அதுக்காக, இவளே அவளுக்கு போட்டியா  இருக்குறவங்கள் பாத்து.. நீ தான் அசிஸ்டன்ட் மானிட்டர்ன்னு சொல்லிட்டு வருசம் முடியும் போது டீச்சர்ட்ட நம்மை பத்தி தப்பு தப்பா  சொல்லிட்டு  அடுத்த வருஷம் அதுல இருந்து கூட நம்மை தூக்கிடுவா ..!"

"ஓ இந்த வருசம் என்னை போட்டியா நினைச்சாளா? எதுக்கு ?"

"நீ இங்லிஷ் மீடியத்தில் இருந்து வந்து இருக்கன்னு டீச்சர் சொன்னாங்க.. அதனால தான் "

"என்னை எதுக்கு பேச்சு  போட்டியில் கலந்துக்க சொல்ற?"

"யாராவது அவளை ஜெயிக்கணும் விசு , ப்ளீஸ் கலந்துக்க"

அவனே என் கை தூக்கிவிட.. டீச்சரும்

"நானே சொல்லணும்னு யோசிச்சேன் விசு.. கலந்துக்கோ "

என்று சொல்ல..அண்ணாமலை முதல் முதலாக புவனேஸ்வரியின் முகத்தில் மரணபயத்தை பார்த்தான்.

நாளும் வந்தது..

புவனேஸ்வரி மனப்பாடம் செய்து வைத்து ஜவஹர்லால் நேருவை பற்றி பேச, அடியேனின் முறை வர, (நாம தான் அந்த காலத்திலே மைக்க பாத்தா மின்கம்பத்தை பாத்த நாய் மாதிரி குஷி ஆகிடுவோமே)  மதர் தெரேசாவை பற்றி அள்ளி  விட..

முதல் பரிசு விசு...

"இது தான் அவளுக்கு முதல் அடிவிசு, இந்த வருசம் நீ எப்படியாவது மானிட்டர்  ஆகணும்"

அன்றில் இருந்தே புவனேஸ்வரியின் பார்வை பத்ரகாளி பார்வையாக மாறியது.

அடுத்த  வாரத்தில் வைத்த வாய்ப்பாடு போட்டி மற்றும் விளையாட்டு துறையில் ஹாக்கிக்கு தேர்வு எடுக்க பட்ட அடியேனின் ரெப்புட்டேஷன் கொஞ்சம் அதிகரிக்க, டீச்சரோ..

"விசு, உன்னோட  பழைய ஸ்கூல் ஆறாம்ப்பு (6th Std) மார்க்ஸ் பார்த்தேன், எல்லாத்துலயும் 90 க்கும் மேலே வாங்கி இருக்க.. இங்கேயும் அப்படியே படி .. "

என்று சொல்ல, பத்ரகாளியோ அடுத்த லெவெலுக்கு சென்றாள்!

திங்கள் வந்தது.. டீச்சர்..

"சரி நான் சொன்னபடி போன வாரம் படிச்ச முதல் அத்தியாயத்தில்  இன்னைக்கு டெஸ்ட் . அதுல யாரு பர்ஸ்ட் வருங்கிலோ அவங்க தான் மானிட்டர் "

என்று அறிவிக்க..அண்ணாமலை..

"இன்னைக்கு முதல் அத்தியாயத்தில் டெஸ்ட்டுன்னுசொல்லவே இல்லையே.. "

டீச்சர் புவனேஸ்வரியை பார்த்து..

"வெள்ளிக்கிழமை மொத்த க்ளாஸுக்கு சொல்ல சொன்னேனே .. சொல்லலையா?"

"சொன்னேன் டீச்சர் .. வேணும்ன்னா இவங்கள கேளுங்கன்னு"

சொல்ல, அவள் அருகில் இருந்த சில மாணவிகள் பயத்தோட தலையாட்ட, அண்ணாமலை..

"நான் சொன்னேன் பாரு.. மானிட்டராக இவ செஞ்ச வேலைய பாரு"

 என்று சொல்ல...டீச்சர்

"ஓகே.. டெஸ்ட் ஆரம்பிக்கலாம்"

என்று அதட்ட.. ஆரம்பித்தது டெஸ்ட்.

புவனேஸ்வரியை தவிர மற்ற அனைவரும் அடியேன் உட்பட விட்டத்தை  பார்க்க.. புவனேஸ்வரி மட்டும் எழுதி தள்ளினாள்.

"எழுதி முடிச்சவங்க எல்லாம் பேப்பரை என் டேபிளில் வச்சிட்டு வீட்டுக்கு போகலாம், நாளைக்கு ரிசல்ட் "

அனைவரும் வீட்டிற்கு சென்றோம்.

அடுத்த நாள்..

புவனேஸ்வரி, புது யூனிஃபார்ம், நெற்றியில் குங்மத்தோடு ஆவலோடு வர..

அண்ணாமலை 68
ஆறுமுகம் 52
ஏழுமலை 36
கண்ணாயிரம் 71
புவனேஸ்வரி 86

என்று அனைவரின் மதிப்பெண்ணெய் கூற.. அடியேனின் மதிப்பெண் மிஸ்ஸிங்.

அண்ணாமலை..

"விசு, உன் மார்க்கை சொல்லல.."

"டீச்சர், என் மார்க்?"

"உன் மார்க்"!?

மீண்டும் ஒரு முறை அனைத்தையும் சரி பார்த்துவிட்டு..

"நேத்து வந்தியா?"

"ஐயோ டீச்சர்.. வந்து டெஸ்ட் எழுதினேன்.. "

"ஆமா.. நானும் திருத்துனனே"

"மார்க் சொல்லல..?"

"ஆமா.. இப்ப ஞாபகம் வருது..நீ போன வருஷம் போலவே 90  க்கும் மேலே   மேலே, முதல் மார்க்குனு தனியா எடுத்து வைச்சேன், எடுத்துன்னு வர மறந்துட்டேன், நீ தான் மானிட்டர். புவனேஸ்வரி அசிஸ்டன்ட் மானிட்டர்"

என்று அறிவிக்க..

அவளோ அலற..

அண்ணாமலையோ ஆர்ப்பரிக்க

அடியேனோ அலட்ட..

அடித்தது இடைவேளைக்கான மணி.

இடைவேளையில் அண்ணாமலை..

"விசு.. டெஸ்ட்டுன்னு உனக்கு தெரியுமா? எப்படி 90 க்கும் மேலே.. ?"

"அத்தை விடு"

"இல்ல விசு.. நீ உண்மையாவே சமத்துதான் போல இருக்கு, டெஸ்ட்டுன்னு தெரியாமலே 90  க்கும்  மேலே.. தெரிஞ்சி இருந்தா.. நூத்துக்கு நூறு .."

"தெரிஞ்சி இருந்தா 60  கூட தேறி இருக்காது"

"என்ன சொல்ற.பின்ன எப்படி இம்புட்டு மார்க்?"

"அண்ணாமலை.. எப்படியாவது புவனாவை  ஜெயிக்கணும்னு நீ உசுப்பு ஏத்தி  விட்டுட்ட, அதனால.."

"அதனால!?"

"ஒரு சின்ன திருட்டுதனம் பண்ணேன்"

"என்ன பண்ணே?"

"டெஸ்ட் எழுதி முடிஞ்சதும் என் பேப்பரை அந்த டேபிள் மேலே வைக்கல..அப்படியே கிளம்பி  போய்ட்டேன் "

"டீச்சர் பேப்பரை திருத்தின்னேனு சொன்னாங்க"

"அவங்க அப்படி தான் சொல்லுவாங்க.. "

"அது தான் ஏன்?"

"அம்புட்டு பேப்பரில் எனது எங்கேயோ மிஸ்ஸுன்னு நினைச்சி  இருப்பாங்க"

" 90 க்கும் மேலேன்னு சொன்னாங்க..."

"அது போன வருஷம் நான் அந்த ஸ்கூலில் எடுத்த மார்க்கை வைச்சி குத்து மதிப்பா கொடுத்தது...."

"ஏன் அப்படி பண்ணாங்க...."

"இது எல்லா டீச்சரும் பண்றது தான். ஏதாவது மிஸ் ஆச்சுன்னா.. திரும்பவும் டெஸ்ட் வைச்சி , திருத்தி.. அதுக்கு எல்லாம் ஏது டைம்.. ?"

"அட பாவி"

பின் குறிப்பு :

நடந்து ஒரு வாரம் கழித்து.

"விசு, உன்னை மெட்றாஸில் வேற ஸ்கூலுக்கு மாத்திட்டாங்க.. உங்க அம்மா  இப்ப தான் சொன்னாங்க"

அடியேனின் மனதில்..

"அட பாவி.. மூணே  வாரத்தில் வேற ஸ்கூலா..  இப்ப தான் அண்ணாமலைன்னு ஒரு பிரென்ட் கிடைச்சான்..அதுகூட போச்சே..என்னமோ போ .. "

அண்ணாமலையோ ..

"அய்யகோ .. இப்ப புவனேஸ்வரி மானிட்டர் ஆகிடுவாளே..."

புவனேஸ்வரியோ...

"நான் மானிட்டர் ஆகவே பிறந்தவ... இனிமேல் வாழ்நாள் முழுக்க நான் தான் மானிட்டர் .. செய்வீங்களா. .செய்வீங்களா"



6 கருத்துகள்:

  1. புவனா ஒரு கேள்விக்குறி விசு ஒரு ஆச்சரியக்குறி !

    பதிலளிநீக்கு
  2. ஹை...நானும் ஒவ்வொரு ஆண்டும் கிளாஸ் லீடர்.
    நீங்களும் புவனேஸ்வரியும் பரவால்ல.. அண்ணாமலை தான் பாவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிரேஸ் இப்பவும் உங்க வீட்டில நீங்கதானே லீடர்??

      நீக்கு
    2. விசு புவனேஸ்வரியின் ஆவி உங்க மனைவி வடிவில் வந்திருக்கு அதனாலதான் உங்க மனைவி லீடராக இருக்கிறார்கள்

      நீக்கு
  3. // செய்வீங்களா... செய்வீங்களா... //

    எனக்கு A1 ஞாபகம் வந்து விட்டது...!

    பதிலளிநீக்கு
  4. விசு நான் உங்க கூட படித்து இருந்தால் புவனேஸ்வரியின் செகரட்டரியாக இருந்திருப்பேன் ஹும்ம் சான்ஸ் மிஸ்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...